Yudhishthira repaired to the Pandava camp! | Karna-Parva-Section-63 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)
மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனுக்கு நன்மை செய்ய விரும்பி, உறுதிமிக்க மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான்.(6) பதிலுக்கு அந்த மன்னனும் {யுதிஷ்டிரனும்}, ராதை மகனின் நடு மார்பைத் துளைத்து, மூன்று கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தான்.(7) பிறகு, எதிரிகளை எரிப்பவர்களும், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களுமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் கர்ணன் வெல்லாத வகையில் பின்னவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(8) அப்போது, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், பெருங்கவனத்துடன் கணைமாரிகளை ஏவி, அவற்றைக் கொண்டு ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தனர்.(9) எனினும், வீரனான சூதன் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மா கொண்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரையும், பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான்.(10)
பிறகு அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தந்தத்தைப் போன்ற வெண்மையானவையும், மனத்தைப் போன்று வேகமானவையும், வாலில் கருப்பு முடியைக் கொண்டவையுமான யுதிஷ்டிரனின் சிறந்த குதிரைகளைக் கொன்றான்.(11) அப்போது பெரும் வில்லாளியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} குந்தி மகனின் தலைப்பாகையை வீழ்த்தினான்,(12) அதே போல, நகுலனின் குதிரைகளையும் கொன்ற அந்த வீரக் கர்ணன், மாத்ரியின் அந்தப் புத்திசாலி மகனின் {நகுலனின்} தேருடைய ஏர்க்காலையும், வில்லையும் அறுத்தான்.(13) குதிரைகளற்றவர்களும், தேரற்றவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தச் சகோதர்கள் இருவரும் {யுதிஷ்டிரனும், நகுலனும்}, அதன்பேரில் சகாதேவனின் தேரில் ஏறிக் கொண்டனர்.(14)
அந்த இரு சகோதரர்களையும் தேரற்றவர்களாகக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், அவர்களது தாய்மாமனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கருணையால் ராதையின் மகனிடம் {கர்ணனிடம்},(15) “நீ இன்று பிருதையின் மகனான பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட வேண்டும். தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இந்த அளவுக்குச் சினம் தூண்டப்படும் வகையில் ஏன் நீ போரிடுகிறாய்?(16) உன் ஆயுதங்கள் தீர்ந்து பாதிப்படையும் நிலையில் நீ இருக்கிறாய். உன் கவசமும் பலவீனமடைந்துள்ளது. ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, பார்த்தனை {அர்ஜுனனை} நீ அடையும் போது, உன் கணைகளும் குறைந்து, அம்பறாத்தூணிகளும் இல்லாமல், உன் சாரதியும், குதிரைகளும் களைத்துப் போய், எதிரியின் ஆயுதங்களால் நீயும் சிதைந்திருந்தால், ஏளனத்திற்கும், கேலிக்கும் உரிய பொருளாக நீ ஆவாய்” என்றான் {சல்லியன்}.(17) மத்ரர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு சொல்லப்பட்டாலும், சினத்தால் நிறைந்திருந்த கர்ணன், அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்குவதைத் தொடரவே செய்தான்.(18) மேலும் அவன், பாண்டு மற்றும் மாத்ரியின் மகன்கள் இருவரையும் கூரிய கணைகள் பலவற்றால் துளைப்பதையும் தொடர்ந்தான். சிரித்துக் கொண்டே தன் கணைகளால் அவன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் போரில் இருந்து புறங்காட்ட வைத்தான்.(19)
அப்போது சல்லியன், யுதிஷ்டிரனை அழிக்கத் தீர்மானித்துப் பெருங்கோபத்தால் தன் தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனிடம், மீண்டும் சிரித்துக் கொண்டே, இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! ராதையின் மகனே, எவனுடைய நிமித்தமாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உன்னை எப்போதும் கௌரவிக்கிறானோ, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக.(21) இரு கிருஷ்ணர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்குவது கேட்கப்படுகிறது. மழைக்காலங்களில் கேட்கப்படும் மேகங்களின் முழக்கத்தைப்போல அர்ஜுனனின் நாணொலியும் கேட்கப்படுகிறது.(22) அர்ஜுனன், நமது தேர்வீரர்களில் முதன்மையானோரைத் தன் கணைப் பொழிவால் தாக்கி வீழ்த்தி நம் துருப்பினர் அனைவரையும் அதோ விழுங்கிக் கொண்டிருக்கிறான். ஓ கர்ணா, இந்தப் போரில் அவனைப் பார்.(23)
அவனது பின்புறத்தை யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் பாதுகாக்கின்றனர். துணிச்சல்மிக்கச் சாத்யகி அவனது இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான்,(24) திருஷ்டத்யும்னன் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். பீமசேனனோ திருதராஷ்டிரரின் அரச மகனுடன் {துரியோதனனுடன்} அதோ போரிடுகிறான்.(25) ஓ! ராதையின் மகனே, இன்று நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பீமன் மன்னனைக் கொல்ல இயலாத வகையிலும், அவனிடம் இருந்து மன்னன் {துரியோதனன்} தப்புவிக்கும் வகையிலும் செயல்படுவாயாக.(26) போர்க்கள ரத்தினமான பீமசேனனின் ஆளுகையின் கீழ் துரியோதனன் கொண்டுவரப்படுவதைப் பார். அவனை அணுகி உன்னால் காக்க முடியுமென்றால், உண்மையில் அஃது அற்புதம் நிறைந்த ஓர் அருஞ்செயலாகவே இருக்கும். (27) மன்னனைப் பேராபத்து நெருங்குவதால் அங்கே சென்று அவனை மீட்பாயாக. மாத்ரியின் மகன்களையோ, மன்னன் யுதிஷ்டிரனையோ கொல்வதால் நீ என்ன ஆதாயத்தை அடையப் போகிறாய்?” என்றான்.(28) ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அந்தப் பயங்கரப்போரில் பீமனால் ஆட்கொள்ளப்படும் துரியோதனனைக் கண்டவனுமான ராதையின் வீர மகன் {கர்ணன்},(29) சல்லியனின் வார்த்தைகளால் இவ்வாறு தூண்டப்பட்டு, மன்னனைக் காக்க மிகவும் விரும்பி, அஜாதசத்ருவையும் {யுதிஷ்டிரனையும்}, பாண்டு மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்களையும் விடுவித்தான்.(30) பறவைகளைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்டவையுமான தன் குதிரைகளால் அவன் {கர்ணன்} கொண்டு செல்லப்பட்டான்.(31)
கர்ணன் சென்றதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், ஓ! ஐயா, சகாதேவனின் வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கிச் சென்றான்.(32) தன் இரட்டைச் சகோதரர்களின் துணையுடன் சென்ற அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, வெட்கத்துடன் (பாண்டவ) முகாமுக்கு வேகமாகத் திரும்பி, கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்ட தன் உடலுடன்,(33) தேரில் இருந்து கீழே இறங்கி, ஒரு சிறந்த படுக்கையில் வேகமாக அமர்ந்து கொண்டான்.
அப்போது அவனுடைய உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்ட பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துன்பக்கணையால் தன் இதயம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவனாக,(34) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மாத்ரியின் மகன்களுமான தன் இரு சகோதரர்களிடம், “பீமசேனனின் படைப்பிரிவுக்கு வேகமாகத் திரும்பிச் செல்வீராக.(35) மேகமென முழங்கிக் கொண்டே விருகோதரன் {பீமன்} போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். மற்றொரு தேரில் ஏறியவனும், தேர்வீரர்களில் காளையுமான நகுலன்,(36) பெரும் சக்தி கொண்ட சகாதேவன் ஆகிய பெரும் வலிமையைக் கொண்டவர்களும், எதிரிகளை நசுக்குபவர்களான அவ்விரு சகோதரர்களும், மிக வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பீமனை நோக்கிச் சென்றனர். உண்மையில், ஒன்றாகச் சேர்ந்து பீமசேனனின் படைப்பிரிவுக்குத் திரும்பிய அந்தச் சகோதரர்கள், அங்கே தங்களுக்குரிய இடங்களில் நிலைகொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(37)
-------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -63ல் உள்ள சுலோகங்கள் : 37
அப்போது அவனுடைய உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்ட பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துன்பக்கணையால் தன் இதயம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவனாக,(34) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மாத்ரியின் மகன்களுமான தன் இரு சகோதரர்களிடம், “பீமசேனனின் படைப்பிரிவுக்கு வேகமாகத் திரும்பிச் செல்வீராக.(35) மேகமென முழங்கிக் கொண்டே விருகோதரன் {பீமன்} போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். மற்றொரு தேரில் ஏறியவனும், தேர்வீரர்களில் காளையுமான நகுலன்,(36) பெரும் சக்தி கொண்ட சகாதேவன் ஆகிய பெரும் வலிமையைக் கொண்டவர்களும், எதிரிகளை நசுக்குபவர்களான அவ்விரு சகோதரர்களும், மிக வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பீமனை நோக்கிச் சென்றனர். உண்மையில், ஒன்றாகச் சேர்ந்து பீமசேனனின் படைப்பிரிவுக்குத் திரும்பிய அந்தச் சகோதரர்கள், அங்கே தங்களுக்குரிய இடங்களில் நிலைகொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(37)
-------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -63ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |