The prowess of Duryodhana! | Drona-Parva-Section-123 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 39)
பதிவின் சுருக்கம் : கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்த பாண்டவ வீரர்கள்; பாண்டவப் படைக்குள் ஊடுருவி, அப்படையைக் கலங்கடித்த துரியோதனன்; துரியோதனனின் வில்லை அறுத்த யுதிஷ்டிரன்; பாஞ்சாலர்களுடன் மோதிய துரோணர்; அர்ஜுனன் இருந்த இடத்தில் எழுந்த ஆரவாரம்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா? கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா? ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே! ஓ! சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், "இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்" என்றனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், "வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், "சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக" என்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.
அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.
துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.
அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.
துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ! சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.
துரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.
[1] அது துரோணரால் பூட்டப்பட்ட கவசமாகும். பார்க்க: துரியோதனனுக்குக் கவசம் பூட்டிய துரோணர்
பிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், "நில், நிற்பாயாக" என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூறாவளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |