The Victory of Shakuni and Uluka! | Karna-Parva-Section-25 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுயுத்சுவுக்கும் உலூகனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுயுத்சுவை வென்ற உலூகன்; சுருதகர்மனுக்கும், நகுலனின் மகனான சதானீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனிக்கும் பீமனின் மகனான சுதசோமனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனியின் ஆற்றல்; வாளின் ஆற்றலை வெளிப்படுத்திய சுதசோமன்; தரையில் நின்று போரிட்ட சுதசோமனை வியந்த தேவர்கள்; சுதசோமனின் வாளை வெட்டிய சகுனி; அர்ஜுனன் மகனான சுருதகீர்த்தியின் தேரில் ஏறிக்கொண்ட சுதசோமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படையை முறியடித்துக் கொண்டிருந்த யுயுத்சுவை எதிர்த்து, “நில், நில்” என்று சொன்னபடியே உலூகன் வேகமாகச் சென்றான்.(1) அப்போது யுயுத்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இந்திரனே} வஜ்ர்த்தால் ஒரு மலையைத் தாக்குவதைப் போல, பெரும் சக்தியுடன் சிறகு படைத்த கூர்முனைக் கணையொன்றால் உலூகனைத் தாக்கினான்.(2) இதனால் சினத்தில் நிறைந்த உலூகன், அந்தப் போரில் உமது மகனின் {யுயுத்சுவின்}[1] வில்லைக் கத்தித்தலை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி, முள்பதித்த கணையொன்றால் {கர்ணியால்} உமது மகனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான்.(3) உடைந்த அந்த வில்லை வீசியெறிந்த யுயுத்சு, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் வேகத்தைக் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்த இளவரசன், அறுபது கணைகளால் உலூகனைத் துளைத்தான். அடுத்ததாக உலூகனின் சாரதியைத் துளைத்த யுயுத்சு, மீண்டும் உலூகனையும் தாகினான்.(5)
[1] திருதராஷ்டிரனுக்கு ஒரு வைசியப் பெண்மணியிடம் மகனாகப் பிறந்தவனாவான். இவன் திருதராஷ்டிரனின் 100 மகன்கள் பட்டியலில் இடம்பெறுபவன் அல்லன். பாண்டவர்கள் இறுதி நெடும்பயணத்தை மேற்கொண்ட போது பரீக்ஷித்தை இந்த யுயுத்சுவின் பாதுகாப்பின் கீழேயே விட்டுச் சென்றனர்.
அப்போது சினத்தால் நிறைந்த உலூகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருபது கணைகளால் யுயுத்சுவைத் துளைத்து, பிறகு தங்கத்தால் ஆன அவனது {யுயுத்சுவின்} கொடிமரத்தையும் வெட்டினான்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்ததும், அழகானதும், தங்கத்தாலானதுமான அந்தக் கொடிமரம் (உலூகனால்) வெட்டப்பட்டு, யுயுத்சுவின் தேருக்கு முன்பாகக் கீழே விழுந்தது.(7) தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்ட யுயுத்சு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து, ஐந்து கணைகளால் உலூகனின் நடுமார்பைத் துளைத்தான்.(8) பிறகு அந்தப் போரில் உலூகன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களிற்சிறந்தவரே, எண்ணெயில் நனைக்கப்பட்ட அகன்ற தலைக் கணை {பல்லம்} ஒன்றால் தன் எதிராளியுடைய சாரதியின் தலையை அறுத்தான்.(9) அடுத்ததாக யுயுத்சுவின் நான்கு குதிரைகளையும் கொன்ற அவன் {உலூகன்}, ஐந்து கணைகளால் அவனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான். பலமிக்க உலூகனால் ஆழமாகத் தாக்கப்பட்ட யுயுத்சு, மற்றொரு தேரில் ஏறினான்.(10) அவனை {யுயுத்சுவைப்} போரில் வென்ற உலாகன், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி வேகமாக முன்னேறி, கூரிய கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(11)
அப்போது உமது மகன் சுருதகர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனைக் கண்கள் இமைப்பதற்காகும் அரைப்பொழுதிற்குள் அச்சமற்ற வகையில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(12) எனினும், ஓ! ஐயா, வலிமைமிக்கத் தேர்வீரனான சதானீகன், குதிரைகளற்ற தன் தேரில் நின்றபடியே சினத்தால் நிறைந்து உமது மகனின் {சுருதகர்மனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(13) அந்தக் கதாயுதமானது, உமது மகனின் தேரை அதன் குதிரைகள் மற்றும் சாரதியுடன் துண்டுகளாகக் குறைத்து, பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்து, அதைத் துளைத்துச் சென்றது.(14) பிறகு, குருக்களின் புகழை அதிகரிப்பவர்களும், தங்கள் தேர்களை இழந்தவர்களும், மோதலில் இருந்து விலகியவர்களுமான அவ்விரு வீரர்களும், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.(15) அப்போது அச்சத்துக்கு ஆட்பட்ட உமது மகன் விவிம்சுவின் தேரில் ஏறிக் கொண்டான், அதே வேளையில், சதானீகனோ, {யுதிஷ்டிரனின் மகனானப்} பிரதிவிந்தியனின் தேரில் ஏறிக் கொண்டான்.(16)
சினத்தால் நிறைந்த சகுனி, {பீமசேனனின் மகனான} சுதசோமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தாலும், நீர்த்தாரையானது ஒரு மலையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த தவறியதைப் போலப் பின்னவனை {சுதசோமனை} நடுங்கச் செய்வதில் தவறினான்.(17) தன் தந்தையின் {பீமனின்} பெரும் எதிரியைக் கண்ட சுதசோமன், ஓ! பாரதரே, பல்லாயிரம் கணைகாளல் அந்தச் சகுனியை மறைத்தான்.(18) எனினும், துல்லிய இலக்கைக் கொண்ட போர்வீரனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான அந்தச் சகுனி, போரிடும் விருப்பத்தால் இயக்கப்பட்டு, சிறகுகள் படைத்த தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக வெட்டினான்.(19) போரில் தன் கணைகளால் அந்தக் கணைகளைத் தடுத்த சகுனி, சினத்தால் நிறைந்து மூன்று கணைகளால் சுதசோமனைத் தாக்கினான்.(20) அப்போது உமது மைத்துனன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம் மற்றும் சாரதியைத் தன் கணைகளால் நுண்ணியத் துண்டுகளாக வெட்டியதால் பார்வையாளர்கள் உரத்த கூச்சலிட்டனர்.(21) குதிரைகளையும், தேரையும் இழந்தவனும், கொடிமரம் வெட்டப்பட்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி (சுதசோமன்), ஒரு நல்ல வில்லை எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்றான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளை ஏவி அந்தப் போரில் உமது மைத்துனனின் {சகுனியின்} தேரை மறைத்தான்.(23) எனினும் அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்துக்கு ஒப்பான அந்தக் கணைமாரி தன் தேரை நோக்கி வருவதைக் கண்டும் நடுங்காதிருந்தான். மறுபுறம், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் தன் கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் நொறுக்கினான்.(24)
தன் தேரில் இருந்த சகுனியுடன், காலாளாக நின்று போராடும் சுதசோமனின் நம்புதற்கரிய அருஞ்சலைக் கண்டவர்களான அங்கே இருந்த போர்வீரர்களும், ஆகாயத்தில் இருந்த சித்தர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.(25) அப்போது சகுனி, பெரும் வேகத்தைக் கொண்டவையும், கூரியவையும், முற்றிலும் நேரானவையுமான எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} சுதசோமனின் வில்லையும், அவனது {சுதசோமனது} அம்பறாத்தூணிகள் அனைத்தையும் வெட்டினான்.(26) வில்லற்றவனாகத் தேரற்றவனாக ஆன சுதசோமன் கருநெய்தலின் வண்ணம் கொண்டதும், தந்தக் கைப்பிடி கொண்டதுமான வாள் ஒன்றை உருவியுயர்த்தி உரத்த முழக்கம் செய்தான்.(27) தெளிந்த வானின் வண்ணத்தைக் கொண்ட புத்திசாலி சுதசோமனின் அந்த வாள் சுழற்றப்பட்ட போது, அது யமதண்டத்தைப் போல மிக ஆபத்தானதாகச் சகுனியால் கருதப்பட்டது.(28) அந்த வாளைத் தரித்தவனும், திறனும், வலிமையும் கொண்டவனுமான அவன் {சுதசோமன்}, பதினான்கு {14} வகையான உத்திகளை வெளிக்காட்டியபடியே திடீரென அந்த அரங்கில் வட்டமாக {மண்டலகரமாகத்} திரியத் தொடங்கினான்[2].(29) உண்மையில் அவன் {பீமன் மகன் சுதசோமன்} அந்தப் போரில் உயரமாகச் சுழன்றும், பக்கங்களில் உந்தித் தள்ளியும், முன்னோக்கிக் குதித்தும், உயரமாக எம்பிக் குதித்தும், வேகமாக ஓடியும், முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் என இப்படித் திரிந்து கொண்டே அந்த அசைவுகள் {உத்திகள்} அனைத்தையும் வெளிக்காட்டினான்.(30) அப்போது, சுபலனின் அந்த வீரமகன் {சகுனி} தன் எதிரியின் மீது எண்ணற்ற கணைகளை ஏவினாலும், அவை அனைத்தும் தன்னை நோக்கி வந்த போதே அவற்றை அந்தச் சிறந்த வாளால் பின்னவன் {எதிரி சுதசோமன்} வெட்டினான்.(31)
[2] வேறுபதிப்பில் இந்த நிலைகள் பின்வருமாறு சொல்லப்படுகிறது: வட்டமாகச் சுழல்தல் {பிராந்தம்}, நாற்புறத்திலும் வீசுதல் {ஆவித்தம்}, மேலாகச் சுழல்தல் {உத்பிராந்தம்}, நாற்புறத்திலும் மேலாகச் சுழல்தல் {ஆப்லுதம்}, நேராக நீட்டல் {பிரஸ்ருதம்}, துள்ளுதல் {பிலுதம்}, இலக்குகளை அடித்தால் {சம்பாதம்}, நேராக வீசுதல் {சமுதீர்ணம்}, விப்லுதம், ஸ்ருதம் எனப் பல்வேறு விதமான வாள்வீச்சுகளை வெளிப்படுத்தினான் என்று இருக்கிறது.
(இதனால்) சினத்தால் நிறந்த சுபலனின் மகன் {சகுனி}, ஓ! மன்னா, கடும் நஞ்சுகொண்ட பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளை மீண்டும் சுதசோமன் மீது ஏவினான்.(32) கருடனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவனும், தனது திறன் மற்றும் வலிமையின் துணை கொண்டவனுமான சுதசோமன், பெரும் சுறுசுறுப்பை வெளிக்காட்டியபடியே இவற்றையும் வெட்டினான்.(33) அப்போது சகுனி, தன் முன் மண்டலகாரமாகத் திரிந்து கொண்டிருந்தவனும், தன் எதிராளியுமான பின்னவனின் {சுதசோமனின்} அந்தப் பிரகாசமான வாளைப் பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் வெட்டினான்.(34) இவ்வாறு வெட்டப்பட்ட அந்தப் பெரிய வாளானது (அதன் பாதித் துண்டு) பூமியில் விழுந்தது, அதே வேளையில், ஓ! பாரதரே, பாதிவாளானது சுதசோமனின் பிடியிலேயே இருந்தது.(35)
தன் வாள் வெட்டப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதசோமன் ஆறு எட்டுகள் {நடையடிகள்} பின்வாங்கித் தன் பிடியில் இருந்த பாதி வாளைத் தன் எதிரியின் {சகுனியின்} மீது வீசினான்.(36) தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் துண்டு, நாண்கயிற்றுடன் கூடிய சிறப்புமிக்கச் சகுனியின் வில்லை வெட்டி, விரைவாகப் பூமியில் விழுந்தது. அப்போது சுதசோமன் சுருதகீர்த்தியின் பெரிய தேருக்குச் சென்றான். (37,38) உறுதிமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, (வழியில்) பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொன்றபடியே பாண்டவப் படையை நோக்கிச் சென்றான்.(39) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி} அச்சமற்ற வகையில் அந்தப் போரில் திரிவதைக் கண்டு, பாண்டவர்கள் படையின் அந்தப் பகுதியில் உரத்த ஆரவாரம் எழுந்தது.(40) பெரியதும், மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியதும், ஆயுதங்களுடன் கூடியதுமான அந்தப் படைப்பிரிவுகள், சிறப்புமிக்கச் சுபலன் மகனால் {சகுனியால்} முறியடிக்கப்படுவதை மக்கள் கண்டனர்.(41) தேவர்களின் தலைவன் {இந்திரன்} தைத்திய படையை நசுக்குவதைப் போலவே சுபலனின் மகனும் {சகுனியும்} அந்தப் பாண்டவப் படையை அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(42)
---------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 25-ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |