The sleepless Krishna! | Drona-Parva-Section-182 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 30)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை?(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது?(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)
ஓ! சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(5) உண்மையில், அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)
பன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ! கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)
உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை?(18) ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசனன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது.(20) (நாங்கள் கர்ணனிடம்), “ஓ! கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(21) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)
கிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)
உண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)
கேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்?(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)
[1], [2] துரோண பர்வம் பகுதி 144க்கு இக்கருத்து முரணாக உள்ளது. அர்ஜுனனும் கர்ணனும் அப்போது மோதிக் கொண்டனர். அப்போது அர்ஜுனனின் கணையில் இருந்து அஸ்வத்தாமனே கர்ணனை காத்தான். அதைச் சொன்னதே சஞ்சயன்தான். அப்போது ஜெயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு அர்ஜுனன் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் தானாக முன் வந்து கர்ணன் முன்பு அர்ஜுனனை நிறுத்தவில்லை என்பது உண்மையே. கடோத்கசனின் வதத்தை நிறைவேற்றும் வரையில் கர்ணன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் கருதியிருக்கலாம் என்ற கோணமும் இதில் மறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)
அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் - சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)
[3] “நெருப்பே தேவர்களின் வாயாகும். நெருப்பில்லாத தேவர்கள் வாயற்றவர்களாக ஆவார்கள். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்” என இங்கே கங்குலி குறிப்பிடுகிறார்.
ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)
மூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ! சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ! யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்படியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)
----------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 182-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 47
----------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 182-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 47
ஆங்கிலத்தில் | In English |