Prabhas Patan - Chandramas and Rohini! | Shalya-Parva-Section-35 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : பலராமனின் புனிதப்பயணத்தைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பிரபாஸத்தின் பெயர்க்காரணத்தைச் சொன்ன வைசம்பாயனர்; தக்ஷன் தன் மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; ரோகிணியுடன் மட்டும் அதிக அன்புடன் இருந்த சந்திரன்; சந்திரனைச் சபித்த தக்ஷன்; தக்ஷனிடம் பரிகாரம் கேட்ட தேவர்கள்; பிரபாஸத்தை அடைந்து பிணிதீர்ந்த சந்திரன்; உதபானத்தில் மறைந்த சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருப்பதைச் சொல்லும் குறிப்பு...
ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, "(குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் நடந்த) அந்தப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்பு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்ட தலைவன் ராமன் {பலராமன்}, விருஷ்ணிகள் பலருடன் (துவாரகையிலிருந்து) புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் கேசவனிடம், "நான் திருதராஷ்டிரன் மகனுக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ என் ஆதரவைத் தரமாட்டேன், மாறாக நான் விரும்பும் இடங்களுக்குச் செல்லப்போகிறேன்" என்று சொன்னான்.(2) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, எதிரிகளைத் தடுப்பவனான ராமன் {பலராமன்} அங்கிருந்து சென்று விட்டான். ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, அவனது வருகை குறித்த அனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்.(8) ராமன் {பலராமன்} அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தான், அந்தப் போரை எவ்வாறு கண்டான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் கருத்தின்படி நீர் உரைப்பதில் நல்ல திறம் பெற்றவராக இருக்கிறீர்" என்றான் {ஜனமேஜயன்}.(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உயர் ஆன்மப் பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் நிலைகொண்ட பிறகு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அமைதி நோக்குடனும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் மதுசூதனனை {கிருஷ்ணனை} திருதராஷ்டிரன் முன்னிலைக்கு அனுப்பினர்.(5) ஹஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனைச் சந்தித்த கேசவன் {கிருஷ்ணன்}, உண்மையான, அதிலும் குறிப்பாக நன்மையை விளைவிக்கும் வார்த்தைகளைச் சொன்னான்.(6) எனினும் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, நான் ஏற்கனவே சொன்னது போலவே அந்த ஆலோசனைகளைக் கேட்கவில்லை.(7) அமைதியை ஏற்படுத்த இயலாதவனும், மனிதர்களில் முதன்மையானவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தூது தோல்வியுற்றதும், (பாண்டவ முகாமுக்குத்) திரும்பி, பாண்டவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) "விதியால் உந்தப்படும் கௌரவர்கள் என் வார்த்தைகளை அலட்சியம் செய்கின்றனர். பாண்டவர்களே, என்னுடன் (போர்க்களத்திற்கு) வந்து, புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தின் கீழ் புறப்படுங்கள்" {என்று கிருஷ்ணன் சொன்னான்}.(10)
அதன்பிறகு, (இரு தரப்பின்) துருப்புகளும் திரட்டப்பட்டு, அணிவகுக்கப்பட்டபோது, மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையைக் கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான ரோகிணியின் மகன் {பலராமன்}, தன் தம்பியான கிருஷ்ணனிடம்,(11) "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா, நாம் குருக்களுக்கு ஆதரவளிப்போமாக" என்றான். எனினும் கிருஷ்ணனோ அவனது வார்த்தைகளைக் கேட்கவில்லை.(12) (இதனால்) இதயம் நிறைந்த சினத்துடன் கூடியவனும், கலப்பைதாரியுமான அந்த யதுகுலத்தின் சிறப்புமிக்க மகன் {பலராமன்}, சரஸ்வதிக்குப் {சரஸ்வதி ஆற்றுக்கு} புனிதப் பயணம் புறப்பட்டான்.(13) யாதவர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அவன், மைத்ரம்[1] என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்டான். எனினும் போஜத் தலைவன் (கிருதவர்மன்) துரியோதனன் தரப்பை அடைந்தான். யுயுதானனின் {சாத்யகியின்} துணையுடன் கூடிய வாசுதேவன் பாண்டவர்களை அடைந்தான்.(14) புஷ்ய நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் அந்த ரோகிணியின் வீரமகன் {பலராமன்} புறப்பட்ட பிறகு, அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, குருக்களை எதிர்த்துச் சென்றான்.(15)
[1] மைத்ரம் என்றால் மித்ரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம். அஃது அனுஷம் நட்சத்திரம். கங்குலி, மன்மதநாததத்தர் பதிப்புகளில் மறைமுகமாகவும், கும்பகோணம் பதிப்பில் நேரடியாகவும் இந்நட்சத்திரம் அனுஷம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது புஷ்ய {பூசம்} நட்சத்திரம் என்றே இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கூட, 14ம் ஸ்லோகத்தில் மைத்ர நட்சத்திரம் என்று சொல்லிவிட்டு பிறகு, 15ம் ஸ்லோகத்தில் புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தில் புறப்பட்டதாக மீண்டும் சொல்லப்படுகிறது. எனவே இங்கே குறிப்பிடப்படும் மைத்ரம் என்பது முகூர்த்தமாக இருக்க வேண்டும். வழக்கமாகச் சூரியன் உதித்து ஒரு மணிநேரத்தில் இருந்து மற்றொரு மணிநேரம் மைத்ரம் என்ற முகூர்த்தமாகும்.
அப்படிச் சென்றபோது ராமன் {பலராமன்} வழியில் தன் பணியாட்களிடம், "புனித பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், பயன்படக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கொண்டு வருவீராக. துவாரகையில் இருக்கும் (புனித) நெருப்பையும், நமது புரோகிதர்களையும் கொண்டு வருவீராக. தங்கம், வெள்ளி, பசுக்கள், ஆடைகள், குதிரைகள், யானைகள், தேர்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் பிற இழுவை கால்நடைகளையும் கொண்டு வருவீராக.(17) புனித நீர்நிலைகளில் தற்காலிகமாகத் தங்கும் போது தேவைப்படும் அனைத்தையும் கொண்டு வந்து, சரஸ்வதியை நோக்கிப் பெரும் வேகத்துடன் செல்வோமாக.(18) ரித்விக்குகளையும், நூற்றுக்கணக்கான முதன்மையான பிராமணர்களையும் அழைத்துவருவிராக" என்று பணியாட்களுக்கு ஆணைகளையிட்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்},(19) குருக்களுக்குப் பேரிடர் நேர்ந்த அந்நேரத்தில் புனிதப் பயணத்துக்குப் புறப்பட்டான். சரஸ்வதியை நோக்கிப் புறப்பட்ட அவன் {பலராமன்}, அவளது {சரஸ்வதி ஆற்றின்} போக்கில் உள்ள புண்ணியத்தலங்கள் அனைத்துக்கும்,(20) புரோகிதர்கள், நண்பர்கள், பிராமணர்களில் முதன்மையானோர் பலர் ஆகியோருடனும், தேர்கள், யானைகள், குதிரைகள், பணியாட்கள் ஆகியவற்றுடனும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மாடுகள், கோவேறு கழுதைகள் மற்றும் ஒட்டகங்களால் இழுக்கப்பட்ட பல வாகனங்களில் சென்றான்.(21)
பல்வேறு நாடுகளில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, களைத்திருந்தவர்களுக்கும், உடல் இளைத்திருந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்வுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் பெரும் அளவில் {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(22) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்கள் விரும்பிய எந்த உணவுவகைகளும் எங்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(23) ரோகிணி மகனின் {பலராமனின்} ஆணைக்கிணங்க, பயணத்தின் வேறு வேறு நிலைகளில், உண்ணத்தக்கவையும், குடிக்கத்தக்கவையும் பெரும் அளவில் சேமிக்கப்பட்டன.(24) விலையுயர்ந்த ஆடைகள், படுக்கைகள், விரிப்புகள் ஆகியன சுகத்தையும், வசதியையும் விரும்பும் பிராமணர்களின் மனநிறைவுக்காக {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(25) எந்த ஒரு பிராமணனோ, எந்த ஒரு க்ஷத்திரியனோ கேட்ட எந்த ஒரு பொருளும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மனவெறுப்பில்லாமல் அவனுக்குக் கொடுக்கப்படுவது காணப்பட்டது.(26) அந்தக் குழுவில் இருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு சென்று, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். (பலராமனைத் தொடர்ந்து சென்ற) மனிதர்கள், பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வாகனங்களையும், தாகத்திலிருந்தோருக்கு பானங்களையும், பசித்தவர்களுக்கு ருசியான உணவுவகைகளையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பலருக்கு அடைகளையும், ஆபரணங்களையும் {தானமாகக்} கொடுத்தனர்.(27,28)
அந்தக் குழு பயணம் செய்த சாலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரகாசமானதாக, ஓ! வீரா, அனைவருக்கும் உயர்ந்த வசதியை அளிப்பதாக, சொர்க்கத்துக்கு ஒப்பானதாக இருந்தது.(29) அதில் {அந்த சாலையில்} எங்கும் மகிழ்ச்சி இருந்தது, எங்கும் கொள்ளத்தக்க சுவையான உணவு வகைகளும் இருந்தான. அங்கே கடைகளும், சிறு கடைகளும், இருந்தன, விற்பனைக்குரிய பல்வேறு பொருட்களும் இருந்தன. மேலும் அந்த மொத்த வழியும் {சாலையும்} மனிதர்களால் நிரம்பியிருந்தது. மேலும் அது பல்வேறு வகையான மரங்கள், உயிரினங்கள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(30) கடும் நோன்புகளை நோற்பவனான அந்த உயர்ஆன்ம பலதேவன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு புண்ணியத்தலங்களில் பிராமணர்களுக்கு அபரிமிதமான வேள்விப் பொருட்களையும், அதிகமான செல்வத்தையும் {தானமாக} அளித்தான்.(31) அந்த யது குலத் தலைவன் {பலராமன்}, சிறந்த துணிகளால் மறைக்கப்பட்டவையும், தங்கத்தால் பூட்டப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கறவைப்பசுக்களையும்,(32) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகளையும், பல வாகனங்களையும், பல அழகிய பணியாட்களையும் {தானமாக} அளித்தான்.(33) இவ்வாறே அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்}, சரஸ்வதியில் இருந்து பல்வேறு சிறந்த தீர்த்தங்களில் செல்வத்தை {தானமாகக்} கொடுத்தான். ஒப்பற்ற சக்தியும், பெருந்தன்மையுடன் கூடிய நடத்தையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, தன் பயணத்தின் போக்கில் இறுதியாகக் குருக்ஷேத்திரத்தை வந்தடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(34)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, சரஸ்வதியில் உள்ள பல்வேறு தீர்த்தங்களின் குணங்களையும், தோற்றங்களையும், தகுதிகளையும் {புண்ணியப் பலன்களையும்}, தற்காலிகமாக ஆங்காங்கே இருக்கும்போது நோற்கப்பட்ட விதிகளையும் எனக்குச் சொல்வீராக.(35) ஓ! சிறப்புமிக்கவரே, அவற்றை, அவற்றின் வரிசையிலேயே எனக்குச் சொல்வீராக. ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, என் ஆவல் அடக்கமுடியாததாக இருக்கிறது" என்று கேட்டான்.(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, இந்தத் தீர்த்தங்கள் அனைத்தின் குணங்களும், தோற்றங்களும் பற்றிய கருத்து மிகப்பெரியதாகும். இருப்பினும் நான் உனக்கு அவற்றை விவரிப்பேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் புனித விவரிப்பை முழுமையாகக் கேட்பாயாக.(37) பலதேவன், தன்புரோகிதர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் முதலில் பிரபாஸம்[2] என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான். காசநோயால் {க்ஷயரோகத்தால்} பாதிக்கப்பட்டிருந்த நட்சத்திரக்கூட்டங்களின் தலைவன் (சோமன்), அங்கே தன் பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அங்கே சக்தியை மீண்டும் பெற்ற அவன், ஓ! மன்னா, இப்போது அண்டத்திற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான். பூமியில் முதன்மையானதான அந்தத் தீர்த்தம், முன்பு (பிரகாசத்தை இழந்திருந்த) சோமனுக்கு {சந்திரனுக்குக்} காந்தியை அளித்ததால், அது பிரபாஸம் என்று அழைக்கப்படுகிறது" {என்றார் வைசம்பாயனர்}.(38,39)
[2] பிரபாஸம், தற்போது குஜராத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் கிர்சோம்நாத் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரமாகும். ஆனால் அது துவாரகைக்குத் தெற்கே அமைந்திருக்கிறது. மகாபாரதகாலத்தில் வேறு இடத்தில் பிரபாஸத் தீர்த்தம் இருந்திருக்கலாம். கீழ்க்கண்ட வரைபடம் ancientvoice.wikidot.com தளத்தை நிர்வகிக்கும் ஜிஜித் நடுமுறி ரவி அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு வரையப்பட்ட ஆங்கில வரைபடத்தை ஒட்டி மீண்டும் தமிழில் வரையப்பட்டதாகும்.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "புகழப்படும் சோமன் {சந்திரன்} காசநோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும் அவன் {சந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் எவ்வாறு நீராடினான்?(40) அந்தப் புனித நீரில் நீராடிய அவன், எவ்வாறு தன் சக்தியை மீண்டும் பெற்றான்? ஓ! முனிவரே, இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்றான்.(41)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, தக்ஷனுக்கு இருபத்தேழு {27} மகள்கள் இருந்தனர். அவர்கள் (திருமணத்திற்காக) சோமனுக்கு அளிக்கப்பட்டனர்.(42) மங்கலமான செயல்களைக் கொண்டவ சோமன் {சந்திரன்}, பல்வேறு நட்சத்திரக்கூட்டங்களான அந்த மனைவியருடன் தொடர்பு கொண்டு மனிதர்கள் காலத்தைக் கணக்கிட தொண்டாற்றினான்.(43) அகன்ற விழிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் இவ்வுலகில் அழகில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாக இருந்தனர். எனினும், ரோகிணியானவள் அழகெனும் செல்வத்தில் அவர்கள் அனைவரிலும் முதன்மையானவளாக இருந்தாள்.(44) புகழத்தக்கவனான சோமன் அவளிடம் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தான். அவள் அவனுக்கு இனிமையானவளானதால், அவளையே இன்பத் துணையாக (பெரும்பாலும்) அவன் அனுபவித்தான்.(45) அந்தப் பழங்கால நாட்களில், ஓ! ஏகாதிபதி, சோமன் ரோகிணியுடன் (அதிக) காலம் வாழ்ந்தான். நட்சத்திரக்கூட்டங்கள் என்றழைக்கப்பட்ட அவனது பிற மனைவியர் இதனால் அந்த உயர் ஆன்மாவிடம் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்.(46)
படைப்புத் தலைவனான அவர்களது தந்தையிடம் (தக்ஷனிடம்) வேகமாகச் சென்ற அவர்கள், அவனிடம், "சோமன் எங்களுடன் வாழவில்லை. அவன் எப்போதும் ரோகிணியுடனேயே இருக்கிறான்.(47) எனவே, ஓ! உயிரினங்களின் தலைவரே, கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை மற்றும் கடும் நோன்புகளை நோற்றபடியே நாங்கள் அனைவரும் உமது தரப்பிலேயே வசிக்கப் போகிறோம்" என்றனர்.(48) அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் (சோமனைக் கண்டு) அவனிடம், "உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வயாக. பெரும்பாவம் உன்னைக் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும்" என்றான். பிறகு தக்ஷன் தன் மகள்களிடம், "நீங்கள் அனைவரும் சசினிடம் (சந்திரனிடம்} செல்லுங்கள். என் ஆணையின் பேரில் சந்திரமாஸ் உங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வான்" என்றான்.(50)
அவனால் {தக்ஷனால்} அனுப்பப்பட்ட அவர்கள் குளிர்ந்த கதிர்களைக் கொண்டோனின் {சந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றனர். அதன்பிறகும் அந்தத் துதிக்கத்தக்க சோமன், ஓ! பூமியின் தலைவா, ரோஹிணியிடம் மட்டுமே நிறைவுகொண்டு, முன்பு போலவே அவளுடனேயே அதிகமாக வாழ்வதைத் தொடர்ந்தான்.(51) அவனது மற்ற மனைவியர் மீண்டும் தங்கள் தந்தையிடம் {தக்ஷனிடம்} சென்று அவனிடம், "உமக்குத் தொண்டு செய்து, உமது ஆசிரமத்திலேயே நாங்கள் வசிக்கப் போகிறோம். சோமன் எங்களோடு வாழவில்லை, உமது ஆணைகளையும் மனத்தில் கொள்ளவில்லை" என்றனர்.(52) அவர்களது வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் மீண்டும் சோமனிடம், "உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வாயாக. ஓ! விரோசனா, நான் சபிக்காதிருக்கும்படி நடந்து கொள்வாயாக" என்றான்.(53) எனினும், போற்றுதலுக்குரிய சோமன், அந்தத் தக்ஷனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து, ரோஹிணியுடன் மட்டுமே வாழ்வதைத் தொடர்ந்தான். இதனால் அவனது பிற மனைவியர் மீண்டும் அவனிடம் கோபமடைந்தனர்.(54) தங்கள் தந்தையிடம் சென்று, தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்கி, அவனிடம், "சோமன் எங்களுடன் வாழவில்லை. எங்களுக்கு உமது பாதுகாப்பைத் தருவீராக.(55) போற்றுதலுக்குரிய சந்திரமாஸ் எப்போதும் ரோஹிணியுடனேயே அதிகமாக வாழ்கிறார். அவர் உமது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தராமல், எங்களிடம் எந்த அன்பையும் காட்ட விரும்பவில்லை. எனவே, எங்கள் அனைவரையும் சோமன் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்களைக் காப்பீராக" என்றனர்.(56)
போற்றுதலுக்குரிய தக்ஷன், இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கோபமடைந்து, அதன் விளைவாகச் சோமனின் {சந்திரனின்} மீது காசநோயை {க்ஷயரோகத்தைச்}[3] சாபமாக வீசினார். இவ்வாறு நட்சத்திரங்களின் தலைவனுக்கு அந்நோய் ஏற்பட்டது.(57) காசநோயால் {க்ஷயரோகத்தால்} பீடிக்கப்பட்ட சசின் {சந்திரன்} நாளுக்கு நாள் மெலிந்தான் {தேய்ந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் அந்நோயில் இருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் பல முயற்சிகளைச் செய்தான். எனினும் அந்த இரவைச் செய்பவனால் {சந்திரனால்} அச்சாபத்திலிருந்து விடுபட முடியவில்லை. மறுபுறம் அவன் மெலிந்து தேய்ந்து கொண்டே வந்தான்.(58,59) எனினும், சோமன் தேய்ந்து வருவதன் விளைவால், மூலிகைகள் வளரத் தவறின. அவற்றின் சாறுகள் வற்றி, சுவையற்றதாகின. அவை அனைத்தும் தங்கள் தன்மைகளை இழந்தன.(60) மூலிகைகளின் இந்த நலிவின் விளைவால், உயிரினங்களும் சிதைவடையத் தொடங்கின. உண்மையில் சோமன் தேய்ந்து வந்ததன் விளைவால், உயிரினங்கள் அனைத்தும் மெலியத் தொடங்கின.(61)
[3] க்ஷயரோகம் என்பது உடலை மெலியச் செய்யும் உருக்குநோய் ஆகும்.
அப்போது தேவர்கள் அனைவரும் சோமனிடம் வந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, "ஏன் உன் வடிவம் (முன்பு போல) அவ்வளவு அழகாகவோ, பிரகாசமாகவோ இல்லை? இந்தப் பேரிடர் எங்கிருந்து வந்தது என்ற காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக.(62) உன் பதிலைக் கேட்ட பிறகு, உன் அச்சத்தைப் போக்கத் தேவையானதை நாங்கள் சொல்கிறோம்" என்றனர். இவ்வாறு சொல்லப்பட்டதும், முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவன் {சந்திரன்}, சாபத்தின் காரணத்தையும், அதனால் காசநோயால் தான் பாதிக்கப்பட்டதையும் அவர்களுக்குச் சொன்னான்.(63) அவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தக்ஷனிடம் சென்று, "ஓ! போற்றுதலுக்குரியவரே, சோமனிடம் நிறைவு கொள்வீராக. உமது இந்தச் சாபம் விலக்கிக் கொள்ளப்படட்டும்.(64) சந்திரமாஸ் {சந்திரன்} மிகவும் மெலிந்துவிட்டான். அவனது சிறு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. ஓ! தேவர்களின் தலைவரே, அவன் தேய்ந்து வருவதால், உயிரினங்கள் அனைத்தும் சிதைவையடைகின்றன.(65) பல்வேறு வகையான மூலிகைகளும் சிதைவையடைகின்றன. அவை சிதைவடைவதால் நாங்களும் சிதைவையடைகிறோம். நாங்கள் இல்லாமல் இந்த அண்டம் என்னவாகும்? ஓ! அண்டத்தின் தலைவரே, இஃதை அறிந்து கொண்டு (சோமனிடம்) மனநிறைவடைவதே உமக்குத் தகும்" என்றனர்.(66)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த உயிரினங்களின் தலைவன் (தக்ஷன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: "என் வார்த்தைகளை வேறு வகையில் ஆகச் செய்வது இயலாது.(67) எனினும், அருளப்பட்டவர்களே சில சூழ்ச்சிகளால் என் வார்த்தைகள் விலக்கப்படலாம். சசின் {சந்திரன்} தனது மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளட்டும். தேவர்களே, முயலைத் தன் அடையாளமாகக் கொண்டவன் {சந்திரன்}, சரஸ்வதியில் இருக்கும் அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடினால் மீண்டும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(69) சோமன் {சந்திரன்} அரைமாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் தேய்வான், (தொடர்ந்து வரும் அடுத்த) அரை மாத காலத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(70) மேற்குப் பெருங்கடலுடன் சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் உள்ள அந்த நீர்க்கொள்ளிடத்தில் {பிரபாஸத்தில்}, தேவர்களுக்குத் தேவனை (மகாதேவனை) அவன் துதிக்கட்டும். மீண்டும் அவன் தன் வடிவையும், அழகையும் அடைவான்" {என்றான் தக்ஷன்}.(71)
அந்த (தெய்வீக) முனிவரின் ஆணைக்கிணங்க சோமன் சரஸ்வதிக்கு {சரஸ்வதி ஆற்றுக்குச்} சென்றான். அவன், தீர்த்தங்களில் முதன்மையானதும், சரஸ்வதிக்குச் சொந்தமானதுமான பிரபாஸம் என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்தத்தை அடைந்தான்.(72) பெரும் சக்தி கொண்டவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அந்தத் தேவன் {சந்திரன்}, புதுநிலவில் {அமாவாசையில்} அங்கே நீராடி, தன் குளுமையான கதிர்களை மீண்டும் அடைந்து, உலகங்களுக்கு ஒளியூட்டுவதை மீண்டும் தொடர்ந்தான்.(73) பிரபாஸைக்குச் சென்ற அனைத்து உயிரினங்களும், சோமனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டு, தக்ஷன் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தன.(74) அந்த உயிரினங்களின் தலைவன் {தக்ஷன்}, (அவர்களை முறையாக வரவேற்று), அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.
போற்றுதலுக்குரிய தக்ஷன், சோமனிடம் மனநிறைவு கொண்டு, மீண்டும் அவனிடம்,(75) "ஓ! மகனே, பெண்களை அலட்சியம் செய்யாதே, பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. செல்வாயாக, கவனமாக என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக" என்று சொன்னான்.(76) அவனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட சோமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்து முன்பு போலவே வாழத் தொடங்கின.(77) இவ்வாறே, இரவைச் சமைப்பவன் {சந்திரன்} எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பதையும், தீர்த்தங்கள் அனைத்திலும் பிரபாஸம் எவ்வாறு முதன்மையடைந்தது என்பதையும் குறித்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(78) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவன் {சந்திரன்}, அடுத்தடுத்த ஒவ்வொரு புதுநிலவிலும் {அமாவாசையிலும்} அந்தச் சிறந்த தீர்த்தமான பிரபாஸத்தில் நீராடி தன் வடிவத்தையும், அழகையும் மீண்டும் அடைகிறான்.(79) ஓ! பூமியின் தலைவா, சந்திரமாஸ் நீராடி தன் பெரும் பிரகாசத்தை (பிரபையை) மீண்டும் அடைந்த காரணத்தினாலேயே அந்தத் தீர்த்தம் பிரபாஸம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(80)
அதன்பிறகு சிதைவிலா மகிமை கொண்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, சமஸோத்பேதம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(81) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, விலையுயர்ந்த பல கொடைகளை அந்த இடத்தில் கொடுத்து, தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து ஓரிரவை அங்கே கடத்தினான்.(82) பிறகு அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, உதபானத்திற்கு {உதபானம் என்ற இடத்திற்கு} வேகமாகச் சென்றான். அங்கே சரஸ்வதி தொலைந்துபோனவளாகத் தெரிந்தாலும், அந்த இடத்தில் தாங்கள் அடைந்த பெரும் புண்ணியம் மற்றும் பேரருளின் விளைவால், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்ட மனிதர்கள் {சித்தர்கள்}, அங்கே இருந்த மூலிகைகளாலும், அந்த நிலத்தாலும் குளுமையை {நிதானத்தை} அடைந்து, பூமியின் குடல்களுக்குள், கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையாக அந்த ஆற்றை அறிகிறார்கள்" {என்றார் வைசம்பாயனர்}[4].(83,84)
--------------------------------------------------------------------------------------------------[4] கும்பகோணம் பதிப்பில், "(ஸரஸ்வதீநதி கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும்) ஓஷதிகள் பூமி இவற்றின் வளத்தினால் அந்த நதியை மறைந்திருப்பதாக ஸித்தர்கள் அறிகிறார்கள்" என்றிருக்கிறது.
சல்லிய பர்வம் பகுதி – 35 ல் உள்ள சுலோகங்கள் : 84
ஆங்கிலத்தில் | In English |