Bhima and Duryodhana dialogue! | Shalya-Parva-Section-33 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் கோபடைந்த கிருஷ்ணன்; துரியோதனனை வெல்வது கடினமானது என்று சொன்ன கிருஷ்ணன்; எளிதில் வெல்வேன் என்று சொன்ன பீமன்; பீமனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; பீமனுக்கும் துரியோதனனுக்கு இடையில் நடந்த வாக்குவாதம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் இந்தத் தொணியிலேயே மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, "எங்களில் ஒருவரைக் கொன்று குருக்களின் மத்தியில் மன்னனாவாயாக" என்று ஆராயாமால் என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டீர். உண்மையில், ஓ! யுதிஷ்டிரரே, துரியோதனன், உம்மையோ, அர்ஜுனனையோ, நகுலனையோ, சகாதேவனையோ தேர்ந்தெடுத்தால் (விளைவதென்ன)?(2,3) ஓ! மன்னா, பீமசேனரைக் கொல்லும் விருப்பத்தால் துரியோதனன் இரும்புச் சிலையுடன் இந்தப் பதிமூன்று வருடங்களாகக் கதாயுதப்பயிற்சி செய்திருக்கிறான்[1].(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறகு நம் காரியத்தை எவ்வாறு நம்மால் அடையமுடியும்? ஓ! மன்னர்களில் சிறந்தவரே, கருணையால் தகாத பெருந்துணிவுடன் செயல்படுகிறீர்.(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "இவன் பீமஸேனனைக் கொல்ல வேண்டுமென்கிற எண்ணத்தினால் புருஷவடிவமுள்ள இருப்புப்பாவையில் பதின்மூன்று வர்ஷகாலம் யுத்தப்பயிற்சி செய்திருக்கிறான்" என்றிருக்கிறது.
இக்கணத்தில், பிருதையின் மகனான விருகோதரரை {பீமரைத்} தவிர (துரியோதனனுக்கு) இணையான வேறொருவரை நான் காணவில்லை. மேலும் அவரது {பீமரது} கதாயுதப் பயிற்சியும் மிகப் பெரிதாக இல்லை.(6) எனவே, ஓ! ஏகாதிபதி, முன்பு உமக்கும், சகுனிக்கும் இடையில் நடைபெற்றதுபோல மீண்டும் வாய்ப்பைக் கொடுக்கும் ஓர் இழிந்த விளையாட்டுக்கு நீர் அனுமதி கொடுத்திருக்கிறீர்.(7) பீமர் வலிமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார். எனினும் மன்னன் சுயோதனனோ திறமையைக் கொண்டிருக்கிறான். ஓ! மன்னா, வலிமைக்கும், திறமைக்கும் இடையிலான போட்டியில், திறனுடையவனே எப்போதும் வெல்வான்.(8) ஓ! மன்னா, இப்படிப்பட்ட ஒரு பகைவனை உமது வார்த்தைகளால் சுகமான, வசதியான இடத்தில் நிறுத்திவிட்டீர். எனினும், உமது நிலையையோ கடினமாக்கிக் கொண்டீர். இதன் விளைவாக நாம் பேராபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.(9) எதிரிகள் அனைவரையும் வென்று, துயரங்களில் மூழ்கியிருக்கும் ஒரே ஓர் எதிரி மட்டுமே களையப்படவேண்டியவனாக இருக்கும் நேரத்தில் கைப்பிடியில் கிடைத்த அரசுரிமையை எவன்தான் கைவிடுவான்?(10)
இன்று உலகில் தேவனாகவே இருப்பினும் கூட, போரில் கதாயுதந்தரித்த துரியோதனனை வெல்லத்தகுந்த எந்த மனிதனையும் நான் காணவில்லை.(11) நீரோ, பீமரோ, நகுலனோ, சகாதேவனோ, பல்குனனோ {அர்ஜுனனோ} நேர்மையான போரில் துரியோதனனை வெல்லவல்லவர்களல்ல. மன்னன் துரியோதனன் பெருந்திறமையைக் கொண்டவனாக இருக்கிறான்.(12) ஓ! பாரதரே, "கதாயுதத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எங்களில் ஒருவனைக் கொன்றால் நீ மன்னனாகலாம்" என்ற வார்த்தைகளை எவ்வாறு உம்மால் சொல்ல முடிந்தது?(13) துரியோதனன், நமக்கு மத்தியில் நேர்மையான போரை விரும்பி, விருகோதரரோடு {பீமரோடு} மோதினாலும் கூட, நமது வெற்றியானது ஐயத்திற்கிடமானதேயாகும். துரியோதனன் பெரும் வலிமையும், பெரும் திறமையும் கொண்டவனாவான்.(14) "எங்களில் ஒருவனைக் கொன்று மன்னனாவாயாக" என்று உம்மால் எவ்வாறு சொல்ல முடியும்? பாண்டு மற்றும் குந்தியின் வாரிசுகள் அரசாள விதிக்கப்பட்டவர்களில்லை என்பதில் ஐயமில்லை. காட்டு வாழ்வைத் தொடரவோ, பிச்சையெடுத்து வாழ்ந்து தங்கள் நாட்களைக் கடத்தவோதான் அவர்கள் பிறப்பை அடைந்திருக்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(15)
பீமசேனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, ஓ! யதுக்களை மகிழ்விப்பவனே, கவலைப்படாதே. எவ்வளவு கடினமானதாக இருப்பினும், இந்தப் பகைமையின் முடிவை இன்று நான் அடைவேன்.(16) போரில் சுயோதனனைக் கொல்வேன் என்பதில் ஐயமில்லை. ஓ! கிருஷ்ணா, நீதிமானான யுதிஷ்டிரரின் வெற்றி உறுதியானது என்றே தோன்றுகிறது.(17) இந்த எனது கதாயுதமானது, துரியோதனனுடைய கதாயுதத்தைவிட ஒன்றரைமடங்கு கனமானதாகும். ஓ! மாதவா, கவலை அடையாதே.(18) கதாயுதத்தையே ஆயுதமாகக் கொண்டு நான் அவனோடு போரிடத் துணிவேன். ஓ! ஜனார்த்தனா, நீங்கள் அனைவரும் அம்மோதலில் பார்வையாளர்களாக நிற்பீர்களாக.(19) அனைத்து வகை ஆயுதங்களைக் கொண்ட தேவர்களை உள்ளடக்கி மூவுலகத்தோடும் என்னால் போரிட முடியும் எனும்போது, துரியோதனனைக் குறித்து நீ என்ன சொல்வாய்?" என்றான்".(20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "விருகோதரன் {பீமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மகிழ்ச்சியால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, உயர்வாக மெச்சியபடியே அவனிடம்,(21) "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உம்மை நம்பியிருக்கும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், தன் எதிரிகள் அனைவரையும் கொன்று, மீண்டும் தன் சுடர்மிக்கச் செழிப்பை அடைவார் என்பதில் ஐயமில்லை.(22) போரில் நீர் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்றுவிட்டீர். உமது கைகளால் மன்னர்கள் பலரும், இளவரசர்களும், யானைகளும் தங்கள் விதியைச் சந்திக்க நேர்ந்தது.(23) ஓ! பாண்டுவின் மகனே, கலிங்கர்கள், மகதர்கள், கௌரவர்கள், மேற்கத்தியர்கள், காந்தாரர்கள் ஆகியோர் அனைவரும் இந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டனர்.(24) ஓ! குந்தியின் மகனே, துரியோதனனைக் கொன்று, விஷ்ணு (மூவுலகங்களின் அரசுரிமையையும்) சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்ததைப் போல, கடல்களுடன் கூடிய பூமியை நீதிமானான யுதிஷ்டிரருக்கு அளிப்பீராக.(25) பொல்லாத திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ}, போரில் உம்மை எதிரியாக அடைந்து, தன் விதியைச் சந்திப்பான் என்பதில் ஐயமில்லை. அவனது எலும்புகளை நொறுக்கி உமது உறுதிமொழியை நிச்சயம் நீர் நிறைவேற்றுவீர்.(26) எனினும், ஓ! பிருதையின் மகனே, திருதராஷ்டிரன் மகனுடன் எப்போதும் கவனமாகப் போரிடுவீராக. அவன், திறன் மற்றும் பலம் ஆகிய இரண்டையும் பெற்று எப்போதும் போரில் திளைப்பவனாக இருக்கிறான்" என்றான் {கிருஷ்ணன்}.(27)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு சாத்யகி அந்தப் பாண்டுவின் மகனைப் பாராட்டினான்.(28) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பீமசேனனின் அவ்வார்த்தைகளைப் பாராட்டினர்.(29) பிறகு, பயங்கர வலிமையைக் கொண்டவனான பீமன், சுடர்மிக்கச் சூரியனைப் போலச் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், (30) "இந்தப் போரில் நான் இவனோடு {துரியோதனனோடு} மோதத் துணிவேன். மனிதர்களில் இழிந்தவனான இவன், போரில் என்னை வெல்லத் தகுந்தவன் இல்லை.(31) காண்டவ வனத்தில் நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, இன்று திருதராஷ்டிரர் மகனான இந்தச் சுயோதனன் மேல் என் இதயத்தில் நான் வளர்த்து வந்த கோபத்தைக் கக்கப் போகிறேன்.(32) ஓ! பாண்டுவின் மகனே, உமது இதயத்தில் தைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன். ஓ! மன்னா, என் கதாயுதத்தைக் கொண்டு இந்த இழிந்தவனை வீழ்த்தியபிறகு, நீர் மகிழ்ச்சி அடைவீராக.(33) எனினும், ஓ! பாவமற்றவரே, உமது மகிமை நிறைந்த மாலையை {கீர்த்திமாலையை} நான் இன்று மீட்டெடுப்பேன். இன்று சுயோதனன் தனது உயிர் மூச்சையும், செழிப்பையும், நாட்டையும் கைவிடுவான்.(34) இன்று மன்னர் திருதராஷ்டிரரும் கூட, தன் மகனின் கொலையைக் கேட்டுவிட்டு, சகுனியின் பரிந்துரைகளில் இருந்து எழுந்த (நமக்கு அவர் இழைத்த) தீமைகள் அனைத்தையும் நினைவுகூர்வார்" என்றான் {பீமன்}.(35)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பாரதக் குல இளவரசன் {பீமன்}, விருத்திரனை (மோதலுக்கு) அழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிடுவதற்காக நின்று கொண்டிருந்தான்.(36) அந்த அழைப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையைத் தாக்கச் சொல்லும் மற்றொரு யானையைப் போல அம்மோதலுக்குச் சென்றான்.(37) பாண்டவர்கள், கதாயுதத்துடன் வந்த உமது மகனை, சிகரம் கொண்ட கைலாச மலையைப் போலக் கண்டனர்.(38) உண்மையில், மந்தையில் இருந்து பிரிந்து தனியாக நிற்கும் யானைகளின் இளவரசனைப் போல உமது வலிமைமிக்க மகனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(39) போரில் சிங்கத்தைப் போலவே நின்று கொண்டிருந்த துரியோதனன், எந்த அச்சத்தையும், திகைப்பையும், வலியையும், கவலையையும் அடையவில்லை.(40)
சிகரம் கொண்ட கைலாச மலையைப் போன்ற கதாயுதத்தை உயர்த்தி நின்ற அவனை {துரியோதனனைக்} கண்ட பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனிடம்,(41) "மன்னர் திருதராஷ்டிரரும், நீயும் எங்களுக்குச் செய்த தீமைகள் அனைத்தையும் மனத்தில் நிறுத்துவாயாக. வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்வாயாக.(42) திரௌபதி தன் பருவ {மாதவிடாய்} காலத்தில் சபைக்கு மத்தியில் வைத்து தவறாக நடத்தப்பட்டதையும், சகுனியின் பரிந்துரையால் மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்பதையும் நினைவுகூர்வாயாக.(43) ஓ! தீய ஆன்மாவே, அந்தச் செயல்கள் மற்றும் அப்பாவி பார்த்தர்களுக்கு நீ செய்த பிற தீங்குகள் ஆகியவற்றின் பயங்கர விளைவை இப்போது காண்பாயாக.(44) பாரதர்களின் சிறப்புமிக்கத் தலைவரும், நம் அனைவருக்கும் பாட்டனுமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் காரணமாக (எங்களால்) தாக்கி வீழ்த்தப்பட்டு இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(45)
துரோணரும் கொல்லப்பட்டார், கர்ணனும் கொல்லப்பட்டான். பெரும் வீரம் கொண்ட சல்லியரும் கொல்லப்பட்டார். அதோ பகைமைகளின் வேராக இருந்த அந்தச் சகுனியும் போரில் அங்கே கொல்லப்பட்டிருக்கிறான்.(46) உனது வீரச் சகோதரர்களும், உனது மகன்களும், உன் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கின்றன. பெரும் வீரம் கொண்டவர்களும், போரில் இருந்து பின்வாங்காதவர்களுமான வேறு பிற மன்னர்களும் கொல்லப்பட்டனர்.(47) இவர்களும், பிற க்ஷத்திரியக் காளைகள் பலரும், திரௌபதியின் குழல்களைப் பற்றிய அந்த இழிபிறவியான பிராதிகாமினும் கொல்லப்பட்டனர்.(48) குலத்தை அழித்தவனும், மனிதர்களில் இழிந்தவனுமான நீ மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறாய். உன்னையும் இன்று என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இதில் ஐயமேதும் இல்லை.(49) ஓ! மன்னா, இன்றைய போரில் நான் உன் செருக்கைத் தணிப்பேன். அரசுரிமை குறித்த உன் நம்பிக்கை அனைத்தையும் அழித்து, ஓ! மன்னா, பாண்டுவின் மகன்களுக்கு இழைக்கபட்ட குற்றச் செயல்களுக்காகப் பழிதீர்ப்பேன்" என்றான் {பீமன்}.(50)
துரியோதனன் {பீமனிடம்}, "வார்த்தைகள் பலவற்றால் என்ன பயன்? என்னுடன் இப்போது போரிடுவாயாக. ஓ! விருகோதரா {பீமா}, போருக்கான உன் விருப்பத்தை உன்னில் இருந்து இன்று நான் விரட்டுவேன்.(51) ஓ! இழிந்தவனே {பீமா}, மோதலுக்காகக் கதாயுதத்துடன் நின்று கொண்டிருக்கும் என்னை நீ ஏன் காணவில்லையா? இமய மலையின் பாறையைப் போலத் தெரியும் உறுதிமிக்கக் கதாயுதத்தை நான் தரித்திருக்கவில்லையா?(52) ஓ! இழிந்தவனே, இவ்வாயுதத்தைத் தரித்திருக்கும் என்னை வெல்ல எந்த எதிரிதான் துணிவான்? இது நேர்மையான போராக இருந்தால், தேவர்களில் புரந்தரனே ஆனாலும் கூட அந்த எல்லைக்கு {துணிவுறத்} தகுந்தவன் இல்லை.(53) நீ குறிப்பிட்ட என் தீச்செயல்கள் அனைத்திருக்காகவும் (இப்போதும் கூட) உன்னால் எனக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.(54) நான், என் பலத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் காட்டில் வசிக்கவும், தலைமறைவாக மாறுவேடங்களில் இருக்கவும் செய்தேன்.(55) உங்களின் நண்பர்களும், கூட்டாளிகளும்கூடக் கொல்லப்பட்டிருக்கின்றனர். எங்கள் இழப்பும் அதற்கு இணையானதே. இப்போது இந்தப் போரில் நான் வீழ்ந்தாலும் அஃது உயர்வாகப் புகழத்தக்கதாகவே இருக்கும். ஒருவேளை காலமேகூட அதற்குக் காரணமாக அமையலாம்.(56) இந்த நாள் வரை, போர்களத்தில் நேர்மையான போரில் ஒருபோதும் நான் வீழ்த்தப்பட்டதில்லை. வஞ்சகத்தால் என்னை நீ வீழ்த்தினால், உனக்குப் புகழ்க்கேடு எப்போதும் நிலைதிருக்கும் என்பது நிச்சயம். அந்த உனது செயல் நியாயமற்றதும், இழிவானதுமாகும் என்பதில் ஐயமில்லை.(57) ஓ! குந்தியின் மகனே, நீரில்லா கூதிர்கால மேகத்தைப் போல இவ்வாறு கனியில்லாமல் {பலனில்லாமல்} முழங்காதே. உன் பலமனைத்தையும் இப்போது போரில் காட்டுவாயாக" என்றான் {துரியோதனன்}.(58)
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும் வெற்றியில் உள்ள விருப்பத்தால் உந்தப்பட்டவர்களுமான பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் அவற்றை உயர்வாக மெச்சினார்கள்.(59) கரங்களைத் தட்டி மதங்கொண்ட யானையைத் தூண்டும் மனிதர்களைப் போல, அவர்கள் (தங்கள் புகழுரைகளாலும், உற்சாகமூட்டல்களாலும்) மன்னன் துரியோதனனை மகிழ்வுறச் செய்தனர்.(60) அங்கே இருந்த யானைகள் மீண்டும் மீண்டும் பிளிறவும், குதிரைகள் மீண்டும் மீண்டும் கனைக்கவும் தொடங்கின. வெற்றியடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட பாண்டவர்களின் ஆயுதங்கள் தன்னொளியாலேயே ஒளிர்ந்து கொண்டிருந்தன" {என்றான் சஞ்சயன்}.(61)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 61
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |