Trita muni's Mental Sacrifice - Chandramas and Rohini! | Shalya-Parva-Section-36 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்".(4)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உதபானத்தின்[1] {உபதானம் என்ற அந்தக் கிணற்றின்} தோற்றம் என்ன? அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார்? அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார்?(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்? திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார்? அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார்? ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் நான் கேட்பது முறையென நீர் நினைத்தால் அவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)
[1] உபதானம் என்பதற்கு கிணறு என்ற பொருளாம்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்கு முந்தைய யுகத்தில், தவசிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் ஏகதன், துவிதன், திரிதன் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(7) படைப்பின் தலைவர்களைப் போல இருந்த அவர்கள், பிள்ளைகளுடன் அருளப்பட்டிருந்தனர். பிரம்மத்தை உச்சரிப்பவர்களான அவர்கள், தங்கள் தவங்களால் (இறப்புக்குப் பிறகு) பிரம்மலோகத்தை அடையும் தனிச்சலுகையைப் பெற்றனர்.(8) அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புக் கொண்ட அவர்களது தந்தையான கௌதமர், அவர்களது தவங்கள், நோன்புகள், தற்கட்டுப்பாடு ஆகியவற்றால் அவர்களிடம் மிகவும் மனநிறைவு கொண்டவராக இருந்தார்.(9)
போற்றுதலுக்குரிய கௌதமர், தன் மகன்களால் பெரும் மகிழ்வை அடைந்து, அங்கேயே தன் நீண்ட வாழ்நாளைக் கழித்து, இறுதியாகத் தனக்குத் தகுந்த உலகத்தை அடைந்தார்.(10) எனினும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கௌதமரின் யஜமானர்களாக {சீடர்களாக} இருந்த மன்னர்கள், அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாலும், கௌதமரின் மகன்களைத் தொடர்ந்து வழிபட்டனர்.(11) அவர்களில் திரிதர், தன் செயல்கள் மற்றும் (வேத) கல்வியால், அவரது தந்தையான கௌதமரைப் போலவே முதன்மையானவராகத் திகழ்ந்தார்.(12) அறத்தன்மையும், உயர்ந்த அருளையும் கொண்ட தவசிகள் அனைவரும், முன்பு அவரது தந்தையான கௌதமரைத் எவ்வாறு வழிபட்டனரோ அவ்வாறே திரிதரையும் வழிபடத் தொடங்கினர்.(13)
ஒரு சமயம், சகோதரர்களான ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் செல்வத்தில் ஆவல் கொண்டு ஒரு வேள்வியைச் செய்ய நினைத்தனர்.(14) ஓ! எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மூன்று சகோதரர்களும் அத்தீர்மானத்தின் படியே செய்தனர்.(16)
உயர் ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள், விலங்குகளுக்காக (அவற்றை அடைவதற்காகத்) தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, அவர்களின் வேள்விகளில் துணையாக இருந்து, தாங்கள் செய்த புரோகிதத் தொண்டின் விளைவால், பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளைக் முறையான கொடையாகப் பெற்றுக் கிழக்கை நோக்கிச் சென்றனர்.(17,18) ஓ! மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இழிந்த பாவிகளான அந்த ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டதைக் கேட்பாயாக.(21)
அவர்கள், "திரிதன் வேள்விகளில் துணைபுரிவதில் திறம்பெற்றவனாக இருக்கிறான். திரிதன் வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கிறான். திரிதன், இன்னும் பல பசுக்களை ஈட்டவல்லவனாவான்.(22) எனவே, நாம் இருவரும் {அவனது பங்கான} பசுக்களை எடுத்துக் கொள்வோம். திரிதன் நம் துணையில்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் ஓர் இடத்திற்குச் செல்லட்டும்" என்றனர்.(23) அப்படி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே இரவும் வந்தது. அவர்கள் அப்போது தங்கள் முன்பு ஓர் ஓநாயைக் கண்டனர். அந்த இடத்திற்கு அருகிலேயே சரஸ்வதியின் கரையில் ஆழமான குழி {கிணறு} ஒன்று இருந்தது.(24) தன் சகோதரர்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தவரான திரிதர், ஓநாயைக் கண்ட அச்சத்தால் ஓடிச் சென்று அந்தக் குழிக்குள் விழுந்தார்.(25)
அந்தக் குழியானது அடியற்றதாகவும், பயங்கரமானதாகவும், அனைத்துயிரினங்களையும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. தவசிகளில் சிறந்தவரான அந்தத் திரிதர், அந்தக் குழிக்கள் இருந்தபடியே துன்ப ஓலமிடத் தொடங்கினார். அவரது இரு சகோதரர்களும் அவருடைய கதறலைக் கேட்டனர்.(26) அவரது சகோதரர்களான ஏகதனும், துவிதனும், அவர் குழிக்குள் விழுந்ததை அறிந்தும்கூட, ஓநாயிடம் கொண்ட அச்சத்தாலும், பேராசையினாலும் தங்கள் சகோதரனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.(27) விலங்குகளை அடையும் பேராசையால் உந்தப்பட்டவர்களான அவரது இரு சகோதரர்களாலும் இவ்வாறு கைவிடப்பட்ட அந்தப் பெரும் தவசியான திரிதர், ஓ! மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, ஓர் இழிந்த பாவியைப் போல நரகத்திற்குள் மூழ்கியிருப்பவராகத் தம்மை நினைத்துக் கொண்டார்.(29) தாம் இன்னும் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டாததல் இறப்பதற்கு அவர் அஞ்சினார். பெரும் ஞானம் கொண்ட அவர், அங்கேயே இருந்து சோமத்தைக் குடிப்பதெவ்வாறு என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.(30)
அந்தப் பெரும் தவசி {திரிதர்}, அதைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே அந்தக் குழியில் நின்றிருந்தபோது, வளர்ந்து வரும் கொடியொன்று அங்கே குழிக்குள் {கிணற்றுக்குள்} தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.(31) அந்தக் குழி வறண்டிருந்தாலும், அந்தத் தவசி அதில் நீர் இருப்பதாகவும், வேள்வி நெருப்பு இருப்பதாகவும் கற்பனை செய்தார். தன்னையே ஹோத்ரியாக அமைத்து {கற்பனை செய்து)(32) கொண்ட அந்தப் பெரும் தவசி, தான் கண்ட அந்தக் கொடியைச் சோமச்செடியாக {ஸோமலதையாகக்} கற்பனை செய்தார். பிறகு அவர் (வேள்வி நடத்துவதற்குத் தேவையான) ருக்குக்களையும், யஜுஸுகளையும், சாமங்களையும்[2] மனத்தாலேயே சொன்னார்.(33) திரிதர், (அந்தக் கிணற்றுக்கடியில் கிடக்கும்) கூழாகற்களை (கற்பனையால்) சர்க்கரையாக்கினார். பிறகு அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்வி செய்த அந்த முனிவர் முதலில் உதிர்த்த அவ்வொலிகள் சொர்க்கத்தை அடைந்தன. பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் விதித்துள்ள முறையின் படியே திரிதர் அவ்வேள்வியை நிறைவும் செய்தார்.(35)
[2] மூன்று வேதங்களின் பாடல்கள் {சுலோகங்கள்} என இங்கே விளக்குகிறார் கங்குலி.
உயர் ஆன்ம திரிதர், அந்த வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, தேவலோகம் முழுமையும் கலக்கமடைந்தது. எனினும், எவரும் அதன் காரணத்தை அறியவில்லை. (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதி, (திரிதரால் உண்டான) அந்தப் பேரொலியைக் கேட்டார். அந்தத் தேவர்களின் புரோகிதர் {பிருஹஸ்பதி}, தேவர்களிடம், "திரிதன் ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறான். தேவர்களே நாம் அங்கே செல்ல வேண்டும்.(37) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவன் {திரிதன்}, கோபமடைந்தால், வேறு தேவர்களையே உண்டாக்கத் தகுந்தவனாகிவிடுவான்" என்றார்.(38) பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, திரிதரின் வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.(39) அவ்விடத்திற்குச் சென்ற தேவர்கள், அங்கே அந்த வேள்வியில் நிறுவப்பட்டிருக்கும் உயர் ஆன்ம திரிதரைக் கண்டனர்.(40)
பிரகாசமிக்க அழகுடன் கூடிய அந்த உயர் ஆன்மாவைக் கண்ட தேவர்கள் அவரிடம், "(உமது காணிக்கைகளில்) எங்கள் பங்கைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்" என்றனர்.(41) அந்த முனிவர் அவர்களிடம், "சொர்க்கவாசிகளே, என் புலனுணர்வைக் கிட்டத்தட்ட இழந்த நிலையில் இந்தப் பயங்கரக் கிணற்றுக்குள் கிடக்கும் என்னைப் பாருங்கள்" என்றார்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திரிதர், உரிய மந்திரங்களுடன் தேவர்களுக்கு அவர்களுடைய பங்கை முறையாகக் கொடுத்தார். தேவர்கள், அதைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(43) அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முறையாகப் பெற்று, அவரிடம் மனநிறைவுகொண்டு, அவர் விரும்பிய வரங்களை அவருக்கு அளித்தனர்.(44) அவர், (கிணற்றுக்குள் இருக்கும்) தமது துயர்நிறைந்த நிலையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனும் வரத்தைத் தேவர்களிடம் கேட்டார்.(45)
மேலும் அவர் {திரிதர்}, "இந்தக் கிணற்றில் எவன் நீராடுவானோ, அவன், சோமத்தைப் பருகிய மனிதர்கள் அடையும் முடிவை {கதியை} அடையட்டும்" என்றும் கேட்டார்.(46) இந்த வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிணற்றுக்குள் சரஸ்வதியே தன் அலைகளுடன் தோன்றினாள். அவளால் உயர்த்தப்பட்ட திரிதர், {கிணற்றுக்கு} மேலே வந்து, அந்தச் சொர்க்க வாசிகளை வழிபட்டார்.(47) அப்போது தேவர்கள் அவரிடம், "நீர் விரும்பியபடியே ஆகட்டும்" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர். திரிதரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(48)
அங்கே தன் சகோதரர்களான இரு முனிவர்களையும் சந்தித்த அவர், அவர்களிடம் பெருங்கோபம் கொண்டார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர் {திரிதர்}, அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பேசி,(49) "பேராசையால் என்னைக் கைவிட்டு ஓடிய உங்கள் பாவச்செயல்களுக்காக என்னால் சபிக்கப்படும் நீங்கள், கூரிய பற்களுடைய கடும் ஓநாய்களாய் மாறி காட்டில் திரிவீர்களாக.(50) மேலும், உங்கள் சந்ததிகள் சிறுத்தைப்புலிகளையும், கரடிகளையும், கருங்குரங்குகளையும் கொண்டவையாக இருக்கும்" என்று சபித்தார். திரிதர் அவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உண்மை நிறைந்த முனிவரின் வார்த்தைகளின் விளைவால், அவரது சகோதரர்கள் இருவரும் மிக விரைவாக அந்த வடிவங்களுக்கு {ஓநாய்களாக} மாற்றமடைந்தனர்.(51)
அளவிலா ஆற்றலைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, உதபானத்தின் {உதபானம் என்ற அந்த இடத்தின்} நீரைத் தீண்டினான். அவன் பல்வேறு வகைகளிலான செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்கள் பலரை வழிபட்டான்.(52) உதபானத்தைக் கண்டு அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்த பலதேவன், அடுத்ததாக, சரஸ்வதியிலேயே இருந்த விநாசனத்திற்குச் {விநாசனம் என்ற இடத்திற்குச்} சென்றார்" {என்றார் வைசம்பாயனர்}.(53}
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 53
--------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 53
ஆங்கிலத்தில் | In English |