Satyaki slew not Duhsasana! | Drona-Parva-Section-122 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 38)
பதிவின் சுருக்கம் : சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; சாத்யகிக்கும் துச்சாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கடும்போர்; திரிகர்த்தர்களைச் சாத்யகிக்கு எதிராகத் தூண்டிய துரியோதனன்; பீமசேனனின் சபதத்தை நினைவுகூர்ந்து துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத்தைப் போல ஆயிரக்கணக்கான கணைகளை இறைத்தபடி சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான். அறுபது கணைகளாலும், பிறகு பதினாறு கணைகளாலும் சாத்யகியைத் துளைத்த அவன் {துச்சாசனன்}, போரில் மைநாக மலையைப் போல அசையாமல் நின்ற அந்த வீரனை {சாத்யகியை} நடுங்கச் செய்வதில் தவறினான். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெரும் தேர்க்கூட்டங்களின் துணையுடன் சென்ற அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானவன் {துச்சாசனன்}, எண்ணற்ற கணைகளை ஏவியபடி மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்தான்.
போரிட வரும் அந்தக் கௌரவனை {துச்சாசனனைக்} கண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகி, அவனை {துச்சாசனனை} நோக்கி விரைந்து, தன் கணைகளால் அவனை மறைத்தான். துச்சாசனனுக்கு முன்னணியில் இருந்தோர் அனைவரும் இப்படி அந்தக் கணை மழையால் மறைக்கப்பட்டு உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துச்சாசனன், போரில் அச்சமற்று நீடித்தபடியே கணைகளால் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான். அந்தப் போரில் துச்சாசனன், நான்கு கணைகளால் சாத்யகியின் நான்கு குதிரைகளையும், மூன்றால் அவனது தேரோட்டியையும், ஒரு நூறு கணைகளால் சாத்யகியையும் துளைத்து முழக்கம் செய்தான்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட மாதவன் {சாத்யகி}, தன் நேரான கணைகளின் மூலமாகத் துச்சாசனனின் தேரையும், சாரதியையும், கொடிமரத்தையும், துச்சாசனனையும் விரைவாகக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தான். உண்மையில் சாத்யகி, துணிச்சல்மிக்கத் துச்சாசனனை கணைகளாலேயே மறைத்துவிட்டான். ஒரு சிலந்தியானது தன் இழைகளின் மூலம் ஒரு கொசுவைத், தான் அடையும் தொலைவிற்குள் சிக்கச் செய்வதைப் போலவே அந்த எதிரிகளை வெல்பவனும் {சாத்யகியும்} தன் கணைகளால் துச்சாசனனை வேகமாக மறைத்தான்.
அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்ட துச்சாசனனைக் கண்டு, யுயுதானனின் {சாத்யகியின்} தேரை நோக்கித் திரிகர்த்தர்களின் படை ஒன்றைத் தூண்டினான். கடுஞ்செயல் புரிபவர்களும், போரில் சாதித்தவர்களும், எண்ணிக்கையில் மூவாயிரமாக இருந்தவர்களுமான அந்தத் திரிகர்த்த தேர்வீரர்கள் யுயுதானனை நோக்கிச் சென்றனர். போரிட உறுதியாகத் தீர்மானித்தவர்களும், புறமுதுகிடுவதில்லை என்று உறுதியேற்றவர்களுமான அவர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களுடன் யுயுதானனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், யுயுதானன், தன்னை நோக்கிப் போரிட வந்த அந்தப் படையின் முன்னணியில் இருந்தவர்களும், தன் மீது கணைமாரிகளை ஏவியவர்களுமான ஐநூறு முதன்மையான வீரர்களைத் தாக்கி வீழ்த்தினான். சிநிக்களில் முதன்மையானவனின் {சாத்யகியின்} கணைகளால் விரைவாகக் கொல்லப்பட்ட அவர்கள் {திரிகர்த்தர்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டு மலையுச்சியில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.
ஓ! ஏகாதிபதி, சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகளாலும், வீழ்ந்த கொடிமரங்களாலும், கிழிக்கப்பட்டு, குதறப்பட்டு, குருதியில் புரண்டு கொண்டிருந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளாலும் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகங்களால் {பலாச மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு சமவெளியைப் போல அழகாகத் தெரிந்தது. இப்படி யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், சேற்றில் {புதைகுழியில்} மூழ்கும் யானைகளைப் போல ஒரு பாதுகாவலனை அறியத் தவறின. பிறகு அவர்களில் அனைவரும், பறவைகளின் இளவரசன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் பொந்துகளை நோக்கித் திரும்பும் பெரும்பாம்புகளைப் போலத் துரோணரின் தேர் இருந்த இடத்தை நோக்கித் திரும்பினர். கடும் விஷமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் அந்த ஐநூறு {500} துணிச்சல்மிக்க வீரர்களைக் கொன்ற பிறகு, அந்த வீரன் {சாத்யகி}, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தை நோக்கி மெதுவாகச் சென்றான்.
அந்த மனிதர்களில் முதன்மையானவன் {சாத்யகி} இப்படிச் சென்ற போது, உமது மகன் துச்சாசனன் ஒன்பது நேரான கணைகளால் அவனை {சாத்யகியை} வேகமாகத் துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்க வில்லாளி (யுயுதானன்) கழுகின் இறகையும், தங்கச் சிறகுகளையும், கொண்ட ஐந்து நேரான கூரிய கணைகளால் துச்சாசனனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் சிரித்துக் கொண்டே மூன்று கணைகளாலும், மீண்டும் ஐந்து கணைகளாலும் சாத்யகியைத் துளைத்தான். ஐந்து கணைகளால் உமது மகனைத் {துச்சாசனனைத்} தாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அவனது வில்லையும் வெட்டிவிட்டு அர்ஜுனனை நோக்கிச் சிரித்துக் கொண்டே சென்றான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், அப்படிச் சென்று கொண்டிருந்த அந்த விருஷ்ணி வீரனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான ஓர் ஈட்டியை அவன் மீது வீசினான். எனினும் சாத்யகி, கங்க இறகுகளைக் கொண்ட தன் கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்} அந்தக் கடும் ஈட்டியை வெட்டினான்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பிறகு மற்றொரு வில்லை எடுத்த உமது மகன் {துச்சாசனன்}, சில கணைகளால் சாத்யகியைத் துளைத்து விட்டு உரத்த முழக்கம் செய்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் உமது மகனை மலைக்கச்செய்து, நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான சில கணைகளால் அவனது {துச்சாசனனின்} நடு மார்பைத் துளைத்தான். மேலும் முழுக்க இரும்பாலானவையும், கூர்முனை கொண்டவையுமான எட்டு கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான். எனினும் துச்சாசனன், பதிலுக்கு இருபது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.
அப்போது, உயர்ந்த அருளைக் கொண்ட சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூன்று நேரான கணைகளால் துச்சானனின் நடுமார்பை {மீண்டும்} துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் சில நேரான கணைகளால் துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான்; கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சாத்யகி} மேலும் சில நேரான கணைகால் பின்னவனின் {துச்சாசனனின்} தேரோட்டியையும் கொன்றான். பிறகு அவன் {சாத்யகி} ஒரு பல்லத்தைக் கொண்டு உமது மகனின் வில்லை வெட்டி, ஐந்து கணைகளைக் கொண்டு தோலாலான அவனது {துச்சாசனனின்} கையுறைகளையும் அறுத்தான். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான சாத்யகி, இரு பல்லங்களைக் கொண்டு துச்சாசனனின் கொடிமரத்தையும், அவனது தேரில் உள்ள மரத்தாலான சுழல்தண்டுகளையும் {ரதசக்திகளையும்} வெட்டினான். பிறகு அவன் எண்ணற்ற கூரிய கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்}பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான்.
அப்போது, வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதிகளற்று இருந்த பின்னவன் {துச்சாசனன்}, திரிகர்த்தப் போர்வீரர்களின் தலைவனால் அவனது தேரில் ஏற்றிக் கொள்ளப்பட்டான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒருக்கணம் அவனைப் {துச்சாசனனைப்} பின்தொடர்ந்து சென்று, பின்னர்ப் பீமசேனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவனைக் {துச்சாசனனைக்} கொல்லாமல் நின்றான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் உமது மகன்கள் அனைவரையும் அழிப்பதாகச் சபைக்கு மத்தியில் பீமசேனன் உறுதியேற்றிருந்தான். பிறகு, ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இப்படித் துச்சாசனனை வென்ற சாத்யகி, ஓ! மன்னா, தனக்கு முன்பே தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற பாதையின் வழியே விரைவாகச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |