The commencement of Gadayuddha! | Shalya-Parva-Section-55 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : களத்திற்கு வந்த பலராமனை வணங்கிய யுதிஷ்டிரன்; சமந்தபஞ்சகத்தில் போரிட வேண்டும் என்று கேட்ட துரியோதனன்; களர்மண்ணற்ற பகுதியில் போரிடத் தீர்மானித்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து பீமனையும், துரியோதனனையும் போரிட விட்டு அவர்களைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டது; சொற்போர் நடத்திய பீமனும் துரியோதனனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா இவ்வாறு அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றபோது, பெருஞ்சோகத்தில் இருந்த மன்னன் திருதராஷ்டிரன், இவ்வார்த்தைகளில் அதைச் சுட்டிக் காட்டினான்".(1)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "கதாயுதப் போர் தொடங்கப்படும்போது, அவ்விடத்திற்கு வந்த ராமனை {பலராமனைக்} கண்ட என் மகன் {துரியோதனன்}, எவ்வாறு பீமனோடு போரிட்டான்?" என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரை விரும்பியவனுமான உமது வீரமகன் துரியோதனன், ராமன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான்.(3) அந்தக் கலப்பை வீரனை {பலராமனைக்} கண்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியடைந்து, எழுந்து நின்று முறையாக அவனைக் கௌரவித்தான். அவனுக்கு இருக்கையையும் அளித்து, அவனது நலத்தைக் குறித்தும் விசாரித்தான்.(4)
அப்போது ராமன் {துரியோதனன்}[1], வீரர்களுக்கு உயர்ந்த நன்மையைத் தருபவையும், இனியவையுமான இந்த நீதிமிக்க வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குப் பதிலாக அளித்தான். {துரியோதனன்},(5) {அவன்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மிகப் புனிதமான, பாவங்களைப் போக்கவல்ல, சொர்க்கத்திற்கு இணையான இடம் என்று தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்மப் பிராமணர்கள் ஆகியோரால் போற்றப்படுவது குருக்ஷேத்திரமே என்று முனிவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.(6) இக்களத்தில் போரில் ஈடுபட்டுத் தங்கள் உடல்களைக் கைவிடும் மனிதர்கள், ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தில் சக்ரனுடன் {இந்திரனுடன்} வசிக்கப்போவது உறுதியாகும்.((7) இதற்காகவே, ஓ! மன்னா, நான் வேகமாக சமந்தபஞ்சகத்திற்குச் செல்வேன். தேவர்களின் உலகத்தில் அந்த இடமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடமாக அறியப்படுகிறது.(8) மூவுலங்குகளிலும் அழிவில்லாத மிகப் புனிதமான அந்த இடத்தில் போரிட்டு இறப்பவன் சொர்க்கத்தை அடையப் போவது உறுதி" என்றான்[1].(9) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குந்தியின் துணிச்சல் மிக்க மகனான தலைவன் யுதிஷ்டிரன், "அப்படியே" ஆகட்டும் என்று சொல்லி சமந்தபஞ்சகத்தை நோக்கிச் சென்றான்.(10)
[1] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இங்கே துரியோதனன் இவ்வாறு சொல்வதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இங்கே பலராமன் பேசுவதாக இருக்கிறது. பேசும்பொருளைக் கண்டால், இது துரியோதனன் பேசுவது போலவே இருக்கிறது.
மன்னன் துரியோதனனும், கோபத்துடன் தனது பெரும் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பாண்டவர்களுடன் கால்நடையாக நடந்து சென்றான்.(11) கவசம் தரித்து கதாயுதத்துடன் அவன் அவ்வாறு சென்ற போது, வானத்தில் இருந்த தேவர்கள், "நன்று நன்று" என்று சொன்னார்கள். காற்றைப் போன்ற வேகம் கொண்ட சாரணர்கள்[2], குரு மன்னனைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.(12) பாண்டவர்களால் சூழப்பட்டவனும், உமது மகனுமான குரு மன்னன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையின் நடையை ஏற்றுச் சென்றான்.(13) குறித்த இடத்திற்கு மேற்கு நோக்கி (தங்களுக்கு மத்தியில்) உமது மகனுடன் சென்ற அவர்கள், அந்த இடத்தை அடைந்ததும் அனைத்துப் பக்கங்களிலும் பரவினர்.(15) அது சரஸ்வதியின் தென் பக்கம் உள்ள சிறந்த தீர்த்தமாகும். அங்கே இருந்த தரையானது களர்மண் அற்றதாக இல்லாததால் அது மோதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.(16)
[2] "இங்கே சொல்லப்படும் வார்த்திகர்கள் என்பது, காற்றில் பெரும் வேகத்தோடு செல்லக்கூடிய சாரணர்களின் ஒரு பிரிவினராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கவசம் தரித்து, தடித்த பெரும் கதாயுதத்துடன் கூடிய பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க கருடனின் வடிவை ஏற்றான்.(17) தன் தலையில் தலைக்கவசத்தைப் பூட்டிக் கொண்டு, தங்கத்தால் ஆன கவசத்தைத் தரித்துக் கொண்டு, கடைவாயை நாவால் நனைத்தபடி, கோபத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா, தங்க சுமேருவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18) பெரும் சக்தி கொண்ட மன்னன் துரியோதனன், தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பீமசேனன் மீது தன் பார்வைகளைச் செலுத்தி, ஒரு யானையானது, மற்றொரு எதிரி யானையை மோதலுக்கு அழைப்பது போல அறைகூவி அழைத்தான்.(19) அதேபோலவே, வீர பீமனும், கடினமான தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தை அழைப்பதைப் போல அம்மன்னனை {துரியோதனனை} அறைகூவி அழைத்தான்.(20)
கதாயுதங்களை உயர்த்திய துரியோதனனும், பீமனும், அந்தப் போர்க்களத்தில் உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(21) அவர்கள் இருவரும் மிகுந்த கோபத்துடன் இருந்தனர்; பயங்கர ஆற்றலைக் கொண்டிருந்தனர்; கதாயுத மோதல்களில் அவர்கள் நுண்ணறிவு கொண்டவனான ரோகிணியின் மகனுடைய {பலராமனுடைய} சீடர்களாக இருந்தனர்;(22) சாதனைகளில் ஒப்பானவர்களாக இருந்த, அவர்கள் மயனையும், வாசவனையும் {இந்திரனையும்} போல இருந்தனர். பெரும் பலத்தைக் கொண்ட அவர்கள் இருவரும் சாதனைகளில் வருணனுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர்.(23) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது ராமன், அல்லது விஸ்ரவணனின் மகன் (ராவணன்) ஆகியோருக்கு ஒப்பானவர்களான அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மது மற்றும் கைடபனைப் போல இருந்தனர்.(24) சாதனைகளில் ஒப்பாக இருந்த அவர்கள், சுந்தன் மற்றும் உபசுந்தன் போலவோ, ராமன் மற்றும் ராவணன் போலவோ, வாலி மற்றும் சுக்ரீவன் போலவோ தெரிந்தனர்.(25)
எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும் காலனையும், மிருத்யுவையும் போலத் தெரிந்தனர். அப்போது அவர்கள் இருவரும், செருக்கில் பெருகி கூதிர்காலத்தின் ஆசையால் வெறிகொண்ட இரு யானைகள், பருவ காலத்தில் இருக்கும் பெண் யானையின் மீது கொண்ட ஏக்கத்தால் எதிர்ப்பது போல ஒருவரையொருவர் எதிர்த்தோடினர். சீற்றமிக்க இரு பாம்புகள் கோபத்தால் தங்கள் நஞ்சை மற்றொரு பாம்பின் மேல் கக்குவதைப் போல அவர்கள் இருவரும் தெரிந்தனர்.(26,27) எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், ஒருவர் மீது ஒருவர் தங்கள் கோபப் பார்வைகளைச் செலுத்தினர். பாரதக் குலத்தின் புலிகளான அவ்விருவரும், பேராற்றலைக் கொண்டவர்களாக இருந்தனர்.(28) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், கதாயுதமோதலில் வெல்லப்பட முடியாத சிங்கங்களைப் போல இருந்தனர். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அவ்விருவரும், மதங்கொண்ட இரு யானைகளைப் போலவே தெரிந்தனர்.(29) பற்களையும், நகங்களையும் கொண்டு போர்க்கோலம் பூண்ட இரு புலிகளைப்போல அவர்கள் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களாக இருந்தனர். உயிரினங்களை அழிக்கும் நோக்குடன் சீற்றத்துடன் பொங்கும் இரு கடக்கமுடியாத பெருங்கடல்களைப் போலவோ,(30) அனைத்தையும் எரிப்பதற்காக எழும் கோபக்கார சூரியன்கள் இரண்டைப் போலவோ அவர்கள் இருந்தனர்.
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் காற்றால் கலங்கடிக்கப்பட்டு, பயங்கரமாக முழங்கிக் கொண்டு, மழைக்காலத்தில் மழைத்தாரைகளைப் பொழியும் கிழக்கு மற்றும் மேற்குப்புற மேங்களைப் போலத் தெரிந்தனர். உயர் ஆன்மாவும், வலிமையும் கொண்ட அவ்விரு வீரர்களும், அண்ட அழிவின் போது எழும் இரு சூரியன்களைப் போலப் பெரும் ஒளியுடனும், பிரகாசத்துடனும் இருந்தனர். சினங்கொண்ட இரு புலிகளைப் போலவோ, முழங்கிக் கொண்டிருக்கும் இரு மேகத் திரள்களைப் போலவோ தெரிந்த அவர்கள்,(31-33) பிடரி கொண்ட இரு சிங்கங்களைப் போல மகிழ்ச்சியை அடைந்தனர். கோபக்கார யானைகள் இரண்டையோ, சுடர்மிக்க நெருப்புகள் இரண்டையோ போல இருந்த அந்த உயர் ஆன்மாக்கள்,(34) உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தோன்றினர். சினத்தில் பெருகிய உதடுகளுடன் ஒருவரையொருவர் நோக்கிக் கூரிய பார்வைகளைச் செலுத்திய உயர் ஆன்மா கொண்ட அவ்விரு சிறந்த மனிதர்களும், கதாயுதங்களுடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள் இருவரும், அடுத்தவரைத் தனக்குத் தகுதியான எதிராளியாகக் கருதினர்.(35,36)
அப்போது துரியோதனனும், விருகோதரனும் {பீமனும்} ஒன்றையொன்று நோக்கி கனைத்துக் கொள்ளும் இரு நல்ல குதிரைகளுக்கோ, பிளிறிக் கொள்ளும் இரு யானைகளுக்கோ ஒப்பாக இருந்தனர்.(37) மனிதர்களில் முதன்மையானோரான அவ்விருவரும், அப்போது வலிமையில் பெருகியிருக்கும் தைத்தியர்கள் இருவரைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகோதரர்கள், உயர் ஆன்மக் கிருஷ்ணன், அளவிலா சக்தி கொண்ட ராமன் {பலராமன்} ஆகியோருக்கு மத்தியில் இருந்த யுதிஷ்டிரனிடம் செருக்குமிக்க இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(39,39) “கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் உயர் ஆன்மப் பாஞ்சாலர்கள் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு, இங்கே இருக்கும் இந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து, எனக்கும், பீமனுக்கும் இடையில் நடக்கப் போகும் இந்தப் போரைக் காண்பீராக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த வேண்டுகோளின்படியே அவர்கள் நடந்து கொண்டனர்.(40,41)
பெரிதாக இருந்த மன்னர்களின் கூட்டம் அமர்ந்த போது, அந்த இடம் சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போல இருந்தது.(42) அந்த வலிமைமிக்க கரங்களைக் கொண்டோரின் கூட்டத்திற்கு மத்தியில், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணன் {பலராமன்} அமர்ந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனைச் சுற்றிலும் இருந்த அனைவராலும் வழிபடப்பட்டான்.(43) அந்த மன்னர்களுக்கு மத்தியில், நீல ஆடை உடுத்தியவனும், அழகான நிறத்தைக் கொண்டவனுமான பலதேவன், இரவில் ஆயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழு நிலவைப் போல அழகாகத் தெரிந்தான்.(44) அதேவேளையில் கதாயுதம் தரித்தவர்களும், எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களுமான அவ்விரு வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அங்கே நின்று கொண்டு ஒருவரையொருவர் நோக்கி சீற்றத்துடன் பேசிக்கொண்டனர்.(45) இனிமையற்ற கசந்த வார்த்தைகளால் ஒருவரோடொருவர் பேசிக் கொண்ட அந்தக் குரு குலத்தின் முதன்மையான வீரர்கள் இருவரும், போரில் சக்ரனையும் {இந்திரனையும்}, விருத்திரனையும் போல ஒருவர் மீதொருவர் தங்கள் கோபப் பார்வைகளை வீசிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}".(46)
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 55 ல் உள்ள சுலோகங்கள் : 46
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 55 ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |