The curse of Yudhishthira on women! | Shanti-Parva-Section-06 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம்: யுதிஷ்டிரின் சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய குந்தி; குந்தியின் பிழையால் உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்த யுதிஷ்டிரன்; உறவினர்களின் மரணத்தை எண்ணி மனத்தளர்ச்சியடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தெய்வீக முனிவரான நாரதர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார். அரசமுனியான யுதிஷ்டிரன், துயரால் நிறைந்து, தியானத்தில் மூழ்கினான்.(1) உற்சாகமற்று, கவலையில் மூழ்கி, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த(2) அவ்வீரனை {யுதிஷ்டிரனைக்} கண்ட குந்தி, தானே துயரில் மூழ்கியவளாக, கவலையில் கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்தவளாக, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவையும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையுமான இந்த இனிய வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் பேசினாள்:(3) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. ஓ! பெரும் ஞானியே, இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(4) கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, தேவன் சூரியனும் அதையே செய்தார்.(5)
அந்தத் தேவன் {சூரியன்}, நலன் விரும்பும் ஒரு நண்பன், ஒருவனுக்கான நன்மையை விரும்பி சொல்லக்கூடியவை அனைத்தையும் கர்ணனிடம் கனவிலும், மீண்டும் ஒரு முறை என் முன்னிலையிலும் சொன்னார்.(6) சூரியனாலோ, என்னாலோ, துன்புறுத்தியோ {பாசத்தாலோ}, காரணங்களாலோ {உண்மைகளாலோ}, அவனைத் தணிப்பதிலோ, உன்னோடு அவனை ஒன்றிணைக்கச் செய்வதிலோ வெற்றி பெற முடியவில்லை[1].(7) அவன், காலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, உன்னுடனான பகைமையை வெளிக்காட்டுவதில் உறுதியடைந்தான். உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதிலேயே அவன் முனைந்து கொண்டிருந்ததால், நான் என் முயற்சியைக் கைவிட்டேன்" என்றாள்.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "முன்பு என்னாலும், தகப்பனான ஸூர்யனாலும் உன்னை அறிவிக்க வேண்டியதன் பொருட்டு யாசிக்கப்பட்டான். நன்மையை விரும்புகிறவனும், ஸம்பத்தை இச்சிக்கிறவனுமான மனிதனால் ஸ்நேஹிதர்களுக்கு எது சொல்லத்தக்கதோ அவ்விதம் அவன் ஸ்வப்னாவஸ்தைகளிலும் என் எதிரிலும் ஸூர்யபகவனால் சொல்லப்பட்டான். சினேககாரணங்களாலே முந்தியே இவனை உன்னோடு ஒற்றுமையடையும்படி செய்யவாவது ஸமாதானப்படுத்தவாவது ஸூர்யனுக்கும் சக்தியில்லை; எனக்கும் சக்தியில்லை" என்றிருக்கிறது.
இவ்வாறு தன் தாயால் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் கலக்கமடைந்த இதயத்துடனும், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(9) "உன் ஆலோசனைகளை நீ மறைத்ததன் விளைவால், இந்தப் பெருந்துன்பம் என்னை அடைந்தது" {என்று சொன்னான்}. பெருஞ்சக்தியைக் கொண்டவனும் நீதிமானுமான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, "இதுமுதல் எந்தப் பெண்ணும் இரகசியம் காப்பதில் வெல்லமாட்டாள்" என்று சொல்லி உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்தான்.(10) பிறகு அந்த மன்னன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூர்ந்து துயராலும், கவலையாலும் நிறைந்தான்.(11) கவலையால் பீடிக்கப்பட்டவனும், புகையால் மறைக்கப்பட்ட நெருப்புக்கு ஒப்பானவனுமான அந்த நுண்ணறிவு கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு மனத்தளர்ச்சியை அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(12)
சாந்திபர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |