The counsel of Devasthana! | Shanti-Parva-Section-21 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : ஆட்சியேற்று அறம்பயில வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி யுதிஷ்டிரனை அறிவுறுத்திய முனிவர் தேவஸ்தானர்...
தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக இந்திரனால் கேட்கப்பட்டு, பிருஹஸ்பதியால் அவனுக்கு அளிக்கப்பட்ட உரை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(1) பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "மனநிறைவே உயர்ந்த சொர்க்கம், மனநிறைவே உயர் அருள். மனநிறைவை விட உயர்ந்தது ஏதுமில்லை. மனநிறைவே உயர்ந்த நிலையில் நிற்கிறது.(2) ஆமையானது தனது அங்கங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது ஆசைகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும்போது, அவனது ஆன்மாவின் இயற்கையான பிரகாசம் வெளிப்படுகிறது.(3) ஒருவன் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாத போது, எந்த உயிரினமும் அவனிடம் அச்சங்கொள்ளாத போது, அவன் ஆசையையும், வெறுப்பையும் வெல்லும்போது, தனது ஆன்மாவைக் காண்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(4) செயல், சொல், மனம் ஆகியவற்றால் ஒருவன் எவருக்கும் தீங்கிழைக்க நினைக்காத போது, அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது" என்றார்.(5)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு உயிரினங்கள் எந்த அறத்தைப் பின்பற்றினாலும், அவை அதற்குரிய கனிகளை {பலன்களை} அடைகின்றன. ஓ! பாரதா, இதைக் கருத்தில் கொண்டு விழிப்படைவாயாக[1].(6) சிலர் அமைதியைப் புகழ்கின்றனர், சிலர் விடாமுயற்சியையும், சிலர் அமைதி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டையும் புகழ்கின்றனர். சிலர் வேள்வியைப் புகழ்கின்றனர்[2]; வேறு சிலர் துறவைப் புகழ்கின்றனர். சிலர் கொடைகளையும், வேறு சிலர் அதை ஏற்பதையும் புகழ்கின்றனர்.(7,8) சிலர், (எதிரிகளைக்) கொன்று, வெட்டி, துளைத்து அடையப்படும் அரசுரிமையையும், குடிமக்களைப் பேணுவதையும் புகழ்கிறார்கள்.(9) சிலர் தங்கள் நாட்களை ஓய்வில் கழிப்பதைப் புகழ்கிறார்கள். இவையனைத்தையும் கண்காணித்த கல்விமான்கள்,(10) எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும் அறமே நல்லோரால் மெச்சத்தகுந்தது என்று தீர்மானிக்கின்றனர்[3].
[1] "எவன் பிறரை அச்சுறுத்துகிறானோ, அவன் தானே அச்சமடைந்தவனாவான்; எவன் அச்சுறுத்தவில்லையோ, அவன் அச்சமடைவதில்லை என்று சுருதிகள் சொல்கின்றன. ஒரு மனிதன் தன் செயல்பாடுகளின் கனிகளையே வெல்கிறான். எனவே, பற்றில்லாமல், நியாயமாகச் செய்யப்படும் அரசாட்சி, மறுமையில் அவனுக்கு வெற்றி மகுடம் சூட்டும் என்பதால் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள இங்கே யுதிஷ்டிரன் பரிந்துரைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "நைகம் ந சாபரே Naikam na chaapare என்பது இவ்வாறே நீலகண்டரால் விளக்கப்படுகிறது. உண்மையில் இதன் பொருள், "சிலர் ஏகத்தையோ, மனநிறைவையோ புகழவில்லை என்பதில்லை" என்பதாகும். அதாவது, மனநிறைவையும், தியானத்தையும் புகழ்கிறார்கள் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "சிலர் இன்சொற் சொல்லுதலைக் கொண்டாடுகிறார்கள். மற்ற ஜனங்கள் முயற்சியைக் கொண்டாடுகிறார்கள். இதிலொன்றைச் சிலர் கொண்டாடவில்லை. மற்றொன்றைச் சிலர் கொண்டாடவில்லை. சிலர் இவ்விரண்டையும் கொண்டாடுகிறார்கள். சிலர் யாக முதலிய கர்மத்தைக் கொண்டாடுகிறார்கள். வேறு சிலர் ஸந்யாஸத்தைக் கொண்டாடுகிறார்கள். இவைகளில் ஒன்றைச் சிலரும், மற்றொன்றைச் சிலரும் கொண்டாடுகிறதில்லை. சிலர் இவ்விரண்டையும் முறையே கொண்டாடுகிறார்கள். கொடுப்பதைச் சிலரும் ஏற்பதைச் சிலரும் புகழுகிறார்கள். சிலர் எல்லாவற்றையும் விட்டு மௌனிகளாய்த் தியானஞ்செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர், கொன்றும் அறுத்தும், பிளந்தும் பிராணிகளைப் பாதுகாப்பதாகிய அரசாட்சியைக் கொண்டாடுகிறார்கள். சிலர் ஒன்றுமில்லாவிடத்தில் தியனஞ்செய்கிறார்கள். இவைகளெல்லாம் நன்றாகக் கண்டறிந்த பண்டிதர்களின் நிச்சயமோ, பிராணிகளுக்குத் துரோஹஞ்செய்யாமல் செய்யப்படும் தர்மமே ஸாதுக்களுக்கு ஸம்மதமென்பதுதான்" என்றிருக்கிறது.
தான்தோன்றியான {சுயம்புவான} மனுவால் சொல்லப்படுவது போல, தீங்கிழையாமை, உண்மை நிறைந்த பேச்சு, நீதி, கருணை, தன்னடக்கம்,(11) தன் மனைவியரிடம் (வாரிசுகளை) உண்டாக்கல், இனிமை, பணிவு, பொறுமை ஆகியவற்றைப் பயில்வதே அனைத்து அறங்களிலும் சிறந்ததாகும். எனவே, ஓ! குந்தியின் மகனே, இந்த அறத்தையே நீ கவனமாக நோற்பாயாக.(12) அரசக் கடமைகளின் உண்மைகளை அறிந்த க்ஷத்திரியன் எவனோ, அரசுரிமையே ஏற்று, அனைத்து நேரங்களிலும் தன் ஆன்மாவைக் கட்டுபடுத்தி, அன்புக்குரியவை, அல்லாதவை ஆகியவற்றைச் சமமாகக் கருதி, வேள்வி விருந்துகளில் எஞ்சியவற்றை உண்டு,(13) தீயோரை அடக்கி, நல்லோரை பேணிக் காத்து, அறத்தின் பாதையில் தன் குடிமக்களை நடைபோடச் செய்து, தானும் அவ்வழியிலேயே நடந்து,(14) தன் மகுடத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்த பிறகு, காட்டுக்குச் சென்று, காட்டின் பொருட்களை உண்டு, அங்கேயே வாழ்ந்து, வேத விதிகளின்படி சோம்பலனைத்தையும் களைந்த க்ஷத்திரியன் எவனோ,(15) நன்கறியப்பட்ட மன்னர்களின் கடமைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியும் க்ஷத்திரியன் எவனோ, அவன் இம்மையிலும், மறுமையிலும் அற்புதக் கனிகளை அடைவான் என்பது உறுதியாகும்.
நீ எதைக் குறித்துப் பேசுகிறாயோ அந்த இறுதி விடுதலை {முக்தி} அடைவதற்கரியதாகும். அதைத் தொடர்வதில் பல தடைகள் ஏற்படும்.(16) அத்தகு கடமைகளைப் பின்பற்றி, ஈகையும், தவமும் பயின்று, இரக்க குணத்துடன் கூடி, ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு,(17) நேர்மையாகத் தங்கள் குடிமக்களை ஆட்சி செய்து, பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்காகப் போரிடுபவர்கள் மறுமையில் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(18) ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, இதற்காகவே ருத்திரர்களும், வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யசுகளும், மன்னர்க்கூட்டமும் இவ்வறத்தைப் பின்பற்றுகின்றனர். அறத்தால் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் கடமைகளை எந்த அலட்சியமும் இல்லாமல் பயில்வோர், தங்களுடைய அந்தச் செயல்களின் மூலமே சொர்க்கத்தை அடைகிறார்கள்" என்றார் {தேவஸ்தானர்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 21ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |