Vasishthapavaha Tirtha! | Shalya-Parva-Section-42 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கடுந்தவம் குறித்த போட்டாபோட்டியால் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் பெரும் பகை எழுந்தது. வசிஷ்டரின் உயர்ந்த வசிப்பிடம் சரஸ்வதியின் கிழக்குக்கரையில் ஸ்தாணு என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தில் இருந்தது. எதிர்க்கரையில் நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரின் ஆசிரமம் இருந்தது.(4) ஓ! ஏகாதிபதி, அந்தத் தீர்த்தத்தில் ஸ்தாணு (மஹாதேவன்) கடுந்தவம் பயின்றான். தவசிகள் இன்னும் அந்தக் கடுஞ்சாதனைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.(5) அங்கே ஒரு வேள்வியைச் செய்த ஸ்தாணு, அங்கே அந்தத் தீர்த்தத்தை நிறுவி அந்தச் சரஸ்வதி ஆற்றை வழிபட்டான். எனவே, ஓ! தலைவா, அது ஸ்தாணு தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(6) பழங்காலத்தில் தேவர்கள், ஓ! மன்னா, தேவர்களின் எதிரிகளைக் கொல்பவனான ஸ்கந்தனைத் தங்கள் படைத்தலைவனாக அத்தீர்த்தத்தில் வைத்தே நிறுவினர்.(7)
சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், தன் கடுந்தவத்தின் துணையால் வசிஷ்டரைக் கொண்டு {இழுத்து} வந்தார். அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(8) தவசிகளான விஷ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இருவரும், தங்கள் தவங்களின் மேன்மை குறித்த மெய்யுறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(9] பெருமுனிவரான விஷ்வாமித்திரர், வசிஷ்டரின் சக்தியைக் கண்டு (பொறாமையால்) எரிந்து, அந்தக் காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(10) அவர் தன் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், "இந்தச் சரஸ்வதி, தன் ஓட்டத்தின் சக்தியால் தவசிகளில் முதன்மையான வசிஷ்டரை என் முன் வேகமாகக் கொண்டு {இழுத்து} வர வேண்டும். இங்கே கொண்டுவரப்படும் அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரை {வசிஷ்டரை} நான் கொல்வேன் என்பதில் ஐயமில்லை", என்ற இந்தத் தீர்மானத்தை எட்டினார்.(11,12)
இதைத் தீர்மானித்துக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கப் பெருமுனிவர் விஷ்வாமித்திரர், கண்கள் சிவந்த கோபத்துடன், அந்த ஆறுகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} நினைத்தார்.(13) இவ்வாறு அந்தத் தவசியால் நினைக்கப்பட்டதும் அவள் {சரஸ்வதி} மிகவும் கலக்கமடைந்தாள். எனினும், அந்த அழகான மங்கை {சரஸ்வதி}, பெரும் சக்தியும், பெரும் கோபமும் கொண்ட அம்முனிவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} சென்றாள்.(14) அந்தச் சரஸ்வதி, நிறம் மங்கியவளாக, கூப்பிக் கரங்களுடன் உடல் நடுங்கிக் கொண்டே அந்த முதன்மையான தவசியின் முன் தோன்றினாள்.(15) உண்மையில், துயரால் அதிகம் பீடிக்கப்பட்டிருந்த அந்த மங்கை, வலிமைமிக்கத் தன் தலைவனை இழந்துவிட்ட ஒரு பெண்ணைப் போல இருந்தாள். அவள் அந்தச் சிறந்த முனிவரிடம் {விஸ்வாமித்திரரிடம்}, "நான் உமக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்று கேட்டாள்.(16) சினம் நிறைந்த அந்தத் தவசி அவளிடம், "வசிஷ்டரை நான் கொல்லும் வகையில், தாமதமில்லாமல் அவரை இங்கே கொண்டு வருவாயாக" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த {சரஸ்வதி} ஆறானவள் மிகவும் கலக்கமடைந்தாள்.(17) தாமரைக் கண்களைக் கொண்ட அந்த மங்கை, காற்றால் அசைக்கப்பட்ட கொடியைப் போலக் கூப்பிய கரங்களுடன், அச்சத்தால் மிகவும் நடுங்கினாள்.(18) அந்தப் பெரும் ஆற்றின் அந்த அவலநிலையைக் கண்ட அந்தத் தவசி {விஷ்வாமித்திரர்}, அவளிடம் {சரஸ்வதியிடம்}, "எந்த ஐயுணர்வுமின்றி வசிஷ்டரை என் முன் கொண்டு வருவாயாக" என்றார்.(19)
அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டவளும், அவர் {விஷ்வாமித்திரர்} செய்ய நினைக்கும் தீமையை அறிந்தவளுமான அவள் {சரஸ்வதி}, பூமியில் ஒப்பற்றவரான வசிஷ்டரின் ஆற்றலை அறிந்து,(20) அவரிடம் சென்று, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரர் தன்னிடம் சொன்னதைத் தெரிவித்தாள்.(21) அவள், அந்த இருவரின் சாபம் குறித்தும் அஞ்சி மீண்டும் மீண்டும் நடுங்கினாள். உண்மையில், (அவர்களில் எவரேனும் ஒருவர் தனக்கு அளிக்கப்போகும்) துயர் நிறைந்த சாபத்திலேயே அவளது இதயம் நிலைத்திருந்தது. அவள் இருவரிடமும் கொண்ட அச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்.(22) அற ஆன்மா கொண்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த வசிஷ்டர், நிறம் மங்கியவளாகவும், கவலையில் மூழ்கியவளாகவும் அவளைக் கண்டு, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23) வசிஷ்டர் {சரஸ்வதியிடம்}, "ஓ! நதிகளில் முதன்மையானவளே, உன்னைக் காத்துக் கொள்வாயாக. ஓ! வேகமாக ஓடையைக் கொண்டவளே, என்னைக் கொண்டு {இழுத்து} செல்வாயாக, இல்லையெனில் விஷ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். எந்த ஐயமும் கொள்ளாதே" என்றார்.(24)
இரக்க குணம் கொண்ட அம்முனிவரின் {வசிஷ்டரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, ஓ! கௌரவ்யா {ஜனமேஜயா}, தான் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள்.(25) அவள் மனத்தில், "வசிஷ்டர் என்னிடம் பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தொண்டாற்றுவதே எனக்கு முறையானது" என்ற எண்ணமே எழுந்தது.(26) அந்தச் சரஸ்வதி, தன் கரையில் மௌனமாக (மந்திரங்களை) ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறந்த முனிவரை {வசிஷ்டரைக்} கண்டும், ஹோமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குசிகரின் மகனை (விஷ்வாமித்திரரைக்) கண்டும்,(27) "இதுவே எனக்கான வாய்ப்பு {தக்க சமயம் இதுவே}" என்று நினைத்தாள். அப்போது அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதி} தன் கரைகளில் ஒன்றைத் தன் {வேகமான} ஓட்டத்தால் இடித்துத் தள்ளினாள்.(28) அப்படி அந்தக் கரையை இடித்தபடியே அவள் வசிஷ்டரையும் கொண்டு {இழுத்துச்} சென்றாள்.
அப்படிக் கொண்டு செல்லப்படும்போது, ஓ! மன்னா, வசிஷ்டர் அந்த ஆற்றை இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார்:(29) "ஓ! சரஸ்வதி, அந்தப் பெரும்பாட்டனின் (மானஸத்) தடாகத்தில் நீ உதித்தாய். இந்த மொத்த அண்டமும் உன் சிறந்த நீரால் நிறைந்திருக்கிறது.(30) ஓ! தேவி, ஆகாயத்தில் பாய்ந்து மேகங்களுக்கு உனது நீரைப் புகட்டுகிறாய். நீர்கள் அனைத்தும் நீயே. உன் மூலமாகவே நாங்கள் எங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துகிறோம்.(31) நீயே புஷ்டி, தியுதி {காந்தி}, கீர்த்தி {புகழ்}, சித்தி {வெற்றி}, உமை {பார்வதி}[1] ஆவாய். நீயே பேச்சும், நீயே சுவாஹாவும்[2] ஆவாய். மொத்த அண்டமும் உன்னை நம்பியே இருக்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நான்கு வடிவங்களில் வசிப்பவள் நீயே" {என்று துதித்தார்}.(32)
[1] "வளர்ச்சி, காந்தி, புகழ் மற்றும் வெற்றியின் பொருத்தமான வடிவங்கள் இவை. இறுதியில் உள்ள உமை என்பது சிவனின் மனைவியான பரமேஸ்வரியைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[2] "பெரும் செயல்திறனைக் கொண்ட ஒரு மந்திரமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு அந்தப் பெருமுனிவரால் புகழப்பட்ட அந்தச் சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பிராமணரை {வசிஷ்டரை} வேகமாக விஷ்வாமித்திரரின் ஆசிரமத்தை நோக்கி கொண்டு {இழுத்துச்} சென்று, முன்னவர் {வசிஷ்டர்} வந்திருப்பதைக் குறித்துப் பின்னவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} மீண்டும் மீண்டும் சொன்னாள்.(33) இவ்வாறு சரஸ்வதியால் தன் முன் கொண்டு வரப்பட்ட வசிஷ்டரைக் கண்ட விஷ்மாத்திரர், சினத்தால் நிறைந்து, அந்தப் பிராமணரைக் {வசிஷ்டரைக்} கொல்வதற்கு ஓர் ஆயுதத்தைத் தேடத் தொடங்கினார்.(34) அவர் கோபத்தால் நிறைந்திருப்பதைக் கண்ட அந்த ஆறானவள், ஒரு பிராமணரின் கொலையின் மீது (கொலை செய்வதைக் காண்பதிலும், அதற்கு உதவுவதிலும்) கொண்ட அச்சத்தால், மீண்டும் வசிஷ்டரைத் தனது கிழக்குக் கரைக்கே வேகமாகக் கொண்டு சென்றாள். இவ்வாறு தன் செயலால் காதியின் மகனை {விஷ்வாமித்திரரை} வஞ்சித்தாலும், அவள், இருவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவளானாள்.(35)
பழியுணர்ச்சி கொண்ட விஷ்வாமித்திரர், முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர் {மீண்டும்} கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து சரஸ்வதியிடம்,(36) "ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, நீ என்னை வஞ்சித்துச் சென்றதால், உன் ஓடையானது, ராட்சசர்களுக்கு ஏற்புடைய குருதியாக மாறிப் போகட்டும்" என்றார்.(37) பிறகு, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் சபிக்கப்பட்ட சரஸ்வதி, இரத்தம் கலந்த நீரைச் சுமந்தபடியே ஒரு வருடம் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தாள்.(38) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், அந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்ட சரஸ்வதியைக் கண்டு, பெருங்கவலையில் நிறைந்தனர்.(39) இதன் காரணமாகவே, ஓ! மன்னா, அந்தத் தீர்த்தம், வசிஷ்டாபவாஹம் என்று பூமியில் அழைக்கப்பட்டது. எனினும், அந்த முதன்மையான நதியானவள், மீண்டும் தன் முறையான நிலையை அடைந்தாள்" {என்றார் வைசம்பாயனர்}.(40)
----------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 40----------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் | In English |