Yudhishthira retreated from Karna! | Karna-Parva-Section-62 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை முற்றுகையிட்ட துரியோதனன்; யுதிஷ்டிரனை மீட்க விரைந்த பாண்டவப் படை; அந்தப் பாண்டவப் படை முழுவதையும் தனியொருவனாகத் தடுத்த கர்ணன்; சகாதேவனால் தாக்கப்பட்ட துரியோதனன்; சினம் கொண்ட கர்ணன் பாண்டவத் துருப்புகளை விரட்டியது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்; கௌரவப் படையைப் பிளந்த யுதிஷ்டிரன்; கர்ணனால் தாக்கப்பட்டு அவனிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது அந்த அழகிய அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், நாராயணனாலேயே {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேரில் {அங்கே} காட்சியளித்தான்.(1) பெருங்கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, விஜயன் {அர்ஜுனன்} அந்தப் போரில் குதிரைவீரர்கள் நிறைந்த உமது படையைக் கலங்கடித்தான்.(2) வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனன் வேறு காரியத்தில் {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உமது மகன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, பழிவாங்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, தன் துருப்புகளில் பாதி அளவு சூழச் சென்று, முன்னேறி வந்து கொண்டிருந்த யுதிஷ்டிரனைத் திடீரென முற்றுகையிட்டான்.(3) பிறகு அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, எழுபத்துமூன்று கத்தி தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான். இதனால் கோபத்தால் தூண்டப்பட்டவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன்,(4) முப்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} உமது மகனை {துரியோதனனை} வேகமாகத் தாக்கினான். அப்போது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்காகக் கௌரவத் துருப்புகள் மிக வேகமாக விரைந்தன.(5)
எதிரியின் தீய எண்ணங்களைப் புரிந்து கொண்ட பாண்டவப் படையின் பெருந்தேர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை மீட்பதற்காக அவனை நோக்கி விரைந்தனர்.(6) உண்மையில், நகுலன், சகாதேவன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளால் சூழப்பட்டு இவ்வாறு யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றனர்.(7) பீமசேனனும், அந்தப் போரில் உமது படையின் பெருந்தேர்வீரர்களை நசுக்கி, எதிரிகளால் சூழப்பட்ட மன்னனை {யுதிஷ்டிரனை} நோக்கிச் சென்றான்.(8) வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரிகளை ஏவிக் கொண்டு, (யுதிஷ்டிரனை மீட்பதற்காக) இவ்வாறு முன்னேறிவரும் அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(9) அவர்களும் அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, எண்ணற்ற வேல்களை வீசி உறுதியாகப் போரிட்டாலும், ராதையின் மகனை {கர்ணனைப்} பார்க்கக் கூட அவர்களால் முடியவில்லை.(10)
உண்மையில், தாக்கும் மற்றும் தடுக்கும் ஆயுதங்கள் அனைத்திலும் திறன் வாய்ந்தவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வில்லாளிகளான அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(11) எனினும், உயர் ஆன்ம சகாதேவன், (துரியோதனன் இருந்த இடத்திற்கு) வேகமாக அணுகி, தாமதமில்லாமல் ஒரு (தெய்வீக) ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, இருபது கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.(12) இவ்வாறு சகாதேவனால் துளைக்கப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கன்னப்பொட்டுகள் {கபோலங்கள்} பிளக்கப்பட்ட பெரும் யானை ஒன்றைப் போல அழகாக இருந்தான்.(13) பெரும் சக்தி கொண்ட கணைகள் பலவற்றால் ஆழமாகத் துளைக்கப்பட்ட உமது மகனை {துரியோதனனைக்} கண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்றான்.(14) அந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக இருப்புக்கு அழைத்து, யுதிஷ்டிரன் மற்றும் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(15)
இவ்வாறு உயர் ஆன்மக் கர்ணனால் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் துருப்புகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்டு விரைவில் தப்பி ஓடின.(16) கணைகளின் மழையானது அங்கே மொத்தமாகப் பொழிந்தது. உண்மையில், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட அவை {கணைகள்}, முன்பு ஏவப்பட்டவற்றின் சிறகை {வால்பகுதியைத்} தங்கள் தலையால் {கணை முனையால்) தீண்டின.(17) அந்தக் கணைமாரிப் பொழிவில் {கணைகள்} ஒன்றோடொன்று மோதிக்கொண்டதன் விளைவால், ஓ! ஏகாதிபதி, ஆகாயத்தில் நெருப்புண்டாவதைப் போலத் தெரிந்தது.(18), ஓ! மன்னா, முன்னேறிச் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவையும், எதிரிகளின் உடல்களைத் துளைக்க வல்லவையுமான கணைகளால், அந்தக் கர்ணன், திசைகளின் பத்து புள்ளிகளையும் விரைவில் மறைத்தான்.(19) உயர்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்திய கர்ணன், செஞ்சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தன் இரு கரங்களையும் பெரும் சக்தியுடன் அசைக்கத் தொடங்கினான்.(20)
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களையும் தன் கணைகளால் மலைக்கச் செய்த கர்ணன், நீதிமானான யுதிஷ்டிரனை ஆழமாகப் பீடித்தான்.(21) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், ஐம்பது கூரிய கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(22) அந்தக் கணைமாரியால் உண்டான இருளின் விளைவால், போரானது காணப் பயங்கரமானது. கங்க இறகுகளைக் கொண்ட பல்வேறு வகைக் கூரிய கணைகளாலும், கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்}, பல்வேறு வகைகளிலான ஈட்டிகள், வாள்கள் மற்றும் கதாயுதங்களினாலும், அவர்களைத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கொன்ற போது, ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் துன்பக் குரல்கள் எழுந்தன.(23,24) அற ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீமை செய்ய விரும்பித் தன் கண்களை எங்கே செலுத்தினானோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அங்கே உமது படை பிளந்தது.(25) பெருஞ்சினத்தால் தூண்டப்பட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான கர்ணனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, முகத்தில் கோபம் கொப்பளிக்க அந்தப் போரில் துணிக்கோல்கணைகளையும், அர்த்தச்சந்திரக் கணைகளையும், கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளையும் {வத்ஸதந்தங்களையும்} ஏவிக் கொண்டு, நீதிமானான மன்னனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான். யுதிஷ்டிரனும், தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(26,27)
அப்போது சிரிப்பவனைப் போலத் தெரிந்த கர்ணன், கங்க இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, பாண்டுவின் அரசமகனுடைய மார்பில் துளைத்தான்.(28) அதனால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவனான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே தன் சாரதியிடம் பின்வாங்கிச் செல்லுமாறு ஆணையிட்டான்.(29) அதன் பேரில் தங்கள் மன்னனோடு {துரியோதனனோடு} கூடிய தார்தராஷ்டிரர்கள் அனைவரும், “பிடியுங்கள். பிடியுங்கள்” என்று உரக்கக் கூவியவாறு அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(30) அப்போது தாக்குவதில் திறம்பெற்ற ஆயிரத்து எழுநூறு கேகயத் துருப்பினர், பாஞ்சாலத் துருப்பினரோடு ஒன்று சேர்ந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் தார்தராஷ்டிரர்களைத் தடுத்தனர்.(31) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருபோது, பெரும் வலிமை கொண்ட போர்வீரர்களான துரியோதனன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(32)
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 62-ல் உள்ள சுலோகங்கள் : 32
--------------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 62-ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |