The swayamvara of Bhanumati! | Shanti-Parva-Section-04 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)
[1] கலிங்கத்திற்கு இரு தலைநகர்கள் இருந்ததாக மஹாபாரதத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. ஒன்று தண்டபுரம், இரண்டாவது ராஜபுரம். காம்போஜத்தின் தலைநகரும் ராஜபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே சுட்டப்படுவது கலிங்க நாட்டின் தலைநகரம் ராஜபுரம். இது வட கலிங்கத்தின் தலைநகராக இருக்க வேண்டும். குருக்ஷேத்திரப் போரில் இறந்த கலிங்க மன்னன் சுருதாயுஷ் ஆவான். பீமனால் அவன் கொல்லப்பட்டான். சுருதாயுஷ் தென் கலிங்கத்தின் மன்னனாகவும், இந்தத் சித்திராங்கதன் வட கலிங்கத்தின் மன்னனாகவும் இருந்திருக்கலாம். பீஷ்ம பர்வம் பகுதி 54அல் கலிங்க இளவரசன் பானுமான் பீமனால் கொல்லப்படுகிறான்.[2] கலிங்க இளவரசி பானுமதி. கங்குலியின் பதிப்பில் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை. மன்மதநாததத்தர், கும்பகோணம் மற்றுப் பிபேகத் திப்ராயின் பதிப்புகளிலும் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை.
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட்சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)
[3] ஜராசந்தன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்விக்கு வெகு காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டவன், சிசுபாலன் ராஜசூய வேள்வியின் போது கொல்லப்பட்டவன். ஆக இச்சம்பவம் பாண்டவர்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதற்கு முன், அல்லது பாண்டவர்கள் வாரணாவதத்திலுள்ள அரக்கு மாளிகைக்குச் செல்வதற்கும் முன் நடந்திருக்க வேண்டும்.[4] கும்பகோணம் பதிப்பில், "ஸ்திரீ ராஜ்யத்திற்கதிபதியான ஸ்ருகாலன்" என்றிருக்கிறது.[5] இது கிருதவர்மனாகவும் இருக்கலாம்.
அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)
போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. "கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக", "தேர்களை ஆயத்தம் செய்வீராக" (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)
பெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, "ஓடு, ஓடு" என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்" என்றார் {நாரதர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |