Conducts not practised by Aryas! | Karna-Parva-Section-35 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனை விட மேன்மையானவனாகச் சல்லியனைச் சொன்ன துரியோதனன்; சாரத்ய நிலையை ஏற்ற சல்லியன்; சல்லியனை ஐயுற்ற கர்ணன்; மீண்டும் சல்லியனிடம் பேசிய துரியோதனன்; ஆரியர்கள் பயிலாத நான்கு வெவ்வேறு நடத்தைகளைக் குறித்துக் கர்ணனுக்கு எடுத்துரைத்த சல்லியன்...
துரியோதனன் {சல்லியனிடம்}, “இவ்வாறே சிறப்புமிக்கத் தேவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன் சாரதி நிலையையும், ருத்ரன் {சிவன்} போர்வீரன் நிலையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றனர்.(1) ஓ! வீரரே {சல்லியரே}, அத்தேரின் சாரதி, அதன் போர்வீரனைவிட மேன்மையானவனாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, ஓ! மனிதர்களில் புலியே, இந்தப் போரில் குதிரைகளின் கடிவாளங்களை நீர் பிடிப்பீராக.(2) ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, அந்தச் சந்தர்ப்பத்தில், தேவர்கள் அனைவராலும் கவனத்துடன் பெரும்பாட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல, உண்மையில், சங்கரனை விடப் பெரியவனாகத் தேவர்களால் அவன் {பிரம்மன்} தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, இப்போது கர்ணனை விட மேன்மையான உம்மை நாங்கள் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ருத்திர குதிரைகளின் கடிவாளங்களைப் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏந்தியதைப் போலவே, ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, இந்தப் போரில் கர்ண குதிரைகளின் கடிவாளங்களைத் தாமதமில்லாமல் நீர் ஏந்துவீராக” என்றான் {துரியோதனன்}.(3,4)
சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, அந்த இரண்டு தேவ சிங்கங்களைக் குறித்து நீ சொன்ன சிறப்புமிக்க இந்தத் தெய்வீக வரலாற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(5) உண்மையில், பெரும்பாட்டன் எவ்வாறு பவனின் {சிவனின்} சாரதியாகச் செயல்பட்டான் என்பதையும், ஓ! பாரதா {துரியோதனா}, ஒரே கணையால் அசுரர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன்.(6) பழங்காலத்தில் எவ்வாறு அந்தச் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் சாரதியாகச் செயல்பட்டான் என்ற அறிவனைத்தையும் ஏற்கனவே கிருஷ்ணனும் அறிந்திருக்கிறான். உண்மையில் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் அவற்றின் விபரங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிவான்.(7) இவ்வுண்மையை அறிந்தே அவன் {கிருஷ்ணன்}, ருத்ரனின் {சிவனின்} சாரதியான தான்தோன்றியை {பிரம்மனைப்} போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} சாரதியானான்.(8) எவ்வழியிலாவது குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதில் இந்தச் சூதன் மகன் {கர்ணன்} வென்றால், அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டதைக் கண்டு கேசவனே {கிருஷ்ணனே} போரில் ஈடுபடுவான். அப்போது அந்தச் சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்}, உன் படையையே எரித்துவிடுவான்.(9) அந்தச் சிறப்புமிக்க விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} கோபம் தூண்டப்படும்போது, அவனை எதிர்த்து நிற்க {நமது} படையணிகளின் முன்னணியில் எந்த மன்னனும் இங்கே இல்லை” என்றான் {சல்லியன்}.(10)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு பேசிக்கொண்டிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} எதிரிகளைத் தண்டிப்பவனும், உற்சாக ஆத்மா கொண்டவனுமான உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்},(11) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வைகர்த்தனன்[1] என்று வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், நமது சாத்திரங்கள் அனைத்தின் பொருளை உணர்ந்தவனுமான கர்ணனைக் குறித்துப் போரில் இழிவாக எண்ண வேண்டாம்.(12) அவனது வில்லின் நாணொலி, மற்றும் அவனது உள்ளங்கையொலி ஆகிய பயங்கரப் பேரொலிகளைக் கேட்டே பாண்டவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும்.(13) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, நூற்றுக்கணக்கான மாயைகளை வெளிப்படுத்திய கடோத்கசன் அவ்விரவில் (கர்ணனால்) எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை உமது கண்களாலேயே நீர் கண்டீர்.(14) இவ்வளவு நாட்களும் பெரும் அச்சத்தை உணர்ந்த பீபத்சுவால் {அர்ஜுனனால்} கர்ணனை எதிர்த்து நிற்க முடியவில்லை.(15) வலிமைமிக்கப் பீமசேனனும் கூட, கர்ணனுடைய வில்லின் நுனியால் இங்கேயும் அங்கேயும் இழுக்கப்பட்டு, “மூடன், பெருந்தீனிக்காரன்” என்ற பல்வேறு விதமாகக் கடிந்துரைக்கப்பட்டான்.(16) மாத்ரியின் துணிச்சல்மிக்க மகன்கள் இருவரும் பெரும்போரில் கர்ணனால் வீழ்த்தப்பட்டிருப்பினும், ஓ! ஐயா, ஏதோ ஒரு காரணத்தால் இவன் {கர்ணன்} அவர்களைக் கொல்லவில்லை.(17)
[1] உடன் பிறந்த கவசகுண்டலங்களை அறுத்துக் எடுத்தவன் என்பதாலும் கர்ணனுக்கு வைகர்த்தனன் என்ற பெயர் உண்டு. சூரியனின் {விகர்த்தனன்} மகன் என்பதாலும் அந்தப் பெயர் உண்டு.
விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனும், சாத்வத குலத்தின் தலைவனுமான வீரச் சாத்யகியும், கர்ணனால் வெல்லப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான்.(18) திருஷ்டத்யும்னன் தலைமையிலான சிருஞ்சயர்கள் அனைவரும் இந்தப் போரில் கர்ணனால் மிக எளிமையாக வீழ்த்தப்பட்டனர்.(19) உண்மையில், வஜ்ரதாரியான புரந்தரனையே கொல்லத் தகுந்தவன் எவனோ, {இந்த அருஞ்செயல்கள் அனைத்தையும் செய்தவனான} அந்தப் பெரும் வீரன் {கர்ணன்} கோபத்தால் தூண்டப்படும்போது, பாண்டவர்களால் எவ்வாறு வெல்ல அவனை முடியும்?(20) ஓ! வீரரே {சல்லியரே}, நீரும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவரே. நீர் கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் திறன் கொண்டவரே. ஆயுத வலிமையில் உமக்கு நிகராகப் பூமியில் வேறு எவரும் இல்லை.(21)
தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டிருக்கும் நீர், உமது எதிரிகளுக்கு ஓர் ஈட்டியை {முளையைப்} போலிருக்கிறீர். இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {சல்லியரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, சல்லியன் என்று நீர் அழைக்கப்படுகிறீர்(22). உமது கரங்களின் வலிமையை எதிர்கொண்ட சாத்வதர்கள் அனைவராலும், சிறந்த விளைவைப் பெற முடியவில்லை. ஓ! மன்னா {சல்லியரே}, கிருஷ்ணன் வலிமையில் உம்மை விட மேம்பட்டவனா? உண்மையில், பார்த்தன் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் பாண்டவத் துருப்புகளின் சுமை சுமக்கப்படுமோ, அவ்வாறே கர்ணன் உயிரைவிட்டால், இந்தப் பரந்த (கௌரவப்) படையின் சுமையைச் சுமக்கவல்லவராக நீர் இருக்கிறீர்.(24) ஓ! ஐயா, என் துருப்புகளைத் தடுக்கத்தக்கவனாக அவன் {கிருஷ்ணன்} ஏன் இருக்க வேண்டும்? பகைவரின் துருப்புகளைக் கொல்லத்தக்கவராக நீர் ஏன் இருக்கக்கூடாது?[2] (25) ஓ! ஐயா {சல்லியரே}, (கொல்லப்பட்ட) என் தம்பிகள் மற்றும் பூமியின் வீர மன்னர்கள் பிறரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி உமக்காக நான் விருப்பத்துடன் செல்வேன் {உமக்காக இறக்கவும் துணிவேன்}“ என்று மறுமொழி கூறினான் {துரியோதனன்}.(26)
[2] வேறொரு பதிப்பில், “பல்குனன் கொல்லப்பட்டபிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் சேனை தரிக்கத்தக்கதோ அவ்வாறே கர்ணன் மாண்டுபோகுங்கால் உம்மால் பெரும்படையானது தரிக்கத்தக்கது. ஐயா, யுத்தத்தில் வாஸுதேவன் யாது காரணம் பற்றி நமது சேனையைத் தடுக்கப்போகிறான்? நீர் யாது காரணம் பற்றிச் சேனையை வதம் செய்யாமலிருப்பீர்?” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “உண்மையில், பல்குனனின் வீழ்ச்சிக்குப் பிறகு கிருஷ்ணனால் மொத்த படையும் ஆதரிக்கப்படப்போவதைப் போல் கர்ணனின் மரணத்திற்குப் பிறகு (குருக்களின்) இந்தப் பரந்த படையை நீரே ஆதரிக்க வேண்டும். ஓ ஐயா, போர்க்களத்தில் நமது படைகளை வாசுதேவன் எக்காரணத்தால் தடுப்பான்? பகைவரின் படையை நீர் எக்காரணத்தால் கொல்லாமலிருப்பீர்?” என்றிருக்கிறது.
சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, தேவகியின் மகனைவிட {கிருஷ்ணனைவிட} நான் மேம்பட்டவன் என்று உன் துருப்புகளுக்கு முன்பு நீ சொல்வதால், உன்னிடம் நான் பெரிதும் மனநிறைவு கொண்டேன்.(27) நீ விரும்புவது போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனோடு ராதையின் கொண்டாடப்படும் மகன் {கர்ணன்} போரிடும்போது, அவனது சாரதி நிலையை {சாரத்யத்தை} நான் ஏற்பேன்.(28) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, நான் வைகர்த்தனுடன் {கர்ணனுடன்} ஒரு சிறு கட்டுவரம்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ’இவனது {கர்ணனது} முன்னிலையில் நான் விரும்பும் எவ்வார்த்தையையும் நான் சொல்வேன்’ என்பதே அஃது” என்றான்.(29)
சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} கர்ணனுடன் சேர்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையும் மத்ரர்களின் ஆட்சியாளனுக்கு மறுமொழி கூறினான்.(30) சல்லியன் ஏற்றுக் கொண்ட சாரதி நிலையால் (சாரத்யத்தால்) உறுதி கொண்ட துரியோதனன், மகிழ்ச்சியால் நிறைந்து, கர்ணனைத் தழுவிக் கொண்டான்.(31) (சுற்றிலும் இருந்த பாணர்களாலும், துதிபாடிகளாலும்) துதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் கர்ணனிடம், “தானவர்களைக் கொன்ற பெரும் இந்திரனைப் போலப் போரில் பார்த்தர்கள் அனைவரையும் கொல்வாயாக” என்றான். தன் குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் அலுவலைச் சல்லியன் ஏற்றதும், கர்ணன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் துரியோதனனிடம், “மத்ரர்களின் ஆட்சியாளர் தாம் சொல்வதை உற்சாகமாகச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, மீண்டும் அவரிடம் இனிய சொற்களால் வேண்டிக் கொள்வாயாக” என்றான்.(34)
இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்தையும் சாதித்தவனுமான அந்த வலிமைமிக்க மன்னன் துரியோதனன், பூமியின் தலைவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான அந்தச் சல்லியனிடம், அந்தப் பகுதி முழுவதையும் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் நிறைத்தபடி, “ஓ! சல்லியரே, இன்று அர்ஜுனனோட போரிட வேண்டும் என்று கர்ணன் நினைக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே, போரில் கர்ணனுடைய குதிரைகளின் கடிவாளங்களை ஏந்துவீராக.(36) பிற போர்வீரர்கள் அனைவரையும் கொன்ற இந்தக் கர்ணன், பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்புகிறான். ஓ! மன்னா, இவனது குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் காரியத்தில் மீண்டும் மீண்டும் நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.(37) சாரதிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணன், பார்த்தனுக்கு ஆலோசகனாக இருப்பதைப் போலவே, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இன்று கர்ணனை நீர் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}[3].(38)
[3] இந்தப் பகுதியின் சுலோகம் 1 முதல் 38 வரை பிபேக் திப்ராயின் பதிப்பில் இல்லை; அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகனைத் தழுவி கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன், எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரியோதனனிடம்,(39) “ஓ! காந்தாரியின் அரசமகனே, ஓ! அழகிய குணங்களைக் கொண்டவனே, இதைத்தான் நீ நினைக்கிறாயென்றால், அதற்காக, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் சாதிப்பேன்.(40) ஓ! பாரதர்களின் தலைவா, எச்செயல்களுக்கு நான் தகுந்தவனோ, அச்செயல்களில் என்னை முழு இதயத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு, உன் செயல்கள் எவற்றின் சுமையையும் நான் சுமப்பேன். எனினும், கர்ணனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் அவனிடம் நான் பேசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடாத எந்த வார்த்தைகளையும் கர்ணனும், நீயும் பொறுத்துக் கொள்வீராக” என்று மகிழ்ச்சியாக மறுமொழி கூறினான். (42)
கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பிரம்மன் ஈசானனுக்கும் {சிவனுக்கும்}, கேசவன் பார்த்தனுக்கும் எவ்வாறு நன்மை செய்தார்களோ, அவ்வாறே நீரும் எப்போதும் நமது நன்மையில் ஈடுபடுவீராக” என்றான்.(43)
சல்லியன், “தன்னொறுப்பு {சுயநிந்தனை}, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, பிறரைப் புகழ்வது ஆகிய நான்கு வகை நடத்தைகளையும் மரியாதைக்குரிய நபர்கள் {ஆரியர்கள்}[4] எவரும் பயில்வதில்லை.(44) எனினும், ஓ! கல்விமானே, உன் நம்பிக்கையை ஈர்க்க நான் சொல்லப்போகும் எதுவும் தற்புகழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். அவை யாவற்றிற்காகவும், அதை முறையாகக் கேட்பாயாக.(45) ஓ! பலமானவனே, மாதலியைப் {இந்திரன் சாரதியைப்} போலவே விழிப்புணர்விலும், குதிரைகளைக் கட்டுப்படுத்துவதிலும், எதிர்வரும் ஆபத்தை அறிவதிலும், அதைத் தவிர்ப்பதிலும், நடைமுறையில் அதைத் தவிர்க்கும் தகுதியிலும் நான் இந்திரனுக்கே கூடச் சாரதி அலுவலை ஏற்கத் தகுந்தவனே.(46) பார்த்தனோடு நீ போரிடுகையில், உன் குதிரைகளின் கடிவாளங்களை நான் ஏந்துவேன். ஓ! சூதனின் மகனே, உன் கவலை அகலட்டும்” என்றான்{சல்லியன்}.(47)
[4] வேறொரு பதிப்பில், “இந்த நான்குவிதச் செய்கைகளும் ஆரியர்களால் அனுஷ்டிக்கப்பட்டவைகளல்ல” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் ஆரியர்கள் என்றே இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மதிப்பிற்குரிய நபர்கள் என்று இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |