Srutakarma and Prativindya! | Karna-Parva-Section-14 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : சுருதகர்மனுக்கும், சித்திரசேனனுக்கும் இடையிலான போர்; சுருதகர்மனால் கொல்லப்பட்ட சித்திரசேனன்; பிரதிவிந்தியனுக்கும் சித்திரனுக்கும் இடையில் நடந்த போர்; பிரதிவிந்தியனால் கொல்லப்பட்ட சித்திரன்; பீமசேனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ! மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதிலுக்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் ஆழத்துளைக்கப்பட்டவனும், உயர் ஆன்மா கொண்ட இளவரசனுமான வீரச் சித்திரசேனன், பெரும் வலியை உணர்ந்து மயக்கமடைந்தான்.(4) இந்த இடைவேளையில், பெரும் புகழைக் கொண்ட சுருதகர்மன், (உணர்வற்றிருந்த தன் எதிராளியான) அந்தப் பூமியின் தலைவனை {சித்திரசேனனை} தொண்ணூறு கணைகளால் மறைத்தான்.(5)
[1] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தச் சுருதகர்மனும் ஒருவனாவான். இவன் அர்ஜுனனுக்குப் பிறந்தவனாவான். இவன் சுருதகீர்த்தி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான்.
அப்போது உணர்வுகள் மீண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சித்திரசேனன், தன் எதிராளியின் வில்லை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டி, ஏழு கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான்.(6) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பலமாகத் தாக்க வல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சுருதகர்மன், தன் கணைகளின் அலைகளால் சித்திரசேனனை {முள்ளம்பன்றி போன்ற} அற்புதத் தோற்றம் கொண்டவனாக ஆக்கினான்.(7) அந்தக் கணைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இளமை நிறைந்தவனும், அழகிய மாலைகளை அணிந்தவனுமான மன்னன் {சித்திரசேனன்}, சபைக்கு மத்தியில் நல்ல அலங்காரத்துடன் கூடிய ஓர் இளைஞனைப் போல அந்தப் போர்க்களத்தில் தெரிந்தான்.(8) ஒரு கணையால் சுருதகர்மனின் நடுமார்பை விரைவாகத் துளைத்த அவன் {சித்திரசேனன்}, அவனிடம், “நில், நில்” என்றான்.(9) போரில் அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சுருதகர்மனும், செஞ்சுண்ணச் சாற்றின் ஓடையை உதிர்க்கும் ஒரு மலையைப் போல இரத்தம் சிந்தத் தொடங்கினான்.(10) குருதியில் குளித்து, அதனால் கறைபடிந்த அந்த வீரன் {சுருதகர்மன்}, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றினைப் போலப் போரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)
அப்போது எதிரியால் இப்படித் தாக்கப்பட்ட அந்தச் சுருதகர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ! மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அவனைக் கொன்றவனை {சுருதகர்மனை}) எதிர்த்து மூர்க்கமாக விரைந்தன.(16) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளி {சுருதகர்மன்}, தன் கணைகளை ஏவியபடியே, அண்ட அழிவின் போது சீற்றத்தால் நிறைந்து, அனைத்து உயிரினங்களையும் எதிர்த்துச் செல்லும் யமனைப் போல, அந்தப் படையை எதிர்த்துச் சென்றான்.(17) அந்தப் போரில் வில் தரித்த உமது பேரனால் {சுருதகர்மனால்} கொல்லப்பட்ட அவர்கள், காட்டுத்தீயால் எரிக்கப்படும் யானைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகத் தப்பி ஓடினர்.(18) எதிரியை வெல்வதில் நம்பிக்கை இழந்து தப்பி ஓடும் அவர்களைக் கண்டு, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தொடர்ந்து சென்ற சுருதகர்மன் (தன் தேரில்) பிரகாசமாகத் தெரிந்தான்.(19)
பிறகு, {யுதிஷ்டிரனின் மகன்} பிரதிவிந்தியன் [2] , ஐந்து கணைகளால் சித்திரனைத் துளைத்து, மூன்றால் அவனது சாரதியைத் தாக்கி, ஒரு கணையால் அவனது கொடிமரத்தையும் தாக்கினான்.(20) சித்திரன், தங்கச் சிறகுகள் மற்றும் கூர்முனைகளைக் கொண்டவையும், கங்க மற்றும் மயில் இறகுகளைக் குஞ்சமாகக் கொண்டவையுமான ஒன்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது {பிரதிவிந்தியனின்} கரங்களிலும், மார்பிலும் தாக்கினான்.(21) பிறகு பிரதிவிந்தியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஈட்டி ஒன்றை உமது பேரன் {பிரதிவிந்தியன்} மீது ஏவினான்.(23) எனினும் பிரதிவிந்தியன் அந்தப் போரில், ஒளிரும் விண்கல்லைப் [3] போலத் தன்னை நோக்கி வந்த அந்த ஈட்டியை, மூன்று துண்டுகளாக மிகவும் எளிதாக வெட்டினான்.(24) பிரதிவிந்தியனின் கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ஈட்டியானது, யுக முடிவில் அனைத்து உயிர்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வஜ்ரத்தைப் போலக் கீழே விழுந்தது.(25)
[2] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தப் பிரதிவிந்தியனும் ஒருவனாவான். இவன் யுதிஷ்டிரனுக்குப் பிறந்தவனாவான்.[3] “அல்லது சுடர்மிக்கப் பந்தம் ஒன்றைப் போல” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட சித்திரன், தங்க வலையால் அலங்கரிக்கப்பட்ட கனமான கதாயுதம் ஒன்றை எடுத்துப் பிரதிவிந்தியன் மீது அதை வீசினான்.(26) அந்தப் போரில் அந்தக் கதாயுதம், பின்னவனின் {பிரதிவிந்தியனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்று, தவிரவும் அவனது தேரையும் நசுக்கி பெரும் மூர்க்கத்துடன் பூமியில் விழுந்தது.(27) அதேவேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ! பாரதரே, அதே ஆயுதத்தைப் பிரதிவிந்தியன் மீது {திரும்ப} வீசினான்.(29) துணிச்சல் மிக்கப் பிரதிவிந்தியனைத் தாக்கிய அந்தச் சுடர்மிக்க ஈட்டி, அந்தப் போரில் அவனது வலக்கரத்தைத் துளைத்து, இடியின் வெடிப்பைப் போல மொத்த பகுதிக்கும் ஒளியூட்டியபடியே பூமியில் விழுந்து.(30)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சினத்தால் நிறைந்த பிரதிவிந்தியன், சித்திரனுக்கு அழிவை உண்டாக்க விரும்பி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் {தோமரம்} ஒன்றை அவன் {சித்திரன்} மீது ஏவினான். அந்த வேலானது, அவனது {சித்திரனின்} கவசத்தையும், மார்பையும் ஊடுருவி, பொந்துக்குள் நுழையும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(32) அந்த வேலால் தாக்கப்பட்ட அந்த மன்னன், பெரியவையும், பருத்தவையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பானவையுமான தன் கரங்களை விரித்தபடியே கீழே விழுந்தான்.(33) சித்திரன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், போர்க்கள ரத்தினங்களுமான உமது போர்வீரர்கள், பிரதிவிந்தியனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மூர்க்கமாக விரைந்தனர்.(34) பல்வேறு வகைகளிலான கணைகளையும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட சதக்னிகளையும் ஏவிய அவர்கள், சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போல, பிரதிவிந்தியனை விரைவில் மறைத்தனர்.(35) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அந்தப் பிரதிவிந்தியன், போரில் அப்படித் தன்னைத் தாக்குபவர்களைத் தன் கணைமாரியால் எரித்து, வஜ்ரதாரியான சக்ரன் {இந்திரன்}, அசுரப்படையை முறியடித்ததைப் போல உமது படையை முறியடித்தான்.(36)
இப்படியே போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட உமது துருப்புகள், ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றுதிரண்ட மேகத்திரள்கள் காற்றால் விரட்டப்படுவதைப் போலத் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(37) அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட உமது படையினர் இவ்வாறு ஓடியபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மட்டும் தனியனாக வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(38) (பழங்காலத்தில்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், விருத்திரனுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த மோதலைப் போல, அங்கே அவர்களுக்குள் ஒரு கடும் மோதல் உடனேயே நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)
ஆங்கிலத்தில் | In English |