Fools, who are accomplished in the science of argumentation! | Shanti-Parva-Section-19 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது...
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)
போரோடு தொடர்புடைய கடமைகள் அனைத்திலும், பல்வேறு செயல்களின் திறனைப் பொறுத்தவரையிலும் மூவுலகங்களிலும் உனக்கு இணையானவன் எவனும் இல்லை.(6) எனவே, பிறரால் ஊடுருவிப் பார்க்கமுடியாத நுணக்கங்களைக் கொண்ட அக்காரியங்களுடன் தொடர்புடைய நுணுக்கங்களைக் {போர் நுணுக்கங்களைக்} குறித்து நீ பேசலாம். எனினும், என் நுண்ணறிவில் ஐயங்கொள்வது உனக்குத் தகாது.(7) நீ போரறிவியலை அறிந்தவனே, ஆனால் ஒருபோதும் பெரியோருக்காகக் காத்திருந்தவனில்லை. அக்காரியத்தைக் குறித்து விரிவாகக் கற்ற பெரியோரின் தீர்மானங்களை நீ அறியமாட்டாய். தவம், துறவு, பிரம்ம அறிவு ஆகியவற்றில் முதலை விட இரண்டாவது மேன்மையானது, இரண்டாவதை விட மூன்றாவது மேன்மையானது.(8,9) எனினும், செல்வத்தை விட மேன்மையானது ஏதுமில்லை என நீ நினைப்பது பிழையே. செல்வமானது, அவ்வொளியில் {அவ்வாறு மேன்மையானதாக} உனக்குத் தோன்றாதவாறு உன்னை என்னால் நம்ப வைக்க முடியும்.(10)
அறவோர் அனைவரும் தவத்துறவுகளிலும், வேதகல்வியிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காணலாம். அழியாத உலகங்கள் பலவற்றைக் கொண்ட முனிவர்களும் கூட, தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டிருக்கின்றனர்.(11) ஆன்ம அமைதி கொண்டவர்களும், எதிரிகளற்றோரும், வனங்களில் வசிப்போருமான வேறு சிலர் {சில ஆரியர்கள்}, தவங்கள் மற்றும் வேத கல்வியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.(12) உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள ஆசையைத் தவிர்த்து, மடமையில் பிறக்கும் இருளை {அறியாமையை} விலக்கி, வடக்கு நோக்கி (ஒளிப்பாதைகளில் சென்று) துறவிகளுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைகின்றனர்.(13) தெற்கில் கிடப்பதும், ஒளி உலகங்களுக்கு வழிகோலுவதுமான பாதையானது, செயலில் அர்ப்பணிப்பு கொண்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும், இறப்புக்கும் உடன்படும் மனிதர்கள் அதையே {தென்திசையில் இருக்கும் யமலோகத்தையே} அடைகின்றனர்.(14) எனினும், முக்தியில் விருப்பம் கொண்டோர் தங்கள் கண்களுக்கு முன்பு வைத்திருக்கும் {சொல்லையும், மனத்தையும் கடந்த} எல்லையானது விவரிக்க முடியாததாகும். அதை அடைவதற்கு யோகமே சிறந்த வழிமுறையாகும். அதை (உனக்கு) விளக்கிச் சொல்வது எளிதானதல்ல.(15)
கல்விமான்கள், எது உண்மையல்ல என்பதைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில் சாத்திரங்களை நினைவுகூர்ந்து வாழ்கின்றனர். எனினும், பெரும்பாலும் அவர்கள் இதில் வழி தவறி, தாங்கள் தேடும் பொருளானது, இதிலிருக்கிறது, அதிலிருக்கிறது என்று நம்புகின்றனர்.(16) வேதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் இருந்து பலவற்றைத் திரட்டினாலும், வேரறுந்த வாழை மரத்தில் கடினமான மரப்பகுதியை {அதன் சாரத்தைக்} காண முடியாத மனிதர்களைப் போல, அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர்.(17) ஆன்மாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையில்லாத சிலர், அதை {அந்த ஆன்மாவை}, ஆசை மற்றும் வெறுப்பு (மற்றும் பிற) தன்மைகளை {குணங்களைக்} கொண்டதாகவும், ஐம்பூதங்களாலான இந்த உடற்கட்டுக்குள் இருப்பதாகவும் கருதுகின்றனர்[1].(18) கண்ணால் காணப்பட இயலாத, வார்த்தைகளால் சொல்லப்பட இயலாத, மிக நுணுக்கமான அது {ஆன்மா}, செயலின் வேரைத் தன் முன்னிலையில் கொண்டு, உயிரினங்களுக்கு மத்தியில் (மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்) வட்டத்தில் சுழன்று வருகிறது[2].(19) ஒருவன், தனது மனத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்து வகை அருளையும் ஊற்றெடுக்கச் செய்யும் ஆன்மாவைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தால், அவன் முற்றிலும் விடுதலையடைந்தவனாகப் பேரின்பத்தை அடைவான்.(20)
[1] "ஆசை, வெறுப்பு, விருப்பம், இன்பம், வலி, அறிவுப்புலங்கள் ஆகியவற்றின் குணங்களால் ஆன்மா அல்லது மனம் வேறுபடுகிறது என்று சொல்வதும், நன்கறியப்பட்டதுமான நியாயத் தத்துவத்தை இங்கே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "ஆன்மாவானது உண்மையில் குணங்களற்றதாக இருப்பினும், ஏற்கனவே எதில் வசித்திருக்கிறதோ, அதன் அழிவில் வேறு உடல்களுக்குள் நுழைந்து உயிரினங்களுக்கு மத்தியில் வட்டமாகச் சுழன்று வருகிறது. இந்த வட்டத்தில், அல்லது தொடர்பயணத்தின் காரணம் அவித்யை அல்லது மாயையாகும்; அதாவது மனிதர்கள் எதில் ஈடுபடுவார்களோ அந்தச் செயல்பாட்டின் விளைவால் உண்டாகும் அறிவிழப்பாகும். அந்த அவித்யையிலிருந்து விடுபட்டால் செயல்பாடு நின்று, ஆன்மாவானது, அனைத்துக் குணங்களும் அற்ற அதன் உண்மை இயல்பில் வெளிப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்லோரால் பின்பற்றப்படுவதும், ஞானிகளால் அடையப்படுவதுமான அத்தகு பாதை இருக்கும்போது, ஓ! அர்ஜுனா, அனைத்து வகைப் பேரிடரும் நிறைந்த செல்வத்தை நீ ஏன் மெச்சுகிறாய்?(21) ஓ! பாரதா, சாத்திரங்களை அறிந்தவர்களும், கொடைகள், வேள்விகள், செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் ஈடுபடுபவர்களுமான பழங்காலத்து மனிதர்களும், {உன்னைப் போன்றே} இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.(22) ஓ! பாரதா, முறைப்படி விவாதிக்கும் அறிவியலில் {தர்க்க சாஸ்திரத்தில்} சாதிக்கும் சில மூடர்கள், தங்கள் முற்பிறவி குற்றங்களுடைய வலிமையின் விளைவால், ஆன்மாவின் இருப்பை மறுக்கின்றனர். இறுதி விடுதலையை {முக்தியைக்} குறித்த இந்த உண்மையை அவர்களை ஏற்கச் செய்தல் மிகக் கடினமானதாகும்[3].(23) அந்தத் தீய மனிதர்கள், பெரும் கல்வியறிவைக் கொண்டவர்களாயிருப்பினும், பூமி முழுவதும் பயணித்து, சபைகளில் உரையாற்றி, விடுதலை {முக்தி} குறித்த உண்மைக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.(24) ஓ! பார்த்தா, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? உண்மையில், அதைப் போலவே (அந்த மனிதர்களால் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே), சாத்திரங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட ஞானியரையும், பக்திமான்களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.(25) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உண்மையை அறிந்த மனிதர்கள், தவத்தினாலும், நுண்ணறிவினாலும் பிரம்மத்தை அடைந்து, துறவினால் பேரின்பத்தை அடைகின்றனர்" என்றான் {யுதிஷ்டிரன்}".(26)
[3] "இங்கே சொல்லப்படும் ஹேதுமந்தா பண்டிதா Hetumantah Panditah என்பது, பகுத்தறிவின் அறிவியலைக் கற்றோர் என்பதாகும். திருடபூர்வே Dridhapurve என்பதன் பொருள் முற்பிறவியின் வலிமைமிக்க குற்றங்கள் எனவும், சுதுராவர்த்தம் Suduraavartah என்பதன் பொருள் புரிய வைப்பதற்குக் கடினமானது எனவும் நீலகண்டர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |