Celestial shower of flowers! | Shalya-Parva-Section-61 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் வீழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பாண்டவ வீரர்கள்; அவர்களால் புகழப்பட்ட பீமன்; துரியோதனன் அவமதிக்கப்படுவதைத் தடுத்த கிருஷ்ணன்; அநியாயங்கள் அனைத்துக்கும் கிருஷ்ணனையே குற்றஞ்சாட்டிய துரியோதனன்; துரியோதனனின் தீச்செயல்களை நினைவூட்டி, அவனது பரிதாபகரமான முடிவு தவிர்க்கமுடியாதது என்று சொன்ன கிருஷ்ணன்; தன் மகிமையைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்த துரியோதனன்; தெய்வீக மலர்மாரி பொழிந்தது; பெருந்தேர்வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கான காரணங்களைச் சொன்ன கிருஷ்ணன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்ட துரியோதனனைக் கண்டு, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கிருஷ்ணனோடு கூடிய பாண்டவர்கள், சிங்கத்தால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} வீழ்ந்த போது, பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும்,(2,3) தங்கள் மேலாடைகளை (காற்றில்) அசைத்து, சிங்க முழக்கம் செய்தனர். அந்தப் போர் வீரர்களின் மகிழ்ச்சியானது, பூமியால் பொறுத்துக் கொள்ள முடியாததாகத் தெரிந்தது.(4) சிலர் தங்கள் விற்களை வளைத்தனர்; சிலர் தங்கள் நாண்கயிறுகளை இழுத்தனர். சிலர் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர்; சிலர் தங்கள் துந்துபிகளை ஒலித்தனர்.(5) சிலர் விளையாடிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்; உமது பகைவர்களில் சிலர் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
பல வீரர்கள் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்,(6) "பெரும் போர்வீரரனான குரு மன்னனை {துரியோதனனை}, உன் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தியதன் மூலம், மிகக் கடினமானதும், பெரியதுமான அருஞ்செயலை போரில் இன்று நீ செய்திருக்கிறாய்.(7) இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே எதிரி உன்னால் கொல்லப்பட்டதாக இம்மனிதர்கள் அனைவரும் கருதுகின்றனர்.(8) ஓ! விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்?(9) அடைவதற்கு அரிதான பகைமையின் அடுத்தக் கரையை இப்போது நீ அடைந்துவிட்டாய். நீ அடைந்திருக்கும் இந்தச் சாதனையானது, வேறு எந்தப் போர்வீரனாலும் அடைய முடியாததாகும்.(10)
ஓ! வீரா {பீமா}, ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் போர்க்களத்தில் துரியோதனனின் தலையை உன் காலால் நீ நொறுக்கியது நற்பேறாலேயே.(11) ஓ! பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ! பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ! பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ! பாரதா {பீமா}, துரியோதனன் கொல்லப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி {மயிர்ச்சிலிர்ப்பு} இன்னும் தணியவில்லை என்பதை அறிந்து கொள்வாயாக" என்றனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கே கூடிய துதிபாடிகளால் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(16)
மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து இத்தகு மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுசூதனன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(17) "மனிதர்களின் ஆட்சியாளர்களே, கொல்லப்பட்ட எதிரியை இத்தகு கொடூரப் பேச்சுகளால் மீண்டும் மீண்டும் கொல்வது முறையாகாது.((18) பாவம் நிறைந்தவனும், வெட்கங்கெட்டவனும், பேராசை கொண்ட இழிந்தவனுமான இவன் {துரியோதனன்}, பாவம் நிறைந்த அமைச்சர்களால் சூழப்பட்டு, நல்ல நண்பர்களின் அறிவுரை அலட்சியம் செய்தபோதே இறந்துவிட்டான்.(19) பாண்டவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்ட அவர்களது தந்தை வழி நாட்டின் {பாண்டுவின்} பங்கைக் கொடுத்துவிடுமாறு விதுரர், துரோணர், கிருபர், சஞ்சயன் ஆகியோர் மீண்டும் மீண்டும் சொல்லியும் மறுத்த போதே இவன் {துரியோதனன்} இறந்துவிட்டான்.(20) இந்த இழிந்தவன் இப்போது நண்பனாகவோ, எதிரியாகவோ கருதப்படத்தகுந்தவனல்ல. வெறும் மரக்கட்டையாகிவிட்டவனிடம் கசந்த மூச்சைச் செலவிட்டு {கசந்த மொழிகளைப் பேசி} என்ன பயன்?(21) மன்னர்களே, நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும், எனவே உங்கள் தேர்களில் ஏறுவீராக. இந்த இழிந்த பாவி, தனது அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொல்லப்பட்டது நற்பேறாலேயே" என்றான் {கிருஷ்ணன்}.(22)
கிருஷ்ணனின் நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங்களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாலில்லா நஞ்சுமிக்கப் பாம்பைப் போலத் தெரிந்தது.(25) எரிச்சலூட்டும்படியும், தாங்கிக் கொள்ளமுடியாதபடியும் இருந்த தன் வலிகளை அலட்சியம் செய்த அந்தத் துரியோதனன், கூரிய, கசந்த வார்த்தைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(26)
{துரியோதனன்}, "ஓ! கம்சனுடைய அடிமையின் {வசுதேவரின்} மகனே {கிருஷ்ணா}, கதாயுத மோதல்களில் நீடித்திருக்கும் விதிகளின் தீர்மானத்தின்படி, நான் மிகவும் நியாயமற்ற {மிக அநியாயமான} முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டிருப்பதை மறந்ததால் நீ வெட்கமில்லாதவன் என்பது தெரிகிறது. என் தொடைகளை முறிக்குமாறு குறிப்பால் உணர்த்தி, பீமனுக்கு நினைவூட்டி நீயே இந்த நியாயமற்ற செயலைச் செய்தாய். அர்ஜுனன், (உன் ஆலோசனையின் பேரில்) பீமனுக்குக் குறிப்பால் உணர்த்தியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா?(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா?(29) நாளுக்குநாள் வீரம் நிறைந்த போர்வீரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய நீயே, சிகண்டியை முன்னிலையில் நிறுத்தி பாட்டனையும் {பீஷ்மரையும்} கொன்றாய்.(30)
அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றுவிட்டு, ஓ! தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா?(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீயே கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்?(33) அதே போலவே, வலிமைமிக்கவனும், தனது ஒரு கரம் வெட்டப்பட்டவனுமான பூரிஸ்ரவஸ், பிராய விரதத்தை நோற்றுக் கொண்டிருந்தபோது, உயர் ஆன்ம சாத்யகியின் மூலம் உன்னாலேயே கொல்லலப்பட்டான்.(34)
பார்த்தனை {அர்ஜுனனை} வெல்வதற்காகக் கர்ணன் அருஞ்செயல் புரிந்தான். எனினும், நீயோ, பாம்புகளின் இளவரசனுடைய (தக்ஷகனுடைய) மகனான அஸ்வசேனனின் நோக்கம் நிறைவேறுவதைக் கலங்கடித்தாய்.(35) மேலும் கர்ணனின் தேர்ச்சக்கரம் புழுதியில் புதைந்து, பேரிடரில் பீடிக்கப்பட்டு, அக்காரணத்தினாலேயே அந்த மனிதர்களில் முதன்மையானவன் கிட்டத்தட்ட வெல்லப்பட்டவனாக இருந்தபோது, உண்மையில், அவன் தன் சக்கரத்தை விடுவிக்கும் ஆவலில் இருந்தபோது, நீ அந்தக் கர்ணனைக் கொல்லச் செய்தாய்.(36) நியாயமான முறையில் என்னுடனும், கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருடனும் நீ போரிட்டிருந்தால், வெற்றி ஒருபோதும் உனதாகியிருக்காது என்பதில் ஐயமில்லை.(37) தங்கள் கடமைகளை நோற்பவர்களான மன்னர்கள் பலரையும், எங்களையும், மிகவும் நேர்மையற்ற, நியாயமற்ற வழிகளைப் பின்பற்றி நீயே கொல்லச் செய்தாய்" என்றான் {துரியோதனன்}.(38)
வாசுதேவன் {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, "ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ! மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ! தீய புரிதல் கொண்டவனே, அரக்கு மாளிகையில் வைத்து, தங்கள் தாயோடு கூடிய பாண்டவர்கள் அனைவரையும் நீ எரிக்க முயன்றாய்.(42) சூதாட்ட நிகழ்வின்போது, தனது பருவகாலத்தில் இருந்த யக்ஞசேனன் மகளை {திரௌபதியைச்} சபைக்கு மத்தியில் வைத்து நீ துன்புறுத்தினாய்.(43) பகடையை நன்கறிந்தவனான சுபலனின் மகனை {சகுனியைக்} கொண்டு, சூதாட்டத்தில் திறமற்றவரும், அறவோருமான யுதிஷ்டிரரை நியாயமற்ற வகையில் நீ வென்றாய். அதற்காகவே நீ கொல்லப்படுகிறாய்.(44)
மற்றொரு சந்தர்ப்பத்தில், கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைவர்களான பாண்டவர்கள் திருணபிந்துவின் ஆசிரமத்தை நோக்கி வேட்டையாடச் சென்றிருந்தபோது, பாவம் நிறைந்த ஜெயத்ரதன் மூலம் நீ அவளைத் துன்புறுத்தினாய்.(45) சிறுவனும், தனியனுமான அபிமன்யுவைச் சுற்றிலும் பல வீரர்களைச் சூழச் செயது, நீயே அவ்வீரனைக் கொல்லச் செய்தாய். ஓ! இழிந்த பாவியே, அந்தக் குற்றத்தின் விளைவாலேயே நீ கொல்லப்படுகிறாய்.(46) நாங்கள் செய்த நியாயமற்ற செயல்கள் என்று நீ சொல்லும் அனைத்தும், உண்மையில், பாவம் நிறைந்த உனது இயல்பின் விளைவால் உன்னால் செய்யப்பட்டவையே ஆகும்.(47) பிருஹஸ்பதி மற்றும் உசனஸின் {சுக்ராச்சாரியரின்} ஆலோசனைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை. முதிர்ந்தவர்களுக்காக நீ ஒருபோதும் காத்திருந்ததில்லை {அவர்களுக்குப் பணிவிடை செய்ததில்லை}. நல்ல வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை.(48) அடக்கமுடியாத பேராசைக்கும், பலனில் உள்ள தாகத்திற்கும் அடிமையாக இருந்த நீயே நியாயமற்ற செயல்கள் பலவற்றைச் செய்தவனாவாய். அந்த உன் செயல்பாடுகளின் விளைவை நீ இப்போது தாங்கிக் கொள்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(49)
துரியோதனன் {கிருஷ்ணனிடம்}, "நான் கல்வி கற்றவனாக, விதிப்படி தானம் செய்தவனாக, கடல்களுடன் கூடிய பரந்த பூமியை ஆட்சி செய்தவனாக, என் எதிரிகளின் தலைக்கு மேலேயே {உயர்ந்து} இருந்திருக்கிறேன்.(50) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் போர்க்கள மரணம் என்ற முடிவு இப்போது எனதாகியிருக்கிறது. எனவே, என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(52) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {கிருஷ்ணா}, என் நலவிரும்பிகள், என் தம்பிகள் ஆகியோர் அனைவருடனும் நான் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் காரியம் நிறைவேறாமல், துயரால் {மனம்} கிழிக்கப்பட்டு, மகிழ்ச்சியற்ற இவ்வுலகில் நீங்கள் வாழப்போகிறீர்கள்" என்றான் {துரியோதனன்}".(53)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "குருக்களின் அந்தப் புத்திசாலி மன்னனுடைய {துரியோதனனுடைய} இவ்வார்த்தைகளின் நிறைவின்போது, நறுமணமிக்க மலர்களின் அடர்த்தியான மழை வானத்தில் இருந்து பொழிந்தது.(54) கந்தர்வர்கள் இனிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். அப்சரஸ்கள் மன்னன் துரியோதனனின் மகிமையைக் கூட்டமாகப் பாடினர்.(55) சித்தர்கள், "மன்னன் துரியோதனன் புகழப்படுவான்" என்ற ஒலியை எழுப்பினர். அனைத்துப் பக்கங்களிலும் நறுமணமிக்க இனிய தென்றல் மென்மையாக வீசியது. அனைத்துப் பகுதிகளும் தெளிவடைந்து, ஆகாயமானது வைடூரியத்தைப் போன்ற நீலத்தை அடைந்தது.(56) இந்த அற்புதமான காரியங்களையும், துரியோதனனுக்குச் செய்யப்பட்ட வழிபாடுகளையும் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான பாண்டவர்கள் வெட்கத்தை அடைந்தனர்.(57) பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவஸ் ஆகியோர் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டனர் என்று (கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களால் உரக்கச் சொல்லப்பட்டதைக்) கேட்ட அவர்கள் துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையால் அழுதனர்.(58)
கவலையிலும், துயரத்திலும் மூழ்கியிருந்த பாண்டவர்களைக் கண்ட கிருஷ்ணன், மேகங்கள், அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலுடன் அவர்களிடம்,(59) "அவர்கள் அனைவரும் பெருந்தேர் வீரர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் வேகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நீங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியிட்டிருந்தாலும், நியாயமான முறையில் போரிட்டு அவர்களை ஒருபோதும் கொன்றிருக்க முடியாது.(60) நியாயமான போரில் மன்னன் துரியோதனனும் கொல்லப்பட முடியாதவனே ஆவான். பீஷ்மரின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரின் காரியமும் அதேதான்.(61) நான், உங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே போரில் மீண்டும் மீண்டும் என் மாய சக்திகளையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களைக் கொல்லச் செய்தேன்.(62) போரில் அத்தகு வஞ்சிக்கும் வழிகளை நான் பின்பற்றவில்லையென்றால், வெற்றியோ, நாடோ, செல்வமோ ஒருபோதும் உங்களுடையதாகி இருக்காது.(63)
உயர் ஆன்மப் போர்வீரர்களான அவர்கள் நால்வரும், உலகத்தால் அதிரதர்களாகக் கருதப்பட்டனர். நியாயமான போரில் அவர்களை லோகபாலர்களாலேயே கொல்ல முடியாது.(64) அதேபோலவே, களைப்பை அறியாதவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரன் மகனும் {துரியோதனனும்}, தண்டந்தரித்த யமனாலேயேகூட நியாயமான போரில் கொல்லப்பட முடியாது.(65) உங்கள் எதிரிகள் வஞ்சகத்தாலேயே கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் உங்கள் இதயம் வரை கொண்டு செல்லாதீர். ஒருவனின் எதிரிகளுடைய எண்ணிக்கை பெரிதாகும்போது, சூழ்ச்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலமே அவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும்.(66) தேவர்களே கூட அசுரர்களைக் கொல்வதில் இதே வழியிலேயே நடந்திருக்கின்றனர். எனவே, தேவர்கள் நடந்த அந்த வழியில் அனைவரும் நடக்கலாம்.(67) நாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறோம். இது மாலை வேளை. நாம், நமது பாசறைகளுக்குத் திரும்புவதே சிறந்தது. மன்னர்களே, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களுடன் நாம் அனைவரும் ஓய்வெடுப்போமாக" என்றான்.(68)
வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்கங்கள் பலவற்றைப் போல முழக்கம் செய்தனர்.(69) அவர்கள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, மாதவனும் {கிருஷ்ணனும்} மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் தாக்கிவீழ்த்தப்பட்ட துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாஞ்சஜன்யத்தை முழக்கினான்" {என்றான் சஞ்சயன்}.(70)
சல்லிய பர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 70
ஆங்கிலத்தில் | In English |