Duryodhana prostrated Bhimasena! | Shalya-Parva-Section-57 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : பீமனின் விலாவைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் தலையைத் தாக்கிய துரியோதனன்; கவனத்துடன் பொறுமைகாத்த பீமன்; பீமனின் வீச்சைத் தவிர்த்த துரியோதனன்; பீமனின் மார்பைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனின் விலாவைத் தாக்கிய பீமன்; அந்த அடியால் மலைப்படைந்து முழங்கால் மடக்கிக் கீழே விழுந்த துரியோதனன். பீமனின் நெற்றியைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் எதிர்த்தாக்குதலால் மயக்கமடைந்து விழுந்த துரியோதனன்; துரியோதனனின் தாக்குதலால் நிலைகுலைந்து பலவீனமடைந்த பீமன்; பீமனின் கவசத்தைப் பிளந்த துரியோதனன்; மீண்டும் எழுந்து நின்ற பீமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மனச்சோர்வடையாத இதயம் கொண்டவனான துரியோதனன், பீமசேனனை அந்நிலையில் கண்டு, பெரு முழக்கம் செய்து, சீற்றத்துடன் அவனை எதிர்த்து விரைந்தான்.(1) அவர்கள் இருவரும், தங்கள் கொம்புகளால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இரு காளைகளைப் போல மோதிக் கொண்டனர். அவர்களது கதாயுத வீச்சுக்கள் இடியொலிகளைப் போலப் பேரொலியை எழுப்பின.(2) வெற்றிக்கான ஏக்கத்துடன் கூடிய அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது, இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது.(3) பெருஞ்சக்தி படைத்தவர்களும், கதாயுதம் தரித்திருந்தவர்களுமான அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், அங்கமெலாம் குருதியில் நனைய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(4) பயங்கரமான அந்தப் பெரும்போர் நடந்து கொண்டிருந்தபோது, விட்டிற்பூச்சிகளால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் மிக அழகாகத் தெரிந்தது.(5)
கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் சிறிது நேரம் நீடித்தபிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும் களைப்பையடைந்தனர்.(6) எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் தங்கள் அழகிய கதாயுதங்களை எடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(7) உண்மையில், பெருஞ்சக்தி கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், பெரும் வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், சிறிது ஓய்வெடுத்த பிறகு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பருவகாலத்தில் பெண் யானையின் துணையை அடைவதற்காக ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு யானைகளைப் போல அவர்கள் தெரிந்தனர்.(8) கதாயுதம் தரித்திருந்தவர்களும், இணையான சக்தி கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களையும் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(9) கதாயுதம் தரித்திருந்தவர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் கண்ட உயிரினங்கள் அனைத்தும், அவர்களில் எவன் வெற்றியடைவான் என்பதில் ஐயங்கொண்டன.(10)
சகோதரர்களும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானோருமான அவ்விருவரும், அடுத்தவரின் தாமதத்தில் பயன்பெற விரும்பி, காத்திருந்து அவர்களைக் கண்காணித்து ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமானதும், கடுமையானதும், யமனின் தண்டம், அல்லது இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், கொலைகாரக் கருவியுமான தங்கள் கதாயுதங்களை அவ்விருவரும் உயர்த்தியிருப்பதைப் பார்வையாளர்கள் கண்டார்கள்.(12) பீமசேனன் தன் ஆயுதத்தைச் சுழற்றிய போது, அது பயங்கரமான பேரொலியை உண்டாக்கியது.(13) தன் எதிரியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வாறு தன் கதாயுதத்தை ஒப்பற்ற வேகத்துடன் சுழற்றுவதைக் கண்ட துரியோதனன், ஆச்சரியத்தால் நிறைந்தான்.(14) உண்மையில் வீர விருகோதரன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பல்வேறு வழிகளில் {கதிகளில்} திரிந்த போது {சுழன்ற போது} மிக உயர்வான அழகிய காட்சியை வெளிப்படுத்தினான்.(15)
தங்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்த அவ்விருவரும், இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இரு பூனைகளைப் போல ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரை மீண்டும் மீண்டும் சிதைத்தனர்.(16) பீமசேனன், பல்வேறு வகையான பரிமாணங்களைச் செய்தான். முன்னேறியும், பின்வாங்கியும் அழகிய வட்டங்களில் அவன் திரிந்தான்.(17) அவன் {பீமன்} ஆச்சரியமான செயல்பாட்டால், அடிகளைக் கொடுத்தும், தன் எதிராளியின் அடிகளில் இருந்து விலகவும் செய்தான். (தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்காக) அவன் பல்வேறு வகையான நிலைகளை எடுத்தான். அவன் தாக்கவும் செய்தான், தன் எதிராளியின் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்தான். ஒருநேரம் வலமாகவும், ஒருநேரம் இடமாகவும் திரும்பி அவன் தன் எதிரியை நோக்கி ஓடினான்.(18) அவன் நேராகத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அவன்{பீமன்} தன் எதிரியை இழுப்பத்காகச் சில தந்திரங்களையும் செய்தான். அவன் தன் எதிரி தன்னைத் தாக்க வெளிப்படும் வரை அசையாமல் நின்று, அவனைத் தாக்குவதற்குத்தயாராக இருந்தான். அவன் தன் எதிரியை வலம் வந்து, தன்னை வலம் வருவதில் இருந்து எதிரியைத் தவிர்த்தான். அவன் தன் எதிரியின் தாக்குதல்களைக் குனிந்தோ, உயரக் குதித்தோ, நகர்ந்தோ தவிர்த்தான்.(19) அவன் தன் எதிரியுடன் முகமுகமாக வந்து தாக்கினான், அல்லது அவனிடம் இருந்து நகர்ந்து சென்று அவனைத் தள்ளினான். கதாயுத மோதல்களில் சாதித்தவர்களான பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரும், இவ்வாறு போரிட்டு திரிந்தபடியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்[1].(20)
[1] சுலோகம் எண் 16 முதல் 20 வரையுள்ள கதாயுத மோதல்களில் உள்ள நிலைகளுக்கு {கதிக்களுக்கு} கும்பகோணம் பதிப்பில், "ப்ரத்யாகதம், கோமூத்ரிகாகதி, பரிமோக்ஷம், வர்ஜனம், பரிதாவனம், அபித்ரவணம், அக்ஷேபம், அவஸ்தானம், விக்ரஹம், மத்ஸ்யோத்விருத்தம், உருவிருத்தம், அவலப்லுதல், உபப்லுதம், உபந்யஸ்தம், அபந்யஸ்தம்" எனப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குரு குலத்தில் முதன்மையானோரான அவ்விருவரும் இவ்வாறு திரிந்து, தங்கள் ஒவ்வொருவரின் அடிகளையும் தவிர்த்து வந்தனர். உண்மையில் அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும் இவ்வாறு வட்டமாகச் சுழன்றுகொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(21) அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களான இருவரும், அம்மோதலில் தங்கள் போர்த்திறனை வெளிப்படுத்துவதற்காகச் சிலநேரங்களில், இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலத் திடீரெனத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். குருதியால் நனைந்திருந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி, அந்தக் களத்தில் மிக அழகாகத் தெரிந்தனர்.(23) இவ்வாறே அந்தப் போரானது, நாளின் முடிவில் பெரும் கூட்டத்தின் பார்வைக்கு முன்னிலையில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல அச்சத்தையேற்படுத்துவதாக இருந்தது. கதாயுதங்களைத் தரித்திருந்த அவ்விருவரும் வட்டங்களில் சுழலத் தொடங்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் வல மண்டலத்தையும், பீமசேனன் இட மண்டலத்தையும் பின்பற்றினர்[2].(25)
[2] "துரியோதனன் எப்போதும் வலப்புறம் திரும்பியபடியே சுழன்று வந்தான், அதே வேளையில் அவனது எதிராளி, இடப்புறம் திரும்பியபடியே சுழன்று வந்தான். அவ்வாறே சுழன்று கொண்டே அந்த இரு போராளிகளும் நடுவில் சந்தித்துக் கொண்டனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் பீமன் வட்டமாகச் சுழன்று வந்தபோது, துரியோதனன் திடீரென ஒரு கடும் வீச்சால் அவனது {பீமனது} விலாப்புறத்தைத் தாக்கினான்.(26) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் தாக்கப்பட்ட பீமன், அந்த அடியைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கனமான தன் கதாயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(27) பார்வையாளர்கள், ஓ! ஏகாதிபதி, பீமசேனனின் அந்தக் கதாயுதத்தை, இந்திரனின் வஜ்ரத்தையோ, யமனின் உயர்த்தப்பட்ட தண்டத்தையோ போன்று பயங்கரமானதாகக் கண்டார்கள்.(28) பீமன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} தன் பயங்கரமான ஆயுதத்தை உயர்த்தி மீண்டும் அவனைத் தாக்கினான்.(29) ஓ! பாரதரே, உமது மகன் இறக்கிய கதாயுதத்தின் ஒலி பேரொலியாக இருந்தது. ஆகாயத்தில் {காற்றுவெளியில்} தீப்பொறி உண்டாகும் அளவுக்கு அந்த இறக்கம் அவ்வளவு வேகமானதாக இருந்தது.(30)
பெருஞ்சக்தி கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, பல்வேறு வகையான வட்டங்களில் சுழன்று, சரியான நேரத்தில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றி மீண்டும் பீமனை விஞ்சியிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) அதேவேளையில், பீமசேனனின் பருத்த கதாயுதமானது, முழுச் சக்தியுடன் சுழந்து, பேரொலியையும், புகையையும், தீப்பொறிகளையும், தழல்களையும் உண்டாக்கியது.(32) பீமசேனன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட சுயோதனன், கனமானதும், கடினமானதுமான தன் ஆயுதத்தைச் சுழற்றி மிக அழகிய தன்மையை வெளிப்படுத்தினான்.(33) துரியோதனனின் கதாயுதச் சுழற்சியில் உண்டான காற்றின் மூர்க்கத்தைக் குறித்துக் கொண்ட பாண்டுக்கள் மற்றும் சோமகர்கள் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது.(34) அதேவேளையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், போரின் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் திறனை வெளிப்படுத்தி, தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள அணுகும் இரு யானைகளைப் போலத் தங்கள் காதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி, குருதியால் நனைந்திருந்த அவர்கள் இருவரும் மிக அழகாகத் தெரிந்தனர்.(35,36) இவ்வாறே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க, விருத்திரனுக்கும், வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான போரைப் போல அப்போர் அந்த நாளில் முடிவு வரை நடந்து கொண்டிருந்தது.(37)
பீமன் களத்தில் உறுதியாக நிற்பதைக் கண்ட உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்}, இன்னும் அழகான அசைவுகளைச் செய்து அந்தக் குந்தியின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தான்.(38) கோபத்தால் நிறைந்த பீமன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், பெரும் மூர்க்கம் கொண்டதுமான கோபக்கார துரியோதனனின் கதாயுதத்தைப் பெரும் வேகத்தோடு தாக்கினான்.(39) எதிர் திசைகளில் வந்த இரு வஜ்ரங்களின் மோதலைப் போன்ற அந்த இரண்டு கதாயுதங்களின் மோதலால், தீப்பொறிகளுடன் கூடிய பேரொலி எழுந்தது.(40) பீமசேனனால் வீசப்பட்டு, வேகமாக விழுந்த கதாயுதம் பூமியையே நடுங்கச் செய்தது.(41) அந்தத் தாக்குதலில் தன் கதாயுதம் இவ்வாறு கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு இளவரசனால் {துரியோதனனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவன், பகை யானைக் கொண்ட மதங்கொண்ட யானையைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(42) ஓ! ஏகாதிபதி, இடது மண்டலத்தைப் பின்பற்றித் தன் கதாயுதத்தைச் சுழற்றிய சுயோதனன், உறுதியான தீர்மானத்துடன், பயங்கர சக்தியைக் கொண்ட தன் ஆயுதத்தைக் கொண்டு அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} தலையைத் தாக்கினான்.(43) உமது மகனால் தாக்கப்பட்டவனான பாண்டுவின் மகன் பீமன் நடுங்காததால், ஓ! ஏகாதிபதி, பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(44) ஓ! மன்னா, மிகப் பலமாகத் தாக்கப்பட்டாலும், மிகுந்த பொறுமையுடன், ஓர் அங்குலமும் கலங்காத பீமசேனனை அங்கிருந்த போராளிகள் அனைவரும் பாராட்டினர்.(45)
அப்போது பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், கனமானதும், சுடர்மிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கதாயுதத்தைத் துரியோதனன் மீது வீசினான்.(46) வலிமைமிக்கவனும், அச்சமற்றவனுமான துரியோதனன் அந்த வீச்சைத் தன் செயல்பாட்டால் தவிர்த்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் பேராச்சரியத்தை உணர்ந்தனர்.(47) பீமனால் வீசப்பட்ட கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, செயலிழந்து கலங்கிக் கீழே விழுந்தபோது, இடியைப் போன்ற பேரொலியை எழுப்பிப் பூமியை நடுங்கச் செய்தது.(48) கௌசிகம் என்றழைக்கப்படும் திறன்மிக்கச் செயல்முறையைப் பின்பற்றி, மீண்டும் மீண்டும் உயரக் குதித்த துரியோதனன், சரியாகப் பீமனுடைய கதாயுதத்தின் இறக்கத்தைக் கவனித்து, அதைக் கலங்கடித்து,(49) பெரும் பலத்தைக் கொண்டவனான அந்தக் குரு மன்னன், இவ்வாறு பீமசேனனைக் கலங்கடித்து, இறுதியாகச் சினத்துடன் அவனது {பீமனது} மார்பைத் தாக்கினான்.(50)
அந்தப் பயங்கரப் போரில் உமது மகனால் {துரியோதனனால்} பலமாகத் தாக்கப்பட்ட பீமசேனன் மலைப்பையடைந்து சற்று நேரத்திற்கு என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(51) அந்த நேரத்தில், ஓ! மன்னா, சோமகர்களும் பாண்டவர்களும் பெரும் ஏமாற்றமடைந்து, உற்சாகத்தை இழந்தனர்.(52) அந்த அடியால் சினமடைந்த பீமன், யானையொன்று மற்றொரு யானையை எதிர்த்து விரைவதைப் போல உமது மகனை நோக்கி விரைந்தான்.(53) உண்மையில் பீமன், உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன், சிங்கமொன்று காட்டுயானையை எதிர்த்து விரைவதைப் போலத் துரியோதனனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(54) கதாயுதப் பயன்பாட்டில் சாதனை செய்தவனான அந்தப் பாண்டுவின் மகன், குரு மன்னனை அணுகி, உமது மகனை இலக்காகக் கொண்டு, தன் ஆயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(55)
பிறகு பீமசேனன் துரியோதனனின் விலாப்புறத்தைத் தாக்கினான். அந்த அடியால் மலைப்பையடைந்த அவன் {துரியோதனன்}, முட்டியால் தன்னைத் தாங்கிக் கொண்டு பூமியில் விழுந்தான்.(56) குரு குலத்தின் முதன்மையான அவன், முழங்கால் மடிந்து மண்டியிட்டு விழுந்ததும், ஓ! உலகத்தின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது.(57) ஓ! மனிதர்களில் காளையே, சிருஞ்சயர்களின் அவ்வாரவாரத்தைக் கேட்ட உமது மகன் சினத்தால் நிறைந்தான்.(58) அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன், எழுந்து நின்று ஒரு பெரும்பாம்பைப் போலப் பெருமூச்சு விடத் தொடங்கி, பீமசேனனை எரித்துவிடுபவனைப் போல அவன் மீது தன் பார்வைகளைச் செலுத்தினான்.(59) பிறகு அந்தப் போரில், அந்தப் பாரதக் குலத்தில் முதன்மையானவன், அந்நேரத்தில் தன் எதிராளியின் தலையை நொறுக்கிவிடுபவனைப் போலப் பீமசேனனை நோக்கி விரைந்து சென்றான்.(60)
அப்போது, பயங்கர ஆற்றலைக் கொண்டவனான உயர் ஆன்ம துரியோதனன், அந்த உயர் ஆன்ம பீமசேனனின் நெற்றியைத் தாக்கினான். எனினும் அவன் ஓரங்குலமும் அசையாது மலையெனவே நின்றிருந்தான்.(61) அந்தப்போரில் இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, அபரிமிதமாகக் குருதி சிந்திய போது, மதநீர் வழியும் யானையைப் போல அழகானவனாகத் தெரிந்தான்.(62) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அண்ணனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அவன், இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற ஒலியை உண்டாக்குவதும், வீரர்களைக் கொல்வதுமான தன் கதாயுதத்தை எடுத்து, தன் எதிராளியைப் பெரும் பலத்துடன் தாக்கினான்.(63) பீமசேனனால் தாக்கப்பட்ட உமது மகன், காட்டில் சூறாவளியின் பலத்தால் வேரோடு முறிக்கப்பட்டதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பெரும் சால மரத்தைப் போல மேனியெங்கும் நடுங்கியபடியே கீழே விழுந்தான்.(64) உமது மகன் {துரியோதனன்} பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, பேராரவாரம் செய்தனர். பிறகு உமது மகன், தடாகத்தில் இருந்து எழும் யானை ஒன்றைப் போலச் சுயநினைவு மீண்டு எழுந்தான்.(65)
எப்போதும் கோபம் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான அந்த ஏகாதிபதி, பெருந்திறனுடன் திரிந்து, தன் முன் நிற்கும் பீமசேனனைத் தாக்கினான். இதில் அந்தப் பாண்டுவின் மகன் அங்கங்கள் பலவீனமடைந்து பூமியில் விழுந்தான்.(66) அந்தக் குரு இளவரசன், தன் சக்தியால் பீமசேனனைத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இடியின் பலத்துக்கு ஒப்பாக இறங்கிய தனது கதாயுதத்தால் அவன் பீமனின் கவசத்தைப் பிளந்தான்.(67) அப்போது, சொர்க்கவாசிகளாலும், அப்சரஸுகளாலும் உண்டாக்கப்பட்ட பேராரவாரமானது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. பெரும் நறுமணத்தை வெளியிடும் மலர்மாரி தேவர்களால் பொழிப்பட்டு விழுந்தது.(68) பீமன் நெடுஞ்சாண் கிடையாகப் பூமியில் கிடப்பதையும், அவனது பலம் குறைந்ததையும், அவனது கவசம் பிளக்கப்பட்டதையும் கண்டு நமது எதிரிகளின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(69) ஒரு கணத்தில் தன் உணர்வுகளை மீண்டும் அடைந்த விருகோதரன் {பீமன்}, குருதியால் கறைபடிந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பெரும் முயற்சியுட்ன தன்னை உறுதியடையச் செய்து கொண்டு, உருளும் கண்களுடன் எழுந்து நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(70)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 57 ல் உள்ள சுலோகங்கள் : 70
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 57 ல் உள்ள சுலோகங்கள் : 70
ஆங்கிலத்தில் | In English |