Duryodhana's thighs fractured! | Shalya-Parva-Section-58 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது; அவ்விரு போராளிகளுக்கிடையில் உள்ள தகுதிகளைக் குறித்துக் கிருஷ்ணனிடம் விசாரித்த அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன பதில்; பீமனுக்கு அவனது சபதத்தை நினைவூட்டுவதற்காகத் தன் தொடையைத் தட்டிக் காட்டிய அர்ஜுனன்; துரியோதனனின் தொடையை முறித்த பீமன்; துரியோதனனின் வீழ்ச்சியின் போது நேர்ந்த சகுனங்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "குருகுலத்தின் முதன்மையான வீரர்களான அந்த இருவருக்கிடையில் இவ்வாறு நடைபெற்று வந்த போரைக் கண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(1) "உன் கருத்தில் இவர்கள் இருவருக்கிடையில் மேன்மையானவர் யார்? அவர்கள் எவர் எந்தத் தகுதியை {குணத்தைக்} கொண்டிருக்கின்றனர்? ஓ! ஜனார்த்தனா, இஃதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(2)
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அவர்கள் பெற்ற கல்வி இணையானதே, எனினும், பீமரின் வலிமை மிகப் பெரியது, அதே வேளையில் திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ} மிகப் பெரும் திறனையும், பயிற்சியையும் கொண்டிருக்கிறான்.(3) பீமசேனர் நியாயமாக {முறையாகப்} போரிட்டால், அவர் வெற்றியை அடையமாட்டார். எனினும் அநியாயமாக {முறையில்லாமல்} போரிட்டால், அவரால் நிச்சயம் துரியோதனனைக் கொல்ல முடியும்.(4) தேவர்கள் வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே அசுரர்களை வென்றனர். இதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விரோசனன், வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான்.(5) பலனைக் கொன்றவன் {இந்திரன்}, வஞ்சச் செயல் {மாயம்} ஒன்றாலேயே விருத்திரனை சக்தியிழக்கச் செய்தான். எனவே, வஞ்சத்தின் துணை கொண்டே பீமசேனர் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(6)
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, சூதாட்டத்தின் போது, பீமர், போரில் தமது கதாயுதத்தால் சுயோதனனின் {துரியோதனனின்} தொடைகளை நொறுக்குவேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.(7) எனவே இந்த எதிரிகளை நொறுக்குபவர், தமது சபதத்தை இப்போது நிறைவேற்றட்டும். அவர், முழு வஞ்சகனான இந்தக் குரு மன்னனை, வஞ்சத்தாலேயே கொல்லட்டும்.(8) தமது பலத்தை மட்டுமே சார்ந்து பீமர் நியாயமாகப் போரிட்டால், மன்னர் யுதிஷ்டிரர், பேராபத்தை அடையக்கூடும்.(9) நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன், ஓ! பாண்டுவின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. மன்னர் யுதிஷ்டிரரின் தவறால் மட்டுமே இப்போது மீண்டும் நமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.(10)
பீஷ்மர் மற்றும் பிற குருக்களைக் கொன்று பெரும் சாதனைகளை அடைந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, வெற்றியையும், புகழையும் அடைந்து, கிட்டத்தட்ட பகைமையின் முடிவையும் எட்டிவிட்டார்.(11) இவ்வாறு வெற்றியை அடைந்த அவர், ஐயத்திற்கும், ஆபத்தும் கொள்ளும் நிலையில் தன்னை மீண்டும் நிறுத்திக் கொண்டார். ஓ! பாண்டவா {அர்ஜுனா}, ஒரே போர்வீரனின் வெற்றி அல்லது தோல்வியில் போரின் விளைவை அமைத்துக் கொண்டதில் யுதிஷ்டிரரின் பங்குக்கு இது பெரும் மூடச் செயலாகும். சுயதோதனன் சாதித்தவனும், வீரனும், உறுதியான தீர்மானமும் கொண்டவனாவான்.(12,13) உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} சொல்லப்பட்ட பழைய வரியொன்றை நாம் கேட்டிருக்கிறோம். உண்மை பொருளுடன் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) "பகைவரின் படையில் எஞ்சியோரில் பிளக்கப்பட்டு, உயிருக்காகத் தப்பி ஓடி, மீண்டும் அணிதிரண்டு திரும்பிப் போரிட வருவோர், உறுதியான தீர்மானத்துடனும், ஒரே நோக்கத்துடனும் வருவதால் அவர்களைக் கண்டு எப்போதும் நாம் அஞ்சவேண்டும்" {என்பதே அந்த வரி}.(15)
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உயிரில் கொண்ட நம்பிக்கை அனைத்தையும் கைவிட்டு சீற்றத்துடன் விரைந்து வருவோரின் முன் சக்ரனாலேயே நிற்க முடியாது.(16) இந்தத் துரியோதனன் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடியவனாவான். அவனது துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிட்டன. அவன் தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்தான். எனவே, அவன் வீழ்த்தப்பட்டு, தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்வதில் நம்பிக்கையை இழந்து, காட்டுக்குள் ஓய்ந்து செல்லவும் விரும்பினான். அத்தகு மனிதனை, ஞானம் கொண்ட எந்த மனிதன்தான் தனிப் போருக்கு அறைகூவி அழைப்பான்?(17) ஏற்கனவே நமதாகிவிட்ட நாட்டைப் பறிப்பதில் துரியோதனன் வெல்லமாட்டானா? இல்லையா? என்பதை நான் அறியமாட்டேன். முழுமையாகப் பதிமூன்று வருடங்களாக அவன் பெரும் தீர்மானத்துடன் அந்தக் கதாயுதத்தில் பயிற்சி செய்திருக்கிறான். இப்போதும் கூட அவன், பீமசேனரைக் கொல்வதற்காக உயரக் குதிக்கிறான்; குறுக்காகவும் தாண்டுகிறான்.(18) வலிய கரங்களைக் கொண்ட பீமர், அநியாயமாக அவனைக் கொல்லவில்லையெனில், திருதராஷ்டிரர் மகனே நிச்சயம் மன்னனாக நீடிப்பான்" என்றான் {கிருஷ்ணன்}.(19) அந்த உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமசேனனின் கண்களுக்கு முன்பாகத் தன் இடது தொடையை அடித்தான்.(20)
அந்தக் குறியீட்டைப் புரிந்து கொண்ட பீமன், உயர்த்தப்பட்ட தன் கதாயுதத்துடன், அழகிய வட்டமாகவும், யமகம் மற்றும் இன்னும் பிற நகர்தல் முறைகளிலும் {கதிகளிலும்} நகர்ந்து திரிந்து கொண்டிருந்தான்.(21) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சில நேரங்களில் வலது மண்டலத்தையும், சில நேரங்களில் இடதும் மண்டலத்தையும், சில நேரங்களில் கோமூத்ரகம் {கோமூத்ரி} என்றழைக்கப்படும் அசைவையும் பின்பற்றித் திரியத் தொடங்கித் தன் எதிரியை மலைக்கச் செய்தான்.(22) அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, கதாயுதப் போரை நன்கறிந்தவனான உமது மகனும், பீமசேனனைக் கொல்வதற்குப் பெருஞ்சுறுசுறுப்புடன் அழகாகத் திரிந்து கொண்டிருந்தான்.(23) அந்த வீரர்கள் இருவரும், பகைமையின் முடிவை அடைய விரும்பி, சந்தனக் குழம்பு மற்றும் நறுமணக் களிம்புகளால் பூசப்பட்டிருந்த தங்கள் பயங்கரக் கதாயுதங்களைச் சுழற்றியபடியே இரு கோபக்கார யனைகளைப் போல அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், பெரும் வீரத்தைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், பாம்பைப் பிடிக்க விரும்பும் இரு கருடர்களைப் போலப் போரிட்டனர்.(25)
அம்மன்னனும், பீமனும் அழகிய வட்டங்களில் சுழன்று அவர்களது கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் தீப்பொறிகள் உண்டாகின.(26) வீரமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் போரில் இணையாகவே தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், ஓ! ஏகாதிபதி, சூறாவளியால் கலங்கடிக்கப்பட்ட இரண்டு பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(27) மதங்கொண்ட இரு யானைகளைப் போல இணையாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அவர்களின் கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவை இடியின் பேரொலியை உண்டாக்கின.(28) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நெருக்கமான இடத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரிகளைத் தண்டிப்போரான இருவரும் போரினால் களைப்பையடைந்தனர்.(29) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், சிறிது நேரம் ஓய்வெடுத்து, சினத்தால் நிறைந்து, தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மீண்டும் ஒருவரோடொருவர் போரிடத் தொடங்கினர்.(30)
அவர்களது கதாயுதங்கள் மீண்டும் மீண்டும் இறங்கி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் செய்த போரானது, மிகப் பயங்கரமானதாகவும், முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவும் ஆனது.(31) காளைகளைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அம்மோதலில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்து, சகதியிலுள்ள இரு காட்டெருமைகளைப் போல மூர்க்கமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(32) அங்கங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, தலைமுதல் கால் வரை குருதியால் மறைக்கப்பட்டு இருந்த அவர்கள், இமயத்தின் சாரலில் உள்ள இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(33) அம்மோதல் நடந்து கொண்டிருந்த போது, விருகோதரன் {பீமன்} (ஓர் உத்தியுடன்) துரியோதனனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுபோல் தெரிந்த போது, சிரித்துக் கொண்டே அவன் {துரியோதனன்} சிறிது முன்னே சென்றான்.(34) போரில் நன்கு திறம் படைத்தவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன், தன் எதிராளி அருகில் வருவதைக் கண்டு திடீரென அவன் மீது தன் கதாயுதத்தை வீசினான்.(35)
தன் மீது வீசப்படும் கதாயுதத்தைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சென்றதால் அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தது.(36) குரு குலத்தில் முதன்மையானவனான உமது மகன், அந்த வீச்சைத் தவிர்த்து, தன் ஆயுதத்தால் வேகமாகப் பீமசேனனைத் தாக்கினான்.(37) அந்த வீச்சின் பலத்தால் வழிந்த பெரும் அளவிலான குருதியின் விளைவால், அளவிலா சக்தி கொண்ட பீமசேனன் மலைப்படைந்ததாகத் தெரிந்தது.(38) எனினும் துரியோதனன், அந்தக் கணத்தில் பீமன் அவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறியாதிருந்தான். பீமன் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு அதைத் தாக்குப்பிடித்தான்.(39) எனவே துரியோதனன், அசைவில்லாதவனாகவும், அடியைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பவனுமாகவே அவனைக் கண்டான். அதன் காரணமாகவே உமது மகன் மீண்டும் அவனைத் தாக்காதிருந்தான்.(40)
சற்று ஓய்ந்திருந்த வீரப் பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அருகிலேயே நின்றிருந்த துரியோதனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(41) அளவிலா சக்தி கொண்ட பீமசேனன், சினத்தால் நிறைந்து, தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனது வீச்சைக் கலங்கடிக்க விரும்பி, அவஸ்தானம் என்றழைக்கப்படும் திறன் நடையில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான். எனவே அவன், விருகோதரனை {பீமனை} வஞ்சிப்பதற்காக உயரக் குதிக்க விரும்பினான்.(42,43) பீமசேனன் தன் எதிராளியின் நோக்கத்தை முற்றிலும் புரிந்து கொண்டான். எனவே, சிங்க முழக்கத்தோடு அவனை நோக்கி விரைந்த அவன் {பீமன்}, தனது முதல் இலக்கைக் கலங்கடிக்க அந்தக் குருமன்னன் {துரியோதனன்} உயரக் குதித்த போது, அவனது தொடைகளில் தன் கதாயுதத்தை வீசினான்.(44,45)
இடியின் சக்தியைக் கொண்டதும், பயங்கரச் செயல்களைப் புரியும் பீமனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதம், துரியோதனின் அழகிய தொடைகள் இரண்டையும் முறித்தது.(46) மனிதர்களில் புலியான உமது மகன், பீமசேனனால் தன் தொடைகள் முறிக்கப்பட்டதும், தன் வீழ்ச்சியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியே கீழே விழுந்தான்.(47) மீண்டும் மீண்டும் இடைவேளைவிட்டு பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசத் தொடங்கியது. புழுதி மாரி பொழிந்தது. மரங்கள், செடிகள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள்.(48) பூமியின் ஏகாதிபதிகள் அனைவருக்கும் தலைவனான அந்த வீரர் வீழ்ந்தபோது, அடிக்கடி விழுந்த இடியுடன் சேர்ந்து பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசியது. உண்மையில், அந்தப் பூமியின் தலைவன் வீழ்ந்தபோது, வானத்தில் இருந்து பெரிய எரிநட்சத்திரங்கள் விழுவது தெரிந்தது.(49) ஓ! பாரதா அங்கே குருதிமாரியும், புழுதிமாரியும் பொழிந்தது. உமது மகனின் வீழ்ச்சியின் காரணமாக மகவத்தால் {இந்திரனால்} இவை பொழியப்பட்டன.(50)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களால் உண்டாக்கப்பட்ட பேரொலி ஆகாயத்தில் கேட்கப்பட்டது.(51) அந்தப் பயங்கர ஒலியால் ஆயிரக்கணக்கான பறவைகளும், விலங்குகளும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீதிநிறைந்த ஒலிகளை வெளியிடத் தொடங்கின.(52) (பாண்டவப்) படையில் (கொல்லப்படாமல்) எஞ்சியிருந்த குதிரைகள், யானைகள் ஆகியவையும், மனிதர்களும், உமது மகன் {துரியோதனன்} வீழ்ந்ததும் பேரொலியை எழுப்பினர். சங்கு முழக்கங்களும், பேரிகைகளின் பேரொலிகளும், மிருதங்களின் ஒலிகளும் உரக்கக் கேட்டன.(53) பூமியின் ஆழங்களில் இருந்து ஒரு பயங்கர ஒலி வருவதாகத் தெரிந்தது. உமது மகனின் வீழ்ச்சியால், ஓ! ஏகாதிபதி, அச்சந்தரும் வடிவங்களைக் கொண்ட தலையற்ற உயிரினங்களும், பல கால்கள் மற்றும் கரங்களைக் கொண்டிருந்தவையும், அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ஆடத்தொடங்கிப் பூமியின் அனைத்துப் பக்கங்களையும் மறைக்கத் தொடங்கின.(54) ஓ! மன்னா, கரங்களில் கொடிமரங்கள், அல்லது ஆயுதங்களுடன் இருந்த போராளிகள், ஓ! மன்னா, உமது மகனின் வீழ்ச்சிக்குப் பிறகு நடுங்கத் தொடங்கினர்.(55)
ஓ! மன்னர்களில் சிறந்தவரே, தடாகங்களும், கிணறுகளும் இரத்ததைக் கக்கின. வேகமான நீரோட்டத்தைக் கொண்ட ஆறுகள் எதிர்த்திசைகளில் ஓடத் தொடங்கின.(56) உமது மகனான துரியோதனன் வீழ்ந்த நேரத்தில், ஓ! மன்னா, ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் தெரியத் தொடங்கினர்.(57) இந்த அற்புதச் சகுனங்களைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனக்கலக்கத்தால் நிறைந்தனர்.(58) தேவர்களும், கந்தர்வர்களும், உமது மகன்களுக்கிடையே நடைபெற்ற அந்த அற்புதப் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே தாங்கள் விரும்பிய உலகத்திற்குச் சென்றனர்.(59) அதே போல, வேகமாகச் செல்பவர்களான சித்தர்களும், சாரணர்களும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரையும் புகழ்ந்தபடியே, தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அவ்விடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.(60)
சல்லிய பர்வம் பகுதி – 58 ல் உள்ள சுலோகங்கள் : 60
சல்லிய பர்வம் பகுதி – 58 ல் உள்ள சுலோகங்கள் : 60
ஆங்கிலத்தில் | In English |