Salya became a driver! | Karna-Parva-Section-36 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கர்ணனிடம் நம்பிக்கை தெரிவித்த துரியோதனன்; சல்லியனை மீண்டும் வேண்டிக் கொண்டது; ஒரே தேரில் ஏறிய கர்ணனும், சல்லியனும்; கர்ணனை வாழ்த்திய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்லத்தகுந்த தன் திறன் குறித்துக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்வது; பாண்டவர்களைப் புகழ்ந்து கர்ணனை அச்சுறுத்த முயன்ற சல்லியன்...
துரியோதனன் {கர்ணனிடம்} , “கிருஷ்ணனைவிட மேன்மையானவரும், தேவதலைவனின் {இந்திரனின்} சாரதியான மாதலியைப் போன்றவருமான இந்த மத்ர ஆட்சியாளர் {சல்லியர்}, உனக்குச் சாரதியாகச் செயல்படுவார்.(1) உண்மையில், இந்திரனின் குதிரைகள் பூட்டப்பட்ட தேரை நிர்வகிக்கும் மாதலியைப் போலவே, சல்லியரும் இன்று உனது தேரின் குதிரைகளுக்குச் சாரதியாக இருப்பார்.(2) அவ்வாகனத்தில் போர்வீரனாக உன்னையும், அதன் சாரதியாக மத்ரர்களின் ஆட்சியாளரையும் {சல்லியரையும்} கொண்ட முதன்மையான தேரானது, நிச்சயம் பார்த்தர்களைப் போரில் வெல்லும்” என்றான்.(3)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “காலை வந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} மீண்டும்,(4) “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, கர்ணனுடைய முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் போரில் ஏந்துவீராக. ராதையின் மகன் {கர்ணன்} உம்மால் பாதுகாக்கப்பட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனை} வெல்லப்போகிறான்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட சல்லியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தேரில் ஏறினான்.(5) அந்தத் தேரைச் சல்லியன் அணுகிய போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய கர்ணன், தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “ஓ! தேரோட்டியே, எனக்காகத் தேரை விரைவாக ஆயத்தம் செய்வீராக” என்றான்.(6) தன் வகையில் முதன்மையானதானதும், ஆகாயத்தின் நீர் {மேக} மாளிகைகளுக்கு ஒப்பானதுமான அந்த வெற்றித் தேரை முறையாக ஆயத்தம் செய்த சல்லியன், அதைக் கர்ணனிடம் கொண்டு வந்து, “நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும்” என்றான்.(7)
அப்போது தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பிரம்மத்தை அறிந்த புரோகிதர் ஒருவரால் பழங்காலத்தில் தூய்மையாக்கப்பட்ட {பரிசுத்தமாக்கப்பட்ட} அந்தத் தேரை முறையாக வழிபட்டு,(8) அதை வலம்வந்து, சூரியதேவனைக் கவனமாகத் துதித்து, அருகில் நின்றிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “வாகனத்தில் ஏறுவீராக” என்றான்.(9) அதன் பேரில், கர்ணனுக்குச் சொந்தமானதும், வெல்லப்பட முடியாததும், முதன்மையானதுமான அந்தப் பெரிய தேரில், வலிமையும், சக்தியும் மிக்கச் சல்லியன், மலைச்சிகரத்தில் ஏறும் சிங்கத்தைப் போல ஏறினான்.(10) சல்லியன் நிலைகொண்டதைக் கண்ட கர்ணன், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்திரள்களில் ஏறும் சூரியனைப் போலவே தன் சிறந்த தேரில் ஏறினான்.(11) சூரியன், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஒரே தேரில் ஏறிக்கொண்டு, ஆகாய மேகத்தில் அமர்ந்திருக்கும் சூரியனையும், அக்னியையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(12) (பாணர்கள் மற்றும் துதிபாடிகளால்) துதிக்கப்படுபவர்களும், பெரும் காந்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களும், அப்போது வேள்வியில் ரித்விக்குகளாலும், சத்யஸ்களாலும் துதி பாடல்களால் துதிக்கப்படும் இந்திரனையும் அக்னியையும் போலத் தெரிந்தனர்.(13) சல்லியனால் கடிவாளம் பிடிக்கப்பட்ட தன் குதிரைகளுடன் கூடிய தேரில் உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே, ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலக் கர்ணன் நின்றிருந்தான்.(14) இந்த முதன்மையான தேரில் நிலைகொண்ட மனிதர்களில் புலியான கர்ணன், தன் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, மந்தரமலைகளில் உள்ள சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(15)
அளவில்லா சக்தி கொண்டவனும், போருக்காகத் தன் தேரில் நிலை கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(16) “ஓ! அதிரதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, துரோணரும், பீஷ்மரும் அடையாததும், அடைவதற்கரியதுமான அருஞ்செயலை வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்குபோதே அடைவாயாக.(17) வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும் கொல்வார்கள் என நான் எப்போதும் ஐயமின்றி நம்பினேன்.(18) இரண்டாம் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்விருவரும் அடையாததும், வீரனுக்குத் தகுந்ததுமான அருஞ்செயலை இந்தப் பெரும்போரில் நீ அடைவாயாக.(19) ஒன்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிப்பாயாக, அல்லது தனஞ்சயன், பீமசேனன், மாத்ரியின் மகன்களான இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைக் கொல்வாயாக.(20) நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும். ஓ! மனிதர்களில் புலியே, போருக்குப் புறப்படுவாயாக. பாண்டு மகனின் துருப்புகள் அனைத்தையும் சாம்பலாகக் குறைப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(21)
அப்போது ஆயிரக்கணக்கான எக்காளங்கள் மற்றும் பத்தாயிரக்கணக்கான பேரிகைகள் ஒன்றாக ஒலித்து ஆகாய மேகங்களைப் போன்ற ஒலியை உண்டாக்கின.(22) (துரியோதனனின்) அவ்வார்த்தைகளை ஏற்றவனும், தன் தேரில் நிலை கொண்டிருந்த முதன்மையான தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, போரில் சாதித்த போர்வீரனான சல்லியனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயன், பீமசேனன், இரட்டையர்கள் இருவர், மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நான் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டுவீராக.(24) ஓ! சல்லியரே, கங்க இறகுகளால் சிறகுகளமைந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை நான் ஏவும்போது, என் கரங்களின் வலிமையை இன்று தனஞ்சயன் {அர்ஜுனன்} காணட்டும்.(25) ஓ! சல்லியரே, இன்று பாண்டவர்களின் அழிவுக்காகவும், துரியோதனனின் வெற்றிக்காகவும் பெரும் சக்திகளைக் கொண்ட கணைகளை நான் ஏவுவேன்” என்றான் {கர்ணன்}.(26)
சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, பெரும் வலிமை கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் நீ ஏன் இவ்வளவு இகழ்வாகக எண்ணுகிறாய்?(27) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், வெல்லப்பட முடியாதவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான அவர்கள் பின்வாங்காதவர்களாக இருக்கிறார்கள். இந்திரனுக்கே இதயத்தில் அச்சத்தைத் தூண்டவல்லவர்கள் அவர்கள்.(28) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இந்தப் போரில் இடியின் தொடரொலிக்கு ஒப்பான காண்டீவத்தின் நாணொலியை நீ கேட்கையில், இத்தகு பேச்சுகள் எதையும் நீ பேச மாட்டாய்.(29) ஆகாயத்து மேகங்களைப் போலத் தங்கள் கூரிய கணைகளால் கவிகைகளை அமைக்கப் போகும் தர்மனின் மகனையும் {யுதிஷ்டிரனையும்}, இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்}(30), பெரும் கர நளினமும், (கணைமாரிகளைப்) பொழியும் தன்மையும் கொண்ட பாண்டவப் படையின் வேறு பிற வெல்லப்பட முடியாத மன்னர்களையும் நீ காணும்போது, இத்தகு வார்த்தைகளை நீ சொல்ல மாட்டாய்” என்று சொன்னான் {சல்லியன்}.(31)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} சொன்ன அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்த கர்ணன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அவனிடம் {சல்லியனிடம்} “செல்வீராக” என்று சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(32)
-----------------------------------------------------------------------கர்ண பர்வம் பகுதி-36ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |