Yudhishthira rebuked Bhima! | Shalya-Parva-Section-59 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 28)
பதிவின் சுருக்கம் : தொடை முறிந்து கிடந்த துரியோதனன்; பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, துரியோதனனை நிந்தித்து, அவனது தலையைக் காலால் மிதித்த பீமன்; பீமனைக் கண்டித்து, துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் புலம்பல்...
சஞ்சயன் சொன்னான், "(சூறாவளியால்) வேராடு முறிந்த விழுந்த பெரும் சால மரத்தைப் போலப் பூமியில் விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) மயிர்க்கூச்சத்தை அடைந்த சோமகர்களும், சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட மதங்கொண்ட யானையொன்றைப் போல வீழ்ந்து கிடக்கும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்டனர்.(2) துரியோதனனைக் கீழே வீழ்த்திய வீர பீமசேனன், அந்தக் குரு தலைவனை {துரியோதனனை} அணுகி,(3) "ஓ இழிந்தவனே, முன்பு சபைக்கு மத்தியில் ஆடையிழந்திருந்த திரௌபதியைக் கண்டு சிரித்து, ஓ மூடா, எங்களை, "மாடு, மாடு" என்று நீ அழைத்தாய்.(4) அந்த அவமதிப்பின் கனியை {பலனை} இப்போது நீ தாங்கிக் கொள்வாயாக" என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன், வீழ்ந்துவிட்ட தன் எதிரியின் தலையைத் தன் இடது காலால் தீண்டினான்.(5)
கோபத்தால் கண்கள் சிவந்திருந்தவனும், பகைவரின் படையைக் கலங்கடிப்பவனுமான பீமசேனன் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான். ஓ ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே} அவற்றைக் கேட்பீராக,(6) "எங்களை அவமதிக்கும் வகையில் "மாடு, மாடு" என்று சொல்லி ஆடியவர்கள் எவரோ, அவர்களைக் கண்டு, "மாடு, மாடு" என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி இப்போது நாங்கள் ஆடுவோம்.(7) எங்களிடம் வஞ்சனையோ, நெருப்போ, பகடையாட்டமோ {சூதாட்டமோ} ஏதும் இல்லை. எங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நாங்கள் எங்கள் எதிரிகளைத் தடுத்துப் பீடிக்கிறோம்" என்றான்.(8) பகைமையின் மறுகரையை அடைந்தவனான விருகோதரன் மீண்டும் சிரித்துக் கொண்டே, யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்}, சிருஞ்சயர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோரிடம் மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9) {அவன்}, "திரௌபதி நோயுற்றிருந்தபோது, சபைக்கு இழுத்து வந்து அவளை ஆடையிழக்கச் செய்தவர்கள் எவரோ[1], அந்தத் தார்தராஷ்டிரர்கள், யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} தவத்தின் மூலம் பாண்டவர்களால் கொல்லப்பட்டதைக் காண்பீராக.(10) எங்களை எள்ளுப் பதர்கள் என்றழைத்த மன்னர் திருதராஷ்டிரரின் தீய இதயம் கொண்ட மகன்கள் அனைவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் எங்களால் கொல்லப்பட்டனர். (அச்செயல்களின் விளைவால்) ஒன்று நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, அல்லது நகரகத்தில் வீழ்வோமா என்பது சிறிய காரியமே[2]" என்றான்.(11)
[1] திரௌபதியின் துகிலுரிப்பு குறித்து "சபாபர்வம் தவிர வேறு எங்கும் அத்தகவலில்லை. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை" என்ற வாதம் இங்கும், இது போன்ற முந்தைய சில இடங்களிலும் {கர்ண பர்வம் 83:12 மற்றும் சல்லியபர்வம் 5:17} வலுவற்றதாகிறது.[2] கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "நாம் இஷ்டப்படி ஸ்வர்க்கத்தையோ, நரகத்தையோ அடைவோம்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, நரகத்திற்குச் செல்வோமா என்பது எவ்விளைவையும் ஏற்படுத்தாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாம் சொர்க்கத்திற்குச் செல்வதையோ, நரகத்திற்குச் செல்வதையோ அலட்சியமாகக் கருதுகிறோம்" என்றிருக்கிறது.
மீண்டும் தன் தோளில் கிடந்த கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியின் தலையைத் தன் இடது காலால் தாக்கி, வஞ்சகம் நிறைந்த துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) நீதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட சோமகர்களில் முதன்மையான வீரர்கள் பலரால், அந்தக் குரு குலத்தில் முதன்மையானவனின் தலையில், குறுகிய இதயத்தோடு இன்புற்றிருந்த பீமசேனனின் காலைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.(13) விருகோதரன் உமது மகனைத் தாக்கி வீழ்த்தி இவ்வாறு தற்பெருமை பேசி, வெறிகொண்டு கூத்தாடியபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம்,(14) "நீ உன் பகைமையைத் தீர்த்துக் கொண்டாய், நியாமாகவோ, அநியாயமாகவோ உன் சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டாய். ஓ பீமா, இப்போது நிறுத்துவாயாக.(15)
உன் காலால் இவனது தலையை நசுக்காதே. பாவகரமாகச் செயல்படாதே. துரியோதனன் ஒரு மன்னனாவான். மேலும் இவன் உன் சொந்தக்காரனுமாவான். இவன் வீழ்ந்துவிட்டான். ஓ பாவமற்றவனே, இந்த உனது நடத்தை முறையானதில்லை.(16) துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனாக இருந்தான். இவன் குருக்களின் மன்னனாகவும் இருந்தான். ஓ பீமா, மன்னனும், உறவினனுமான இவனை உன் காலால் தீண்டாதே.(17) இவனது உறவினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவனது நண்பர்களும், அமைச்சர்களும் சென்றுவிட்டனர். இவனது துருப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. போரில் இவன் வீழ்த்தப்பட்டுவிட்டான். அனைத்து வகையிலும் இவன் அனுதாபத்திற்குரியவன். இவன் மன்னன் என்பதை நினைவுகூர்ந்தால், இவன் அவமதிக்கப்படத் தகுந்தவனில்லை.(18) இவன் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டான். இவனது நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது சகோதரர்களும், மகன்களும் கூடக் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது ஈமப்பிண்டம் எடுக்கப்பட்டுவிட்டது. இவன் நமது சகோதரனாவான். இதை அவனுக்கு நீ செய்வது முறையாகாது.(19) "பீமசேனன் நீதிமிக்க நடத்தை கொண்டவனாவான்" என்று முன்பு உன்னைக் குறித்து மக்கள் சொன்னார்கள். ஓ பீமசேனா, நீ ஏன் இம்மன்னனை இவ்வழியில் அவமதிக்கிறாய்?" என்று கேட்டான்.(20)
இவ்வார்த்தைகளைப் பீமசேனனிடம் சொன்ன யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், துன்பத்தால் பீடிக்கப்பட்டும், எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனை அணுகி, அவனிடம்,(21) "ஓ ஐயா, நீ கோபப்படவோ, உனக்காகத் துன்பப்படவோ கூடாது. உனது முந்தைய செயல்களின் பயங்கர விளைவுகளையே நீ சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(22) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நாங்கள் உன்னைக் காயப்படுத்த வேண்டும், நீ எங்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற இந்தச் சோகமான தீய முடிவு படைப்பாளனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.(23) ஓ பாரதா, பேராசை, செருக்கு, மடைமை ஆகிய உன் குற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உனக்கு நேர்ந்திருக்கிறது.(24) உன் தோழர்கள், சகோதரர்கள், தந்தைமார்கள், மகன்கள், பேரர்கள் மற்றும் அனைவரையும் கொல்லச் செய்து, இப்போது நீ உன் மரணத்தை நெருங்கியிருக்கிறாய்.(25)
உன் குற்றத்தின் விளைவாலேயே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் சகோதரர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் எங்களால் கொல்லப்பட்டனர். இவை யாவும் தடுக்கப்பட முடியாத விதியின் செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.(26) நீ பரிதாபத்திற்குரியவன் அல்ல. மறுபுறம், ஓ பாவமற்றவனே, உன் மரணம் பொறாமை கொள்ளத்தக்கதாகும். ஓ கௌரவா, அனைத்து வகையிலும் நாங்களே பரிதாபத்திற்குரியவர்கள். எங்கள் அன்புக்குரிய நண்பர்களும், சொந்தங்களும் இல்லாமல் நாங்கள் பரிதாபகரமான வாழ்வை இழுக்கப் போகிறோம்.(27) ஐயோ, என் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரர்களைக் குறித்த சோகத்தில் உணர்வுகளை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் கைம்பெண்களை நான் எவ்வாறு காணப் போகிறேன்.(28) ஓ மன்னா, நீ இந்த உலகத்தில் இருந்து செல்லப் போகிறாய். நீ சொர்க்கத்தில் நிச்சயம் வசிப்பிடத்தைக் கொள்ளப் போகிறாய். மறுபுறம் நாங்களோ, நரகில் வாழும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, கடுந்துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம்.(29) திருதராஷ்டிரர் மகன்கள் மற்றும் பேரர்களின் மனைவியர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். சோகத்தால் நொறுங்கியிருக்கும் அந்தக் கைம்பெண்டிர், எங்கள் அனைவரையும் சபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை" என்றான்.(30)
இவ்வார்த்தைகளைச் சொன்ன தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துயரால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, கடும் மூச்சு விடத் தொடங்கி, புலம்பல்களில் ஈடுபட்டான்" {என்றான் சஞ்சயன்}.(31)
ஆங்கிலத்தில் | In English |