King Hayagriva! | Shanti-Parva-Section-24 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)
ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, உன்னிடம் இரந்து கேட்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்கு நீ பட்டிருக்கும் கடனிலிருந்து முதலில் விடுபடுவாயாக. ஓ! குந்தியின் மகனே, பிறகு நீ பிற வாழ்வுமறைகள் அனைத்தையும் பயிலலாம்.(6) ஓ! குருகுலத்தின் மகனே, சர்வமேதம் மற்றும் அஸ்வமேதம் ஆகிய வேள்விகளை நீ செய்வாயாக. ஓ! ஏகாதிபதி, நீ மறுமையில் உயர்ந்த கதியை அடைவாய்.(7) ஓ! பாண்டுவின் மகனே, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடை அளிக்கும் பெரும் வேள்விகளில் உன் தம்பிகளையும் நிறுவச் செய்து பெரும் புகழை அடைவாயாக.(8) ஓ! மனிதர்களில் புலியே, குருக்களில் சிறந்தவனே, ஒரு பழமொழி இருக்கிறது. ஓ! மன்னா, அதன்படி நடந்தால் நீ அறத்தின்கண் பிறழமாட்டாய் என்பதால் அதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, ஓ! மனிதர்களின் மன்னா, போரிட்டு வெற்றியடைந்து நாட்டைப் பெற்றவனுடைய அறத்தை அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்[1].(10)
[1] உண்மையில், கங்குலியின் மொழிபெயர்ப்பின்படி, "ஓ! யுதிஷ்டிரா, கள்வர்களின் நடத்தையைக் கொண்டோர் மட்டுமே, போரிடுமாறு ஒரு மன்னனுக்கு ஆலோசனை வழங்கி, அவனை வெற்றியடையச் செய்கிறார்கள்" என்றிருக்கிறது. இந்த வரியின் அடிக்குறிப்பில், "ஆததானா Adadaana என்பது கள்வன் என்றோ, மற்றவரின் பொருளை பலவந்தமாக அபகரிப்பவன் என்றோ விளக்கப்படுகிறது. சில உரைகளில் நரேஸ்வரன் nareswarah என்று இருக்கிறது. அவ்வாறெனினும் பொருள் மாறாமலே இருக்கும்" எனக் கங்குலி விளக்குகிறார். ஆனால் நரேஸ்வரன் என்றால் மனிதர்களின் தலைவன் என்று பொருள். இதைக் கங்குலி எவ்வாறு கள்வனோடு பொருத்துகிறார் என்பது விளங்கவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "யுதிஷ்டிரனே, நரேஸ்வரனே, யுத்தஞ்செய்து ஜயமடைந்து ராஜ்யம் பெற்றவனுக்குரிய தருமத்தை ஒழுங்கான தருமந்தெரிந்தவர்கள் (இங்ஙனம்) உறுதிப்படுத்துகிறார்கள் என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அடுத்தவரின் உடைமையை அபகரிப்பவனுக்கு, அதே அளவு அபராதம் விதிக்கவேண்டும் என்று அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்" என்றிருக்கிறது. இதில் கும்பகோணம் பதிப்பே பின்வரும் சுலோகங்களோடு பொருந்துவதால் இங்கு மட்டும் அதையே கையாண்டிருக்கிறேன்.
ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களைத் தண்டித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்[2].(11) எந்த மன்னன், ஆறில் ஒரு பங்கை {16%} வரியாகப் பெற்றும், தன் நாட்டைக் காக்காமல் இருக்கிறானோ, அவன் தன் நாட்டின் {நாட்டு மக்களின்} பாவங்களில் நான்கில் ஒரு பங்கை {25%} அடைகிறான்.(12) எதன் மூலம் ஒரு மன்னன் அறத்தின் கண் பிறழமாட்டேன் என்பதையும் கேட்பாயாக. சாத்திரங்களை மீறுவதால் ஒருவன் பாவமிழைக்கிறான். அதே வேளையில் அதற்குக்கீழ்ப்படிபவன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(13) எந்த மன்னன், சாத்திரங்களின் அடிப்படையிலான அறிவால் வழிநடத்தப்பட்டு, காமம் மற்றும் கோபத்தை அலட்சியம் செய்து, தன் குடிமக்கள் அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல வேறுபாடில்லாமல் நடந்து கொள்வானோ, அவன் ஒருபோதும் பாவமிழைக்கமாட்டான்.(14) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஒரு மன்னன் விதியால் பீடிக்கப்பட்டு, ஒரு செயலை நிறைவேற்றுவதில் தவறுவானென்றால், அத்தகு தோல்வியானது மீறல் என்று அழைக்கப்படாது.(15)
[2] உண்மையில் கங்குலியில், "ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களை மன்னித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்" என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
கும்பகோணம் பதிப்பில், "சாஸ்திரத்தின் கருத்தைத் தெரிந்து அரசன் தேசகாலங்களுக்குத் தக்கபடி குற்றவாளிகளை க்ஷமிப்பானாகில் அவ்வரசனுக்குப் பாவமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "புனித உரைகளைப் பின்பற்றும் ஒரு மன்னன், தன் அறிவின்படி, காலம் மற்றும் இடத்தைக் கருத்தில் கொண்டு, கொள்ளையர்களைத் தண்டிப்பது முறையே" என்றிருக்கிறது. இங்கேயும் கங்குலி பிழை செய்திருக்க வேண்டும். எனவே மேற்கண்ட வரியில் ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் {தண்டித்தல் / மன்னித்தல்} மாற்றம் செய்திருக்கிறேன்.
பலம், கொள்கை ஆகியவற்றால் அந்த மன்னன் தன் எதிரிகளை அடக்க வேண்டும். அவன் தன் நாட்டில் பாவம் இழைக்க அனுமதிக்காமல், அறம் பயில வழிவகைச் செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, துணிச்சல்மிக்க மனிதர்கள், தங்கள் நடைமுறைகளில் மரியாதைக்குரியவர்களாக இருப்போர், தங்கள் செயல்களில் நல்லோனாக இருப்போர், கல்வியறிவு படைத்தோர், வேத உரைகள் மற்றும் சடங்குகளை அறிந்த பிராமணர்கள், ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்.(17) பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதிலும், அறச்செயல்களை நிறைவேற்றுவதிலும், பெருக் கல்வியறிவு படைத்தோர் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். மதிநுட்பம் நிறைந்த ஒரு மன்னன், எவ்வளவுதான் சாதித்தவனாக இருப்பினும் ஒரே ஒரு தனிமனிதன் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்க மாட்டான்.(18) தன் குடிகளைப் பாதுகாக்காதவனும், அடங்காத ஆசைகளைக் கொண்டவனும், போலித் தன்மை நிறைந்தவனும், அகந்தை மற்றும் கெட்ட நோக்கம் கொண்டவனுமான ஒரு மன்னன், பாவம் இழைத்தவனாகக் கொடுங்கோன்மைக்கான நிந்தனையை ஈட்டுகிறான்.(19) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னனின் குடிமக்கள், பாதுகாப்பை அடையாமல், தேவர்களால் பீடிக்கப்பட்டு, கள்வர்களால் வீழ்த்தப்பட்டால், அந்தப் பாவம் அனைத்தும் மன்னனையே களங்கப்படுத்தும்.(20)
ஓ! யுதிஷ்டிரா, ஆழ்ந்து ஆய்வு செய்து, நல்லறிவுரை வழங்கவல்ல மனிதர்களோடு ஆலோசித்த பிறகு, முழு இதயத்தோடு செய்யப்படும் ஒரு செயலில் எந்தப் பாவமும் சேராது.(21) விதியின் மூலமாக நமது பணிகள் தோல்வியோ, வெற்றியோ அடையலாம். எனினும், முயற்சி செய்யும் மன்னனை பாவம் தீண்டாது.(22) ஓ! மன்னர்களில் புலியே, ஹயக்ரீவன் என்ற பெயரில் இருந்த ஒரு பழங்கால மன்னனுக்கு என்ன நடந்தது என்ற கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! பாண்டுவின் மகனே, களங்கமில்லா செயல்பாடுகளைக் கொண்ட வீர ஹயக்ரீவன், போரில் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்ற பிறகு, தன் தரப்பில் ஒரு தொண்டனும் இல்லாத நிலையில் கொல்லப்பட்டு வீழ்ந்த கதையை உனக்குச் சொல்கிறேன்.(24) தன் எதிரிகளைத் தடுக்க என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்து, மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மையான வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய ஹயக்ரீவன், அவன் செய்த போர்களால் பெரும் புகழை அடைந்து இப்போது சொர்க்கத்தில் பேரருளை அடைந்து இன்புற்று இருக்கிறான்.(25)
(மன்னர்களுக்கான) கடமைகளை எப்போதும் கவனமாகச் செய்து வந்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், கள்வர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், அவர்களோடு துணிச்சலாகப் போரிட்டு, போர்க்களத்தில் தன் உயிரை விட்டு, தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்து இப்போது சொர்க்கத்தின் பேரருளில் இன்புற்றிருக்கிறான்.(26) வில்லே அவனது (வேள்வி) கம்பாகவும் {ஸ்தம்பமாகவும்}, வில்லின் நாண்கயிறே, தனது பலிகளைக் கட்டும் கயிறாகவும் இருந்தன. கணைகள் சிறு கரண்டியாகவும், வாளானது பெரிய கரண்டியாகவும், குருதியே அவன் ஊற்றிய தெளிந்த நெய்யாகவும் இருந்தன. தேரானது வேள்விப்பீடமாகவும், போரில் அவன் உணர்ந்த கோபமே நெருப்பாகவும், அவனது வாகனத்தில் பூட்டப்பட்ட நான்கு முதன்மையான குதிரைகளே, நான்கு ஹோத்ரிகளாகவும் இருந்தன.(27) அந்த வேள்வி நெருப்பில் தன் எதிரிகளைக் காணிக்கையாக ஊற்றிய பிறகு, வேள்வியின் முடிவில் தன் உயிரையே அதில் ஊற்றியவனும், மன்னர்களில் சீற்றமிக்கச் சிங்கமுமான அந்த ஹயக்ரீவன், பாவங்களில் இருந்து விடுபட்டு, இப்போது, தேவர்களின் உலகங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(28) கொள்கையாலும், நுண்ணறிவாலும் தன் நாட்டைப் பாதுகாத்தவனும், செருக்கற்றவனும், பெரும் மனோபலம் கொண்டவனும், வேள்விகளைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், தன் புகழை உலகமனைத்திலும் நிறைத்து இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(29)
வேள்விகள் செய்வதைச் சார்ந்த தகுதியையும், மனித காரியங்களில் தொடர்புடைய அனைத்து வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைந்த அவன், தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, செருக்கில்லா வீரத்துடன் இந்தப் பூமியை ஆட்சி செய்தான். அதன் காரணமாக, உயர்ந்த நல்லான்மாவான ஹயக்ரீவன் தேவர்களின் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(30) கல்வியறிவைக் கொண்டவனும், துறவை பயின்றவனும், நம்பிக்கையால் தூண்டப்பட்டவனும், நன்றியுணர்வு நிறைந்தவனும், பல்வேறு வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {ஹயக்ரீவன்}, மனிதர்களின் இவ்வுலகை விட்டு, நல்லோருக்கும் ஞானியருக்கும், ஏற்புடைய பழக்க வழக்கங்களைக் கொண்டோருக்கும், போரில் தங்கள் உயிரைவிடத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகளை வென்றான்.(31) வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு அறிந்து, தன் நாட்டை முறையாக ஆண்டு, நால்வகையினரையும் முறையாகத் தங்கள் கடமைகளை நோற்கச் செய்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன் இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அம்மன்னன், பல போர்களை வென்று, தன் குடிமக்களைப் பேணிக் காத்து, வேள்விகளின் சோமச்சாற்றைப் பருகி, முதன்மையான பிராமணர்களைக் கொடைகளால் நிறைவு செய்து, தன் ஆளுகையின் கீழ் இருந்தோரிடம் தண்டக்கோலை {செங்கோலை} நீதியுடன் செலுத்தி, இறுதியாகப் போரில் தன் உயிரை விட்டு இப்போது சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.(32) அவனது வாழ்வு அனைத்துப் பாராட்டுக்கும் தகுந்ததாகும். அனைத்து பாராட்டுக்கும் தகுந்த அதைக் கல்விமான்களும் நீதிமான்களும் பாராட்டுகின்றனர். சொர்க்கத்தை வென்று, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதிகளை அடைந்த அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி, இவ்வாறே தனது நற்செயல்களால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டான்" என்றார் {வியாசர்}.(33)
சாந்திபர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |