The condition of Draupadi's locks! | Shanti-Parva-Section-16 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : கடந்த கால அவமதிப்புகளை யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டிய பீமன்; உடல், மனம் ஆகியவற்றின் தன்மைகளையும், நோய்களையும் விவரிப்பது; உடலுக்கு மனமும், மனத்திற்கு உடலும் தீர்வாக இருப்பதைச் சொல்லி பழைய அவமதிப்புகளை நினைத்துப்பார்த்தால் செய்யப்பட்ட படுகொலைகள் அனைத்தும் நியாயமானவையே எனச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அர்ஜுனன் பேசி முடித்ததும், பெரும் கோபமும் சக்தியும் கொண்டவனான பீமசேனன், தன் பொறுமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, தன் அண்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நீர் கடமைகள் அனைத்தையும் அறிந்தவராவீர். நீர் அறியாதது ஏதுமில்லை. நாங்கள் எப்போதும் உமது நடத்தையையே பின்பற்றி நடக்கவே விரும்புகிறோம், ஆனால், ஐயோ, எங்களால் இதைச் செய்ய முடியாது.(2) "நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்பதே எனது மனத்தின் விருப்பம். எனினும், பெருந்துயரால் உந்தப்பட்டு எதையாவது சொல்லும் கட்டாய நிலையை நான் அடைந்திருக்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்பீராக. உமது அறிவு மயக்கத்தால், அனைத்தும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது, நாங்களும் உற்சாகமற்றவர்களாவும், பலவீனர்களாகவும் ஆக்கப்படுகிறோம்.(4) உலகின் ஆட்சியாளராக, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவராக இருக்கும் நீர் உற்சாகமற்றதன் விளைவால் எவ்வாறு ஒரு கோழையைப் போல அறிவு மயக்கத்தை அடைந்தீர்?(5)
உலகத்தின் நேர்மையான வழியையும், நேர்மையற்ற வழிகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ! பலமிக்கவரே, தற்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சொந்தமானது ஏதுமில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர்.(6) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அரசுரிமையை நீர் ஏற்க வேண்டிய காரணங்களை உமக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்தோடு கேட்பீராக.(7) உடல் சார்ந்த, மனம் சார்ந்த இரண்டு வகை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றதிலிருந்தே உதிக்கிறது. அவற்றில் ஏதும் தனித்திருப்பதைக் காண முடியாது. மனநோய்கள் உடல் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதேபோல உடல் நோய்களும் மனம் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன. இதுவே உண்மை.(9) கடந்த கால உடல் துயரம் அல்லதும் மனத்துயரின் காரணமாக வருந்துபவன், அந்தத் துயரத்தால் துயரத்தையே அறுவடை செய்து, இரு மடங்கு துயரை அடைகிறான்.(10)
குளிர், வெப்பம், காற்று, ஆகிய மூன்றும் உடலின் தன்மைகளாகும்[1]. அவை இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பது உடல் நலத்தின் அடையாளமாகும்.(11) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர் வெப்பத்தால் தடுக்கப்படுகிறது, வெப்பமும் குளிரால் தடுக்கப்படுகிறது.(12) நற்குணம், ஆசை, இருள் ஆகிய இம்மூன்றும் மனத்தின் தன்மைகளாகும். இம்மூன்றும் இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பதே (மன) நலத்திற்கான அடையாளமாகும்.(13) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. துன்பம் இன்பத்தால் தடுக்கப்படுகிறது, இன்பமும் துன்பத்தால் தடுக்கப்படுகிறது.(14) தற்காலத்தில் இன்பமாக வாழும் ஒருவன், கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறான். தற்போது துன்பத்தில் வாழும் மற்றொருவன், தனது கடந்த கால அருளை நினைத்துப் பார்க்க விரும்புகிறான்.(15)
[1] "சளி, பித்தம் மற்றும் வாயு என்று வேறுபெயரிலும் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சீதம், உஷ்ணம், வாயுவென்னும் இம்மூன்று குணங்களும் சரீரத்திலுண்டானவைகள்" என்று இருக்கிறது.
எனினும், துயரத்தின் போது கவலையாகவோ, அருளின் போது மகிழ்ச்சியாகவோ நீர் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அருட்காலத்தில் கவலையடையவோ, துன்பகாலத்தில் மகிழ்ச்சியடையவோ நீர் உமது நினைவுத்திறனைப் பயன்படுத்தக் கூடாது. விதியே அனைத்திலும் வலிமைமிக்கதாகத் தெரிகிறது. அல்லது, இவ்வாறு பாதிப்படைந்திருப்பதன் விளைவால் உண்டான உமது இயல்பாக இஃது இருக்குமானால்,(16-17) சொற்ப ஆடையுடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, தனது மாதவிடாய் காலத்தில் சபைக்கு இழுத்து வரப்பட்டதைக் கண்டதை நினைக்க இயலாதவராக நீர் எவ்வாறு இருக்கிறீர்[2].(18) நாம் (குரு) நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், நாம் நாடு கடந்து, மான்தோலுடுத்தி (காட்டுக்குள்) இருந்ததையும், அந்த நமது காட்டு வாழ்வையும் நீர் ஏன் நினைக்கவில்லை.(19) ஜடாசுரன் ஏற்படுத்திய துன்பங்களையும், சித்திரசேனனுடனான போரையும், சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} கரங்களில் அடைந்த துயரத்தையும் நீர் ஏன் மறந்துவிட்டீர்?(20) தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் இளவரசி திரௌபதி கீசகனால் உதைக்கப்பட்டதை நீர் ஏன் மறந்தீர்?(21)
[2] "அதாவது, ’இன்பத்திலும் துன்பத்தை நினைத்துப் பார்ப்பது உமது இயல்பென்றால், உமது மனைவி அவமதிக்கப்பட்டதை ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறீர்? அந்த அவமதிப்பை நினைத்தால் கோபத்தால் நிறையும் நீர், உமது மனைவியை அவமதித்தவர்களைக் கொன்றது மிகச் சரியே எனச் சமாதானமடைந்திருப்பீர்’ என்பதே இவ்வரியின் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, பீஷ்மருடனும், துரோணருடனும் நீர் போரிட்டதைப் போன்ற கடுமையான போரே இப்போது உம் முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் நீர் உமது மனத்தைக் கொண்டே போரிட வேண்டும்.(22) உண்மையில், இப்போது உம்முன்னிலையில் இருக்கும் போரில், கணைகள், நண்பர்கள், உறவினர்கள் சொந்தங்கள் ஆகியவற்றுக்கான தேவையில்லை, ஆனால் அதில் நீர் உமது மனத்தால் மட்டுமே போரிட வேண்டும்.(23) இந்தப் போரில் நீர் வெல்வதற்கு முன்பே உமது உயிர்மூச்சைவிட்டுவிட்டால், பிறகு மற்றொரு உடலை அடைந்து நீர் இதே எதிரிகளுடன் நீர் போரிட வேண்டியிருக்கும்[3].(24) எனவே, ஓ! பாரதரே, அந்தப் போரை இன்றே போரிட்டு, உடல் குறித்த அக்கறையில்லாமல் உமது செயல்பாடுகளின் மூலம் உமது மனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை வெல்வீராக. அந்தப் போரை உம்மால் வெல்ல முடியவில்லையெனில், உமது நிலை என்னவாகும்? மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அதை நீர் வென்றால், வாழ்வில் உயர்ந்த கதியை அடைவீர்.(26)
[3] "செழிப்பு மற்றும் நாடு ஆகியவற்றை நீர் கைவிடுவதன் விளைவால், வேள்வி, கொடைகள் மற்றும் பிற பக்திச் செயல்பாடுகளின் மூலம் உமது விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை இழப்பதால், நீர் மீண்டும் பிறந்து, உமது ஐயங்களுடன் இந்த மனப்போரைப் புதிதாகச் செய்ய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதில் உமது அறிவைச் செலுத்தி, உயிரினங்களின் சரியான மற்றும் தவறான பாதைகளை உறுதி செய்து கொண்டு, உமக்கு முன்னால் உமது தந்தையர் ஏற்று நடந்த பாதையைப் பின்பற்றி, உமது நாட்டை முறையாக ஆள்வீராக.(27) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாவி துரியோதனனும், அவனது தொண்டர்கள் அனைவரும் கொல்லப்பட்டது நற்பேற்றாலேயே. திரௌபதியின் குழல்களின் நிலையை நீர் அடைந்ததும் நற்பேற்றினாலேயே[4].(28) முறையான சடங்குகளுடனும், அபரிமிதமான கொடைகளுடன் ஒரு குதிரை வேள்வியைச் செய்வீராக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நாங்களும், பெரும் சக்தி கொண்டவனான வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உமது பணியாட்களாவோம்" என்றான் {பீமன்}.(29)
[4] "திரௌபதியின் குழல்களின் நிலை: அதாவது, நீர் இயல்பான நிலைக்கு மீண்டிருக்கிறீர். துச்சாசனனால் பற்றி இழுக்கப்பட்ட நாளில் இருந்தே திரௌபதி தனது குழல்களை முடியாதிருந்தாள். குருக்கள் கொல்லப்பட்ட பிறகே, அந்தக் குழல்கள் முன்பு போல் கட்டப்பட்டன {பின்னப்பட்டன}, அல்லது அதன் இயல்பான நிலையை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |