Free thyself from fever! | Shanti-Parva-Section-22 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறி, க்ஷத்திரியக்கடமைகளையும், பிராமணக் கடமைகளையும் அவனுக்கு நினைவுறுத்தி, வேள்விகளைச் செய்யுமாறு சொன்ன அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன் பிறகு அர்ஜுனன், மங்கா புகழ் கொண்டவனும், உற்சாகமற்ற இதயம் கொண்டவனும், தன் அண்ணனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! அனைத்து வகைக் கடமைகளையும் அறிந்தவரே, க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று, அடைவதற்கரிதான ஆட்சியுரிமையை அடைந்து, உமது எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகும், நேர் என் துன்பத்தில் எரிகிறீர்?(2) ஓ! மன்னா, க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, போரில் மரணமானது, பல்வேறு வேள்விகளைச் செய்வதை விடத் தகுதி வாய்ந்ததாக {புண்ணியம் நிறைந்ததாகக்} கருதப்படுகிறது. க்ஷத்திரியக்கடமைகள் சொல்லப்பட்டிருக்கும் விதிகளில் இஃது அறிவிக்கப்பட்டிருக்கிறது.(3) தவங்கள், துறவு ஆகியவை பிராமணர்களின் கடமைகளாகும். இவையே ({க்ஷத்திரிய மற்றும் பிராமண} இரு வகைகளையும் பீடித்திருக்கும்) மறுமை குறித்த விதியாகும். உண்மையில், ஓ! பலமிக்கவரே, க்ஷத்திரியர்களுக்குப் போர்க்கள மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது.(4) க்ஷத்திரியர்களின் கடமைகள் மிகவும் கடுமையானவையும், ஆயுதங்களோடு எப்போதும் தொடர்புடையவையும் ஆகும். ஓ! பாரதர்களின் தலைவரே, நேரம் வரும்போது அவர்கள் போர்க்களத்தில் ஆயுதங்கள் மூலம் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(5)
ஓ! மன்னா, க்ஷத்திரியர்கள் பிராமணர்களில் இருந்தே உதித்தவர்கள் என்பதால், ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளை நோற்று வாழ்ந்தாலும், அது நிந்திக்கத்தக்கதல்ல.(6) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, துறவோ, வேள்வியோ, தவங்களோ, பிறரின் செல்வத்தைச் சார்ந்திருப்பதோ க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்படவில்லை.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் கடைமைகள் அனைத்தையும் அறிந்த அற ஆன்மாவாவீர். அனைத்துச் செயல்களிலும் திறன்மிக்கவரும், ஞானியுமான மன்னன்னுமாவீர். இவ்வுலகில் சரியானது மற்றும் தவறானதுக்கிடையில் உம்மால் வேறுபாட்டைக் காணமுடியவில்லை.(8) துக்கத்தால் உண்டான மனத்தளர்வைக் கைவிட்டு, செயல்பாட்டில் பலமான விருப்பம் கொள்வீராக. குறிப்பாக க்ஷத்திரியனின் இதயமானது வஜ்ரத்தைப் போன்று கடுமையானதாகும்.(9) க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று உமது எதிரிகளை வென்ற பிறகு, முட்களற்ற பேரரசை அடைந்த நீர், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, உமது ஆன்மாவை வென்று வேள்விகளைச் செய்வதிலும், ஈகை பயில்வதிலும் ஈடுபடுவீராக.(10)
இந்திரன், பிராமணனாக இருப்பினும், தன் செயல்பாடுகளாக ஒரு க்ஷத்திரியனாகி, எண்ணிக்கையில் எண்ணுற்று பத்து {810} மடங்கு இருந்த பாவிகளான தன் சொந்தங்களுடன் போரிட்டான்.(11) ஓ! ஏகாதிபதி, அவனது அந்தச் செயல்கள் புகழத்தக்கனவும், பாராட்டுக்குத் தகுந்தனவும் ஆகும். நாம் கேள்விப்படுவதன்படியே அவன் தேவர்களின் தலைமைப் பதவியையும் அதன் மூலமே அடைந்தான்.(12) எனவே, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அந்த இந்திரன் செய்ததைப் போலவே அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, உமது நோயிலிருந்து விடுபடுவீராக.(13) ஓ! க்ஷத்திரியர்களில் காளையே கடந்த காலத்திற்காக இவ்வாறு வருந்தாதீர். கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களால் தூய்மையடைந்து, க்ஷத்திரிய அறத்தின் விதிகளுக்கு ஏற்புடைய உயர்ந்த கதியை அடைந்திருக்கிறார்கள்.(14) எது நடந்ததோ அதுவே நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, விதியானது தடுக்கப்பட இயலாததாகும்" என்றான் {அர்ஜுனன்}".(15)
சாந்திபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 15
ஆங்கிலத்தில் | In English |