The old maiden and Sringavat! | Shalya-Parva-Section-52 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)
[1] எந்தப் பதிப்புகளிலும் இவளது பெயர் குறிப்பிடப்படவில்லை. விருத்தகன்யை என்பது முதிர்கன்னி என்ற பொருளைத் தருவதாகும். கும்பகோணம் பதிப்பில் இந்தப் பெயரிலேயே பின்னர் இவள் குறிப்பிடப்படுகிறாள்.
இத்தகு கடும் தவங்களைப் பயில்வதிலேயே நீண்ட காலம் கடந்து சென்றது. அவளது தந்தை {குணி-கர்க்கர்} அவளை ஒரு கணவனுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், தனக்குத் தகுந்த ஒரு கணவனை அவள் காணாததால் திருமணத்தில் அவள் விருப்பம் கொள்ளவில்லை.(6) கடுந்தவங்களால் தொடர்ந்து தன் உடலை மெலியச் செய்த அவள், அந்தத் தனிமையான காட்டில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வளவு கடுமையான முயற்சியாலும், வயதாலும், தவங்களாலும் தன்னை மெலியச் செய்திருந்தாலும், அவள் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவளாகவே கருதினாள்.(8) இறுதியாக எந்த ஒருவரின் துணையுமின்றி ஓரடியும் நகர முடியாத (மிக முதிர்ந்த வயதான) நிலையை அவள் அடைந்ததும், அடுத்த உலகத்திற்குச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினாள்.(9)
அவள், தன் உடலைக் கைவிடப்போவதைக் கண்ட நாரதர், அவளிடம், "ஓ! பாவமற்றவளே, திருமணச் சடங்கால் நீ தூய்மையடையாததன் விளைவால், உனக்கு எந்த அருள் உலகமும் கிடைக்காது.(10) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவளே, இதை நாங்கள் சொர்க்கத்தில் கேட்டிருக்கிறோம். உன் கடுந்தவங்கள் பெரியவாயினும், அருள் உலகங்களில் உனக்கு உரிமையேதும் கிடையாது" என்றார்.(11) நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிர்ந்த மங்கை, முனிவர்களின் சபைக்குச் சென்று, "எவர் திருமணத்தில் என் கரங்களை ஏற்பாரோ, அவருக்கு என் தவத்தில் பாதியை நான் அளிப்பேன்" என்றாள்.(12) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், காலவரின் மகனும்[2], சிருங்கவான் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர், ஓர் ஒப்பந்ததை முன்மொழிந்து அவளது கரங்களை ஏற்றார். {அந்த சிருங்கவான்},(13) "ஓ! அழகிய பெண்ணே, நீ என்னுடன் ஓரிரவு மட்டுமே வாழ்வாய் என்ற இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் உன் கரத்தை ஏற்கிறேன்" என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட அவள், தனது கரத்தை அவரிடம் கொடுத்தாள்.(14) உண்மையில், அந்தக் காலவரின் மகன் {சிருங்கவான்}, விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றி அவளது கரத்தை ஏற்று, அவளைத் திருமணம் செய்து கொண்டார்.(15)
[2] இவர் உத்யோக பர்வம் பகவத்யாந உப பர்வத்தில் வரும் காலவராக இருக்க வேண்டும்.
அவ்விரவில் அவள், தெய்வீக ஆடையை உடுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக களிம்புகள் {சந்தனம்} மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசப்பட்ட, அழகிய நிறம் கொண்ட இளம்பெண்ணாக மாறினாள்.(16) சுடர்மிக்க அவளது அழகைக் கண்ட காலவரின் மகன் {சிருங்கவான்}, மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளது துணையுடன் ஓரிரவைக் கழித்தார். காலையில் அவள் அவரிடம்,(17) "ஓ! பிராமணரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உம்மிடம் நான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் நிறைவடைந்தது. நீர் அருளப்பட்டிருப்பீராக, நான் இப்போது உம்மைவிட்டுச் செல்கிறேன்" என்றாள்.(18) அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், மீண்டும், "நீர்க்காணிக்கைகளுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் சொர்க்கவாசிகளை {தேவர்களை} நிறைவுசெய்தபிறகு, இந்தத் தீர்த்தத்தில் {விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்தில்} எவன் ஓரிரவைக் கழிப்பானோ, அவன், ஐம்பத்தெட்டு வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பை நோற்றதன் தகுதியை அடைவான்" என்றாள்.(20)
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கற்புடைய மங்கை சொர்க்கத்திற்குச் சென்றாள். அவளது தலைவனான முனிவர் {சிருங்கவான்}, அவளது அழகை நினைத்து நினைத்து மிகவும் உற்சாகமற்றவராக ஆனார்.(21) அவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் அவர் அவளுடைய பாதித் தவத்தையும் சிரமத்துடன் ஏற்றுக் கொண்டார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவளது அழகால் கவலையில் ஆழ்ந்த அவர் {சிருங்கவான்}, தன்னுடலைக் கைவிட்டு விரைவில் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.(22) நான் உனக்குச் சொன்ன இதுவே அந்த முதிர்ந்த கன்னிகையின் {விருத்தகன்யையின்} மேன்மைபொருந்திய வரலாறாகும். இதுவே அவளது பிரம்மச்சரியம் மற்றும் சொர்க்கத்திற்கான அவளது மங்கலப் புறப்பாடு ஆகியவற்றைக் குறித்த விவரிப்பாகும்.(23) அங்கே இருந்தபோதுதான், சல்லியனின் படுகொலையைக் குறித்துப் பலதேவன் {பலராமன்} கேள்விப்பட்டான். அங்கே பிராமணர்களுக்குத் தானமளித்த அவன், ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட சல்லியனின் நிமித்தமாகத் துயரத்தை அடைந்தான்.(24) பிறகு அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, சமந்தபஞ்சகத்தின் {வாயிலை விட்டு வெளியே} சுற்றுப்புறத்திற்கு வந்து, குருக்ஷேத்திரப் போரின் விளைவுகளைக் குறித்து முனிவர்களிடம் விசாரித்தான்.(25) குருக்ஷேத்திரப் போரின் விளைவுகள் குறித்து அந்த யதுகுலத்தின் சிங்கத்தால் கேட்கப்பட்ட அந்த உயர் ஆன்மாக்கள், நடந்தது அனைத்தையும் குறித்து அவனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்".(26)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 52 ல் உள்ள சுலோகங்கள் : 26
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 52 ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |