Bhima checked the hostile army! | Bhishma-Parva-Section-063 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 21)
பதிவின் சுருக்கம் : பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்....
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த யானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.
தேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற்றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.
அச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.
எல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.
காற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழுத்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.
பயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.
இப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.
பயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.
வாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.
அந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |