The derision of Shalya! | Karna-Parva-Section-37 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : போரிடப் புறப்பட்ட கர்ணன்; அப்போது தோன்றிய சகுனங்கள்; முடிவு தெரிந்தே புறப்பட்டாலும், தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட கர்ணன்; கர்ணனை எள்ளி நகையாடிய சல்லியன், கர்ணனை நிந்தித்து அர்ஜுனனைப் புகழ்ந்தது; பாண்டவப் படையை எதிர்த்துச் சென்ற கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், போரிடும் விருப்பத்துடன் தன் நிலை ஏற்றதைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் உரக்க கூச்சலிட்டனர்.(1) தூரியங்கள் மற்றும் பேரிகைளின் ஒலி, பல்வேறு வகையிலான கணைகளின் விஸ் என்ற ஒலி, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போராளிகளின் முழக்கங்கள் ஆகியவற்றோடும், மரணம் ஒன்றையே நிற்கும் புள்ளியாகக் கொண்டும், உமது துருப்புகள் அனைத்தும் போருக்குச் சென்றன.(2)
கர்ணன் புறப்பட்டு, குருபடையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி நடுங்கி பேரொலியை உண்டாக்கினாள்.(3) சூரியன் உள்ளிட்ட ஏழு பெரும் கோள்கள் (மோதுவதற்காக) ஒன்றையொன்று எதிர்த்துச் செல்வதைப் போலத் தெரிந்தது. எரிநட்சத்திர மழை காணப்பட்டது, திசைகள் அனைத்தும் எரிவதைப் போலத் தெரிந்தன.(4) மேகமற்ற வானில் இருந்து இடி விழுந்தது, கடும் காற்றும் வீசத் தொடங்கியது.(5) பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளும், பறவைகளும் உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டு பெரும் அழிவுகளை முன்னறிவித்தன[1].(6) கர்ணன் புறப்பட்டதும், அவனது குதிரைகள் பூமியில் விழுந்தன. வானத்தில் இருந்து பயங்கரமான எலும்புகளின் மழை பொழிந்தது.(7) (கௌரவப் போர்வீரர்களின்) ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன; அவர்களது கொடிமரங்கள் நடுங்கின; ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் விலங்குகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்தன.(8) இவையும் இன்னும் பல பயங்கரச் சகுனங்களும் குருக்களின் அழிவுக்காகத் தோன்றின. விதியால் மயக்கமுற்ற அவர்களில் எவரும் அந்தச் சகுனங்களைக் கருத்தில் கொள்ள வில்லை.(9)
[1] வேறொரு பதிப்பில், “மிருக பக்ஷிகளுடைய கூட்டங்கள் பெரிதான பயத்தைத் தெரிவித்துக் கொண்டு பலவாறாக உம்முடைய சேனையை அப்பொழுது இடமாகச் சுற்றி வந்தன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளும், பறவைகளும் உமது படைக்கு வலப்புறத்தில் சென்று பயங்கரப் பேரழிவை முன்னறிவுக்கும் வகையில் பேரொலியெழுப்பின” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், விலங்குகளும் பறவைகளும் இடது பக்கம் இருந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூதன் மகன் {கர்ணன்} புறப்பட்டதைக் கண்ட (கௌரவப் படையைச் சார்ந்த) மனிதர்களின் ஆட்சியாளர்கள் அனைவரும் அவனது வெற்றிக்காகக் கூக்குரலிட்டனர். பாண்டவர்களை ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகவே கௌரவர்கள் கருதினர்.(10) பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணங்களை எண்ணிப் பார்த்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வைகர்த்தனன் {கர்ணன்}, தன் தேரில் நின்று கொண்டிருந்த போது சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியுடன் சுடர்விட்டான்.(11) பார்த்தனின் {அர்ஜுனனின்} வலிமைமிக்கச் சாதனைகளை நினைத்துப் பார்த்த அவன் {கர்ணன்}, இறுமாப்பு மற்றும் செருக்குடன், கோபத்தில் சுடர்விட்டு, கடும் பெருமூச்சுகளைவிட்டபடி சல்லியனிடம் பேசியவாறே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “என் வில்லுடன் நான் என் தேரில் இருக்கும்போது, கோபத்தால் தூண்டப்பட்டவனும், வஜ்ரதாரியுமான இந்திரனிடமே நான் அச்சங்கொள்ள மாட்டேன். பீஷ்மரின் தலைமையிலான அந்தப் பெரும் போர்வீரர்கள் போர்க்களத்தில் கிடப்பதைக் கண்டும் நான் எந்தக் கவலையையும் அடையவில்லை.(13) இந்திரனுக்கும், விஷ்ணுவுக்கும் நிகரானவர்களும், முதன்மையான தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை நொறுக்குபவர்களும், கொல்லப்பட முடியாத வீரர்களுமான அந்தக் களங்கமற்ற பீஷ்மரும், துரோணரும் எதிரியால் கொல்லப்பட்டும் இந்தப் போரில் நான் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(14) உண்மையில் ஆசான் {துரோணர்}, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவராகவும், பிராமணர்களில் முதன்மையானவராகவும் இருந்தாலும் கூட, சாரதிகள், யானைகள் மற்றும் தேர்களுடன் கூடிய நமது வலிமைமிக்க மன்னர்களை எதிரிகள் அழித்தபோது, அவர்கள் அனைவரையும் போரில் ஏன் கொல்லவில்லை?(15) குருக்களே, பெரும்போரில் அந்தத் துரோணரை நினைவு கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.
கடுந்தோற்றத்தையுடைய காலனுக்கு ஒப்பான போர்வீரனாக முன்னேறி வரும் அர்ஜுனனைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னையன்றி உங்களில் வேறு எவரும் கிடையாது.(16) பயிற்சியால் உண்டான திறனும், வலிமையும், துணிவும், உயர்ந்த ஆயுதங்களும், கொள்கையும் துரோணரில் இருந்தன. அந்த உயர் ஆன்மாவே மரணத்திற்கு அடிபணிய வேண்டியிருந்தது எனும்போது, (நமது படையின்) வேறு அனைவரையும் நான் பலமற்றவர்களாகவும், மரணத்தருவாயில் இருப்பவர்களாகவுமே கருதுகிறேன்.(17) செயல்களின் தொடர்புகளை {பற்றுகளைத்} தவிர்க்க முடியாததன் விளைவாக, இவ்வுலகில் நிலையானது எதையும் நன்கு சிந்தித்த பிறகும் கூட என்னால் காண முடியவில்லை. ஆசானே {துரோணரே} இறந்தார் எனும்போது, இன்றைய சூரிய உதயம் வரையாவது உயிருடன் வாழ்வோம் என எவன்தான் உறுதியாக நம்புவான்?[2](18) போரில் ஆசான் இவ்வாறு எதிரியால் கொல்லப்பட்டார் என்றால், சாதாரண மற்றும் தெய்வீக ஆயுதங்கள், வலிமை, ஆற்றல், சாதனைகள், விவேகமான கொள்கை {நீதியில் ஞானம்} ஆகியவற்றால் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை அழிக்க முடியாது என்பதில் ஐயமில்லாமல் போகிறது.(19) சக்தியில் துரோணர் நெருப்புக்கோ சூரியனுக்கோ நிகரானவர், ஆற்றலில் விஷ்ணுவுக்கோ, புரந்தரனுக்கோ {இந்திரனுக்கோ} அவர் ஒப்பானவர், கொள்கையில் {நீதியில்} அவர் {துரோணர்] பிருஹஸ்பதிக்கோ, உசனஸுக்கோ {சுக்கிராச்சாரியருக்கோ} நிகரானவர்; அப்படித் தடுக்கப்பட முடியாதவராக இருந்த அவரையே கூட, ஆயுதங்களால் காக்க முடியவில்லை.(20)
[2] இந்தச் சம்பவம் பதினேழாம் நாள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வரி சுட்டுவதாகத் தெரிகிறது.
ஓ! சல்லியரே, தார்தராஷ்டிரர்களின் வீரம் வீழ்த்தப்பட்டு, (நமது) மகளிரும், குழந்தைகளும் அழுது, ஓலமிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நானே போரிட வேண்டியவன் என்பதை நான் அறிவேன். எனவே, நம் எதிரிகளின் படையை எதிர்த்துச் செல்வீராக.(21) உண்மையில் உறுதிமிக்க {சத்தியத்தில் உறுதியான} பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் இருக்கும் அந்தத் துருப்புகளைத் தாக்குப்பிடிக்க என்னைத் தவிரை வேறு எவரால் முடியும்?(22) எனவே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இந்தப் போரில் பாஞ்சாலர்கள், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி விரைவாகச் செல்வீராக. போரில் அவர்களோடு மோதி, நான் அவர்களைக் கொல்வேன், அல்லது துரோணர் சென்ற பாதையில் யமனின் முன்னிலையை நான் அடைவேன்.(23) ஓ! சல்லியரே, அந்த வீரர்களுக்கு மத்தியில் நான் செல்ல மாட்டேன் என்று நீர் நினைக்காதீர். இந்த உட்பகையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (அவற்றைப் பொறுத்துக் கொள்ள முயலாத) நான் துரோணரைப் பின்தொடர்ந்தாவது செல்வேன்[3].(24) ஞானியோ, மூடனோ, அவனது காலம் முடிந்தால், அவர்கள் அனைவரையும் காலன் சமமாகவே கருதுகிறான்; எவரும் தப்ப முடியாது. ஓ! கல்விமானே, நான் பார்த்தர்களை எதிர்த்துச் செல்வேன். என் விதியை மீற முடியாதவனாக நான் இருக்கிறேன்.(25) விசித்திரவீரியன் மகனுடைய {திருதராஷ்டிரனுடைய} மகன் {துரியோதனன்} எப்போதும் எனக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டான். அவனது நோக்கங்களைச் சாதிப்பதற்காக அன்பிற்குரியவையும், விடுவதற்குக் கடினமானவையுமான என் உயிர் மூச்சையும், இந்த உடலையும் நான் துறப்பேன்.(26)
[3] “நீலகண்டர், தேஷாம் சூரானாம் Teshaam Curaanaam என்பது யுதிஷ்டிரனையும், பிறரையும் அல்லாமல், பீஷ்மரையும் பிறரையும் குறிக்கின்றன என்று பொருள் கொண்டு, இந்த வரியை வேறு விதமாக விளக்குகிறார். அவர் பரிந்துரைக்கும் பொருள் பின்வருமாறு, ‘ஓ! சல்லியரே, நான் பீஷ்மருக்கும், பிறருக்கும் மத்தியில் செல்லவேண்டியதில்லை என்று எண்ணாதீர்; (அதாவது, நானும் அவர்களில் ஒருவனாகவே கணக்கெடுக்கப்பட வேண்டும்); எனினும், என் நண்பனான துரியோதனனுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்தால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது; (அதாவது, வேறு ஏதேனும் செய்தால் துரியோதனனின் நோக்கைப் பழுது செய்யும் என்பதால் நான் என் சக்தியில் சிறந்த அளவுக்குப் போரிடுவேன்);’ {என்று நீலகண்டர் பொருள் கொள்கிறார்}” என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேறொரு பதிப்பில் இவ்வரி, “நான் பீஷ்மாதிகளான அந்தச் சூரர்களுடைய மத்தியில் செல்லாமலிருக்கப் போகிறதே இல்லை என்று இப்பொழுது நீ அறிவாயாக. இந்த மித்திரத் துரோகமானது என்னால் ஸகிக்கத்தக்கதன்று. பிராணனை இழந்து துரோணரைப் பின் தொடரப் போகிறேன்” என்றிருக்கிறது.
மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ சல்லியரே, நான் அவர்களது படையின் இதயப் பகுதிக்குள் நுழைய மாட்டேன் என்று நினைக்காதீர். உறவினர்களுக்குள்ளான இது போன்ற உட்பகையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் உயிரைத் துறந்து நான் துரோணரைக் கூடப் பின்தொடர்வேன்” என்றிருக்கிறது.
பிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ சல்லியரே, நான் அந்தத் துணிச்சல்மிக்கவர்களுக்கு மத்தியில் செல்ல மாட்டேன் என்று எண்ணாதீர். நண்பர்களுக்கு மத்தியிலான இந்த உட்பகையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் என் உயிரை விட்டுத் துரோணரைப் பின் தொடர்வேன்” என்றிருக்கிறது. சல்லியன் மற்றும் கர்ணனுக்கிடையிலான உட்பகையையே இது குறிக்கிறது எனப் பிபேக் திப்ராய் குறிப்பிடுகிறார்.
புலித்தோலால் மறைக்கப்பட்டதும், எவ்வொலியையும் உண்டாக்காத அச்சுகள், தங்க ஆசனம், வெள்ளியாலான திரிவேணு ஆகியவற்றைக் கொண்ட இந்த முதன்மையான தேரானது, ராமர் {பரசுராமர்} எனக்கு அளித்த இந்த முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதாக இருக்கிறது.(27) ஓ! சல்லியரே, இந்த அழகிய விற்களையும், கொடிமரங்களையும், கதாயுதங்களையும், கடும் தோற்றங்களையுடைய இந்தக் கணைகளையும், சுடர்மிக்க இந்த வாளையும், இந்த வலிமைமிக்க ஆயுதத்தையும், கடுமையானதும், பேரொலியை எழுப்பக்கூடியதுமான இந்த வெண் சங்கையும் பார்ப்பீராக.(28) கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், இடியைப் போன்ற ஆழமான சடசடப்பொலியை உண்டாக்கும் சக்கரங்களைக் கொண்டதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டதும், சிறந்த அம்பறாத்தூணிகளால் அலங்கரிக்கப்படுமான இந்தத் தேரில் செல்லும் நான், என் வலிமையை வெளிப்படுத்தி, தேர்வீரர்களில் காளையான அர்ஜுனனை இந்தப் போரில் கொல்வேன்.(29) அண்டத்தை எரிக்கும் அந்தகனே இந்தப் போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்காணிப்புடன் பாதுகாத்தாலும்கூட, போரில் அவனோடு மோதி நான் அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரைப் பின்தொடர்ந்து யமனின் முன்னிலைக்குச் செல்வேன்.(30) யமன், வருணன், குபேரன், வாசவன் {இந்திரன்} ஆகியோர் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் இங்கே வந்து, ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பெரும்போரில் அந்தப் பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவர்கள் அனைவருடன் சேர்த்து நான் அவனை வெல்வேன். {அவ்வாறிருக்கையில்} பல சொற்களின் தேவைதான் எதற்கு?” {என்றான் கர்ணன்}.(31)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரின் எதிர்பார்ப்பில் மிகவும் மகிழ்ச்சியாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருந்த கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, அவனை எள்ளி நகையாடியபடி, உரக்கச் சிரித்து, {தற்புகழ்ச்சியில் இருந்து} அவனைத் தடுப்பதற்காகப் பின்வரும் மறுமொழியைச் சொன்னான்.(32)
சல்லியன் {கர்ணனிடம்}, “நிறுத்து, ஓ! கர்ணா, இத்தகு தற்புகழ்ச்சியை நிறுத்து. பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நீ, ஒருவன் எப்போதும் சொல்லக்கூடாததையெல்லாம் சொல்கிறாய். மனிதர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே? ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே {கர்ணனே}, நீ எங்கே?(33) இந்திரனின் தம்பியாலும் {கிருஷ்ணனாலும்}, தேவர்களின் தலைவனாலும் பாதுகாக்கப்பட்டு, தேவலோகம் போல இருந்த யாதவர்களின் வசிப்பிடத்தை {துவாரகையைக்} கலங்கடித்து விட்டு, அனைவரிலும் முதன்மையானவனின் (கேசவனின் {கிருஷ்ணனின்}) தங்கையைக் {சுபத்திரையைக்} கடத்த அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(34) ஒரு விலங்கைக் கொன்ற சச்சரவு நேர்ந்த சமயத்தில், தலைவர்களின் தலைவனும், உலகங்களைப் படைத்தவனுமான பவனை {சிவனைப்} போருக்கு அழைக்க, தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(35)
அந்த ஜயன் {அர்ஜுனன்}, அக்னியைக் கௌரவப் படுத்துவதற்காக, அசுரர்கள், தேவர்கள், பெரும்பாம்புகள், மனிதர்கள், பறவைகள், பிசாசங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரைத் தன் கணைகளால் வென்று, அத்தேவன் {அக்னி} விரும்பிய உணவை அவனுக்குக் கொடுத்தான்.(36) ஓ! கர்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட தன் சிறந்த கணைகளால் அந்த எதிரிகளைக் கொன்றபோது, அந்தப் பல்குனன் {அர்ஜுனன்}, குருக்களுக்கு மத்தியில் இருந்த திருதராஷ்டிரர் மகனையும் {துரியோதனனையும்} விடுவித்தது உனக்கு நினைவில்லையா?(37) முதல்வனாக நீ தப்பி ஓடிய பிறகு, அந்த வானுலாவிகளை (சித்திரரதன் தலைமையிலான கந்தர்வர்களை) வீழ்த்தி, சச்சரவையே இயல்பாகக் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களைப் பாண்டவர்கள் விடுவித்த அந்த நிகழ்வு உனக்கு நினைவில்லையா?(38) (விராடனின்) பசுக்களைக் கைப்பற்றச் சென்ற நிகழ்வின் போது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரண்டையும் பெரும் எண்ணிகையில் கொண்டிருந்தவர்களும், ஆசான் {துரோணர்}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, பீஷ்மர் ஆகியோரைத் தங்களுடன் கொண்டிருந்தவர்களுமான கௌரவர்களை அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} வென்றானே. ஓ!, அப்போது அர்ஜுனனை ஏன் நீ வெல்லவில்லை?(39) உன் அழிவுக்காகவே மற்றுமொரு சிறந்த போர் இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. உன் எதிரியிடம் கொண்ட அச்சத்தால், நீ தப்பி ஓடாமல் இருந்தால், ஓ! சூதன் மகனே {கர்ணா}, போரிடச் சென்றவுடன் நீ கொல்லப்படுவாய்” என்றான் {சல்லியன்}.(40)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கர்ணனிடம் இக்கடுமொழியில் இதயப்பூர்வமாக ஈடுபட்டு, பின்னவனின் {அவனது} எதிரியையும் புகழ்ந்து கொண்டிருந்தபோது, எதிரிகளை எரிப்பவனான அந்தக் குரு படையின் தலைவன் {கர்ணன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மத்ர மன்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(41)
கர்ணன் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும். எனினும், அர்ஜுனனின் புகழ்ச்சியில் நீர் ஈடுபடுவது ஏன்? எனக்கும் அவனுக்கு இடையில் போர் நேரப்போகிறது. என்னை அவன் {அர்ஜுனன்} போரில் வென்றால், இந்த உமது புகழ்ச்சிகள் அனைத்தும் நன்கு சொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றான்.(42)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி எந்த மறுமொழியும் கூறாமலிருந்தான். போரிடும் விருப்பத்தோடு கர்ணன், “செல்வீராக” என்று சல்லியனிடம் சொன்ன போது,(43) தன் வாகனத்தில் வெண்குதிரைகள் பூட்டியிருந்தவனும், சல்லியனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பெரும் தேர்வீரன் {கர்ணன்}, இருளை அளிக்கும் சூரியனைப் போலப் போரில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைத் தன் வழியில் கொன்றபடியே எதிரிகளை எதிர்த்து விரைந்தான்.(44) உண்மையில் கர்ணன், புலித்தோல்கள் போர்த்தி, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரில் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று, பாண்டவர்களின் படையைக் கண்டதும், தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} குறித்து விசாரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(45)
------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி-37ல் உள்ள சுலோகங்கள் : 45
கர்ண பர்வம் பகுதி-37ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |