Life of domesticity is the virtue! | Shanti-Parva-Section-11 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : செயல்ளைச் செய்வதே க்ஷத்திரிய அறம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; ஒரு பறவைக்கும், முனிவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்னது; இல்லறமே நல்லறம் என்றது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சில தவசிகளுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாறுகளில் தென்படுகிறது.(1) நற்குடியில் பிறந்தோரும், சிறுமதி கொண்டோரும், ஆண்மைக்கான அடையாளமான மீசை இல்லாதவர்களுமான குறிப்பிட்ட சில பிராமண இளைஞர்கள், தங்கள் வீடுகளைக் கைவிட்டு, காட்டு வாழ்வை வாழ்வதற்காகக் காடுகளுக்கு வந்தனர்.(2) அபரிமிதமான வளங்களைக் கொண்ட அந்த இளைஞர்கள், அதையே {காட்டு வாழ்வையே} அறமெனக் கருதி, பிரம்மச்சாரிகளாக வாழ விரும்பி தங்கள் சகோதரர்களையும், தந்தைமாரையும் கைவிட்டனர். ஒரு சமயம், இந்திரன் அவர்களிடம் கருணை கொண்டான்.(3) தங்கப் பறவையின் வடிவத்தை ஏற்ற அந்தப் புனிதமான சக்ரன், அவர்களிடம், "வேள்வியில் எஞ்சியவற்றை உண்போர் செய்யும் செயலே, மனிதர்கள் செய்யக்கூடிய செயல்களிலேயே மிகக் கடினமான செயல்களாகவும்[1].(4) அத்தகு செயலே உயர்ந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டதாகும். அத்தகு மனிதர்களின் வாழ்வே அனைத்து புகழுக்கும் தகுந்ததாகும். வாழ்வின் நோக்கத்தை அடையும் அம்மனிதர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புடன் உயர்ந்த கதியை அடைகின்றனர்" என்றான் { பறவை வடிவில் இருந்த இந்திரன்}.(5)
[1] "வேள்வி செய்வோர், தேவர்களுக்கும், விருந்தினருக்கும் படைக்கப்படும் வேள்வி உணவை உண்டு, வேறு எவராலும் அடையமுடியாத அறத்தகுதியை அடைகின்றனர். வேள்வியே வாழ்வின் உயர்ந்த செயலும், மனிதனுக்குப் பெரும் தகுதியையளிப்பதுமாகும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர்கள், "இதோ, இந்தப் பறவையானவன் வேள்விகளில் எஞ்சியவற்றை உண்டு வாழ்வோரைப் புகழ்கிறது. நாம் அப்படி எஞ்சியவற்றில் வாழ்வதால் இதை நம்மிடம் சொல்கிறான்" என்றனர்[2].(6)
[2] கும்பகோணம் பதிப்பில், "இந்திரன் பொன்னுருவமுள்ள பறவை வேஷம் பூண்டு, அந்தப் பிராம்மணர்களை நோக்கி, "ஓமம் செய்து மிச்சமான "விகஸம்" என்னும் அன்னத்தைப் புஜிக்கும் மனிதர்கள் செய்யும் புண்ணியம் மற்றவர்களால் செய்ய இயலாது. அவர்களுடைய கர்மம் புண்ணியமானது. ஜீவனமும் மிகவுயர்ந்தது. அவர்கள் இஷ்ட ஸித்தி அடைகிறவர்கள். கர்மத்தை முக்கியமாகக் கொண்டவர்கள் தான் உயர்ந்த கதியடைவார்கள்" என்று சொன்னான். அந்த ரிஷிகள், (விகஸாசி - என்ற பதத்திற்கு, அன்னமில்லாத காய், கிழங்கு, சருகு முதலியவற்றைப் புஜிப்பவர்களென்று பொருள் கொண்டு) "ஆச்சர்யம்! ஸந்தோஷம்! இந்தப் பக்ஷியானது விகஸத்தைப் புஜிப்பவர்களைப் புகழ்கிறது. இது நம்மையே அறிவிக்கிறது. ஸந்தேகமில்லை. நாம் விகஸத்தைப் புஜிப்பவர்கள்" எனப் பேசிக் கொண்டார்கள்" என்றிருக்கிறது.
அப்போது அந்தப் பறவை, "நான் உங்களைப் புகழவில்லை. நீங்கள் புழுதியால் கறைபடிந்தவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் {இறைச்சிக்} கழிவை[3] உண்டு வாழும் தீயவர்கள். நீங்கள் வேள்வியில் எஞ்சியதை உண்டு வாழும் மனிதர்களல்லர்" என்றது.(7)
[3] கங்குலி மற்றும் மன்மதநாததத்தர் ஆகியோரின் பதிப்புகளில் ஆங்கிலத்தில் offals என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதற்கு இறைச்சிக்கழிவு என்றே பொருள். கும்பகோணம் பதிப்பில், "நீங்கள் எச்சிலைப் புசிப்பவர்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், Impure foods "தூய்மையற்ற உணவை உண்பவர்கள்" என்றிருக்கிறது.
முனிவர்கள், "நாங்கள் எங்கள் வாழ்வுமுறையை உயர்வாக அருளப்பட்ட வாழ்வுமுறையாகக் கருதுகிறோம். ஓ! பறவையே, எங்களுக்கான நன்மை எது என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்" என்றனர்.(8)
அந்தப் பறவை, "{உள்ளொன்றும் புறமொன்றும் சொல்லி} நீங்கள் உங்களுக்கு எதிரான நிலையை எடுத்து உங்களுக்குள் கொண்டுள்ள நம்பிக்கையை எனக்கு மறுக்காதிருந்தால், நான் உங்களுக்கு உண்மையான, நன்மையான வார்த்தைகளைச் சொல்வேன்" என்றது.(9)
முனிவர்கள், "ஓ! ஐயா, வேறுபட்ட பாதைகள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், நாங்கள் உன் வார்த்தைகளைக் கேட்போம். ஓ! அற ஆன்மா கொண்டோனே, நாங்கள் உன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். இப்போது எங்களுக்குக் கற்பிப்பாயாக" என்றனர்.(10)
அதற்கு அந்தப் பறவை, "நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களில் பசுவே முதன்மையானது. உலோகங்களில் தங்கம் முதன்மையானது. வார்த்தைகளில் மந்திரங்கள் முதன்மையானவை. இரு கால் கொண்ட உயிரினங்களில் பிராமணர்கள் முதன்மையானவர்கள்.(11) ஒரு பிராமணனின் வாழ்வில், பிறப்பு தொடங்கி, அதற்கடுத்து வரும் காலம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குத் தொடர்புடையன மற்றும் சுடலையில் செய்ய வேண்டியது வரை உள்ள சடங்குகள் அனைத்தையும் இந்த மந்திரங்கள் முறைப்படுத்துகின்றன.(12) இந்த வேதச் சடங்குகளே அவனது சொர்க்கமும், பாதையும், முதன்மையான வேள்வியுமாகும்[4]. இது வேறுவகையானால், (சொர்க்கத்தைத் தேடும் மனிதர்களின்) செயல்கள் மந்திரங்கள் மூலம் வெற்றிபெறுவதை என்னால் எவ்வாறு காண இயலும்?(13) எவன் இவ்வுலகில் தன் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட வகைத் தேவனாக உறுதியாகக் கருதுகிறானோ, அவன், அந்தக் குறிப்பிட்ட தேவனின் இயல்பின்படியே முரணற்ற வெற்றியை அடைகிறான்[5]. அரைமாதங்களால் அளக்கப்படும் பருவகாலங்கள் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகின்றன[6].(14) வெற்றியடையும் நிலையைச் சார்ந்திருக்கும் இந்த மூவகை வெற்றிகளை அனைத்துயிரினங்களும் விரும்புகின்றன. மிக மேன்மையானதும், புனிதமானதுமான இல்லறம், வெற்றியின் (வெற்றியை அறுவடை செய்யும்) களம் என்றழைக்கப்படுகிறது.(15)
[4] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணனுக்கு வேதத்தில் விதித்த கர்மங்கள் ஸ்வர்க்கத்தை அடையத்தக்க எல்லா வழிகளிலும் மேலான வழியாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வேதச்சடங்குகளே சொர்க்கத்திற்குச் செல்லும் உயர்ந்த பாதையாகும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போல மேற்கண்டவாறே இருக்கின்றன.[5] "இங்கே iti என்பதற்குப் பிறக vaadi என்றிருப்பது, eti என்றிருக்க வேண்டும். முறையான வடிவில் சந்தி இல்லாமல் இருப்பது அர்ஷமாகும். இதைச் சரியாகப் பெயர்த்தால், "ஒரு மனிதன் உறுதியான தீர்மானத்துடன் தன் ஆன்மாவை அணுகுவதன்படியே, அவன் இங்கே வெற்றியை அடைகிறான். ஒருவன் தன்னைச் சிவன் என்று உறுதியாகக் கருதினால், அவன் இம்மையிலும் மறுமையிலும் அடையும் வெற்றியானது அந்தத் தேவனுடைய வெற்றியைப் போன்றதாகவே இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இந்தச் சுலோகம், "கர்மங்கள் யாவும் மந்திர ஸித்தங்களென்று வேதவாக்கியங்கள் உறுதியாகக் கூறுகின்றன. அப்படியே இந்தக் கர்மமார்க்கத்தில் பக்ஷதேவதைகள், மாஸதேவதைகள், ருது தேவதைகள் முதலிய தேவதைகளை முன்னிட்டுச் சந்திர மண்டலமென்ற பிதிருலோகபதவி, ஸூர்யமண்டலமென்கிற தேவலோகபதவி, ஸஸ்ஸாரத்தைத் தாண்டுவிக்கும் பரமாத்துமபதவியென்னும் மூன்றுவித ஸித்திகளடையப்படுகின்றன" என்றிருக்கிறது.[6] "இத்தகு வாசகங்களின் செறிவே அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முக்கியத் தடையாக இருக்கிறது. நல்ல வேளையாக இங்கே மறைபொருளாகச் சொல்லப்படுவது வெளிப்படையாகவே இருக்கிறது. இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், "கோடைக் கதிர் திருப்பத்தில் {உத்தராயனகாலத்தில்} வரும் வளர்பிறைகளின் {சுக்லபக்ஷத்தின்} போது இறப்பவர்கள், சூரியலோகத்தை அடைகிறார்கள். மாரிக் கதிர் திருப்பத்தில் (தக்ஷிணாயன காலத்தில்} வரும் தேய்பிறைகளின் {கிருஷ்ணபக்ஷத்தின்} போது இறப்பவர்கள் சந்திரலோகத்தை அடைகின்றனர். இப்படிச் செல்லும் இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலம் நிறைவடைந்ததும் மீண்டும் திரும்ப வேண்டும். அதே வேளியில் பற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு, அவர்கள் எந்தக் காலத்தில் இறந்தாலும், அவர்கள் பிரம்ம லோகத்திற்கு இணையான நட்சத்திரலோகங்களுக்குச் செல்வார்கள்" என்பதுதான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நிந்திக்கத்தக்க செயல்பாட்டைக் கொண்ட மனிதர்கள் எப்பாதையில் செல்கின்றனர்? சிறுமதியைக் கொண்ட அவர்கள், செல்வத்தை இழந்து பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(16) அந்தச் சிறு மதி கொண்டோர் தேவர்களின் அழிவில்லா பாதைகளையும், முனிவர்களின் பாதைகளையும், பிரம்ம பாதைகளையும் கைவிட்டு வாழ்வதால், அவர்கள் சுருதிகள் அங்கீகரிக்காத பாதைகளையே அடைகின்றனர்[7].(17) "வேள்விசெய்பவனே, நீ மதிப்புமிக்கப் பொருட்களைக் கொடையாக அளித்து வேள்வியைச் செய்வாயாக. மகன்கள், விலங்குகள் மற்றும் விலங்குகளால் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சியை நான் உனக்குத் தருவேன்" என்றொரு விதி மந்திரங்களில் சொல்லப்படுகிறது. விதித்த விதியின்படி வாழ்வதே தவசிகளின் உயர்ந்த தவம் என்று சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் கொடைகளின் வடிவில் அதுபோன்ற வேள்விகளையும், அதுபோன்ற நோன்புகளையும் செய்ய வேண்டும்.(18) தேவர்களை வழிபடுவது, வேதங்களைக் கற்பது, பித்ருக்களை நிறைவு கொள்ளச்செய்வது, ஆசானிடம் மரியாதையுடன் தொண்டாற்றுவது என்ற இந்த அழிவில்லா கடமைகளை முறையாகச் செய்வதே தவங்களில் கடுமையானதாக அழைக்கப்படுகிறது.(19) இவ்வளவு கடினமான தவங்களைச் செய்தே தேவர்கள் உயர்ந்த மகிமையையும், சக்தியையும் அடைந்தார்கள். எனவே, இல்லறத்தின் கடமைகளுடைய கனத்த சுமையைச் சுமக்கும்படியே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.(20)
[7] "தேவர்கள் மற்றும் பித்ருக்களின் தோழமையை அடையாமல், பிரம்மத்தை அடையமால், தங்கள் தரத்தில் தாழும் அவர்கள் புழுக்களாகவும், பூச்சிகளாகவும் ஆகின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தவங்களே அனைத்திலும் முதன்மையானவை, அவையே அனைத்துயிர்களுக்கும் வேர் போன்றவை என்பதில் ஐயமில்லை. எனினும், எதைச் சார்ந்து அனைத்தும் இருக்கிறதோ, அந்த இல்லற வாழ்வை நோற்று அந்தத் தவம் அடையப்பட {சாதிக்கப்பட} வேண்டும்.(21) காலையும், மாலையும் உறவினர்களுக்கு முறையாக உணவளித்து, அந்த விருந்தில் எஞ்சியதை உண்போர், அடைவதற்கு மிகக் கடினமான உயர்ந்த கதியை அடைகின்றனர்.(22,23) விருந்தினர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் உறவினர்களின் பசியாற்றிய பிறகு உண்பவர்களே, {நான் முன்னர்ச் சொன்னதைப் போல} விருந்தில் {வேள்வியில்} எஞ்சியவற்றை உண்பவர்கள் {விகஸாசிகள்} என்று அழைக்கப்படுகிறார்கள்.(24) எனவே, தங்கள் கடமைகளை முறையாக நோற்பவர்களும், அற்புத நோன்புகளைப் பயின்று உண்மை நிறைந்த பேச்சுடன் இருப்பவர்களும், தங்கள் நம்பிக்கையில் அதிகப் பலமடைந்தவர்களாக இவ்வுலகில் பெரும் மரியாதைக்கு உரியவர்கள் என்ற நிலையை அடைகிறார்கள்.(25) அடைவதற்கரிதான சாதனைகளைச் செய்யும் அவர்கள், செருக்கில் இருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, இந்திரலோகத்தில் முடிவிலா காலம் வாழ்கிறார்கள்" என்றது {என்றான் பறவை வடிவில் இருந்த இந்திரன்}".(26)
அர்ஜுனன் தொடர்ந்தான், "நன்மையானவையும், நீதி நிறைந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், "அஃதில் {துறவில்} ஏதும் இல்லை" என்று சொல்லித் தங்கள் துறவறத்தைக் கைவிட்டு, இல்லற வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(27) எனவே, ஓ! அறமறிந்தவரே, ஓ! ஏகாதிபதி, அழிவில்லா ஞானத்தை உமது துணைக்கழைத்துக் கொண்டு, இப்போது எதிரிகளற்றதாயிருக்கும் இந்தப் பரந்த உலகை ஆட்சி செய்வீராக" {என்றான் அர்ஜுனன்}".(28}
சாந்திபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |