The car of Arjuna reduced to ashes! | Shalya-Parva-Section-62 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 31)
பதிவின் சுருக்கம் : முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கௌரவ முகாமுக்குச் சென்ற பாண்டவர்கள்; அர்ஜுனனைத் தேரைவிட்டு இறங்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் தேர் எரிந்தது; அதன் காரணத்தை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய கிருஷ்ணன்; கிருஷ்ணனே அதற்குக் காரணம் என்று சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் பாண்டவர்களும், சாத்யகியும் முகாமுக்கு வெளியே தங்கியது; கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய பாண்டவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அம்மன்னர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, வழியில் சங்குகளை முழக்கிக் கொண்டே தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(1) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது முகாமை நோக்கிச் சென்றனர். பெரும் வில்லாளியான யுயுத்சு, சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி, மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். பெரும் வில்லாளிகள் பிறரும் நமது பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(2,3) ஒளியை இழந்து, தன் தலைவனை இழந்து, கேளிக்கைக்குப் பிறகு பார்வையாளர்களால் கைவிடப்பட்ட அரங்கத்தைப் போல இருந்த துரியோதனனின் பாசறைக்குள் பார்த்தர்கள் நுழைந்தனர்.(4) உண்மையில், அந்த அரங்கமானது, கொண்டாட்டங்களை இழந்த ஒரு நகரத்தைப் போலவோ, யானையில்லாத ஒரு தடாகத்தைப் போலவோ தெரிந்தது. அப்போது அது பெண்களாலும், அலிகளாலும், முதிர்ந்த வயதுடைய குறிப்பிட்ட சில அமைச்சர்களாலும் நிறைந்திருந்தது.(5) முன்பெல்லாம் துரியோதனனும், மஞ்சள் சாயம் பூசப்பட்ட உடைகளை உடுத்திய பிற வீரர்களும் அந்த முதிர்ந்த அமைச்சர்களிடம் கரங்களைக் கூப்பி வணங்கி, அவர்களுக்காகக் காத்திருப்பார்கள்[1].(6) தேர்வீரர்களில் முதன்மையானோரான அந்தப் பாண்டவர்கள், குரு மன்னனின் {துரியோதனனின்} கூடாரத்தை அடைந்து தங்கள் தேர்களில் இருந்து இறங்கினர்.(7)
[1] கும்பகோணம் பதிப்பில், "துரியோதனனுக்கு முந்தி செல்பவர்கள் காவிவஸ்திரம் போல் அழுக்கடைந்த வஸ்திரத்தைத் தரித்து அஞ்சலிபந்தஞ்செய்து கொண்டு அவ்விடத்தில் இந்தப் பாண்டவர்களை உபாஸித்தார்கள் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முன்பு, காவி சாயம் பூசப்பட்ட தூய ஆடைகளை உடுத்திக் கொண்டு, துரியோதனனும் பிறரும், கூப்பிய கரங்களுடன் அவர்களை வணங்கி அவர்களுக்காகக் காத்திருப்பது வழக்கம்" என்றிருக்கிறது.
அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் நண்பனின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுபவனான கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்},(8) "உன் காண்டீவத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும் {இரண்டு அக்ஷயதூணீரங்ககையும்} எடுத்துக் கொண்டு இறங்குவாயாக. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நான் உனக்குப் பின்பு இறங்குவேன்.(9) ஓ! பாவமற்றவனே, உன் நன்மைக்காக நீ கீழே இறங்குவாயாக" என்றான். பாண்டுவின் வீரமகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனக்குச் சொல்லப்பட்டதைப் போலவே செய்தான்.(10) நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன், குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு, பிறகு தனஞ்சயனின் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(11) உயிரினங்கள் அனைத்தின் தலைவனான உயரான்மா {கிருஷ்ணன்}, அந்தத் தேரில் இருந்து இறங்கியதும், அர்ஜுனனின் வாகனக் கொடிமரத்தின் உச்சியில் இருந்த தெய்வீகக் குரங்கு அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12) முன்பு துரோணர் மற்றும் கர்ணனின் தெய்வீக ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அந்தப் பெரும் வாகனம், ஓ! மன்னா, கண்ணுக்குத் தெரிந்த எந்த நெருப்பும் ஊட்டப்படாமலே, வேகமாகத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(13) உண்மையில், அம்பறாத்தூணிகள், கடிவாளங்கள், குதிரைகள், நுகத்தடி, ஏர்க்கால் ஆகியவற்றுடன் கூடிய தனஞ்சயனின் தேரானது, சாம்பலாகக் குறைக்கப்பட்டுக் கீழே விழுந்தது {எரிந்து சாம்பலானது}.(14) அந்த வாகனம் இவ்வாறு சாம்பலாகக் குறைக்கப்பட்டதைக் கண்ட பாண்டுவின் மகன்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆச்சரியத்தால் நிறைந்தனர்.
மேலும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரங்களைக் கூப்பிக் கிருஷ்ணனை வணங்கி, அன்பான குரலுடன், "ஓ! கோவிந்தா, ஓ! தெய்வீகமானவனே, என்ன காரணத்தினால் இந்தத் தேர் நெருப்பால் எரிக்கப்பட்டது?(15,16) நம் கண் முன்பே நடைபெறும் இந்த மிக ஆச்சரியமான நிகழ்ச்சியானது யாது? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, எந்தத் தீங்குமின்றி என்னால் கேட்க முடியும் என்று நீ நினைத்தால், அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(17)
அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! அர்ஜுனா, அந்தத் தேரானது முன்பே பல்வேறு வகை ஆயுதங்களால் எரிக்கப்பட்டிருந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரின்போது நான் அதில் அமர்ந்திருந்ததால், அது துண்டுகளாகச் சிதறாமல் இருந்தது.(18) பிரம்மாயுதங்களின் சக்தியால் முன்பே எரிக்கப்பட்டிருந்த அஃது, உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னால் கைவிடப்பட்டதால் சாம்பலாகக் குறைக்கப்பபட்டது" என்றான்.(19)
பிறகு, எதிரிகளைக் கொல்பவனான தெய்வீகக் கேசவன் {கிருஷ்ணன்} சற்றே செருக்குடன் மன்னன் யுதிஷ்டிரனைத் தழுவி கொண்டு, அவனிடம்,(20) "ஓ! குந்தியின் மகனே, நீர் வெற்றியை அடைந்தது நற்பேறாலேயே, உமது எதிரிகள் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து காண்டீவதாரி {அர்ஜுனன்}, பாண்டுவின் மகனான பீமசேனர், நீர் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோர் உயிரோடு தப்பியதும், உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்றதும் நற்பேறாலேயே.(21,22) ஓ! பாரதரே, உம்மால் என்ன செய்யப்பட வேண்டுமோ அதை விரைவாகச் செய்வீராக.(23) நான் உபப்லாவ்யத்துக்கு வந்த போது, காண்டீவதாரியின் துணையோடு என்னை அணுகிய நீர், தேனையும், சில வழக்கமான பொருள்களையும் கொடுத்து, "ஓ! தலைவா,(24) ஓ! கிருஷ்ணா, இந்தத் தனஞ்சயன் உனது சகோதரனும், நண்பனுமாவான். எனவே, இவன் {அர்ஜுனன்} அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவன்" என்ற வார்த்தைகளைச் சொன்னீர்.(25) நீர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நான், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்தேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} என்னால் பாதுகாக்கப்பட்டான், வெற்றியும் உமதானது.(26) ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையான ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பயங்கரப் போரிலிருந்து தன் சகோதரர்களுடன் {பாதுகாப்பாக} வெளியே வந்திருக்கிறான்" என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(28)
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மயிர்க்கூச்சத்துடன் கூடியவனாகி அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(28) யுதிஷ்டிரன், "ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, துரோணர் மற்றும் கர்ணனால் ஏவப்பட்ட பிரம்மாயுதங்களைத் தாங்கிக் கொள்ள இந்திரனாலும் முடியாது எனும்போது வேறு எவரால் முடியும்?(29) சம்சப்தகர்கள் உன் அருளாலேயே வெல்லப்பட்டார்கள். கடுமைநிறைந்த மோதல்களிலும் உன் அருளாலேயே பார்த்தன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(30) அதேபோலவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானும் என் சந்ததியும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு செயல்களை நிறைவேற்றி ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு மங்கல முடிவை உன் அருளாலேயே அடைந்தோம்.(31) உபப்லாவ்யத்தில் என்னிடம், பெருமுனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, "எங்கே அறம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணன் இருப்பான். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியிருக்கும்" என்று சொன்னார்" என்றான் {யுதிஷ்டிரன்}"[2].(32)
[2] கும்பகோணம் பதிப்பில் இதற்குபிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: "இவ்வாறு கூறக்கேட்ட வாஸுதேவர், யுதிஷ்டிரரைப் பார்த்து, "பாரதரே, குருநந்தனரே, உம்முடையதும், சத்துருக்களுடையதுமான பதினெட்டு அக்ஷௌஹிணி சேனைகளும் இவ்வுலகில் பலத்தினால் அர்ஜுனனுக்கு ஈடாகா. அப்படிப்பட்ட இந்தப் பாண்டு நந்தனனான அர்ஜுனன் திவ்யாஸ்திரங்கள் அனைத்தையும் சங்கரரிடத்தினின்று அடைந்து, "யுத்தத்தில் நீ எனக்கு ஸ்மமாக இருப்பாய்; அல்லது, மேலானவனாக இருப்பாய்" என்று அனுமதி கொடுக்கப்பட்டவனாக மீண்டு பூமியை வந்தடைந்தான். பிரபுவே, நரசிரேஷ்டனனா அர்ஜுனன் உம்மால் அனுமதி கொடுக்கப்பட்டால் சென்றதையும், நிகழ்கின்றதையும், வருவதையும் அரை நிமிஷத்தில் (மரணத்தை) அடைவிப்பான் என்பது என்னுடைய எண்ணம். கோபங்கண்ட தனஞ்சயன் அரை நிமிஷத்திற்குள் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமா, ஜயத்ரதன் ஆகிய இவர்களைக் கொல்லத் திறமையுள்ளவனாவான். அந்த அர்ஜுனன், தேவர்கள் சுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராக்ஷஸர்கள் இவர்களுடன் கூடின மூவுலகங்களையும் ஜயிக்க சக்தியுள்ளவன். இவ்வுலகிலுள்ள மானிடரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? என்னால் தூண்டப்பட்டும், அவர்களைக் கொல்வதில் புத்தியைச் செலுத்தவில்லை. அஃது அவ்வாறு ஏற்பட்டது தெய்வத்தின் செயல். அதனால் அவர்கள் அதிகப் பலசாலிகளானார்கள். அரசரே, இவ்விஷயத்தில் உண்மையான சொற்கள் என்னால் நன்கு உரைக்கப்பட்டன. என்னிடத்தில் எல்லாம் காண்பிக்கப்பட்டன. அதனால் இவன் சத்துருக்களை ஜயித்தான். அரசரே, மிக்கபுஜபலமமைந்த அர்ஜுனனும் எனக்கு ஸமானன். பிரபுவே, மஹேசுவரரிடத்தினின்று அஸ்திரங்களைப் பெற்ற பிரபுவான அந்த அர்ஜுனன் எதைத்தான் செய்ய மாட்டான்?" என்றார்" என்றிருக்கிறது. இக்குறிப்பு, கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்போலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இந்த உரையாடலுக்குப் பிறகு உமது முகாமுக்குள் நுழைந்த அவ்வீரர்கள், இராணுவக் கருவூலத்தையும், பல நகைகளையும், பல செல்வத்தையும் அடைந்தனர்.(33) மேலும் அவர்கள் வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பல்வேறு ஆபரணங்கள், விரிப்புகள் தோல்கள்,(34) எண்ணற்ற ஆண், பெண் பணியாட்கள், மேலும் அரசுரிமைக்குத் தேவையான பிற பொருட்கள் பலவற்றையும் அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே, எவருடைய எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனரோ அந்த உயர் ஆன்மாக்கள் {பாண்டவர்கள்} உமக்குச் சொந்தமான அந்த வற்றாத செல்வத்தை அடைந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(35) தங்கள் விலங்குகளைப் பூட்டுகளில் இருந்து விடுவித்த பாண்டவர்களும், சாத்யகியும், ஓய்வு கொள்வதற்காகச் சற்று நேரம் அங்கே இருந்தனர்.(36) அப்போது பெரும்புகழைக் கொண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, "அருளின் தொடக்கச் செயலாக இவ்விரவு நாம் நமது முகாமை விட்டு வெளியே இருப்போம்" என்றான்[3].(37) "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பாண்டவர்கள், சாத்யகியும், எது மங்கலக் காரியம் என்று கருதப்படுகிறதோ, அதைச் செய்ய வாசுதேவனின் துணையுடன் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(38)
[3] கும்பகோணம் பதிப்பில், "நாம் மங்களத்திற்காகப் பாசறைக்கு வெளியே வசிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எதிரிகளற்றவர்களான அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புனித ஓடையான ஓகவதியின் கரைக்கு வந்து, அவ்விரவிற்காக அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(39) பிறகு அவர்கள் யது குலத்தின் கேசவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்டவனான வாசுதேவன், தாருகனைத் தன் தேரை எடுத்து வரச் செய்து, அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கு மிக வேகமாக் சென்றான்.(40) சைவியம், சுக்ரீவம் (மற்றும் பிற குதிரைகள்) ஆகியவை பூட்டப்பட்ட அவனது தேர் புறப்பட்டபோது, (பாண்டவர்கள்) அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "தன் மகன்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்றவளாக இருக்கும் காந்தாரிக்கு ஆறுதலளிப்பாயாக" என்றனர்.(41) பாண்டவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சாத்வதர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் சென்று, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவளான காந்தாரியின் முன்னிலையை அடைந்தான்" {என்றான் சஞ்சயன்}".(42)
சல்லிய பர்வம் பகுதி – 62 ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |