Sankha, Likhita and Sudyumna! | Shanti-Parva-Section-23 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! இனிய யுதிஷ்டிரா, அர்ஜுனனின் வார்த்தைகள் உண்மையானவை. சாத்திரங்கள் தீர்மானிக்கும் உயர்ந்த அறமானது இல்லறக் கடமைகளைச் சார்ந்தே இருக்கிறது. நீ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனாவாய். உனக்காகப் பரிந்துரைக்கப்படும் (இல்லறக்) கடமைகளை முறையாக நோற்பாயாக. இல்லறக் கடமைகளைத் துறந்து காட்டுக்குள் ஓயும் வாழ்வானது உனக்காக விதிக்கப்படவில்லை.(3) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் (தங்கள் வாழ்வாதாரத்தை அடைய) இல்லற வாழ்வை வாழ்வும் மனிதனைச் சார்ந்தே இருக்கின்றனர்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஆகியனவும் இல்லற வாழ்வு வாழும் மனிதர்களாலேயே தாங்கப்படுகின்றன. எனவே, அவ்வாழ்வு முறைக்குச் சொந்தமானவனே (பிறர் அனைவரிலும்) மேன்மையானவன் ஆவான்.(5)
நால்வகை வாழ்வு முறைகளிலும், இல்லற வாழ்வே மிகக் கடினமானதாகும். ஓ! பாரத்தா, புலனடக்கம் இல்லா மனிதர்கள் பயில்வதற்குக் கடினமான அந்த வாழ்வு முறையையே நீ நோற்பாயாக.(6) நீ வேதங்கள் அனைத்திலும் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறாய். பெரும் தவத் தகுதியையும் ஈட்டியிருக்கிறாய். எனவே, உன் மூதாதையரின் நாட்டுச் சுமையை ஓர் எருதைப் போலச் சுமப்பதே உனக்குத் தகுந்ததாகும்.(7) வெற்றியடைவதற்காகத் தவங்கள், வேள்விகள், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கல்வி, துறவு, புலனடக்கம், மனநிறைவு, தனிமையில் வாழ்தல், ஆழ்ந்த தியானம், (பிரம்ம) அறிவு ஆகியற்றை, தங்கள் சிறப்பான முயற்சியால் பிராமணர்களே நோற்க வேண்டும்.(8)
நான் இப்போது உனக்கு க்ஷத்திரியர்களின் கடமைகளைச் சொல்லப் போகிறேன். அவை நீ அறியாதனவல்ல. வேள்வி, கல்வி, முயற்சி {உழைப்பு}, குறிக்கோள்[1],(9) "தண்டக்கோல் {செங்கோல்} தரித்தல், கடுமை, குடிகளைக் காத்தல், வேதங்களில் அறிவு, அனைத்து வகை நோன்புகளையும் பயிலல், நன்னடத்தை, செல்வமீட்டல், தகுந்த மனிதர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை,(10) அரச வகையைச் சேர்ந்தவர்களால் அடையப்பட்டு, நன்றாகச் செய்யப்பட்டால், அவை அவர்களை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) ஓ! குந்தியின் மகனே, இவற்றில் தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்தலே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. ஒரு க்ஷத்திரியனுக்குள் பலமும், அந்தப் பலத்திற்குள் தண்டமும் எப்போதும் வசித்திருக்க வேண்டும்.(12) ஓ! மன்னா, நான் சொல்லும் இந்தக் கடமைகள் க்ஷத்திரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையும், அவர்களது வெற்றியில் பெரும் பங்காற்றுபவையுமாகும். இது தொடர்பாகப் பிருஹஸ்பதி ஒரு வரியைப் பாடியிருக்கிறார்.(13) "எலியை விழுங்கும் பாம்பைப் போல, அமைதியை விரும்பும் ஒரு மன்னனையும், இல்லறத்தில் மிகுந்த பற்றைக் கொண்ட ஒரு பிராமணனையும் பூமி விழுங்கிவிடும்" என்று பாடியிருக்கிறார்.(14) அரசமுனியான சுத்யும்னன், தண்டக்கோலை {செங்கோலை} மட்டுமே தரித்து, பிரசேதசின் மகனான தக்ஷனைப் போல உயர்ந்த வெற்றியை அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்" என்றார் {வியாசர்}.(15)
[1] கொண்டவற்றில் நிறைவில்லாமை எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, பூமியின் தலைவனான சுத்யும்னன் எந்தச் செயல்களால் அந்த உயர்ந்த வெற்றியை அடைந்தான்? அம்மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(16)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது. கடும் நோன்புகளை நோற்பவர்களாகச் சங்கன் மற்றும் லிகிதன் என இரு சகோதரர்கள் இருந்தனர்.(17) அந்த இரு சகோதரர்களும், அழகிய இரு வசிப்பிடங்களைத் தனித்தனியே கொண்டிருந்தனர். பாஹுதை என்றழைக்கப்படும் ஓடையின் கரையில் அமைந்திருந்த அந்த வசிப்பிடங்கள், மலர்கள் மற்றும் கனிகளை எப்போதும் சுமந்திருக்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) ஒரு சமயம், லிகிதர் என்பவர், தமது சகோதரரான சங்கரின் வசிப்பிடத்திற்கு வந்தார். அந்நேரத்தில் ஏதோ காரியத்திற்காகச் சங்கர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்.(19) தமது சகோதரரின் ஆசிரமத்திற்கு வந்த லிகிதர் கனிந்த பல கனிகளைப் பறித்தார்.(20) அவற்றை அடைந்த அந்த மறுபிறப்பாள {பிராமண} லிகிதர், மனசாட்சியின் எந்த ஐயவுணர்வும் இன்றி அவற்றை உண்டார். அப்படி அவர் உண்டு கொண்டிருந்தபோது, சங்கர் தமது ஓய்வில்லத்திற்கு வந்தார்.(21)
அவ்வாறு உண்டுகொண்டிருக்கும் தமது சகோதரனைக் கண்ட சங்கர், அவனிடம், "இக்கனிகளை எங்கே நீ அடைந்தாய்? எக்காரணத்திற்காக இவற்றை உண்கிறாய்?" என்று கேட்டார்.(22) தமது அண்ணனை அணுகி, அவரை வணங்கிய லிகிதர், சிரித்துக் கொண்டே அவரிடம், "நான் இவற்றை இந்த ஓய்வில்லத்திலேயே அடைந்தேன்" என்றார்.(23) பெரும் சினத்தில் நிறைந்த சங்கர் அவரிடம், "இக்கனிகளை எடுத்ததால் நீ திருட்டுக் குற்றத்தை இழைத்திருக்கிறாய்.(24) செல்வாயாக, மன்னனிடம் சென்று, நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வாயாக. அவனிடம் {மன்னனிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, எனக்குக் கொடுக்கப்படாததை அடைந்து குற்றத்தை இழைத்துவிட்டேன்.(25) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என்னைக் கள்வனாக அறிந்து கொண்டு, உன் வகைக்கான கடமையை நோற்று, கள்வனுக்கான தண்டனையை எனக்கு வழங்குவாயாக" எனச் சொல்" என்றார் {சங்கர்}.(26)
இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான லிகிதர், தமது அண்ணனின் ஆணையின் பேரில் மன்னன் சுத்யும்னனிடம் சென்றார்.(27) மன்னன் சுத்யும்னன், லிகிதர் வந்திருக்கிறார் என்பதை வாயில்காப்போரிடம் இருந்த கேட்டு, (அந்தத் தவசியை) வரவேற்பதற்காகத் தன் அமைச்சர்களுடன் சென்றான்.(28) அவரைச் சந்தித்த அம்மன்னன், கடைமைகளை அறிந்த மனிர்கள் அனைவரிலும் முதன்மையான அவரிடம், "ஓ! மரியாதைக்குரியவரே, உமது வருகையின் காரணத்தைச் சொல்வீராக. அஃது ஏற்கனவே நிறைவடைந்ததாகக் கருதுவீராக" என்றான்.(29) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள தவசி {லிகிதர்}, அந்தச் சுத்யும்னனிடம், "நீ அதை நிறைவேற்றுவாய் என்று முயலில் உறுதியளிப்பாயாக. நான் சொன்ன பிறகு, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(30) ஓ! மனிதர்களில் காளையே, என் அண்ணனால் எனக்குக் கொடுக்கப்படாத சில கனிகளை நான் உண்டேன். ஓ! ஏகாதிபதி, அதற்காக எந்தத் தாமதமும் இல்லாமல் என்னைத் தண்டிப்பாயாக" என்றார்.(31)
சுத்யும்னன் {தவசி லிகிதரிடம்}, "மன்னன் தண்டக்கோலைத் தரிக்கத் தகுந்தவன் என்று கருதப்பட்டால், ஓ! பிராமணர்களில் காளையே, மன்னிப்பு வழங்குவதற்கும் அவன் தகுந்தவனே.(32) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது செயலால் தூய்மையடைந்த நீர், மன்னிக்கப்பட்டதாகக் கருதுவீராக. {எனவே}, உமது வேறு விருப்பங்களை இப்போது எனக்குச் சொல்வீராக. அந்த உமது ஆணைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று பதிலுரைத்தான்".(33)
வியாசர் தொடர்ந்தார், "மறுபிறப்பாள தவசியான லிகிதர், அந்த உயர் ஆன்ம மன்னனால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், வேறு எந்த உதவியையும் அவனிடம் கேட்கவில்லை {தமது கோரிக்கையிலேயே உறுதியாக இருந்தார்}.(34) பிறகு அந்தப் பூமியின் ஆட்சியாளன் {சுத்யும்னன்}, அந்த உயர் ஆன்ம லிகிதரின் இரு கரங்களையும் அறுத்தான். பின்னவர் {லிகிதர்} அந்தத் தண்டனையை ஏற்று, அங்கிருந்து சென்றார்.(35) தமது அண்ணன் சங்கரிடம் திரும்பிய லிகிதர், பெரும் துன்பத்துடன், "(செய்த குற்றத்திற்காக) முறையாகத் தண்டிக்கப்பட்ட இந்த இழிந்தவனை இப்போது மன்னிப்பதே உமக்குத் தகும்" என்றார்.(36)
சங்கர் {லிகிதரிடம்}, "ஓ! கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னிடம் கோபங்கொள்ளவுமில்லை, நீ எனக்குத் தீங்கிழைக்கவும் இல்லை. எனினும், உன் அறம் தவறியது. அந்த அவலநிலையில் இருந்து நான் உன்னை மீட்டேன்.(37) பாஹுதை ஆற்றுக்குத் தாமதமின்றிச் சென்று, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையாக நீர்க்காணிக்கை செலுத்தி {தர்ப்பணஞ்செய்து} அவர்களை நிறைவு கொள்ளச் செய்து, இனி ஒருபோதும் உன் இதயத்தைப் பாவத்தில் நிலைக்கச் செய்யாதிருப்பாயாக[2]" என்றார்.(38)
[2] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, "இனி அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே. அறிந்தவர்கள் ப்ரம்மஹத்தியும், ஸுராபானமும், திருட்டும், குருபத்நிகமனமும் இவை செய்தவர்களுடன் சேர்க்கையுமாகிய இவைகளை மஹாபாதகங்களென்று சொல்லுகிறார்கள். இவைகளிலும் திருட்டுக்கு ஒப்பான பெரும்பாவம் வேறு இல்லை. திருட்டு இவ்வுலகில் பிரம்மஹத்திக்கு ஒப்பாகும். பாதகம் யாவுக்கும் பெரும்பாலும் சரீர தண்டனை கூறப்படுகிறது. திருட்டுக்குச் சரீர தண்டத்தைத் தவிர வேறு தண்டனை விதிக்கப்படவில்லை. பிராம்மணனும் க்ஷத்திரியனும், வைசியனும், சூத்திரனுமாகிய யாவரும் விரும்பிச் செய்த பாவத்திற்குச் சிக்ஷிக்கத் தக்கவர்களென்பதில் ஸந்தேஹமில்லை. பாவஞ்செய்த மனிதர்கள் அரசர்களால் தண்டனை பெற்றால் அந்தப் பாவம் விலகிப் புண்ணியமுள்ள ஸாதுக்கள் போல ஸ்வர்க்கம் அடைகிறார்கள். நீ அரசனால் தண்டனையை அடைந்தபடியால் நமது குலம் உயர்ந்ததாயிற்று" என்று சொன்னதாக இருக்கிறது.
சங்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட லிகிதர், அந்தப் புனித ஓடையில் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, நீர்க்கடனைச் செலுத்த தொடங்கினார்.(39) அப்போது, அவரது {லிகிதரின்} தோள்களின் நுனிப்பகுதியில் இரு தாமரைகளுக்கு ஒப்பான இரு கரங்கள் தோன்றின. ஆச்சரியத்தில் நிறைந்த அவர் {லிகிதர்}, தமது தமையனிடம் {சங்கரிடம்} வந்து, தன்னிரு கரங்களையும் அவருக்குக் காட்டினார்.(40) சங்கர் அவரிடம் {லிகிதரிடம்}, "இவையாவும் என் தவங்களின் மூலம் அடையப்பட்டன. இதில் ஆச்சரியங்கொள்ளாதே. முன்னறிவே இங்கே கருவியாக இருக்கிறது" என்றார்.(41)
லிகிதர் {சங்கரிடம்}, "ஓ! பெரும் காந்தி கொண்டவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது தவங்களின் சக்தி இத்தகையதாக இருக்கையில், முதலிலேயே என்னை ஏன் நீர் தூய்மையாக்கவில்லை?" என்று கேட்டார்.(42)
சங்கர் {லிகிதரிடம்}, "நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்" என்றார்".(43)
சங்கர் {லிகிதரிடம்}, "நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்" என்றார்".(43)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரா}, அம்மன்னன் {சுத்யும்னன்}, தன் செயலால் மேன்மையடைந்து, தலைவன் தக்ஷனைப் போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(44) குடிகளை ஆள்வதே க்ஷத்திரியர்களின் கடமையாகும். ஓ! ஏகாதிபதி, வேறு எதுவும் அவர்களுக்குத் தவறான பாதையாகவே கருதப்படும். உன் இதயத்தைத் துயரில் நிலைகொள்ளச் செய்யாதே.(45) கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, உன் சகோதரனின் இந்த நல்ல வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! மன்னா, தண்டக்கோல் {செங்கோல்} தரிப்பதே மன்னர்களின் கடமையாகும்; தலையை மழித்துக் கொள்வது அவர்களுக்கான கடமையல்ல" {என்றார் வியாசர்}".(46)
சாந்திபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |