I shall go to the woods! | Shanti-Parva-Section-07 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், "ஓ! அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1]?(4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)
[1] "நம் எதிரிகளான குருக்கள் அனைவரும் போரில் வீழ்ந்து சொர்க்கத்திற்குச் சென்றுவிட்ட அதே வேளையில் நாம் நம் பங்காகத் துயரையே அடைந்திருக்கிறோம்" என்று இங்கே பொருள்படும் எனக் கங்குலி விளக்குகிறார்.
மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)
மொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், "இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா? பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா? வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா? இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா?" என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)
{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ! தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "அம்மா! இவர்களுடைய தாய்தந்தைகள் பிறந்த குழங்தை வடிவமுடைய இவர்கள் விஷயத்தில் எப்பொழுது ஜாதகர்மத்தைச் செய்தார்களோ அப்பொழுதே இந்த அரசர்கள் கொல்லப்பட்டவர்களானர்கள்" என்றிருக்கிறது.[3] "இங்கே யுதிஷ்டிரன் இதையே சொல்ல விழைகிறான்: "இந்தப் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்கள் அனைவரும் அழிவை அடைந்து சொர்க்கத்தை அடையாமல் இருக்கிறார்கள்; உண்மையில், சொர்க்கம் அவர்களுடையதாய் இருந்திருந்தால், சாத்திரங்களின் விதிப்படி கொலை செய்தவர்களும் சொர்க்கத்தையே அடைவார்கள். எனினும், கோபத்தின் வசப்பட்டு இத்தகு தீய செயல்களைச் செய்த மனிதர்கள் இதற்கு மேலும் அருள் உலகங்களை அடைவது சாத்தியமற்றது". இவ்வாறே யுதிஷ்டிரன் சொல்ல வருவதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)
பாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்?(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)
[4] கும்பகோணம் பதிப்பில், "தேஜஸினலே எல்லாத் 'திக்குக்களையும் கொளுத்துகிறவர்கள் போலப் பிரகாசிக்கும் நாம் நம்முடைய தோஷத்தால் மிகப் பல வருஷங்களுக்கு நாசமடைந்தோம். கெட்டபுத்தியுள்ள நம்முடைய அந்தப் பகைமையென்னும் புருஷன் உறுதியான கட்டுள்ளவனானான். துர்யோதனன் நிமித்தமாக நம்முடைய இந்தக் குலமானது விசேஷமாய் நசிக்கும்படி செய்யப்பட்டது" என்றிருக்கிறது.
தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)
நிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை" என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்" {என்றார் வைசம்பாயனர்}.(42)
[5] "முரண்பட்ட இரட்டைகள் என்பன, வெப்பம், குளுமை, இன்பம், துன்பம் போன்றனவாகும். இதைப் புரிந்து கொள்ளக் கீதையை ஒப்புநோக்கவும்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] கும்பகோணம் பதிப்பில், "ஏ ! குருவம்சத்தில் பிறந்தவனே! ராஜ்யத்தினுலாவது போகங்களாலாவது எனக்குப் பிரயோஜனமில்லை. சத்துருக்களில்லாமலிருக்கிற இந்தப்பூமியை க்ஷேமமாய் நீங்கள் ஆளுங்கள்" என்று எஞ்சியிருக்கும் நால்வரையும் குறிப்பதாகப் பொதுவாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், தனிப்பட்ட முறையில் அர்ஜுனனைச் சுட்டுவதாகவே அமைந்திருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |