The questions of Dhritarashtra! | Bhishma-Parva-Section-065a | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 23)
பதிவின் சுருக்கம் : தொடர்ந்து பாண்டவர்கள் வெல்வதற்கும், தன் மகன்கள் தோற்பதற்கும் உண்மையான காரணம் என்ன என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; காரணங்களைச் சொல்லும் சஞ்சயன்; அதே கேள்வியைப் பீஷ்மரிடம் கேட்கும் துரியோதனன்; பீஷ்மரின் அறிவுரை....
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "தேவர்களும் அடைய முடியாதவையான பாண்டு மகன்களின் இந்த அருஞ்செயல்களைக் கேட்டு, ஓ! சஞ்சயா, எனது இதயம் அச்சத்தாலும், வியப்பாலும் நிறைகிறது. அனைத்து வகையிலும் என் மகன்கள் பட்ட அவமானத்தைக் கேட்டு, அவற்றைத் தொடர்ந்து வரப்போகும் விளைவைக் குறித்த கவலை எனக்கு அதிகமாகிறது. விதுரன் உதிர்த்த வார்த்தைகள் என் இதயத்தை எரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நடந்தது அனைத்தும் விதியால் நடந்ததாகவே தெரிகிறது.
பாண்டவப் படையின் போராளிகள், பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டவர்களும், சிறப்பானவர்களும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான வீரர்களுடன் {கௌரவப் படையுடன்} மோதி அவர்ளைத் தாக்குகின்றார்களே. ஓ! மகனே {சஞ்சயா}, உயர் ஆன்மா கொண்டவர்களான பாண்டுவின் வலிமைமிக்க மகன்களால் என்ன ஆன்ம நோன்புகள் நோற்கப்பட்டன? என்ன வரத்தை அவர்கள் அடைந்தார்கள்? அல்லது, எந்த அறிவியலை அறிந்ததன் விளைவாக அவர்கள் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் அழிவடையால் இருக்கின்றனர்? பாண்டவர்களால் எனது படை தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகக் கடுமையான தெய்வீகத் தண்டனை என் மீது மட்டுமே விழுகிறதே.
பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} கொல்லப்படாதவர்களாகவும், எனது மகன்கள் {கௌரவர்கள்} கொல்லத்தக்கவர்களாகவும் இருப்பது ஏன் என்பது குறித்த உண்மைகள் அனைத்தையும் எனக்கு முழுமையாகச் சொல்வாயாக. இந்தத் துயரின் (துயரக்கடலின்) மறுகரையை நான் காணவில்லை. ஆழமான பரந்த கடலைத் தன் இரு கரங்களை மட்டுமே கொண்டு கடக்க விரும்பும் மனிதனைப் போல நான் இருக்கிறேன்.
என் மகன்களைப் பேரிடர் ஒன்று பீடித்திருக்கிறது என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். என் மகன்கள் அனைவரையும் பீமன் கொல்வான் என்பதில் ஐயமில்லை. போரில் என் மகன்களைக் காக்கக்கூடிய ஒரு வீரனை என்னால் காண இயலவில்லை. ஓ! சஞ்சயா, இந்தப் போரில் என் மகன்கள் இறக்கப்போவது உறுதி. எனவே, ஓ! சூதா {சஞ்சயா}, உன்னைக் கேட்கும் எனக்கு, அனைத்தின் உண்மைக் காரணங்களையும் சொல்வதே உனக்குத் தகும்.
தனது துருப்புகள் புறம்காட்டி ஓடுவதைக் கண்டு துரியோதனன் என்ன செய்தான்? முதிர்ந்த பீஷ்மர், துரோணர், கிருபர், சுபலனின் மகன் {சகுனி}, ஜெயத்ரதன், வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பெரும் பலம் கொண்ட விகர்ணன் ஆகியோர் என்ன செய்தனர்? ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே {சஞ்சயா}, போரில் எனது மகன்கள் புறமுதுக்கிட்ட போது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் என்ன தீர்மானித்தனர்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேளும். கேட்ட பிறகு, அவற்றை உமது இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும். (இஃது) எந்த மந்திரத்தின் விளைவும் இல்லை. எவ்வகை மாயையின் விளைவும் இல்லை. பாண்டுவின் மகன்கள் புதிதாக எந்தப் பயங்கரத்தையும் {அச்சத்தையும்} ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலிமையுடன் இருக்கிறார்கள்; இந்தப் போரில் அவர்கள் நியாயமான வழிகளிலேயே போரிடுகின்றனர்.
உயர்ந்த புகழை விரும்பும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதையும் {உயிர்வாழ்வதற்குத் தேவையான செயல்களையும்} சேர்த்து, அனைத்துச் செயல்களையும் அறநெறிகளுக்கு ஏற்ற வழியிலேயே செய்கின்றனர். அனைத்து வகையான செழிப்பையும், பெரும் பலத்தையும் கொண்டிருக்கும் அவர்கள், நேர்மையில் தங்கள் கண்களை வைத்துக் கொண்டே, போரில் இருந்து விலகாமல் இருக்கிறார்கள்.
எங்கே நேர்மை இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கிறது. இதனாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} போரில் கொல்லப்பட முடியாதவர்களாகவும், எப்போதும் வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள்.
தீய ஆன்மா கொண்ட உமது மகன்களோ, பாவங்களுக்கு அடிமையாக {தீய எண்ணங்களுடன்} இருக்கிறார்கள். கொடுமையான, இழிந்த செயல்களையே அவர்கள் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் போரில் பலவீனப்படுகிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெறுக்கத்தக்க மனிதர்களைப் போல, உமது மகன்கள் பல கொடுமைகளையும், வஞ்சகச் செயல்களையும் பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்குச்} செய்தார்கள்.
எனினும், ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குற்றங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்செயல்களை எப்போதும் {உலகத்தின் கண்ணிலிருந்து} மறைத்தே வந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோ எண்ணற்ற நேரங்களில் பாண்டவர்களை அவமதித்தனர்.
அந்தப் பாவ வழியின் தொடர்ச்சியாக, இப்போது, நஞ்சைப் போன்ற கொடூரக் கனியை [1] {பலனை} அவர்கள் {கௌரவர்கள்} அறுவடை செய்யட்டும். உமது நலன்விரும்பிகள் ஆலோசனை கூறியும், விழிப்படையாத நீரும், உமது மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடி அந்தக் கனியை புசிக்க வேண்டும்.
[1] மூலத்தில் இங்கே குறிப்பிடப்படுவது "சுரைக்காய் இனத்தைச் சேர்ந்த 'Kimpaca' கிம்பகம் என்ற கனி ஆகும்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
விதுரர், பீஷ்மர், உயர் ஆன்ம துரோணர் ஆகியோராலும், என்னாலும் தொடர்ந்து தடுக்கப்பட்டும், நீர் புரிந்து கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்படும் மருந்தை மறுக்கும் நோயாளியைப் போல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும், உமது நன்மைக்கானதுமான எங்கள் வார்த்தைகளை நீர் மறுத்தீர். உமது மகன்களின் கருத்துக்களை ஏற்ற நீர், பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டதாகவே கருதினீர்.
ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டபடியே, பாண்டவர்களின் வெற்றிக்கான உண்மையான காரணத்தை மேலும் கேளும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் கேள்விப்பட்டதை உமக்குச் சொல்கிறேன். இதே கேள்வியைத்தான் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} துரியோதனனும் கேட்டான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான தனது தம்பிகள் போரில் வீழ்த்தப்பட்டதால், ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, துயரில் இதயம் மயங்கிய உமது மகன் துரியோதனன், பெரும் அறிவுபடைத்த பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, இரவில் பணிவுடன் சென்று, அவரிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் என்னிடம் கேட்பீராக.
துரியோதனன் {பீஷ்மரிடம்}, "துரோணர், {பீஷ்மராகிய} நீர், சல்லியன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், பூரிஸ்ரவஸ், விகர்ணன், பெரும் ஆற்றல் படைத்த பகதத்தன் ஆகியோர் அனைவரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களாகக் {மகாரதர்களாகக்} கருதப்படுகிறீர்கள். மேலும் இவர்கள் அனைவரும் உயர்ந்த பிறப்பைக் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருப்பவர்களுமாவர். (ஒன்று சேர்ந்திருக்கும்) மூன்று உலகங்களுக்கும் இணையானவர்கள் இவர்கள் என்பது எனது கருத்து. பாண்டவப் படையின் (ஒன்றிணைந்த) வீரர்கள் அனைவராலும் உங்கள் ஆற்றலைத் தாங்க முடியாது. என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கிறது. கேட்கும் எனக்கு அதை விளக்குவீராக. யாரால் இந்தப் பாண்டவர்கள் நம்மைத் தொடர்ந்து வீழ்த்துகிறார்கள்?" என்று கேட்டான் {துரியோதனன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, நான் சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் கேட்பாயாக. இந்த விளைவுதான் அடிக்கடி என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படட்டும். ஓ! தலைவா {துரியோதனா}, உனக்கும், இந்த உலகத்துக்கும் இது நன்மையைப் பயக்கும் என்று நான் கருதுகிறேன். உனது நலன்விரும்பிகள் அனைவரையும் மனம் நிறையச் செய்யும்படியும், உனது சொந்தங்களுக்கு மகிழ்வூட்டும்படியும், ஓ! மன்னா {துரியோதனா}, உன் சகோதரர்களுடன் சேர்ந்து இந்தப் பூமியை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இதுகுறித்து என் தொண்டை வற்ற இதற்கு முன் நான் கதறினாலும், ஓ! ஐயா {துரியோதனா}, நீ எனக்குச் செவிமடுக்கவில்லை. பாண்டுவின் மகன்களை நீ எப்போதும் அவமதித்தே வந்திருக்கிறாய். அவற்றின் விளைவுகள் தான் இப்போது உன்னை அடைகின்றன.
ஓ! மன்னா {துரியோதனா}, சாதனைகளால் களைப்படையாதவர்களாகவும், கொல்லப்பட முடியாதவர்களாகவும் ஏன் பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை, ஓ! தலைவா {துரியோதனா}, நான் சொல்லும்போதே கேட்பயாக. சாரங்கபாணியால் {கிருஷ்ணனால்} காக்கப்படும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் வீழ்த்த வல்லவர்களோ, வீழ்த்துபவர்களோ இவ்வுலகில் யாரும் இல்லை, {இதற்கு முன்} இருந்ததுமில்லை, {இனிமேல்} இருக்கவும் முடியாது. ஓ! அறநெறிகளை அறிந்தவனே {துரியோதனா}, ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்ட முனிவர்களால் சொல்லப்பட்ட பழமையான வரலாற்றை உள்ளபடியே கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.
ஆங்கிலத்தில் | In English |