The feats of Bhima! | Karna-Parva-Section-61 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பீமனிடம் இருந்து தப்பி ஓடிய படையை மீண்டும் அணிதிரட்டிய கர்ணன்; கர்ணனுடன் மோதிய சிகண்டி, குதிரைகளையும், சாரதியையும் இழந்து தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனுடன் வீரமாகப் போரிட்ட துச்சாசனன்; விருஷசேனனுடன் மோதிய நகுலன்; உலூகனை விரட்டிய சகாதேவன்; சகுனியை எளிதாக வென்ற சாத்யகி; பீமனிடம் புறமுதுகிட்ட துரியோதனன்; கிருபரிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதாமன்யு; கிருதவர்மனால் விரட்டப்பட்ட உத்தமௌஜஸ்; யானைப் படையைக் கலங்கடித்து, தேர்வீரர்களைப் புறமுதுகிடச் செய்து, ருத்திரனைப் போலத் தெரிந்த பீமசேனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதும், என் துருப்புகள் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்படும் போதும்,(1) உண்மையில் என் பரந்த படையானது, பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உற்சாகத்தை இழந்தபோதும், ஓ! சஞ்சயா, கௌரவர்கள் என்ன செய்தனர் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிய கரங்களைக் கொண்ட பீமன், சூதன் மகனின் {கர்ணனின்} பெரும் வல்லமையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை நோக்கி விரைந்தான்.(3) பீமசேனனிடம் இருந்து உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட வலிமைமிக்கக் கர்ணன், ஓ! மன்னா, பெரும் முயற்சிகளைச் செய்து அதை அணிதிரட்டினான்.(4) வலிய கரங்களைக் கொண்ட கர்ணன், உமது மகனின் {துரியோதனனின்} படையை அணிதிரட்டிய பிறகு, போரில் வீழ்த்தக்கடினமான வீரர்களான பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(5) பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும் தங்கள் விற்களை அசைத்துக் கணைகளை ஏவியபடியே அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(6) பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி, ஜனமேஜயன், பெரும் பலங்கொண்ட திருஷ்டத்யும்னன், பிரபத்ரகர்கள் அனைவர்,(7) மனிதர்களில் புலிகளான அந்தப் பாஞ்சாலர்கள் ஆகியோர் சினத்தால் நிறைந்து, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தப் போரில் உமது படையை எதிர்த்து அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(8) அதேபோல உமது படையின் பெருந்தேர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப் படையைக் கொல்லும் விருப்பத்தில் அஃதை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்தவையும், அபரிமிதமான காலாட்படைவீரர்கள் மற்றும் கொடிமரங்களைக் கொண்டவையுமான அந்த இரு படைகளும், ஓ! மனிதர்களில் புலியே, அப்போது ஓர் அற்புதத் தன்மையை ஏற்றன.(10)
சிகண்டி கர்ணனை எதிர்த்துச் சென்றான், திருஷ்டத்யும்னன் ஒரு பெரும்படையின் துணையுடன் கூடிய உமது மகன் துச்சாசனனை எதிர்த்துச் சென்றான்.(11) நகுலன் விருஷசேனனை எதிர்த்துச் சென்றான், அதே வேளையில் யுதிஷ்டிரன் சித்திரசேனனை எதிர்த்தான். சகாதேவன், ஓ! மன்னா, அந்தப் போரில் உலூகனை எதிர்த்துச் சென்றான்.(12) சாத்யகி சகுனியை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள் பிற கௌரவர்களை எதிர்த்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் பெருங்கவனத்துடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்றான்.(13) கௌதமரின் மகன் கிருபர் வலிமைமிக்க வில்லாளியான யுதாமன்யுவை எதிர்த்துச் சென்றார், அதே வேளையில் பெரும் பலத்தைக் கொண்ட கிருதவர்மன் உத்தமௌஜஸை எதிர்த்துச் சென்றான்.(14) வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், ஓ! ஐயா, தனியொருவனாக, ஆதரவற்றவனாக, குருக்கள் மற்றும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்றிருந்த உமது மகன்கள் அனைவரையும் எதிர்த்தான்.(15)
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொன்றவனான சிகண்டி, அந்தப் போரில் அச்சமற்றவனாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைச் சிறகுபடைத்த தன் கணைகளால் தடுத்தான்.(16) தடுக்கப்பட்டவனான கர்ணன் அப்போது சினத்தால் தன் உதடுகள் நடுங்க, மூன்று கணைகளைக் கொண்டு சிகண்டியின் கண் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(17) தன் நெற்றில் தைத்திருந்த அந்த மூன்று கணைகளுடன் கூடிய சிகண்டி, மூன்று உயர்ந்த சிகரங்களைக் கொண்ட ஒரு வெள்ளி மலையைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(18) அம்மோதலில் சூதன் மகனால் {கர்ணனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிகண்டி, பதிலுக்குத் தொண்ணூறு கூறிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(19) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சிகண்டியின் குதிரைகளைக் கொன்று, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனது சாரதியையும் கொன்று, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(20) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சிகண்டி}, சினத்தால் நிறைந்து, குதிரைகளற்றத் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் கர்ணன் மீது ஓர் ஈட்டியை வீசினான்.(21) அம்மோதலில் மூன்று கணைகளால் அவ்வீட்டியை வெட்டிய கர்ணன், ஓ! பாரதரே, பிறகு ஒன்பது கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்தான்.(22) மிகவும் சிதைக்கப்பட்டவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சிகண்டி கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி, பஞ்சுக் குவியலைச் சிதறடிக்கும் வலிய காற்றைப் போலப் பாண்டவர்களின் துருப்புகளைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(24)
அதே வேளையில், உமது மகன் துச்சாசனனால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு மூன்று கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(25) அப்போது துச்சாசனன், ஓ! ஐயா, தன்னைத் தாக்குபவனின் இடக்கரத்தை, கூரியதும், நேரானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஓர் அகன்ற தலை கணையால் {பலத்தால்} துளைத்தான்.(26) இவ்வாறு துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், கோபத்தால் நிறைந்து, பதிலடி கொடுக்க விரும்பி, ஓ! பாரதரே, துச்சாசனன் மீது பயங்கரமான கணை ஒன்றை ஏவினான்.(27) இருப்பினும், உமது மகன் {துச்சாசனன்}, திருஷ்டத்யும்னனால் ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த மூர்க்கமான கணையைத் தன் கணைகள் மூன்றால் வெட்டினான்.(28) பிறகு, திருஷ்டத்யும்னனை அணுகிய அவன், தங்கத்தால் அலங்கரிக்கபட்ட அகன்ற தலை கொண்ட பதினேழு கணைகளால் அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(29) அதனால் சினத்தால் நிறைந்த அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கூரிய கத்தித் தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்}, ஓ! ஐயா, துச்சாசனனின் வில்லை அறுத்தான். இதனால் துருப்புகள் அனைத்தும் உரக்க முழங்கின.(30)
மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, சிரித்துக் கொண்டே அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரிகளால் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.(31) உமது உயர்ஆன்ம மகனின் ஆற்றலைக் கண்ட போராளிகளும், சித்தர்களும், அப்சரஸ்களும் ஆச்சரியத்தால் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(32) பிறகு, சிங்கத்தால் தடுக்கப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, இவ்வாறு துச்சாசனனால் தாக்கப்படும் வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.(33) அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, (பாண்டவப் படையின்) தலைவனைக் காக்க விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் பலரும், யானைகள், குதிரைகள் ஆகியனவும் உமது மகனைச் {துச்சாசனனைச்} சூழ்ந்து கொண்டன.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் தொடங்கிய போரானது, யுக முடிவில் அனைத்துயிர்களுக்கும் நேரும் அழிவு காட்டுவதைப் போலவே அச்சம் நிறைந்த காட்சியையே தந்தது.(35)
தன் தந்தையின் {கர்ணனின்} அருகில் நின்ற விருஷசேனன், முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் நகுலனைத் துளைத்து, மேலும் மூன்று கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(36) அந்த வீர நகுலன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட துணிக்கோல் கணையொன்றால் விருஷசேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.(37) இவ்வாறு தன் வலிமைமிக்க எதிரியால் துளைக்கப்பட்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான விருஷசேனன், தன்னைத் தாக்கியவனை இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஐந்து கணைகளால் அவனால் {நகுலனால்} துளைக்கப்பட்டான்.(38) பிறகு அந்த மனிதர்களில் காளையர் இருவரும், ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர். அதன்பேரில் அவர்களை ஆதரித்த படைப்பிரிவுகள் பிளந்தன.(39) திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} துருப்புகள் தப்பி ஓடுவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பலவந்தமாகத் நிறுத்த தொடங்கினான்.(40) கர்ணன் சென்ற பிறகு, நகுலன் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான். கர்ணனின் மகனும் {விருஷசேனனும்} நகுலனைத் தவிர்த்துவிட்டு,(41) ஓ! ஐயா, தன் தந்தையின் {கர்ணனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ராதையின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்கே வேகமாகச் சென்றான்.
கோபக்கார உலூகன் சகாதேவனால் தடுக்கப்பட்டான்.(42) அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற வீர சகாதேவன், பிறகு, தன் எதிரியின் சாரதியை யமலோகம் அனுப்பி வைத்தான்.(43) அப்போது தன் தந்தைக்கு {சகுனிக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனான உலூகன், தன் தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமாகச் சென்று, திரிகர்த்தர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்தான்.(44) சாத்யகி, இருபது கூரிய கணைகளால் சகுனியைத் துளைத்து, அகன்ற தலை கொண்ட கணையொன்றால் {பல்லத்தால்} அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} கொடிமரத்தையும் எளிதாக அறுத்தான்.(45) சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சின்னத்தால் நிறைந்து, அம்மோதலில் சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, பிறகு தங்கத்தாலான அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(46) அப்போது சாத்யகி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைப் {சகுனியைப்} பதிலுக்குத் துளைத்து, ஓ! ஏகாதிபதி, மூன்று கணைகளால் அவனது {சகுனியின்} சாரதியைத் தாக்கினான்.(47) பிறகு அவன் {சாத்யகி}, வேறு கணைகளைக் கொண்டு, சகுனியின் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஓ! மனிதர்களில் காளையே, தன் தேரில் இருந்து வேகமாக இறங்கியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகுனி,(48) வேகமாக {தன் மகன்} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது பின்னவன் {உலுகன்} போரில் திறம்பெற்ற வீரனான அந்தச் சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} இருந்து தன் தந்தையை {சகுனியை} பெரும் வேகத்தோடு வெளியே கொண்டு சென்றான்.(49) பிறகு சாத்யகி, ஓ! மன்னா, அந்தப் போரில் பெரும் வேகத்தோடு உமது படையை எதிர்த்து விரைந்ததனால் அந்தப் படை பிளந்தது.(50) சினியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் மறைக்கப்பட்ட உமது படையினர், ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்தோடு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடி, உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(51)
உமது மகன் {துரியோதனன்} அந்தப் போரில் பீமசேனனைத் தடுத்தான். ஒரு கணப்பொழுதில் பீமன், அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனனைத்} குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாக, கொடியற்றவனாகச் செய்ததால், (பாண்டவத்) துருப்புகள் பெருமகிழ்ச்சியடைந்தன. பிறகு உமது மகன் {துரியோதனன்}, பீமசேனனின் முன்னிலையில் இருந்து சென்றுவிட்டான்.(52,53) இதனால் மொத்த குரு படையும் பீமசேனனை எதிர்த்து விரைந்தது. பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது வல்லமைமிக்கதாக இருந்தது.(54) யுதாமன்யு, கிருபரைத் துளைத்து அவரது வில்லையும் வேகமாக அறுத்தான். அப்போது, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கிருபர், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு,(55) யுதாமன்யுவின் கொடிமரம், சாரதி மற்றும் குடை ஆகியவற்றைப் பூமியில் சாய்த்தார். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான யுதாமன்யு தன் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு அதில் {அந்தத் தேரிலேயே} பின்வாங்கிச் சென்றான்.(56)
உத்தமௌஜஸ், மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, பயங்கரமான ஆற்றலைக் கொண்ட ஹிருதிகனின் பயங்கர மகனை {கிருதவர்மனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(57) ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு இடையிலான அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, இதற்கு முன்பு காணப்படாததைப் போல அச்சம் நிறைந்த நிலையை அடைந்தது.(58) அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா, அம்மோதலில் திடீரென உத்தமௌஜஸின் மார்பைத் துளைத்ததால், பின்னவன் {உத்தமௌஜஸ்} தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(59) அந்த முதன்மையான தேர்வீரனின் சாரதி அவனை {அங்கிருந்து} வெளியே கொண்டு சென்றான். அப்போது மொத்த குரு படையும், பீமசேனனை நோக்கி விரைந்தது.(60)
துச்சாசனன் மற்றும் சுபலன் மகன் {சகுனி} ஆகியோர், ஒரு பெரும் யானைப் படையின் துணையுடன் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, சிறு கணைகளால் {க்ஷுதரகங்களால்} அவனைத் {பீமனைத்} துளைக்கத் தொடங்கினர்.(62) தன்னை எதிர்த்து வேகமாக முன்னேறும் அந்த யானைப் படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, பெருஞ்சினத்தால் நிறைந்து, தன் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான். மேலும் அவன் அசுரர்களைத் தாக்கும் இந்திரனைப் போல யானைகளை யானைகளாலேயே தாக்கத் தொடங்கினான்.(63) விருகோதரன் {பீமன்} அந்த யானைகளைக் கொன்று கொண்டிருந்த போது, அந்தப் போரில், நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போலத் தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான்.(64) மேகத்திரள்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலவே அந்தப் பீமன் ஆயிரக்கணக்கில் ஒன்றாகத் திரண்டிருந்த அந்த யானைக் கூட்டங்களைச் சிதறடித்து அழித்தான்.(65)
தங்க வலைப்பின்னல்களாலும், ரத்தினங்கள் பலவற்றாலும் மேனியெங்கும் மறைக்கப்பட்டிருந்த அந்த யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தன.(66) பீமனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின. அவற்றில் சில தங்கள் இதயங்கள் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(67) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்துவிட்டவையுமான அந்த யானைகளுடன் கூடிய பூமியானது, உடைந்த மலைகளால் விரவிக் கிடப்பதைப் போலவே அழகாகத் தெரிந்தது.(68) சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், விழுந்துவிட்டவர்களுமான யானை வீரர்களுடன் கூடிய அந்தப் பூமியானது, தகுதி தீர்ந்த {புண்ணியம் தீர்ந்த} கோள்களால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது[1].(69) அப்போது, கன்னப்பொட்டுகளும் {கபோலங்களும்}, மத்தகங்களும், துதிக்கைகளும் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த யானைகள், பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு அந்தப் போரில் இருந்து நூற்றுக் கணக்கில் தப்பி ஓடின.(70)
[1] “பூமியிலுள்ள நீதிமான்கள் இறந்த பிறகு கோள்களாகவும், விண்மீன்களாகவும் ஆகிறார்கள். தங்கள் புண்ணியம் தீர்ந்ததும் அவர்கள் விழுகிறார்கள் என்பது நம்பப்படுகிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.
மலைகளைப் போலப் பெரியவையான அவற்றில் சில, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் உலோகத் தாதுக்கள் வழியும் மலைகளைப் போலக் குருதியைக் கக்கியபடியே தப்பி ஓடின.(71) அப்போது சந்தனக்குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டவையும், இரு பெரும் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான பீமனின் இரு கரங்களும், தொடர்ந்து வில்லை வளைப்பதில் ஈடுபடுவதை மக்கள் கண்டனர்.(72) இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது வில்லின் நாண்கயிறு மற்றும் உள்ளங்கைகளின் ஒலியைக் கேட்ட அந்த யானைகள், சிறுநீரும், மலமும் கழித்து அச்சத்தால் தப்பி ஓடின.(73) தனியொருவனாகப் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பீமனின் அருஞ்செயல்களால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {பீமன்}, அனைத்து உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கும் ருத்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.(74)
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -61ல் உள்ள சுலோகங்கள் : 74
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -61ல் உள்ள சுலோகங்கள் : 74
ஆங்கிலத்தில் | In English |