The arrival of Valadeva! | Shalya-Parva-Section-34 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ! மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், "ஓ! ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக" {என்றனர்}.(4)
அப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) "நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்" என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)
[1] வளிமண்டலத்தில் பூசம் நட்சத்திரம் 8ம் நட்சத்திரமாகும், திருவோணம் நட்சத்திரம் 22ம் நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்திலிருந்து அடுத்தப் பூசம் நட்சத்திரம் வரை 28 நாட்கள், பூசத்தில் இருந்து திருவோணம் வரை {22-8 =14} 14 நாட்கள். ஆக மொத்தம் 42 நாட்கள்.
இரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதேபோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக" என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)
அளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ! மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)
அப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், "ஓ! ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக" என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.(20)
------------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 20
------------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |