Dadhicha and Saraswata! | Shalya-Parva-Section-51 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : ததீச, சாரஸ்வத முனிவர்களின் வரலாறு; ததீச முனிவரை மயக்கிய அலம்புசை; சரஸ்வதி ஆற்றிடம் பிறந்த சாரஸ்வதர்; ததீசரின் எலும்புகளால் ஆயுதம் செய்து அசுரர்களை வென்ற இந்திரன்; பனிரெண்டு வருடங்கள் நீடித்த பஞ்சம்; சரஸ்வதியாற்றின் மீன்களை உண்டு வாழ்ந்த சாரஸ்வத முனிவர்; அறுபதாயிரம் முனிவர்களுக்கு வேதங்களைக் கற்பித்த சாரஸ்வதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, அந்தத் தீர்த்தத்தில்தான் {சோம தீர்த்தத்தில்தான்}, பழங்காலத்தில், நட்சத்திரங்களின் தலைவன் {சந்திரன்}, தாரகனைத் தீமையின் வேராகக் கொண்ட ஒரு பெரும்போரில் ஈடுபட்டு, ராஜசூய வேள்வியைச் செய்தான்.(1) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அறவோனான பலன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் நீராடி, தானங்கள் பலவற்றைச் செய்து, சாரஸ்வதர் என்ற பெயர் கொண்ட முனிவரின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(2) அங்கே முன்பொரு காலத்தில், பனிரெண்டு {12} வருட பஞ்சம் நீடித்தபோது, தவசியான அந்தச் சாரஸ்வதர், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பித்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(2,3)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தவத் தகுதியைக் கொண்டவரே, அந்தத் தவசியான சாரஸ்வதர், பனிரெண்டு வருடகாலப் பஞ்சத்தின் போது, ஏன் வேதங்களைக் கற்பித்தார்?" என்று கேட்டான்.(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில், நுண்ணறிவும், பெரும் தவத்தகுதியும் கொண்ட ஒரு தவசி இருந்தார். அவர் ததீசர் {ததீசி} என்ற பெயரால் கொண்டாடப்பட்டார். தமது புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர், ஒரு பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்றார்.(5) அவரது மிகக் கடுமையான தவங்களின் விளைவால், சக்ரன் {இந்திரன்} பேரச்சத்தால் பீடிக்கப்பட்டான். பல்வேறு வகை வெகுமதிகளைக் கொடுக்க முன்வந்தும், அந்தத் தவசியை (அவரது தவத்திலிருந்து) விலக்க முடியவில்லை.(6) இறுதியாக அந்தப் பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அந்தத் தவசியை ஆசையில் மயக்கமடையச் செய்ய, பேரழகுடையவளும், அலம்புசை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு தெய்வீக அப்சரஸை அவரிடம் அனுப்பி வைத்தான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம தவசி, தேவர்களை நிறைவு செய்யும் செயலை {தவத்தை} எங்கே செய்து வந்தாரோ, அந்தச் சரஸ்வதியின் கரையில் மேற்கண்ட {அலம்புசை என்ற} பெயரையுடைய தெய்வீகக் காரிகை தோன்றினாள்.(8) அழகிய அங்கங்கள் கொண்ட அந்தக் காரிகையைக் {அலம்புசையைக்} கண்டதும், அந்தத் தூய ஆன்மா கொண்ட தவசியின் {ததீசரின்} உயிர் வித்து வெளிப்பட்டது. சரஸ்வதியில் விழுந்த அஃதை அவர் கையில் ஏந்தினார்.(9) உண்மையில், ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவ்வித்தைக் கண்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, அதைத் தன் கருவறையில் தாங்கினாள். சரியான காலத்தில் அது கருவாக வளர்ந்தது. அந்தப் பேராறும், உயிர் கொண்ட பிள்ளையாவதற்காக அதைத் தாங்கிக் கொண்டாள்.(10)
ஓ! தலைவா {ஜனமேஜயா}, காலம் வந்தபோது, அந்தப் பிள்ளையை ஈன்ற அந்த முதன்மையான ஆறானவள் {சரஸ்வதியானவள்}, அப்பிள்ளையை எடுத்துக் கொண்டு அம்முனிவரிடம் {ததீசரிடம்} வந்தாள்.(11) அந்த முனிவர்களில் சிறந்தவர் {ததீசர்}, {முனிவர்களின்} சபையில் இருப்பதைக் கண்ட சரஸ்வதி, அவரிடம் {ததீசரிடம்} பிள்ளையைக் கொடுக்கும்போது,(12) "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினால், நான் உமது மகனைத் தாங்கினேன். அலம்புசை என்ற அப்சரஸைக் கண்டதும் வெளிப்பட்ட உமது வித்தைக் கண்டு, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினாலும், உமது சக்திக்கு எந்த அழிவும் ஏற்படாது என்பதை அறிந்தும், அஃதை என் கருவறையில் தாங்கினேன்.(13,14) என்னால் கொடுக்கப்படும் உமது களங்கமற்ற பிள்ளையை ஏற்றுக் கொள்வீராக" என்றாள். இவ்வாறு அவளால் {சரஸ்வதியால்} சொல்லப்பட்ட அம்முனிவர் {ததீசர்}, அப்பிள்ளையை ஏற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார்.(15)
அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {ததீசர்}, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பாசத்தால் தன் மகனின் தலையை முகர்ந்து, சில காலத்திற்கு அவனைத் தன் நெருக்கமான அரவணைப்புக்குள் வைத்திருந்தார்.(16) அந்த ஆற்றிடம் {சரஸ்வதியிடம்} மனம் நிறைந்தவரும், பெரும் தவசியுமான அந்தத் ததீசர், அவளுக்கு ஒரு வரத்தைக் கொடுக்கும் வகையில், "ஓ! அருளப்பட்டவளே, இதுமுதல், உன் நீரைக் கொண்டு விஸ்வதேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்களின் அனைத்து இனங்கள், அப்சரஸ்கள் ஆகியோருக்குப் பலியுணவு {திருப்படையல்} கொடுக்கப்படும்போது, அதனால் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்" என்றார்.(17) அந்தப் பேராற்றிடம் {சரஸ்வதியிடம்} இவ்வாறு சொன்ன அந்தத் தவசி, நிறைவை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, இவ்வார்த்தைகளால் அவளைப் புகழ்ந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றை முறையாகக் கேட்பாயாக.(18)
{ததீசர் சரஸ்வதியிடம்}, "ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, பழங்காலத்தில் பிரம்மத் தடாகத்தில் இருந்து நீ எழுந்து வந்தாய். ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் அனைவரும் உன்னை அறிவார்கள்.(19) எப்போதும் ஏற்புடைய {இனிமையான} குணத்தைக் கொண்ட நீ, எனக்குப் பெரும் நன்மையைச் செய்திருக்கிறாய். ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, இந்த உனது பெரும்பிள்ளை, சாரஸ்வதன் என்ற பெயரில் அறியப்படுவான்.(20) புதிய உலகங்களையே உண்டாக்கவல்லவனான இந்த உனது மகன், உன் பெயராலேயே அறியப்படுவான். உண்மையில், அந்தப் பெருந்தவசி சாரஸ்வதன் என்ற பெயரால் அறியப்படுவான்.(21) ஓ! அருளப்பட்டவளே, பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் பஞ்சம் ஏற்படும்போது, இந்தச் சாரஸ்வதன், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பிப்பான்.(22) ஓ! அருளப்பட்ட சரஸ்வதியே, ஓ அழகியே, என் அருளால் நீ எப்போதும் புனிதமான நதிகள் அனைத்திலும் முதன்மையானவளாக இருப்பாய்" என்றார் {ததீசர்}.(23)
அந்தத் தவசியால் {ததீசரால்} வரங்கள் அருளப்பட்ட பிறகு, அந்தப் பேராறானவள் இவ்வாறே புகழப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த ஆறானவள் தன் பிள்ளையை எடுத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றாள்.(24) அதேவேளையில், தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் நேர்ந்த தருணத்தில், சக்ரன் {இந்திரன்}, ஆயுதங்களைத் தேடி மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தான்.(25) எனினும், அந்தப் பெருந்தேவன் {இந்திரன்}, தேவர்களின் எதிரிகளைக் கொல்லத்தக்க ஆயுதங்களைக் கண்டடைவதில் தோல்வியுற்றான்.(26) பிறகு அந்தச் சக்ரன் தேவர்களிடம், "இந்தப் பேரசுரர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. உண்மையில், ததீசரின் எலும்புகள் இல்லாமல் நமது எதிரிகளை நம்மால் கொல்ல முடியாது.(27) எனவே தேவர்களே, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {ததீசரிடம்} சென்று, அவரிடம், "ஓ! ததீசரே, உமது எலும்புகளைத் தாரும். அவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொல்வோம்" என்று வேண்டிக் கொள்ளுங்கள்" என்றான்.(28) அவர்களால் மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ததீசர்}, எந்தத் தயக்கமுமின்றித் தம்முயிரைக் கொடுத்தார். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்த அந்தத் தவசி, வற்றாத தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்ட பல உலகங்களை அடைந்தார்.(29)
அதேவேளையில் சக்ரன் {இந்திரன்}, அவரது எலும்புகளைக் கொண்டு, வஜ்ரம், சக்கரம், கனத்த கதாயுதங்கள், பலவகையிலான தண்டங்கள் மற்றும் தடிகள் போன்ற பல்வேறு ஆயுதங்களை மகிழ்ச்சியாக உண்டாக்கினான். படைப்பாளனுக்கே இணையானவரான ததீசர், அனைத்துயிர்களுடைய தலைவனின் {பிரம்மனின்} மகனும், பெரும் முனிவருமான பிருகுவால் கடுந்தவங்களின் துணைகொண்டு பெறப்பட்டவராவார்[1].(31) பருத்த அங்கங்களும், பெரும் சக்தியும் கொண்டவரான ததீசர், உலகின் உயிரினங்களில் பலமிக்கவராகப் படைக்கப்பட்டார். மகிமைக்காகக் கொண்டாடப்படுபவரான அந்தப் பலமிக்கத் ததீசர், மலைகளின் மன்னனைப் போன்ற உயரத்தை அடைந்தார். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அவரது {ததீசரது} சக்தியால் எப்போதும் கவலையடைந்திருந்தான்.(32) பிரம்ம சக்தியில் பிறந்த வஜ்ரத்தை, மந்திரங்களால் ஈர்த்த இந்திரன், ஓ! பாரதா, அதை ஏவியபோது பேரொலியை எழுப்பி, தைத்தியர்களின் தொண்ணூற்றொன்பது வீரர்களைக் கொன்றான்.(33) பயங்கரமான நீண்ட காலம் சென்றதும், ஓ! மன்னா, பனிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) பனிரெண்டாண்டு காலம் அந்தப் பஞ்சம் நீடித்த போது, ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(35)
[1] "நீலகண்டர் இவ்வரியைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "பிரம்மபுத்திரரும் பரமரிஷியுமான பிருகுவினால், கடுமையான தவத்தினால் நிறைந்தவரும், உலகங்களை ரக்ஷிப்பவரும், பருத்த தேகமுள்ளவரும், தேஜஸ்வியும் உலகங்களில் பலிஷ்டருமாக அந்தத் ததீசர் உண்டுபண்ணப்பட்டார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அனைத்துத் திசைகளிலும் அவர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டவரும், தவசியுமான சாரஸ்வதரும், தப்பி ஓடுவதிலேயே தன் இதயத்தை நிலைநிறுத்தினார். அப்போது சரஸ்வதி ஆறானவள், அவரிடம் {சாரஸ்வதரிடம்}, "ஓ! மகனே, இங்கிருந்து நீ செல்ல வேண்டாம். இங்கேயே எப்போதும் பெரிய மீன்களை உனக்கு நான் உணவாகக் கொடுப்பேன். எனவே, இங்கேயே இருப்பாயாக" என்றாள்.(37) (அந்த ஆற்றால்) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தவசி {சாரஸ்வதர்}, முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணவுக் காணிக்கைகளைக் கொடுத்து அங்கேயே வாழ்ந்து வந்தார். தமது தினசரி உணவை அடைந்த அவர், இவ்வாறே தன் உயிரையும், தேவர்களையும் தொடர்ந்து தாங்கி வந்தார்.(38) பனிரெண்டு வருட பஞ்சம் கடந்த பிறகு, வேதங்களின் உரைகளைக் குறித்துப் பெருமுனிவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.(39) அம்முனிவர்கள், பசித்த வயிறுகளுடன் திரிந்து கொண்டிருந்ததில், தங்கள் வேத அறிவை இழந்திருந்தனர். உண்மையில், அவர்களில் எவரும் சாத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவராக இல்லை.(40)
அவர்களில் எவரோ ஒருவர், குவிந்த கவனத்தோடு முனிவர்களில் முதன்மையான சாரஸ்வதர், வேதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க நேர்ந்தது.(41) முனிவர்களின் சபைக்குத் திரும்பிய அவர் {அந்த ஒருவர்}, ஒப்பற்ற ஒளியையும், தேவர்களைப் போன்ற மேனியையும் கொண்டிருந்த சாரஸ்வதர், தனிமையான காட்டில் வேதங்களைப் படித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவர்களிடம் {அந்தச் சபையில் இருந்த முனிவர்களிடம்} சொன்னார்.(42) பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அந்தத் தவசிகளில் சிறந்த சாரஸ்வதரிடம், "ஓ!தவசியே, எங்களுக்குக் கற்பிப்பீராக" என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். அந்தத் தவசியும் {சாரஸ்வதரும்} அவர்களிடம், "முறையாக என் சீடர்கள் ஆவீர்களாக" என்று மறுமொழிகூறினார்.(43,44)
அதற்கு அந்தத் தவசிகளின் சபையானது {சாரஸ்வதரிடம்}, "ஓ! மகனே, நீ வயதால் மிகவும் இளையவனாக இருக்கிறாய்" என்றது. அதற்கு அவர் அந்தத் தவசிகளிடம், "என் அறத்தகுதி அழிவடையாமல் இருக்க நான் அத்தகு வழியிலேயே செயல்பட வேண்டும்.(45) எவன் முறையில்லாமல் கற்பிப்பிப்பானோ, எவன் முறையில்லாமல் கற்பானோ, அவர்கள் இருவரும் வெகு விரைவில் {அறிவின்} அழிவையடைந்து ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.(46) வருடங்கள் {வயது}, மூப்பு {தலைமயிர் நரைத்தல்}, செல்வம், சொந்தங்கள் ஆகியவற்றால் முனிவர்கள் தங்கள் தகுதியை அடைவதில்லை. நம்மில் எவர் வேதங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவல்லவரோ அவரே பெரியவர்" என்றார்.(47) அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர்கள், முறையாக அவரது சீடர்களாகி, அவரிடம் இருந்து வேதங்களை அடைந்து, மீண்டும் தங்கள் சடங்குகளைப் பயின்றனர்.(48) மறுபிறப்பாள {பிராமண} முனிவரான சாரஸ்வதரிடம் இருந்து வேதங்களை அடைவதற்காக {இவ்வாறு} அறுபதாயிரம் {60,000} முனிவர்கள் அவரது சீடர்களானார்கள்.(49) ஏற்புடைய அம்முனிவர் சிறுவனாயிருப்பினும், அவருக்குக் கீழ்ப்படிந்த அம்முனிவர்கள் ஒவ்வொருவரும், அவர் அமர்வதற்கான ஆசனமாகக் கைநிறைந்த புற்களை {தர்ப்பைப் புற்களைக்} காணிக்கை அளித்தனர்.(50)
ரோகிணியின் வலிமைமிக்க மகனும், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணனுமானவன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் {சாரஸ்வதத் தீர்த்தத்தில்} செல்வத்தைத் தானமளித்து, பழங்காலத்தில் முதிர்ந்த பெண்ணொருத்தி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த மற்றொரு தீர்த்தத்திற்கு {விருத்தகன்யாஸ்ரமத்திற்கு} மகிழ்ச்சியாகச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(51)
-------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 51 ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |