The excellence of the rod of chastisement! | Shanti-Parva-Section-15 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : செங்கோலின் சிறப்பை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; தண்ட முறைகளின் அவசியம்; ஆன்மாவின் கொல்லப்பட முடியாத நிலை ஆகியவற்றை எடுத்துரைத்து யுதிஷ்டிரனை அரசாளும்படி சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மங்கா புகழையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட தன் அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} முறையான மதிப்பளித்து மீண்டும் பேசினான்.(1)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "தண்டக்கோலே (தண்டக்கோலைத் தரித்தவனே), தன் குடிகள் அனைத்தையும் ஆட்சி செய்து, அவர்களைப் பாதுகாக்கிறது {றான்}. அனைத்தும் உறங்கும்போது தண்டக்கோல் விழித்திருக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக் கோலை {செங்கோலை} ஞானியர் நீதிமிக்கது என்கின்றன.(2) தண்டக்கோலே நீதியையும், பொருளையும் பாதுகாக்கிறது. ஓ! மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்காணப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ! கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகின் போக்கில் உள்ள அனைத்தும் தண்டக்கோலைச் சார்ந்தே இருக்கின்றன.(6)
தண்டக்கோலால் மட்டுமே ஒருவரையொருவர் விழுங்கி விடுவதில் இருந்து தடுக்கப்படும் ஒருவகையினரும் இருக்கின்றனர். தண்டக்கோல் மக்களைப் பாதுகாக்கவில்லையெனில், அவர்கள் நரக இருளில் மூழ்குவார்கள்.(7) தண்டக்கோலானது, அடங்காதவர்களைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பயன்படுவதாலேயே ஞானியரால் அவ்வாறு பெயரிடப்பட்டது.(8) பிராமணர்களுக்கு வாய்ச்சொல்லாலும்; க்ஷத்திரியர்களுக்கு, அவர்களின் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவைக் கொடுத்தும்; வைசியர்களுக்கு அபராதமளித்தும், உடைமைகளைப் பறிமுதல் செய்தும் தண்டனை அளிக்க வேண்டும். சூத்திரர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது[1].(9) மனிதர்களை (தங்கள் கடமைகளில்) விழிப்புணர்வுடன் வைத்திருப்பதற்காகவும், உடைமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தண்டம் என்ற பெயரில் இவ்வுலகில் விதிகள் (தண்டனை சட்டங்கள்) நிறுவப்பட்டுள்ளன.(10)
[1] "பிராமணக் குற்றவாளிக்குத் தண்டனை நிந்தனை. ஒரு க்ஷத்திரியனுக்கு அவனது உடைமைகளை அனைத்தையும் பறிமுதல் செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவு வழங்க வேண்டும். வைசியனுக்கு அவனது உடைமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். சூத்திரன் செல்வமற்றதால், அவனது செல்வத்தைப் பறிக்க முடியாது. பணியில் கூலியாக ஈடுபடுத்துவதும் அவனுக்குத் தண்டனையாக முடியாது. ஒருவேளை அவனுக்குக் கடும் பணிச்சுமை அளிக்கப்பட்டிருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராமணர்களுக்குச் சொல் தண்டமாகும். க்ஷத்தரியர்களுக்குக் கூலி கொடுப்பது தண்டமாகும் {ஸ்வதந்திரமின்றிப் பிறர் பொருளாளல் ஜீவிப்பது க்ஷத்ரியர்களுக்கு இகழ்ச்சியானது}. வைஸ்யர்களுக்குப் பணம் தண்டமாகும். (சூத்திரனுக்கு ஊழியத்தைத் தவிர) வேறு தண்டமில்லையென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. இங்கே சூத்திரன் என்ற சொல்லே கையாளப்படாமல் இருந்திருக்க வேண்டும்.
எங்கே தண்டமானது, கரிய நிறத்துடனும், சிவந்த கண்களுடனும் (ஒவ்வொரு குற்றவாளியையும்) பற்றத் தயாராக நற்கிறதோ, எங்கே மன்னன் நீதிப் பார்வையுடன் இருக்கிறானோ, அங்கே குடிமக்கள் ஒருபோதும் தங்களை மறக்காமல் இருக்கிறார்கள் {தன்னிலை இழக்காது விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்}.(11) பிரம்மச்சாரி, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} மற்றும் அறத்தவசி {ஸந்யாசி} ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்கள் வாழ்வுமுறைகளைத் தண்டத்தில் கொண்ட அச்சத்தின் மூலமே நோற்கின்றனர்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அச்சமில்லாதவன் ஒருபோதும் வேள்வியைச் செய்வதில்லை. அச்சமில்லாதவன் ஒருபோதும் கொடை கொடுப்பதில்லை. அச்சமில்லாத மனிதன் ஒருபோதும், எந்தச் செயலையோ, ஒப்பந்தத்தையோ பின்பற்ற விரும்புவதில்லை.(13) மற்றவர்களின் முக்கிய அங்கங்களைப் பிளக்காமல், அரிய சாதனைகளை அடையாமல், (மீனைக் கொல்லும்) மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல், எந்த மனிதனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது[2].(14) கொலை செய்யாமல் ஒரு மனிதனால், இவ்வுலகில் புகழையோ, செல்வத்தையோ, குடிமக்களையோ அடைய முடியாது. இந்திரனே கூட, விருத்திரனைக் கொன்றதால்தான் மஹேந்திரனானான்.(15)
[2] "மீனைக் கொல்லாத மீனவன் உணவில்லாது போவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தேவர்களில் பிறரைக் கொன்றவர்களே, மனிதர்களால் அதிகமாகத் துதிக்கப்படுகிறார். ருத்திரன், ஸ்கந்தன், சக்ரன், அக்னி, வருணன் ஆகியோர் அனைவரும் கொலைகாரர்களாவர்.(16) ஓ! பாரதரே, காலன், மிருத்யு, வாயு, குபேரன், சூரியன், வசுக்கள், மருத்துக்கள், சத்தியஸ்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் அனைவரும் கூடக் கொலைகாரர்களே[3].(17) இந்தத் தேவர்களின் ஆற்றலால் பணிவடைந்து மக்கள் அனைவரும் அவர்களைத் வணங்குகிறார்களேயன்றி பிரம்மனையோ, தாத்ரியையோ, பூஷனையோ ஒருபோதும் வழங்குவதில்லை.(18) தேவர்களில் அனைத்துயிர்களையும் சமமாக மதித்து, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் இருக்கும் தேவர்களை ஒரு சிலரே தங்கள் செயல்களாலும் உன்னத மன நிலைப்பாட்டாலும் வணங்குகின்றனர்.(19) பிறருக்குத் தீங்கிழைக்கும் செயலெதையும் செய்யாத ஓருயிரினத்தையும் நான் இவ்வுலகில் காணவில்லை. விலங்குகள், விலங்குகளைச் சார்ந்தும், பலசாலிகள் பலவீனர்களைச் சார்ந்தும் வாழ்கிறார்கள்.(20)
[3] கும்பகோணம் பதிப்பில், "இவர்கள் அனைவரும் அடிக்குந் தன்மையுள்ளவர்களானதால் அவர்கள் பராக்ரமத்திற்கு வணங்கி ஜனங்கள் அவர்களைப் பூஜிக்கிறார்கள்" என்றிருக்கிறது.
கீரிப்பிள்ளை பூனையை விழுங்குகிறது; பூமையானது கீரிப்பிள்ளையை விழுங்குகிறது; நாய் பூனையை விழுங்குகிறது; மேலும் அந்த நாயும் சிறுத்தையால் விழுங்கப்படுகிறது.(21) மேலும் காலன் வரும்போது அனைத்துப் பொருட்களும் அவனால் விழுங்கப்படுகின்றன என்பதையும் காண்பீராக. அசைவதும், அசையாததுமான இவ்வண்டமே வாழும் உயிரினங்களின் உணவாகிறது.(22) இதுவே தேவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஞானி இதில் திகைப்படைவதில்லை. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடைய வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும்?[4](25)
[4] "ஒருவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக இந்த உயிரினங்களைக் கொல்வதால் அவன் எவ்வகையிலும் பாவமிழைக்கவில்லை என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி விளக்குகிறார்.
அடையாளம் காண முடியாத அளவும் பல உயிரினங்கள் மிக நுண்ணியவையாக இருக்கின்றன. கண்ணிமைப்பதால் மட்டுமே கூட அவை அழிக்கப்படுகின்றன.(26) கோபம் மற்றும் செருக்கைக் கைவிட்டு, தவசியின் வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள், கிராமங்களையும், நகரங்களையும் விட்டு வனத்திற்குச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அம்மனிதர்கள் திகைப்படைந்து மீண்டும் இல்லற வாழ்வையே நோற்கின்றனர்.(27) (இல்லறத்தை நோற்கும்) பலர் மண்ணை உழுது, மூலிகைகளைப் பறித்து, மரங்களை வெட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொன்று வாழும் பலர் வேள்விகளைச் செய்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.(28) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களும், தண்டமுறை கொள்கை முறையாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன என்பதில் நான் எந்த ஐயமும் கொள்ளவில்லை.(29) இவ்வுலகில் இருந்து தண்டமுறை {தண்டிக்கும் சட்டம்} நீக்கப்பட்டால் விரைவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீரில் உள்ள மீன்களைப் போல, வலிமையான விலங்குகள், பலவீனமானவற்றை உணவாகக் கொள்கின்றன.(30)
அணைந்துவிட்ட நெருப்புகளே கூட ஊதப்படும்போது அச்சத்தால் மீண்டும் சூடர்விடுகின்றன. இது பலம் அல்லது தண்டனையின் மீது கொண்ட அச்சத்தாலேயே விளைகிறது.(31) தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திப் பார்க்க இவ்வுலகில் தண்டமில்லையென்றால், மொத்த உலகும் இருளில் மூழ்கி, அனைத்துப் பொருட்களும் குழப்பத்தை அடைந்திருக்கும்.(32) விதிகளை மீறுபவர்களும், நாத்திகர்களும், வேதங்களை ஏளனம் செய்பவர்களும் தண்டத்தால் பீடிக்கப்பட்டால், விரைவில் அவர்கள் விதிகளையும், வரைமுறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.(33) இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தண்டமுறையால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். தண்டத்தில் கொண்ட அச்சத்தால் ஒரு மனிதன் விதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றுகிறான்.(34) தண்டமானது, நால்வகையினரின் அறம், பொருள் மற்றும் இன்பத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களை நல்லோராக, பணிவுள்ளோராக மாற்றவும் படைப்பாளனால் விதிக்கப்பட்டிருக்கிறது.(35)
தண்டத்தால் அச்சத்தைத் தூண்டமுடியவில்லையெனில், அண்டங்காக்கைகளும், இரைதேடும் விலங்குகளும், பிற உயிரினங்கள் அனைத்தையும், மனிதர்களையும், வேள்விக்குத் தேவையான தெளிந்த நெய்யையும் உண்டிருக்கும்.(36) தண்டமுறை எவரையும், ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், ஒருவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள், ஒருவரும், காரம்பசுவில் பால் கறக்க மாட்டார்கள், ஒரு கன்னிகையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்[5].(37) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அனைத்துப் பக்கங்களிலும் குழப்பமும் அழிவும் நேர்ந்து, அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு, உடைமை என்ற கருத்தே காணாமல் போயிருக்கும்.(38) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வருடாந்தர வேள்விகளை ஒருபோதும் மக்களால் முறையாகச் செய்ய முடியாது.(39) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், எந்த வாழ்வுமுறையைச் சேர்ந்தவரும், (சாத்திரங்களில்) அறிவிக்கப்பட்டிருக்கும் அவனது வாழ்வுமுறைக்கான கடமைகளை நோற்க முடியாது, அவன் ஒருபோதும் அறிவை அடையவும் முடியாது.(40)
[5] "காரம்பசுக்கள் தண்டத்தின் மீது கொண்ட அச்சத்தால் மட்டுமே பால் கறக்கப்படும் துன்பத்தை அனுபவிக்கின்றன. அதேபோல் கன்னிகையரும், மன்னன், சமூகம் அல்லது அடுத்த உலகின் யமன் ஆகியவற்றின் மீது கொண்ட அச்சத்தினாலேயே சுதந்திரக் காதலைப் பயிலாதிருக்கிறார்கள் என்பதே இங்கே பொருளாக இருக்கக்கூடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒட்டகங்களோ, காளைகளோ, குதிரைகளோ, கோவேறு கழுதைகளோ, கழுதைகளோ தேரில் பூட்டப்பட்டாலும் தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அவை அந்தத் தேர்களையும், வண்டிகளையும் இழுக்காது.(41) தண்டனையைச் சார்ந்த அனைத்துயிரினங்களும் இருக்கின்றன. எனவே, கல்விமான்கள் தண்டனையே அனைத்திற்கும் வேராக இருக்கிறது என்று சொல்கின்றனர். மனிதர்கள் விரும்பும் சொர்க்கமும், இந்த உலகமும் கூட அந்தத் தண்டத்திலேயே இருக்கிறது.(42) எங்கே எதிரிகளை அழிக்கும் தண்டமுறை நன்றாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே பாவமோ, வஞ்சனையோ, எந்தத் தீமையோ காணப்படாது.(43) தண்டக் கோல் உயர்த்தப்படவில்லையெனில், நாயும் வேள்வி நெய்யை நக்கும். முதல் (வேள்விக்) கொடையைக் காகங்கள் எடுத்துச் சென்றுவிடும்.(44) நியாயமான முறையிலேயோ, நியாயமற்ற முறையிலேயோ, இப்போது இந்த நாடு நமதாகியிருக்கிறது. எனவே, நீர் அதை அனுபவித்து வேள்விகளைச் செய்வீராக.(45)
தங்கள் அன்பு மனைவியருடன் (மற்றும் பிள்ளைகளுடன்) வாழும் நற்பேறு பெற்ற மனிதர்கள், நல்ல உணவை உண்டு, சிறந்த ஆடைகளை உடுத்தி, மகிழ்ச்சிகரமாக அறத்தை அடைகின்றனர்.(46) நமது செயல்கள் அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே இருக்கின்றன என்பதிலும், அந்தச் செல்வமானது தண்டமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை எனவே, தண்டமுறையின் முக்கியத்துவத்தைக் காண்பீராக.(47) உலகத்தின் உறவுகளைப் பராமரிக்க மட்டுமே கடமைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. தீங்கிழையாமை மற்றும் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்ட தீங்கிழைப்பு ஆகிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் எதனால் அறத்தை அடையமுடியுமோ அதுவே மேன்மையானதாகும்.(48) எந்தச் செயலும் முற்றாகத் தகுதி நிறைவுற்றதுமல்ல; அதே போல எதுவும் முற்றான தீமையும் அல்ல. செயல்கள் அனைத்திலும் நல்லது, அல்லது ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.(49) விதை நீக்கலுக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் கொம்புகளும் வெட்டப்படுகின்றன. பிறகு அவை பளு சுமப்பதற்காகக் {மூக்கணாங்கயிற்றால்} கட்டப்படவும் தண்டிக்கப்படவும் {அடிக்கப்படவும்} செய்யப்படுகின்றன.(50)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உறுதிப்பாடில்லாத போலியான, நிந்தனைகளால் அழுகுகின்ற, வலிநிறைந்த இவ்வுலகில், மேலே குறிப்பிட்ட விதிகள் மற்றும் உறவுகளைப் பின்பற்றிப் பழங்காலத்து மனிதர்களின் பழக்க வழங்கங்களைப் பயில்வீராக.(51) வேள்விகளைச் செய்வீராக, கொடையளிப்பீராக, உமது குடிகளைக் காப்பீராக, அறம்பயில்வீராக. ஓ! குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ! மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ! பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(55) புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு மனிதனைப் போலவே உயிரினங்கள் அடுத்தடுத்த உடல்களில் நுழைகின்றன.(56) சிதைந்த வடிவங்களைக் கைவிடும் ஓர் உயிரினம் புதிய வடிங்களை அடைகிறது. உண்மையைக் காண இயலும் மக்கள் இந்த மாற்றத்தையே மரணமாகக் கருதுகிறார்கள்" என்றான் {அர்ஜுனன்}".(57)
சாந்திபர்வம் பகுதி – 15 ல் உள்ள சுலோகங்கள் : 57
ஆங்கிலத்தில் | In English |