Yayata Tirtha! | Shalya-Parva-Section-41 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 10)
பதிவின் சுருக்கம் : அவாகீர்ணத் தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; முனிவர் பகரின் வரலாறு; பகரை அவமதித்த பாஞ்சால திருதராஷ்டிரன்; பாஞ்சாலத்தின் வீழ்ச்சி; பகரிடம் கருணை வேண்டிய திருதராஷ்டிரன்; யாயாத தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; யாயாத தீர்த்ததில் வேள்வி செய்த யயாதி; வேள்விக்குத் துணை புரிந்தோருக்குச் செல்வத்தைப் பெருக்கிய சரஸ்வதி ஆறு; அடுத்ததாக வசிஷ்டாபவாகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்த யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்}, வேதமோதும் ஒலியை எதிரொலிக்கும் (பக) ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கே {அவாகீர்ணத் தீர்த்தத்தில் இருந்த பக ஆசிரமத்தில்} தால்பிய பகர் என்ற பெயருடைய பெருமுனிவர் ஒருவர்,(1) விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின் நாட்டை ஆகுதியாக (வேள்வி நெருப்பில்) ஊற்றினார்[1]. அவர் {தால்பியபகர்}, மிகக் கடுமையான தவம் பயின்று தன் உடலை மெலியச் செய்தார். பெரும் சக்தியும் கொண்டவரும், அறவோருமான அந்த முனிவர் பெரும் கோபத்தில் நிறைந்தார் {பெருங்கோபத்தில் நிறைந்து (அச்செயலைச் செய்தார்]}.(2) பழங்காலத்தில் நைமிசவாசிகளான முனிவர்கள் பனிரெண்டு வருடங்களுக்கு நீளும் வேள்வி ஒன்றைச் செய்தனர். அந்த வேள்வி நடந்து கொண்டிருந்த போது, அதிலும் குறிப்பாக விஸ்வஜித் என்றழைக்கப்பட்ட வேள்வியின் நிறைவில், அந்த முனிவர்கள், பாஞ்சாலர்களின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3) அங்கே சென்ற அவர்கள், (தாங்கள் நிறைவு செய்த அந்த வேள்விக்கு) தக்ஷிணையாக, நல்ல வலுவான இருபத்தோரு பசுக் கன்றுகளை {பாஞ்சால} மன்னனிடம் வேண்டிக் கேட்டனர்.(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "மிக்கப் பெருந்தவமுள்ளவரும், தர்மாத்மாவும், பிரதாபசாலியும், கோபமுள்ளவருமான தால்ப்யரென்னும் பகமஹரிஷி கடுந்தவத்தினால் தன் சரீரத்தைக் கிருசமாகச் செய்து கொண்டு அதிகமாகக் கோபத்தினால் மூடப்பட்டுப் பசுக்களுக்காகப் {பாஞ்சாலராஜனான} திருதராஷ்டருடைய ராஜ்யத்தை ஹோமம் செய்த இடமும், பிராம்மணர்கள் நிறைந்திருப்பதுமாகிய அவாகீர்ணமென்கிற தீர்த்தத்தை யதுந்நதனரான பலராமர் அடைந்தார்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இது பாஞ்சால ராஜன் என்று குறிப்பிடப்பட்டாலும், கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் தெளிவாக விசித்திரவீரியன் மகன் திருதராஷ்டிரன் என்றே இருக்கிறது. இருப்பினும் இங்கே குறிப்பிடப்படுவது பாஞ்சால நாட்டு மன்னன் {திருதராஷ்டிரன்} என்றே தெரிகிறது.
தால்பிய-பகர், (அம்முனிவர்களை அழைத்து) அவர்களிடம், "(என்னுடைய) விலங்குகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு) இவற்றைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் மன்னனிடம் (இன்னும் சிலவற்றைக்) கேட்கப் போகிறேன்" என்றார்.(5) பெரும் சக்தி கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான {முனிவர்} பகர், அம்முனிவர்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, திருதராஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(6) அந்தத் தால்பியர், மன்னன் திருதராஷ்டிரனின் முன்னிலையை அடைந்தது, தனக்காகச் சில விலங்குகளை இரந்து கேட்டார். எனினும், அந்த மன்னர்களில் சிறந்தவன் {திருதராஷ்டிரன்}, எக்காரணமும் இன்றித் தனது பசுக்களில் சில இறந்ததைக் கண்டு, அவரிடம் கோபத்துடன், "இழிந்த பிராமணரே, நீர் விரும்பினால், (இறந்திருக்கும்) இந்த விலங்குகளை எடுத்துச் செல்வீராக" என்றான்.(7,8) கடமைகளை நன்கறிந்தவரான அந்த முனிவர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, "ஐயோ, சபையில் வைத்து என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் கொடூரமானவையாக இருக்கின்றன" என்று நினைத்தார்.(9) இவ்வாறு நினைத்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், கோபத்தால் நிறைந்து, மன்னன் திருதராஷ்டிரனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்.(10)
இறந்த போன அந்த விலங்குகளின் சதைகளை வெட்டியெடுத்த அந்தத் தவசிகளில் சிறந்தவர், சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் {அவாகீர்ணத் தீர்த்தத்தில்} (வேள்வி) நெருப்பை மூட்டி, மன்னன் திருதராஷ்டிரனுடைய நாட்டின் அழிவுக்காக அந்தச் சதைத் துண்டுகளை ஆகுதியாக ஊற்றினர் {அச்சதைகளைக் கொண்டு ஹோமம் செய்தார்}. கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பெரும் தால்பிய-பகர், அந்த இறைச்சித் துண்டுகளின் உதவியால், திருதராஷ்டிரனின் நாட்டையே அந்நெருப்பில் ஆகுதியாக ஊற்றினார்[2].(11,12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முறையான சடங்குகளுடன் அந்தக் கடும் வேள்வி தொடங்கப்பட்டதும், திருதராஷ்டிரனின் நாடானது அழிவடையத்தொடங்கியது.(13) உண்மையில், ஓ! தலைவா {ஜனமேஜயா}, மனிதர்கள் கோடரியைக் கொண்டு வெட்டுவதால் பெருங்காடு காணாமல் போவதைப் போலவே அந்த ஏகாதிபதியின் நாடும் அழிவடையத் தொடங்கியது. பேரிடரில் மூழ்கிய அந்த நாடு, தனது செழிப்பையும், வாழ்வையும் இழக்கத் தொடங்கியது.(14)
[2] "நெருப்பில் நாட்டை ஊற்றுவது என்பதன் பொருள், அந்த நாட்டின் அழிவுக்காக நெருப்பில் ஆகுதியை ஊற்றுதல் அல்லது ஹோமம் செய்தல் என்பதாகும" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்
இவ்வாறு பீடிக்கப்பட்ட தனது நாட்டைக் கண்ட அந்தப் பலமிக்க ஏகாதிபதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, உற்சாகமற்றவனாகச் சிந்தனையில் மூழ்கினான்.(15) பிராணமர்களுடன் ஆலோசித்த அவன், (அத்துன்பத்திலிருந்து) தனது ஆட்சிப்பகுதிகளை விடுவிக்கப் பெருமுயற்சி செய்யத் தொடங்கினான்.(16) மன்னன் தன் உற்சாகத்தை இழந்தான். ஓ! பாவமற்றவனே, பிராமணர்களும் துயரால் நிறைந்தனர். இறுதியாகத் தன் நாட்டைக் காக்க மன்னன் {திருதராஷ்டிரன்} தவறிய நிலையில்,(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் அமைச்சர்களிடம் (தீர்வுகளைக் குறித்து) கேட்டான். அந்த அமைச்சர்கள் இறந்த பசுக்களுடன் தொடர்புடைய அந்தத் தீமையை அவனுக்கு நினைவுறுத்தினர்.(18) அவர்கள், "தவசியான பகர், (அவ்விலங்குகளின்) சதையின் மூலம் நெருப்பின் உன் நாட்டை ஆகுதியாக ஊற்றுகிறார். அதனால் தான் எனது நாட்டுக்குப் பேரழிவு ஏற்படுகிறது.(19) இவை தவச்சடங்குகளின் விளைவாலேயே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்தப் பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஓ! மன்னா, சரஸ்வதியின் கரையில் உள்ள நீர்க்கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த முனிவரிடம் சென்று அவரை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக" என்றனர்.(20)
பிறகு அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சரஸ்வதியின் கரைக்குச் சொன்று அவரது பாதங்களில் வீழ்ந்து, அவற்றை {பாதங்களைத்} தன் தலையால் தீண்டி, ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, தன் கரங்களைக் கூப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! புகழத்தக்கவரே, நான் உம்மை மனம் நிறைவுறச் செய்வேன், என் குற்றத்தை மன்னிப்பீராக.(21) பேராசையால் ஈர்க்கப்பட்ட இழிந்தவனான நான் அறிவற்ற மூடனாவேன். நீரே என் புகலிடம், நீரே என் பாதுகாவலர், எனக்கு உமது கருணையைக் காட்டுவதே உமக்குத் தகும்" என்றான்.(22) இவ்வாறு துயரில் மூழ்கி, இதுபோல ஒப்பாரி செய்ய்யும் அவனைக் {மன்னன் திருதராஷ்டிரனைக்} கண்ட பகர், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனது நாட்டை விடுவித்தார்.(23) அந்த முனிவர், தன் கோப உணர்வை விட்டகன்று, அவனிடம் மனநிறைவு கொண்டார். அவனது நாட்டை விடுவிப்பதற்காக அந்தத் தவசி மீண்டும் நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினார்.(24) அந்நாட்டை (பேரிடரில் இருந்து) விடுவித்து, பல விலங்குகளைக் கொடையாகப் பெற்ற அவர் {முனிவர் பகர்}, இதயம் மகிழ்ந்தவராக மீண்டும் நைமிச வனத்திற்குச் சென்றார்.(24) தயாள மனமும், அற ஆன்மாவும் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உற்சாகமிக்க இதயத்துடன், செழிப்பால் நிறைந்து தன் தலைநகருக்குச் சென்றான்.(26)
அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதியும், அசுரர்களின் அழிவுக்காகவும், சொர்க்கவாசிகளின் செழிப்புக்காகவும்,(27) சதையின் உதவியுடன் வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான். இதன்காரணமாக போரில் நலிவடைந்த அசுரர்களை, வெற்றியின் மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டிருந்த தேவர்கள் அழித்தனர்.(28) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, குதிரைகள், யானைகள் மற்றும் கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், பெரும் மதிப்பிலான தங்கம், அதிகச் செல்வம், அதிகத் தானியம் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் பிராமணர்களுக்குக் கொடுத்த ராமன் {பலராமன்} அடுத்ததாக யாயாதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(29,30)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே நகுஷனின் மைந்தனான உயர் ஆன்ம யயாதி நடத்திய வேள்வியில்தான், சரஸ்வதி பாலையும், தெளிந்த நெய்யையும் பெருக்கினாள்.(31) மனிதர்களில் புலியான மன்னன் யயாதி, அங்கே {யாயாதத் தீர்த்தத்தில்} வேள்வி செய்து, உற்சாகமாகச் சொர்க்கத்திற்குச் சென்று, பல அருள் உலகங்களை அடைந்தான்.(32) அந்தச் சரஸ்வதி ஆறானவள், (அந்த வேள்விக்கு அழைக்கப்பட்ட) பிராணர்களின் பெரும் ஆன்மப் பெருந்தன்மையையும், அவளிடம் அவர்கள் கொண்ட மாற்றமுடியாத அர்ப்பணிப்பையும் கண்டு, அவர்களின் இதயங்கள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தாள்.(33) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்தனரோ, அங்கேயே அவர்களுக்கு வீடுகளையும், படுக்கைகளையும், ஆறு வெவ்வேறு வகைச் சுவைகளைக் கொண்ட உணவையும், பல்வேறு பிற வகைப் பொருட்களையும் அந்த ஆறுகளில் முதன்மையானவள் கொடுத்தாள்.(34) அந்தப் பிராமணர்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பரிசுகள் அனைத்தையும் மன்னர் கொடுத்ததாகக் கருதிக் கொண்டனர். அவர்கள் அந்த ஏகாதிபதியை உற்சாகமாகப் புகழ்ந்து, அவனுக்குத் தங்கள் மங்கலமான ஆசிகளை வழங்கினர்.(35) தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரும் அவ்வேள்வியில் இருந்த அபரிமிதமான பொருட்களால் மனநிறைவை அடைந்தனர். மனிதர்களைப் பொருத்தவரையில் அந்த அபரிமிதமான பொருட்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(36)
பனைமரக் கொடி கொண்டவனான அந்தச் சிறப்புமிக்கப் பலதேவன், வென்று, கட்டுப்படுத்தித் தூய்மையடைந்த ஆன்மாவுடனும், பேரறத்தின் தனித்தன்மையுடனும், மதிப்புமிக்கப் பொருட்களைத் தானமளித்து, அடுத்ததாக, வேகமான ஊற்றைக் கொண்ட வசிஷ்டாபவாகம் என்ற தீர்த்தத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 41ல் சுலோகங்கள் : 37
----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 41ல் சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |