The defeat of the Panchala Princes! | Karna-Parva-Section-26 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)
உற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா?(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா? இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா?(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா? போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ! ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ! ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)
பீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ! ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்மனின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)
அக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)
அப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடைய சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ! தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)
----------------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி 26-ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |