Kesava siezed Rama! | Shalya-Parva-Section-60 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : கதாயுத்த விதிமுறைகளை மீறி, துரியோதனனின் உந்திக்குக் கீழே தாக்கிய பீமனைக் கண்டு கோபமடைந்த பலராமன் தன் கலப்பையை ஓங்கியபடியே பீமனை நோக்கி விரைந்து சென்றது; பலராமனைப் பிடித்துத் தடுத்த கிருஷ்ணன்; பீமன் தரப்பு நியாயத்தைச் சொன்ன கிருஷ்ணன்; கிருஷ்ணனின் உரையைக் கேட்டு வெகுண்ட பலராமன், துரியோதனனைப் புகழ்ந்து, பீமனை இகழ்ந்து துவாரைகைக்குப் புறப்பட்டுச் சென்றது; நாட்டின் அரசுரிமையை ஏற்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சூதா, வலிமைமிக்கவனும், மது குலத்தில் முதன்மையானவனுமான பலதேவன் {பலராமன்}, நியாயமற்ற வகையில் (குரு) மன்னன் {துரியோதனன்} தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்?(1) ஓ! சஞ்சயா, கதாயுத மோதல்களில் நல்ல திறம் கொண்டவனும், அதன் விதிமுறைகளை நன்கறிந்தவனுமான அந்தத ரோகிணியின் மகன் {பலராமன்}, அச்சந்தர்ப்பத்தில் என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தாக்குபவர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான ராமன் {பலராமன்}, உமது மகன் {துரியோதனன்} தொடைகளில் தாக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபத்தை அடைந்தான்.(3) தன் கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் தன் கரங்களை உயர்த்தி, ஆழ்ந்த சோகக் குரலில், "ஓ!, பீமனுக்கு ஐயோ, பீமனுக்கு ஐயோ.(4) ஓ!, ஒரு வீச்சால் உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கப்பட்ட இத்தகு நியாயமற்ற போருக்கு ஐயோ. கதாயுதப்போரில் விருகோதரன் {பீமன்} செய்தது போன்ற ஒரு செயலை இதற்கு முன்பு எப்போதும் பார்க்கப்பட்டதில்லை.(5) உந்திக்குக் கீழே உள்ள எந்த அங்கமும் தாக்கப்படலாகாது. இதுவே ஆய்வுகளில் {சாத்திரங்களில்} விதிக்கப்பட்ட விதியாகும். எனினும், ஆய்வுகளின் உண்மைகளை அறியாதவனான இந்தப் பீமன் அறியாமை கொண்ட இழிந்தவனாவான். எனவேதான் இவன் {பீமன்} தன் விரும்பியபடி நடந்து கொண்டான்" என்றான்[1].(6)
[1] கும்பகோணம் பதிப்பில், இதற்குப் பிறகு இன்னும் ஓர் அதிக வரியிருக்கிறது. அது பின்வருமாறு: "பிறகு, பலதேவர் அரசனைப் பார்த்துக் கோபத்தினால் கண்கள் மிகச் சிவந்தவராகிப் பின்வரும் வசனத்தை உரைக்கலானார், "கிருஷ்ணா, இவன் கீழே விழுந்தவனல்லன். இவன் எனக்கு ஸமானன்; நிகரில்லாதவன். ஆச்ரிதர்களின் பலக்குறைவினால் அச்ரயமான அலக்ஷயம் செய்யப்படுகிறது" என்றார்" என்றிருக்கிறது. இந்தக்குறிப்பு, கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் இல்லை.
இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} பெரும் கோபம் கொண்டான். அப்போது, அந்த வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, தன் கலப்பையை உயர்த்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான்.(7) உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடிய அந்த உயர் ஆன்மப் போர்வீரனின் வடிவமானது, பல்வேறு வகை உலோகங்களுடன் பல வண்ணங்களில் இருக்கும் பெரும் கைலாச மலையைப் போல இருந்தது[2].(8) எனினும், எப்போதும் பணிவுடன் இருப்பவனான வலிமைமிக்கக் கேசவனோ {கிருஷ்ணனோ}, விரைந்து சென்ற அந்த ராமனை {பலராமன}, பருத்துருண்டிருந்த தன் கரங்களால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான்.(9) நிறத்தில் ஒருவன் கருப்பாகவும் {கிருஷ்ணன்}, மற்றவன் வெளுப்பாகவும் {பலராமன்} இருந்த அந்த யது குல வீரர்களில் முதன்மையான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாலை நேர வானில் {ஒரே நேரத்தில்} இருக்கும் சூரியனையும் சந்திரனையும் போல அக்கணத்தில் மிக அழகானவர்களாகத் தெரிந்தனர்.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், இதற்குப் பிறகு இன்னும் ஓர் அதிக வரியிருக்கிறது. அது பின்வருமாறு: "பலராமரைக் கண்டு, வீரர்களும் அஸ்திரங்களை அறிந்தவர்களும், அர்ஜுனனுடன் கூடியவர்களுமான பிராதாக்களோடு சேர்ந்தவனும், பலசாலியுமான பீமன், வியஸனத்தை {துக்கத்தை} அடையவில்லை" என்றிருக்கிறது. இந்தக்குறிப்பு, கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் இல்லை.
ராமனின் {பலராமனின்} கோபத்தைத் தணிக்கும் வகையில் கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம், "ஒருவனின் சொந்த வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனின் வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனது நண்பர்களின் வளர்ச்சி,, ஒருவனுடைய எதிரியின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பனின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பர்களின் நண்பர்களுடைய சிதைவு ஆகிய ஆறு வகை வளர்ச்சியையும் ஒரு மனிதன் தன் வளர்ச்சியாகக் கொள்ளலாம்.(11) இவை ஒருவனுக்கு இதற்கு மாறாக நடக்கும்போதோ, ஒருவனுடைய நண்பர்களுக்கு அவ்வாறு நடக்கும்போதோ, அவன் தன் வீழ்ச்சி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அத்தகு நேரங்களின் அவன் தீர்வை அடைவதற்கான வழிகளைத் தேட வேண்டும் {பகைமையைத் தணித்துக் கொள்ள வேண்டும்}.(12) மாசில்லா ஆற்றலைக் கொண்டவர்களான பாண்டவர்கள் இயல்பாகவே நம் நண்பர்களாவர். அவர்கள் நமது அத்தையின் {குந்தியின் -நம் தந்தையின் சகோதரியுடைய} பிள்ளைகளாவர். அவர்கள் தங்கள் பகைவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.(13) தன் சபதத்தை நிறைவேற்றுவது ஒருவனது கடமையாகும். முன்பு பீமர், பெரும்போர் ஒன்றில் இந்தத் துரியோதனனின் தொடைகளைத் தமது கதாயுதத்தால் நொறுக்குவதாகச் சபைக்கு மத்தியில் வைத்து சபதமேற்றார்.(14) மேலும், பெரும் முனிவரான மைத்திரேயரும் கூட, ஓ எதிரிகளை எரிப்பவரே, "பீமன் தன் கதாயுதத்தால் உன் தொடைகளை நொறுக்குவான்" என்று முன்பே துரியோதனனைச் சபித்திருக்கிறார்.(15) இவை யாவற்றின் விளைவால், நான் பீமரிடம் எக்குற்றத்தையும் காணவில்லை. ஓ! பிரலம்பனைக் கொன்றவரே {பலராமரே}, கோபத்திற்கு வசப்படாதீர். பாண்டவர்களுடனான நமது உறவு, பிறப்பாலும், குருதியாலும், இதயங்களின் ஈர்ப்பாலும் ஏற்பட்டதாகும்.(16) இவர்களது வளர்ச்சியே நம் வளர்ச்சியாகும். எனவே, ஓ! மனிதர்களில் காளையே, கோபத்திற்கு வசப்படாதீர்" என்றான் {கிருஷ்ணன்}.
அறநெறிகளை அறிந்தவனான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, "நல்லோரால் அறநெறி {அறம்} நன்றாகப் பயிலப்படுகிறது. எனினும், பெரும் பேராசையுள்ளோருக்குப் பயனில் {பொருளில்} விருப்பமும், காரியங்களில் பெரும்பற்று கொண்டோருக்கு இன்பத்தில் விருப்பமும் என இவ்விரு காரியங்களால், அறநெறியானது {அறமானது} எப்போதும் பீடிக்கப்படுகிறது.(18) அறம் மற்றும் பொருளையோ, அறம் மற்றும் இன்பத்தையோ, இன்பம் மற்றும் பொருளையோ பீடிக்காமல் {பாதிப்படையச் செய்யாமல்}, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறையே பின்பற்றுபவர்கள், பெரும் மகிழ்ச்சியை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்.(19) நீ என்னிடம் என்ன சொன்னாலும், பீமசேனனால் அறம் பீடிக்கப்பட்டதன் விளைவால், என்னால் இப்போது சொல்லப்பட்ட இந்த {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்} ஒத்திசைவு நிலைகுலைகிறது" என்று சொன்னான்.(20)
கிருஷ்ணன் {பலராமரிடம்}, "கோபமில்லாதவராகவும், அற ஆன்மாகக் கொண்டவராகவும், அறத்திற்கு அர்ப்பணிப்பு கொண்டவராகவும் நீர் எப்போதும் சொல்லப்படுகிறீர். எனவே, அமைதியடைவீராக, கோபத்திற்கு வசப்படாதீர்.(21) கலிகாலம் அருகில் இருக்கிறது என்பதை அறிவீராக. பாண்டுவின் மகன் {பீமன்} செய்த சபதத்தையும் நினைவுகூர்வீராக. எனவே, இந்தப் பாண்டுவின் மகன், தமது சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது பகைமைக்கான கடனைத் தீர்த்தவராகவே கருதப்பட வேண்டும்" என்றான்".(22)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இந்தத் தவறான உரையை {கபட தர்மத்தைக்}[3] கேட்ட ராமன் {பலராமன்}, தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவும், உற்சாகங்கொள்ளவும் தவறினான். பிறகு அவன் அந்தச் சபையில்,(23) "அற ஆன்மா கொண்ட மன்னன் சுயோதனனை நியாயமற்ற முறையில் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வுலகில் வஞ்சகப் போர்வீரனாக {கபடயுத்தவீரனாக்} கருதப்படுவான்.(24) மறுபுறம், அற ஆன்மா கொண்ட துரியோதனனோ, அழிவில்லா அருளை அடைவான். இவ்வாறு தாக்கப்பட்டவனும், திருதராஷ்டிரரின் அரச மகனுமான இந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} நல்ல போர்வீரனாவான்.(25) போர் வேள்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, களத்தில் தொடக்க விழாக்களையும் செய்து, இறுதியாகத் தன் எதிரிகள் காட்டிய நெருப்பில் தன் உயிரையே ஆகுதியாக ஊற்றிய துரியோதனன், மகிமையை அடைந்து தன் இறுதி காணிக்கைகளைச் செலுத்தி தன் வேள்வியை நல்ல முறையில் நிறைவு செய்தான்" என்று சொன்னான்.(26) வெண்மேகத்தின் முகட்டைப் போலத் தெரிந்தவனான அந்த ரோகிணியின் வீர மகன் {பலராமன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தன் தேரில் ஏறி துவாரகையை நோக்கிச் சென்றான்.(27) ராமன் துவாராவதிக்குப் புறப்பட்டதும், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பாண்டவர்கள் உற்சாகத்தை இழந்தனர்.(28)
[3] "தவறான உரை" என்று கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளிலும், "கபட தர்மம்" என்று கும்பகோணம் பதிப்பிலும், "தர்மத்தை வஞ்சகமாக வெளிப்படுத்துதல்" என்று பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இருக்கிறது.
அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பெரும் துன்பத்தில் இருந்தவனும், கவலையில் நிறைந்தவனும், தலையைத் தொங்கப் போட்டிருந்தவனும், ஆழ்ந்த துன்பத்தின் விளைவால் என்ன செய்வது என்று அறியாதிருந்தவனுமான யுதிஷ்டிரனை அணுகி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(29) வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நீதிமானான யுதிஷ்டிரரே, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்டவனும், உணர்வற்று வீழ்ந்து கிடப்பவனுமான துரியோதனனின் தலையானது, பீமரின் காலால் தாக்கப்பட அனுமதித்து, இந்த நியாயமில்லாத செயலை ஏன் நீர் அங்கீகரித்தீர். அறநெறிகளின் வழிகளை அறிந்தவரான நீர், ஓ! மன்னா, இந்தச் செயலை ஏன் அலட்சியமாகப் {பாரபட்சத்துடன்} பார்த்துக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டான்.(30,31)
யுதிஷ்டிரன், "ஓ! கிருஷ்ணா, விருகோதரன் கோபத்தால் உந்தப்பட்டு, தன் காலால் மன்னனின் தலையைத் தீண்டிய இந்தச் செயல் எனக்கு ஏற்புடையதில்லை, என் குலத்தின் இவ்வழிவிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை.(32) திருதராஷ்டிரர் மகன்களின் வஞ்சகத்தால் {கபடத்தால்} நாங்கள் எப்போதும் வஞ்சிக்கப்பட்டோம். அவர்கள் எங்களிடம் பல கொடூர வார்த்தைகளைப் பேசினர். மேலும் அவர்கள் எங்களைக் காடுகளுக்கு நாடு கடத்தினர்.(33) அச்செயல்கள் அனைத்தின் காரணமாகவும் பீமசேனனின் இதயம் பெருந்துயரை அடைந்தது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, இவையாவையும் சிந்தித்தே நான் அலட்சியமாகப் பார்த்திருந்தேன்.(34) ஞானத்தை இழந்தவனும், ஆசைகளுக்கு அடிமையானவனும், பேராசை கொண்டவனுமான அந்தத் துரியோதனனைக் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நீதியினாலோ {தர்மத்தினாலோ}, அநீதியினாலோ {அதர்மத்தினாலோ}, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்" என்றான்".(35)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "யுதிஷ்டிரன் இதைச் சொன்ன பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவனான வாசுதேவன், "அப்படியே ஆகட்டும்" என்று சிரமத்துடன் சொன்னான்.(36) உண்மையில் வாசுதேவனிடம், யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பீமனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் விரும்பிய அவன் {கிருஷ்ணன்}, போரில் பீமன் செய்த அச்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.(37) போரில் உமது மகனைத் தாக்கி வீழ்த்திய கோபக்கார பீமசேனன், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், கூப்பிய கரங்களுடனுன் யுதிஷ்டிரனின் முன்பு நின்று, முறையான வடிவில் அவனை வணங்கினான்.(38) பெருஞ்சக்தி கொண்ட விருகோதரன் {பீமன்}, மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடனும், தான் வென்ற வெற்றியின் செருக்குடனும், ஓ! மன்னா, தன் அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்},(39) "ஓ! மன்னா, பூசல்கள் என்ற இடைஞ்சல் இல்லாதவளும், முட்கள் அனைத்தும் நீக்கப்பட்டவளுமான பூமாதேவி இன்று உம்முடையவனாள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவளை ஆட்சி செய்து உமது வகைக்கு {க்ஷத்திரியனுக்கு} உண்டான கடமைகளை நோற்பீராக.(40) இந்தப் பகைமைகளுக்குக் காரணமானவனும், தனது கபடவழிகளால் அதை வளர்த்தவனும், வஞ்சகத்தை விரும்பியவனும் இழிந்தவனுமான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, ஓ! பூமியின் தலைவா, தாக்கி வீழ்த்தப்பட்டு {இதோ} வெறுந்தரையில் கிடக்கிறான்.(41) கொடூர வார்த்தைகளைச் சொல்பவர்களும், ராதையின் மகன் {கர்ணன்} மற்றும் சகுனி ஆகிய உமது எதிரிகளும், துச்சாசனனின் தலைமையிலான இழிந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(42) ரத்தினங்கள் அனைத்தாலும் நிரம்பியவளும், காடுகள் மற்றும் மலைகளுடன் கூடியவளுமான பூமாதேவி, ஓ! ஏகாதிபதி, உயிரோடுள்ள எந்த எதிரியுமற்றவளாக மீண்டும் உம்மிடம் வருகிறாள்" என்றான்.(43)
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. மன்னன் துரியோதனனும் வீழ்ந்துவிட்டான். கிருஷ்ணனின் ஆலோசனைகளின் படி நடந்து கொண்ட நம்மால், இந்தப் பூமாதேவி வெல்லப்பட்டிருக்கிறாள்.(44) உன் தாய்க்கும், உன் கோபத்திற்கும் பட்ட கடனை நற்பேறாலேயே நீ அடைத்திருக்கிறாய். ஓ! வெல்லப்பட முடியாத வீரனே, நற்பேறாலேயே நீ வெற்றியாளனானாய், நற்பேறாலேயே உன் எதிரியும் கொல்லப்பட்டான்" என்றான் {யுதிஷ்டிரன்}".(45)
சல்லிய பர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |