Sacrifice and Wealth! | Shanti-Parva-Section-20 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : செல்வம் ஏன் உயர்வானது என யுதிஷ்டிரனுக்கு விளக்கிய முனிவர் தேவஸ்தானர்; வேள்விகளின் அவசியத்தைச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரன் நிறுத்திய பிறகு, நாநயமிக்கப் பெருந்துறவி தேவஸ்தானர், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்.(1)
தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, "செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்று பல்குனன் {அர்ஜுனன்} உன்னிடம் சொன்னான். அக்காரியம் குறித்தே நானும் உன்னிடம் உரையாடப் போகிறேன். சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ நியாயமாக இந்தப் பூமியை வென்றிருக்கிறாய். ஓ! மன்னா, அவளை {பூமியை} வென்ற பிறகு, காரணமேதுமில்லாமல் அவளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(3) வேதங்களில் நான்கு வகை வாழ்வுமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. ஓ! மன்னா, நீ ஒன்றன்பின் ஒன்றாக முறையாக அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.(4) எனவே, அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகளையே நீ தற்போது செய்ய வேண்டும். முனிவர்களிலேயே கூட, சிலர் வேத கல்வி சொல்லும் வேள்வியில் ஈடுபடுகின்றனர், சிலர் அது சொல்லும் அறிவில் ஈடுபடுகின்றனர்.(5)
ஓ! பாரதா, எனவே, தவசிகளே கூடச் செயல்பாட்டுக்கு {கர்மத்திற்கு} அடிமையாக இருக்கிறார்கள் என்பதை நீ அறிய வேண்டும். எனினும், வைகானசர்கள் {வானப்ரஸ்தர்கள்} ’செல்வத்தைத் தேடாதவனே, தேடுபவனைக் காட்டிலும் மேன்மையானவன்’ என்று அறமுரைப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. அந்தக் கட்டளையைப் பின்பற்றுபவன் குற்றங்கள் இழைக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.(6,7) வேத விதிகளின் பொருட்டு, (வேள்விகளைச் செய்வதற்காக) மனிதர்கள் பல்வேறு பொருட்களை ஒன்றாகத் திரட்டுகின்றனர். தன் அறிவால் களங்கப்பட்டவன், செல்வத்தைத் தகுந்தோருக்கு அளிக்காமல், தகாதவர்களுக்கு அளிப்பதால், அவன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைக்கிறான் என்பதை அறியாதிருக்கிறான்[2].(8) தகுந்தவர்களுக்கும், தகாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டு, முறையாக ஈகைக் கடமையாற்றுவது எளிதானதல்ல. விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, வேள்விக்காகவே செல்வத்தைப் படைத்தான். செல்வத்தைக் கவனிக்கவும், வேள்வியைச் செய்யவும் அவன் மனிதர்களையும் படைத்தான். இதன் காரணமாக ஒருவனுடைய மொத்த செல்வத்தையும் வேள்விக்குப் பயன்படுத்தலாம். இயற்கையின் விளைவாக இன்பமே அதைப் பின்தொடரும்.(10)
[1] "செல்வமில்லாமல் வேள்விகள் செய்ய முடியாதெனில், செல்வமடைந்த பிறகு அவற்றைச் செய்வதைவிட, செய்யாமலிருப்பதே சிறப்பு. நீலகண்டர், தனஹேது Dhanahetu என்பதைச் செல்வத்தின் மூலம் நடத்தப்படும் வேள்விகள் என்ற நேரடி பொருளில் சொல்லியிருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஓ குந்தி புத்ரரே, ‘ஆசைப்பட்டுப் பொருளைச் சம்பாதித்துக் கர்மத்தைச் செய்வதைக் காட்டிலும் ஆசையை விடுவதுதான் பெரிது’ என்று வானப்பிரஸ்தப் பிராமணர்கள் சொல்லுவதாய்க் கேள்விப்படுகிறோம்" என்றிருக்கிறது.[2] "8வது ஸ்லோகத்தின் இறுதி வரியும், 9ம் ஸ்லோகத்தின் முதல் வரியும் ஒன்றாகச் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். நீலகண்டர் ஆத்மானம் என்பதைத் தன் விருப்பத்திற்கு உரிய செல்வம் என்ற பொருளில் விளக்குகிறார். அத்தகு மனிதன், தற்கொலை செய்து கொள்ளும் பாவத்தை இழைப்பதால் கருவைக் கொன்ற பாவியாகிறான். செல்வத்தை முறையற்று பயன்படுத்துவது தற்கொலைக்குச் சமமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பெரும் சக்தி படைத்த இந்திரன், மதிப்புமிக்க அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளைச் செய்தே தேவர்கள் அனைவரையும் விஞ்சினான். அவன், அந்த வழிமுறையிலேயே அவர்களின் தலைமைப் பதவியை அடைந்து சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். எனவே, அனைத்தும் வேள்விகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.(11) மான் தோல் உடுத்தியவனான உயர் ஆன்ம மஹாதேவன், சர்வம் என்றழைக்கப்படும் வேள்வியில் {சர்வமேத யாகத்தில்} தன்னையே காணிக்கையாக {ஆகுதியாக} ஊற்றி, தேவர்களில் முதல்வனாகி, அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் விஞ்சி, அச்சாதனையால் அவர்களைவிட மேன்மையடைந்து, பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(12) அவிக்ஷித்தின் மகனான மன்னன் மருத்தன், {வேள்விகளில் கொடுக்கப்படும்} அபரிமிதமான செல்வத்தால் தேவர்கள் தலைவனான சக்ரனையே {இந்திரனையே} வென்றான். அவன் செய்த பெரும் வேள்வியில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன, ஸ்ரீயும் {லட்சுமியும் உடல் கொண்டவளாக} நேரடியாக அங்கே வந்தாள்.(13) மாமன்னன் ஹரிச்சந்திரன், வேள்விகளைச் செய்து, பெரும் தகுதியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஈட்டினான் என்பதை நீ கேட்டிருக்கிறாய். மனிதனாக இருப்பினும் அவன் தனது செல்வத்தால் சக்ரனையே {இந்திரனையே} வென்றான். வேள்வியில் அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவையே காரணங்கள்" {என்றார் தேவஸ்தானர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |