All should ever remember the Saraswati! | Shalya-Parva-Section-54 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : சாண்டில்யரின் மகளான ஸ்ரீமதியின் ஆசிரமத்திலிருந்து பிலக்ஷப்பிரஸ்ரவணத் தீர்த்தத்திற்கும், அடுத்ததாகக் காரபவனத் தீர்த்தத்திற்கும், மித்ராவருண ஆசிரமத்திற்கும், பிறகு அங்கிருந்து யமுனா தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; அங்கே யமுனா தீர்த்தத்தில் கூடிய முனிவர்களின் சபையில் நாரதரைக் கண்ட பலராமன்; பீம துரியோதன கதாயுத்தத்தைக் குறித்துப் பலராமனுக்குச் சொன்ன நாரதர்; தன் சீடர்களுக்கிடையிலான மோதலைக் காண விரும்பி களத்திற்கு விரைந்து சென்ற பலராமன்...
மீட்கப்படுகிறாள் சரஸ்வதி |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குருக்ஷேத்திரம் சென்று, அங்கே தானமளித்த அந்தச் சாத்வத குலத்தோன் {பலராமன்}, பேரழகுடன் கூடிய மிகப்பெரிய ஓர் ஆசிரமத்திற்குச் சென்றான்.(1) அந்த ஆசிரமத்தில் மதுக {இலுப்பை} மரங்கள், மாமரங்கள், பிலாக்ஷ {ஆல} மரங்கள், நியகிரோத {புங்க} மரங்கள், வில்வ மரங்கள், சிறப்பான பலா மரங்கள், அர்ஜுன {மருத} மரங்கள் நிறைந்திருந்தன.(2) புனிதக் குறியீடுகள் பலவற்றைக் கொண்ட அந்த நல்ல ஆசிரமத்தைக் கண்ட பலதேவன், அது யாருடையது என்று முனிவர்களிடம் கேட்டான்.(3)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்மாக்கள் அந்தப் பலதேவனிடம் {பலராமனிடம்}, "ஓ! ராமா, பழங்காலத்தில் இந்த ஆசிரமம் யாருடையதாக இருந்தது என்பதை விவரமாகக் கேட்பாயாக.(4) பழங்காலத்தில் இங்கே தேவன் விஷ்ணு கடுந்தவத்தைச் செய்தான். நித்தியமான வேள்விகள் அனைத்தையும் அவன் இங்கே செய்தான்.(5) இங்கே ஒரு பிராமணக் கன்னிகை, இளமையிலிருந்து பிரம்மச்சரிய நோன்பிருந்து, தவ வெற்றியை அடைந்தாள். மாற்றமில்லா யோக சக்திகளைக் கொண்ட தவசியான அந்தப் பெண் சொர்க்கத்திற்குச் சென்றாள்.(6) உயர் ஆன்ம சாண்டில்யர்[1], ஓ! மன்னா, கடும் நோன்புகளை நோற்பவளும், கற்புடையவளும், சுயக்கட்டுப்பாடு கொண்டவளும், பிரம்மச்சரியத்தை நோற்பவளுமான ஓர் அழகிய மகளைப் {ஸ்ரீமதி} பெற்றார். பெண்களால் செய்ய முடியாத கடுந்தவங்களையும் செய்த அந்த அருளப்பட்ட மங்கை, இறுதியில் தேவர்களாலும், பிராமணர்களாலும் வழிபடப்பட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள். பலதேவன், அம்முனிவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(8) முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவனும், மங்கா புகழைக் கொண்டவனுமான பலதேவன், இமயத்தின் சாரலில் மாலை வேளைக்கான அனைத்து சடங்குகளையும் செய்து, அம்மலையின் மீது ஏறினான்.(9) பனைமரக்கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்கப் பலராமன், அம்மலையில் ஏறிக் கொண்டிருக்கையில் அருகிலேயே ஒரு நல்ல புனிதமான தீர்த்தத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(10)
[1] பெரும் முனிவரான மரீசியின் மகன். சாண்டில்ய கோத்ரத்தின் தலைவர்.
சரஸ்வதியின் மகிமையையும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்றழைக்கப்பட்ட அந்தத் தீர்த்தத்தின் மகிமையையும் கண்ட பலன் {பலராமன்}, அடுத்ததாகக் காரவபனம் {காரபசனம்} என்றழைக்கப்படும் மற்றுமொரு சிறந்த, முதன்மையான தீர்த்தத்தை அடைந்தான்.(11) பெரும் பலத்தையும், கலப்பையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அங்கே தானமளித்த பிறகு, குளுமையானதும், தெளிவானதும், புனிதமானதும், பாவங்களை அகற்றுவதுமான (அந்தத் தீர்த்தத்தின்) நீரில் நீராடினான்.(12) அங்கே தவசிகளுடனும், பிராமணர்களுடனும் ஓரிரவைக் கழித்த ராமன், அடுத்ததாக மித்ராவருணர்களின் புனிதமான ஆசிரமத்திற்குச் சென்றான்.(13) அவன் {பலராமன்}, காரவபனத்திலிருந்து, பழங்காலத்தில் இந்திரன், அக்னி, அர்யமன் ஆகியோர் எங்கு பெரும் மகிழ்ச்சியை அடைந்தோர்களோ, அந்த யமுனையின் இடத்திற்குச் சென்றான்.(14) அற ஆன்மா கொண்ட அந்த யதுகுல காளை {பலராமன்} அங்கே நீராடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு அந்த வீரன், முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சிறந்த பேச்சைக் கேட்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(15)
எங்கே ராமன் {பலராமன்} அமர்ந்தானோ, அந்தச் சபைக்கு மத்தியில் அங்கே போற்றுதலுக்குரிய நாரதர் (தம் உலவல்களின் போது) வந்தார்.(16) சடாமுடியால் மறைக்கப்பட்டும், தங்கக் கதிர்களை உடுத்திக் கொண்டும் இருந்த அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தமது கைகளில் தங்கத்தாலான ஒரு தண்டத்தையும், அதே விலைமதிப்புமிக்க உலோகத்தாலான ஒரு நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கொண்டிருந்தார்.(17) பாடுவதிலும், ஆடுவதிலும் சாதித்தவரும், தேவர்கள் மற்றும் பிராமணர்களால் போற்றப்படுபவருமான அவர் {நாரதர்}, ஆமை ஓட்டினாலானதும், இனிய இசையை எழுப்பக்கூடியதுமான அழகிய வீணை ஒன்றையும் வைத்திருந்தார்.(18) சச்சரவுகளைத் தூண்டுபவரும், சச்சரவுகளை எப்போதும் விரும்புபவருமான அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்}, அழகிய ராமன் {பலராமன்} ஓய்ந்திருந்த அந்த இடத்திற்கு வந்தார்.(19) ராமன் எழுந்து நின்று, நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளைக் கொண்ட அந்தத் தெய்வீக முனிவரைத் தகுந்தவாறு வணங்கி, குருக்களுக்கு நேர்ந்தது அனைத்தையும் குறித்து அவரிடம் கேட்டான்.(20) கடமைகள் மற்றும் நடைமுறைகளை நன்கறிந்தவரான நாரதர் அவனுக்குக் குருக்களின் துயரகரமான பேரழிவு குறித்து நடந்தது அனைத்தையும் நடந்தவாறே சொன்னார்.(21) அப்போது அந்த ரோகிணியின் மகன் {பலராமன்} சோகம் நிறைந்த வார்த்தைகளில் அம்முனிவர்களிடம், "களத்தில் நிலை என்ன? அங்கே கூடியிருக்கும் மன்னர்கள் இப்போது எவ்வாறிருக்கிறார்கள்??(22) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவரே, நான் அனைத்தையும் ஏற்கனவே கேட்டுவிட்டேன். இருப்பினும் அதை விவரமாக அறிய எனக்கு அதிக ஆவல் ஏற்படுகிறது" என்று கேட்டான்.(23)
நாரதர் {பலராமனிடம்}, "பீஷ்மர், துரோணர் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் ஏற்கனவே வீழ்ந்துவிட்டனர். வைகர்த்தனின் மகனான கர்ணனும், பெரும் தேர்வீரர்களான அவனது மகன்களுடன் வீழ்ந்துவிட்டான்.(24) ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பூரிஸ்ரவஸும், மத்ரர்களின் வீரத் தலைவனும் {சல்லியனும்} வீழ்ந்துவிட்டனர். இவர்களும், அங்கே கூடியிருந்த இன்னும் பல வலிமைமிக்க வீரர்களும், துரியோதனனின் வெற்றிக்காகத் தங்கள் அன்புக்குரிய உயிரையே விடத்தயாரானவர்களும், போரில் இருந்து திரும்பாதவர்களுமான மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர்.(25,26) ஓ! மாதவா {பலராமா}, உயிரோடு இருப்பவர்களைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையில் இப்போது படைகளைக் கலங்கடிக்கும் மூவர் மட்டுமே உயிருடன் எஞ்சியுள்ளனர்.(27) அவர்கள் கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். அவர்களும், ஓ! ராமா, அச்சத்தால் திசைகளின் பத்து புள்ளிகளை நோக்கித் தப்பி ஓடிவிட்டனர்.(28)
சல்லியன் வீழ்ந்து, கிருபரும் மற்றவர்களும் ஓடிய பிறகு, பெரும் துயரத்தில் இருந்த துரியோதனன், துவைபாயனத் தடாகத்தின் ஆழங்களுக்குள் புகுந்து கொண்டான்.(29) அத்தடாகத்தின் நீரைக் கட்டி அதனடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்களால் அணுகப்பட்டு, அவர்களது கொடும் வார்த்தைகளால் துளைக்கப்பட்டான்.(30) அந்த வார்த்தை ஈட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான அந்த வீரத் துரியோதனன், ஓ! ராமா {பலராமா}, கனமான தன் கதாயுதத்துடன் அத்தடாகத்தில் இருந்து எழுந்தான்.(31) தற்போது அவன் பீமனோடு போரிடப் போகிறான். ஓ! ராமா, அந்தப் பயங்கர மோதல் இன்று நடைபெறப் போகிறது.(32) உனக்கு ஆர்வமிருந்தால், ஓ! மாதவா {பலராமா}, இங்கே தாமதிக்காமல் அங்கே விரைந்து செல்வாயாக. உன் சீடர்கள் இருவருக்குள் நடக்கப் போகும் பயங்கரப் போரை நீ காண விரும்பினால் செல்வாயாக" என்றார் {நாரதர்}.(33)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமன் {பலராமன்}, அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டு, (தன் புனிதப் பயணத்தில்) தனக்குத் துணையாக வந்தோர் அனைவரையும் அனுப்பி வைத்தான்.(34) உண்மையில் அவன், தன் பணியாட்களிடம், "துவாரகைக்குத் திரும்புவீராக" என்று ஆணையிட்டான். பிறகு அவன் அந்த மலைகளின் இளவரசனிடம் இருந்தும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்று அழைக்கப்படும் அந்த அழகிய ஆசிரமத்தில் இருந்தும் இறங்கினான்.(35) தீர்த்தங்களின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்த தவசிகளின் உரையாடலைக் கேட்டவனும் மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ராமன் {பலராமன்}, பிராணர்களின் மத்தியில் இந்த வரியைப் பாடினான்:(36) "சரஸ்வதியின் அருகில் வசிப்பதால் ஏற்படும் இத்தகு மகிழ்வு வேறு எங்கே இருக்கிறது? சரஸ்வதியின் அருளில் வசிப்போரிடமுள்ள இத்தகு தகுதிகள் {புண்ணியங்கள்} வேறு எங்கே இருக்கின்றன? சரஸ்வதியை அணுகிய மனிதர்கள் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். அனைவரும் எப்போதும் சரஸ்வதியை நினைக்க வேண்டும். சரஸ்வதியே ஆறுகள் அனைத்திலும் மிகப் புனிதமானவளாவாள்.(37) சரஸ்வதி எப்போதும் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறாள். சரஸ்வதியை அடைந்த மனிதர்கள், இங்கேயும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} தங்கள் பாவங்களைக் குறித்து வருந்த வேண்டாம்" என்றான்.(38) மகிழ்ச்சி நிறைந்த கண்களுடன் மீண்டும் மீண்டும் சரஸ்வதியைப் பார்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், பிறகு நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சிறந்த தேரில் ஏறிக் கொண்டான்.(39) யது குலத்தின் காளையான அந்தப் பலதேவன் {பலராமன்}, தன் சீடர்கள் இருவருக்கிடையில் எதிர்வரப்போகும் மோதலைக் காணும் விருப்பத்தால் பெரும் வேகம் கொண்ட அந்தத் தேரில் பயணித்து அந்தக் களத்தை அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(40)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 54 ல் உள்ள சுலோகங்கள் : 40
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 54 ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |