Wordy encounter between Bhima and Duryodhana! | Shalya-Parva-Section-56 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் புலம்பல்; பீமனைப் போருக்கழைத்த துரியோதனன்; களத்தில் தென்பட்ட தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி உற்சாகமூட்டிய பீமன்; துரியோதனனுக்கு அவனது பழைய குற்றங்களை நினைவுப்படுத்திய பீமன்; வீண்தற்புகழ்ச்சி வேண்டாம் எனப் பீமனை நிந்தித்த துரியோதனன்; துரியோதனனை நோக்கிச் சீற்றத்துடன் விரைந்த பீமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, தொடக்கத்திலேயே அவ்விரு வீரர்களுக்கும் இடையில் சீற்றமிக்க ஒரு சொற்போர் நடந்தது. அதனால் துயரமடைந்த மன்னன் திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்},(1) "ஓ! இத்தகு முடிவைக் கொண்ட மனிதன் நிந்திக்கத்தக்கவன் ஆவான். ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, என் மகன் {துரியோதனன்} பதினோரு சமுக்களின்[1] தலைவனாக இருந்தான்.(2) அவன் தன் ஆணையின் கீழ் மன்னர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு, மொத்த பூமியின் அரசுரிமையையும் அனுபவித்தான். ஐயோ, அப்படி இருந்த அவன் இப்போது காலாளாகத் தோளில் கதாயுதத்துடன் ஒரு போர் வீரனாகப் போரிடப் போகிறான்.(3) முன்பு இந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருந்த பாவப்பட்ட என் மகன் {துரியோதனன்}, இப்போது தானே பாதுகாவலன் இல்லாதவனாக இருக்கிறான். ஐயோ, இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் தோளில் கதாயுதத்துடன் காலாளாகச் செல்கிறான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(4) ஐயோ, ஓ! சஞ்சயா, இப்போது என் மகனால் உணரப்படும் துயரம் பெரிதாக இருக்கிறது" என்றான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திருதராஷ்டிரன்}, பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு அமைதியை அடைந்தான்.(5)
[1] மூன்று சமுக்கள் சேர்ந்தது ஓர் அனீகினி, பத்து அனீகினி சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணி. அதாவது முப்பது சமுக்கள் சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணியாகும். கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவன் என்றே இருக்கிறது. பிபேக்திப்ராய் மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் பதினோரு படைகளின் தலைவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராய் அடிக்குறிப்பில் பதினோரு படைகள் என்பது பதினோரு அக்ஷௌஹினி என்று விளக்குகிறார். கங்குலியின் பதிப்பில் மட்டும் சமுக்கள் என்ற குறிப்பு இருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது துரியோதனன், மேகம் போன்ற ஆழ்ந்த குரலுடனும், ஒரு காளைமாட்டைப் போல இன்பமாகவும் முழங்கினான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} போருக்கு அறைகூவி அழைத்தான்.(6) குருக்களின் அந்த உயர் ஆன்ம மன்னன் {துரியோதனன்} இவ்வாறு பீமனை மோதலுக்கு அழைத்தபோது, பயங்கர வகையிலான பல்வேறு சகுனங்கள் தென்பட்டன.(7) இடைவேளைகளில் பேரொலியுடன் கடுங்காற்று வீசத் தொடங்கி, புழுதி மாரியைப் பொழிந்தது. திசைகளின் அனைத்துப் புள்ளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டன.(8) பேரொலியுடன் கூடிய இடிகள் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கி, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தின. நூற்றுக்கணக்கான எரிக்கோள்கள் பேரொலியுடன் வெடித்தபடியே ஆகாயத்தில் இருந்து விழுந்தன.(9) ஓ! ஏகாதிபதி, ராகு, சூரியனின் பெரும்பகுதியை காலந்தவறி விழுங்கினான். காடுகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியானவள் பெரிதும் நடுங்கினாள்.(10)
தரையில் இருந்து கடினமான கூழாங்கற்களைச் சுமந்து பொழியும் வகையில் சூடான காற்றுகள் வீசின, மலைகளின் சிகரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(11) பல்வேறு வடிவங்களைக் கொண்ட விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடுவது தெரிந்தது. பயங்கரமான, சீற்றமிக்க நரிகள், சுடர்மிக்க வாய்களுடன் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(12) மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரமான பேரொலிகள் கேட்டன. நான்கு பக்கங்களும் எரிவதாகத் தெரிந்தது, தீய சகுனங்களைத் தெரிவிக்கும் பலவிலங்குகள் தென்பட்டன.(13) கிணறுகளில் இருந்த நீர் தானாகப் பெருகியது. ஓ! மன்னா, காணப்படாத உயிரினங்களின் பேரோலிகள் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன.(14)
இவற்றையும், இன்னும் பிற சகுனங்களையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தன் அண்ணனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(15) "தீய ஆன்மா கொண்ட இந்தச் சுயோதனன், போரில் என்னை வீழ்த்தத்தகுந்தவன் இல்லை. காண்டவ வனத்தின் மீது நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, என் இதயத்தில் கமுக்கமாக நீண்ட நாட்களாகப் பேணிக் காத்த கோபத்தை, இந்தக் குருக்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} மீது நான் இன்று கக்கப் போகிறேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது இதயத்தைத் துளைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன்.(16,17) இந்தக் குரு குலத்தின் இழிந்த பாவியை என் கதாயுதத்தால் கொன்று, நான் இன்று புகழ் மாலையை உமது கழுத்தில் சூட்டப்போகிறேன்.(18) பாவ காரியங்களைச் செய்யும் இந்தப் பொல்லாதவனை என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இந்த என் கதாயுதத்தைக் கொண்டே நான் இவனது உடலை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன்.(19) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} அவன் மீண்டும் நுழைய மாட்டான்.(20)
தூங்கிக் கொண்டிருந்தபோது நம் மீது பாம்பை ஏவியும், உண்ணும்போது நமக்கு நஞ்சைக் கொடுத்தும், பிரமாணகோடியின் நீரில் நம் உடலை வீசியும், அரக்கு வீட்டில் வைத்து நம்மை எரிக்க முயிற்சித்தும்,(21) சபையில் நம்மை அவமதித்தும், நம் உடைமைகள் அனைத்தையும் களவாடியும், ஒரு முழு வருடம் நம்மைத் தலைமறைவாக வாழச் செய்தும்,(22) நாடுகடந்து நம்மைக் காட்டில் வாழ வைத்தும் என, ஓ! பாவமற்றவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, {இவனால்} நமக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவை நான் இன்று எட்டுவேன். ஒரே நாளில் இந்த அற்பனைக் கொன்று, நான் இவனுக்குப் பட்டிருக்கும் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன்.(23)
ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, தூய்மையற்ற ஆன்மாக் கொண்ட இந்தத் தீய திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வாழ்வுக்காலம் இன்று முடிவை நெருங்கிவிட்டது. இந்த நாளுக்குப் பிறகு அவன் தனது தந்தையையும், தாயையும் மீண்டும் காணமாட்டான்.(24) ஓ! ஏகாதிபதி, குருக்களின் இந்தத் தீய மன்னனுடைய மகிழ்ச்சி இன்று ஒரு முடிவை எட்டுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இந்நாளுக்குப் பிறகு இவன் மீண்டும் பெண்ணழகின் மேல் தன் கண்களைச் செலுத்தமாட்டான்.(25) சந்தனு குலத்தின் இழுக்கான இவன், இன்று தன் உயிர் மூச்சு, செழிப்பு மற்றும் நாட்டைக் கைவிட்டு வெறுந்தரையில் உறங்குவான்.(26) இன்று மன்னர் திருதராஷ்டிரரும், தமது மகனின் வீழ்ச்சியைக் கேட்டு, சகுனியின் மூளையில் பிறந்த தீசெயல்கள் அனைத்தையும் நினைவுகூர்வார்" என்றான் {பீமன்}.(27)
ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, கதாயுதந்தரித்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான விருகோதரன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அசுரன் விருத்திரனை அறைகூவியழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிட நின்றான்.(28)
ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, கதாயுதந்தரித்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான விருகோதரன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அசுரன் விருத்திரனை அறைகூவியழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிட நின்றான்.(28)
சிகரத்துடன் கூடிய கைலாச மலையைப் போல உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் நிற்கும் துரியோதனனைக் கண்ட பீமசேனன், கோபத்தால் நிறைந்து, மீண்டும் அவனிடம், "வாரணாவதத்தில் உன்னாலும் மன்னர் திருதராஷ்டிரராலும் செய்யப்பட்ட தீச்செயலை உன் மனத்தில் நினைப்பாயாக.(30) பருவகாலத்தில் இருந்த திரௌபதி சபைக்கு மத்தியில் வைத்து முறைகேடாக நடத்தப்பட்டதை நினைவுகூர்வாயாக. உன்னாலும், சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} பகடையின் மூலமாக மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} கையறுநிலையை ஏற்படுத்தியதை நினைவுகூர்வாயாக.(31) காட்டிலும், விராடனின் நகரத்திலும் கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவர்களைப் போல உன்னால் நாங்கள் அனுபவித்த பெரும் வேதனைகளை நினைவுகூர்வாயாக. அவை அனைத்திற்கும் நான் இன்று வஞ்சம் தீர்ப்பேன். ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நற்பேறாலேயே இன்று நான் உன்னைக் காண்கிறேன்.(32)
தேர்வீரர்களில் முதன்மையானவரும், பேராற்றலைக் கொண்டவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் நிமித்தமாகவே யக்ஞ்சேனன் {துருபதன்} மகனால் {சிகண்டியால்} தாக்கி வீழ்த்தப்பட்டு, கணைப்படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.(33) துரோணர், கர்ணன் மற்றும் பேராற்றலைக் கொண்ட சல்லியன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்தப் பகை நெருப்பின் வேரும், சுபலனின் மகனுமான சகுனியும் கூடக் கொல்லப்பட்டுவிட்டான்.(34) திரௌபதியின் குழல்களைப் பற்றி இழுந்த அற்பன் பிராதிகாமினும் கொல்லப்பட்டான். பெரும் வீரத்தோடு போரிட்ட உனது சகோரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(35) இவர்களும், இன்னும் பல மன்னர்களும் உன் குற்றத்திற்காகவே கொல்லப்பட்டனர். இன்று கதாயுதத்துடன் கூடிய உன்னையும் நான் கொல்லப் போகிறேன். இதில் மிகச் சிறிய ஐயமும் கிடையாது" என்றான்.(36)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெருங்குரலுடன் இவ்வார்த்தைகளை விருகோதரன் {பீமன்} சொல்லிக் கொண்டிருந்தபோது, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அச்சமற்ற மகன் {துரியோதனன்},(37) "இந்தப் பெரும் தற்புகழ்ச்சியால் என்ன பயன்? ஓ! விருகோதரா {பீமா}, என்னோடு போரிடுவாயாக. உன் குலத்தில் இழிந்தவனே {குலாதம}, இன்று நான் உனது போரிடும் விருப்பத்தை அழிப்பேன்.(38) சாதாரண மனிதனை அச்சுறுத்துவதைப் போல, உன்னைப் போன்ற மனிதனால் துரியோதனனை அச்சுறுத்த முடியாது என்பதை அற்ப பலமுள்ளவனான நீ அறிந்து கொள்வாயாக.(39) இந்த விருப்பத்தை நீண்ட காலமாக நான் பேணி வளர்த்திருக்கிறேன். இந்த விருப்பமானது நீண்டகாலமாக என் இதயத்தில் இருந்தது. இறுதியில் நற்பேறாலேயே தேவர்கள் உன்னுடனான இந்தக் கதாமோதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(40) ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நீண்ட பேச்சுகளாலும், வெறும் தற்புகழ்ச்சியாலும் யாது பயன்? இந்த உன் வார்த்தைகளைச் செயலில் சாதிப்பாயாக. சற்றும் தாமதிக்காதே" என்றான்.(41)
அங்கிருந்தவர்களான சோமகர்களும், பிற மன்னர்களும் அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சினார்கள்.(42) அனைவராலும் புகழப்பட்டதால் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சமேற்பட்ட துரியோதனன், போரில் தன் இதயத்தை உறுதியாக நிலைநிறுத்தினான்.(43) மீண்டும் அங்கிருந்த மன்னர்கள், மோதலுக்குச் செல்லும் மதங்கொண்ட யானையைத் தூண்டிவிடுவோரைப் போலக் கோபக்காரனான உமது மகனுக்குக் கைத்தட்டி உற்சாகமூட்டினர்.(44) பாண்டுவின் மகனான உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு உமது உயர் ஆன்ம மகனை {துரியோதனனை} நோக்கி சீற்றத்துடன் விரைந்தான்.(45) அங்கே இருந்த யானைகள் உரக்கப் பிளிறின, குதிரைகளும் மீண்டும் மீண்டும் கனைத்தன. வெற்றிக்காக ஏங்கிய பாண்டவர்களின் ஆயுதங்கள் தாமாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தன" {என்றான் சஞ்சயன்}.(46)
--------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 56 ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |