Kshatriyas turned to Brahmanas! | Shalya-Parva-Section-40 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 9)
பதிவின் சுருக்கம் : பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது" என்று சொன்னான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு சமயம், கிருதயுகத்தில், ஓ! மன்னா, ஆர்ஷ்டிஷேணர் என்றழைக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் ஒருவர் இருந்தார். அவர், தமது ஆசானின் இல்லத்தில் வசித்து, தினமும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர் தமது ஆசானின் இல்லத்தில் நெடுங்காலம் வசித்திருந்தாலும், ஓ! ஏகாதிபதி, வேதங்களிலும், அறிவின் எந்தத் துறையிலோ திறன் எதையும் அடைய முடியவில்லை.(4) ஓ! மன்னா, இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தத் தவசி மிகக் கடுமையான தவங்களைச் செய்தார். அவர் தமது தவத்தின் மூலம் ஒப்புவமையற்ற வேதங்களில் தேர்ச்சி பெற்றார்.(5) பெரும் கல்வியையும், வேதங்களில் தேர்ச்சியையும் அடைந்த அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ஆர்ஷ்டிஷேணர்}, அந்தத் தீர்த்தத்தில்தான் {பிருதூதகத் தீர்த்தத்தில் தான்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார். அந்த இடத்தில் அவர் மூன்று வரங்களை அளித்தார்.(6) அவர், "இன்று முதல், இந்தப் பெரும் நதியின் (சரஸ்வதியின்) இந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வியின் {அஸ்வமேதயாகத்தின்} பெருங்கனியை {பெரும்பலனை} அடைவானாக.(7) இன்று முதல், இந்தத் தீர்த்தத்தில் பாம்புகளினாலோ, காட்டு விலங்குகளாலோ எந்த அச்சமும் ஏற்படாது. {மேலும் இங்கே வந்து தவம் செய்யும்} சிறு முயற்சிகளிலேயே ஒருவன் இந்தப் பெரும் விளைவை இங்கே அடையலாம்" என்று வரமளித்தார் {ஆர்ஷ்டிஷேணர்}.(8) பெரும் சக்தியைக் கொண்ட அந்த முனிவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார். இவ்வாறே போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(9)
கிருதயுகத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட சிந்துத்வீபரும், தேவாபியும் கூட உயர்ந்த நிலையான பிராமணத் தன்மையை இந்தத் தீர்த்தத்திலேயே அடைந்தனர். அதே போல, புலன்களை அடக்கிக் கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த குசிகரின் மகனும் {விஷ்வாமித்திரரும்} கூட, நல்ல தவம் பயின்று பிராமணத் தன்மையை அடைந்தார்.(11) காதி என்ற பெயரில் அறியப்பட்டு உலகத்தில் கொண்டாடப்பட்ட பெரும் க்ஷத்திரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு விஷ்வாமித்திரர் என்ற பெயரில் பேராற்றல் படைத்த மகனொருவர் பிறந்தார்.(12) அந்த மன்னன் கௌசிகர் {காதி} பெரும் தவசியாக ஆனார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தம்முடலைக் கைவிடத் தீர்மானித்து, தமது மகனான விஷ்வாமித்திரரை அரியணையில் நிறுவ விரும்பினார்.(13) அவரது குடிமக்கள் அவரை {காதியை} வணங்கி, "ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பேரசச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. எங்களை விட்டுச் செல்லாதீர்" என்றனர்.(14) இவ்வாறு சொல்லப்பட்ட காதி, தன் குடிகளிடம், "என் மகன் {விஷ்வாமித்திரன்}, இந்தப் பரந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருப்பான்" என்றார்.(15)
இவ்வார்த்தைகளைச் சொன்ன காதி, (விஷ்வாமித்திரரை) அரியணையில் அமர்த்தி, சொர்க்கத்திற்குச் சென்றார், விஷ்வாமித்திரரும் மன்னனானார். இருப்பினும், அவர் சிறப்பாக முயன்றும்கூட அவரால் உலகத்தைக் காக்க முடியவில்லை.(16) அப்போது அந்த மன்னன் {விசுவாமித்திரர்}, (தன் நாட்டில்) ராட்சசர்களால் ஏற்படும் பேரச்சத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார். அவர், தமது நால்வகைப் படைகளுடன் தமது தலைநகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(17) அவர் {விசுவாமித்திரர்}, தமது வழியில் வெகு தூரம் சென்று வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவரது துருப்புகள் அங்கே அதிக முறைகேடுகளைச் செய்தனர்.(18) போற்றுதலுக்குரிய பிராமணரான வசிஷ்டர், தமது ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தப் பரந்தகாடு அழிக்கப்படுவதைக் கண்டார்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, முனிவர்களில் சிறந்தவரான அந்த வசிஷ்டர், விஷ்வாமித்திரரிடம் கோபம் கொண்டார்.
அவர் {வசிஷ்டர்} தமது (ஹோமப்) பசுவிடம், "பெரும் எண்ணிக்கையிலான சபரர்களை உண்டாக்குவாயாக" என்று ஆணையிட்டார்.(20) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பசு, அச்சந்தரும் முகத்தோற்றங்களையுடைய பெரும் மனிதக்கூட்டத்தை உண்டாக்கியது. அவர்கள் விஷ்வாமித்திரரின் படையுடன் மோதி, எங்கும் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினர்.(21) இதைக் கண்ட துருப்புகள் அங்கிருந்து தப்பி ஓடின. எனினும், காதியின் மகனான விஷ்வாமித்திரர், துறவும், தவமும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதாகக் கருதி, அவற்றின் மேல் தமது இதயத்தை நிலைநிறுத்தினார்.(22) சரஸ்வதியின் இந்த முதன்மையான தீர்த்தத்தில்தான், ஓ! மன்னா {ஜனமேஜயா} அவர், நோன்புகள் மற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடிய உண்ணாநோன்புகள் ஆகியவற்றால் தமது உடல் மெலியத் தொடங்கினார்.(23) அவர் {விஷ்வாமித்திரர்} நீரையும், காற்றையும், மரங்களின் (மரங்களில் இருந்து விழுந்த) இலைகளையும் தன் உணவாக்கிக் கொண்டார். அவர் வெறுந்தரையில் உறங்கி (தவசிகளுடன் சேர்ந்து) பிற நோன்புகளையும் நோற்றார்.(24)
அவரது நோன்புகள் நோற்பதைத் தடுக்கத் தேவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். எனினும் அவரது இதயம் (தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட) நோன்புகளில் இருந்து பிறழவில்லை.(25) அப்போது, பெரும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையான தவங்களைப் பயின்ற அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்} சூரியனைப் போலப் பிரகாசமிக்கவரானார்.((26) வரமருள்பவனான பெரும்பாட்டன் {பிரம்மன்}, தவத்தகுதி கொண்ட விஷ்வாமித்திரர் வேண்டிய வரத்தை அருளத் தீர்மானித்தான்.(27) விஷ்வாமித்திரர், தாம் ஒரு பிராமணராக அனுமதிக்கபட வேண்டும் என்ற வரத்தை] வேண்டினார். அனைத்து உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், அவரிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான்[1].(28) தமது கடுந்தவத்தால் பிராமணத்தன்மையை அடைந்த சிறப்புமிக்க விஷ்வாமித்திரர், தன் விருப்பம் நிறைவேறியதும், ஒரு தேவனைப் போல மொத்த உலகிலும் திரிந்து கொண்டிருந்தார்.(29)
[1] கும்பகோணம் பதிப்பில், "அந்த விஸ்வாமித்ரர், "நான் பிராம்மணனாகக் கடவேன்" என்ற வரனை வேண்டினார். எல்லா உலகங்களுக்கும் பிதாமஹரான பிரம்மதேவரும் "அவ்வாறே ஆகுக" என்று சொன்னார்" என இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தாம் ஒரு பிராமணனாக வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டார். அனைத்துலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன் அதற்குச் சம்மதித்தான்" என்றிருக்கிறது.
ராமனும் {பலராமனும்}, அந்த முதன்மையான தீர்த்தத்தில் பல்வேறு வகையான செல்வங்களைத் தானமளித்து, பிராமணர்களில் முதன்மையான பலரை முறையாக வழிபட்டு, அவர்களுக்குக் கறவைமாடுகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், ஆபரணங்களையும், உணவையும், சிறந்த பானங்களையும் உற்சாகமாகக் கொடுத்தான்.(30,31) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராமன் அங்கிருந்து {பிருதூதகத் தீர்த்தத்தில் இருந்து}அதிக தொலைவில் இல்லாததும், தால்பிய-பகர் கடுந்தவம் பயின்ற இடமுமான பக ஆசிரமத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(32)
--------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 40 ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |