The friendship with Jarasandha! | Shanti-Parva-Section-05 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்...
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்க ஆயத்தமானான்[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஜரை என்பவளால் சேர்க்கப்பட்ட ஜராசந்தனது சரீரத்தினுடைய ஸந்தியைக் கர்ணனானவன் பாஹுகண்டகமென்று சொல்லப்பட்ட சண்டையில் (ஒரு முழங்காலை மிதித்துக் கொண்டு மற்றொரு காலைப் பிடித்துத் தூக்கிக் கிழிப்பது) பிளந்தான். அந்த அரசன் தன் சரீரத்தினுடைய (பிளப்பாகிய) விகாரத்தைக் கண்டு பகையை நெடுந்தூரம் விலக்கி, "ஸந்தோஷப்படுகிறேன்" என்று கர்ணனைப் பார்த்துச் சொன்னான்" என்றிருக்கிறது.
அப்போது அந்த (மகத) மன்னன் {ஜராசந்தன்}, பெரும் வலியை உணர்ந்து, பகைமைக்கான விருப்பம் அனைத்தையும் கைவிட்டு, கர்ணனிடம், "நான் நிறைவடைந்தேன்" என்று சொன்னான்.(5) பிறகு நட்பின் நிமித்தம் அவன் {ஜராசந்தன்} மாலினி என்ற நகரத்தை கர்ணனுக்கு அளித்தான். அதற்கு முன்புவரை, எதிரிகள் அனைவரையும் அடக்குபவனான அந்த மனிதர்களில் புலி (கர்ணன்) அங்கத்திற்கு (அங்க நாட்டிற்கு) மட்டுமே மன்னனாக இருந்தான். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பகைவரின் படையைக் கலங்கடிப்பவனா அவன் {கர்ணன்}, நீ அறிந்திருப்பதைப் போலவே, துரியோதனனின் விருப்பத்திற்கு ஏற்றபடி, சம்பையிலிருந்தும்[2] ஆளத் தொடங்கினான்.(7)
[2] சம்பை நகரம் மகதத்திற்கும் அங்கத்திற்கும் இடையிலிருக்கும் நகரமாக இருக்க வேண்டும். சட்டீஸ்கரில் சம்பா என்ற பெயரில் இப்போதும் ஒரு நகரம் இருக்கிறது.
இவ்வாறு கர்ணன் தன் கரங்களின் ஆற்றலால் பூமியில் புகழ்பெற்றவனாகத் திகழ்ந்தான். தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உன் நன்மைக்காக அவனது (இயற்கை) கவசத்தையும், காது குண்டலங்களையும் கேட்ட போது,(8) தெய்வீக மாயையால் திகைப்படைந்த அவன், தன் மதிப்புமிக்க உடைமைகளான அவற்றை {இந்திரனிடம்} கொடுத்துவிட்டான்.(9) காதுகுண்டலங்களை இழந்தவனும், இயற்கைக் கவசத்தை இழந்தவனுமான அவன் {கர்ணன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(10)
பிராமணனின் சாபம், சிறப்புமிக்க ராமரின் சாபம், குந்திக்கு அளித்திருந்த வரம், இந்திரனால் அவனிடம் எற்படுத்தப்பட்ட மாயை,(11) ரதர்கள் மற்றும் அதிரதர்களைக் கணக்கெடுக்கும்போது, பீஷ்மரால் அரைத் தேர்வீரன் என்று சொல்லப்பட்டதால் உண்டான மனத்தளர்ச்சி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} கொள்கை மூலமாகச் சல்லியனால் (சல்லியனின் கூரிய பேச்சுகளால்) தன் சக்திக்கு உண்டான அழிவு,(12) இறுதியாக, ருத்திரன், இந்திரன், யமன், வருணன், குபேரன், துரோணர், சிறப்புமிக்கக் கிருபர் ஆகியோரிடம் அர்ஜுனன் அடைந்திருந்த தெய்வீக ஆயுதங்கள் ஆகியவற்றாலேயே(13) சூரியப்பிரகாசம் கொண்ட அந்த விகர்த்தனன் மகனை {கர்ணனை} அந்தக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்ல முடிந்தது.(14) இவ்வாறு உன் அண்ணன் {கர்ணன்}, பலரால் சபிக்கவும் வஞ்சிக்கவும் பட்டான். எனினும், அந்த மனிதர்களில் புலி {கர்ணன்} போரில் வீழ்ந்துவிட்டதால், இனியும் நீ அவனுக்காக வருந்தலாகாது" என்றார் {நாரதர்}".(15)
சாந்திபர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |