The might of time! | Shanti-Parva-Section-25 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ! தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்" என்றான்".(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டவரும், யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் ஞானம் கொண்டவரும், வேதங்களை உள்ளார்ந்த பொருளுடன் அறிந்தவரும், அறவோருமான வியாசர், (பின்வரும் வார்த்தைகளை) யுதிஷ்டிரனிடம் சொன்னார்.(4)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "தன் செயல்களாலோ, வேள்விகள் மற்றும் வழிபாட்டாலோ எந்த மனிதனும் எதையும் அடைந்துவிட முடியாது. எந்த மனிதனும் தனது சக மனிதனுக்கு எதையும் தந்துவிட முடியாது. மனிதன் அனைத்தையும் காலத்தின் மூலமே அடைகிறான். விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, கால ஓட்டத்தையே அதை அடையும் வழிமுறையாக அமைத்திருக்கிறான்.(5) காலம் சாதகமாக இல்லாவிட்டால், வெறும் புத்தி, அல்லது சாத்திரங்களால் மட்டுமே மனிதன் பூமி சார்ந்த எந்த உடைமையையும் அடைந்துவிட முடியாது. சில வேளைகளில் அறியாமை கொண்ட மூடனே கூடச் செல்வமடைவதில் வெல்கிறான். அனைத்து செயல்களின் நிறைவுக்கும் காலமே பயனைத் தரும் வழிமுறையாக இருக்கிறது.(6) ஆபத்துக் காலங்களில், அறிவியலோ, மந்திரங்களோ, மருந்துகளோ எந்தக் கனியையும் விளைவிக்காது. எனினும் வளம் நிறைந்த காலங்களில் அதே பொருட்களே, சரியாகச் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கும் பலனையும், வெற்றியையும் தருகிறது.(7)
காலத்தாலேயே காற்றுப் பலமாக வீசுகிறது; காலத்தாலேயே மேகங்கள் மழைநிறைந்தவையாகின்றன; காலத்தாலேயே பல்வேறு வகைத் தாமரைகளால் குளங்கள் அலங்கரிக்கப்படுகின்றன; காலத்தாலேயே காட்டிலுள்ள மரங்கள் மலர்களால் நிறைகின்றன.(8) காலத்தாலேயே இரவுகள் இருளாகவோ {தேய்பிறையாகவோ}, ஒளியாகவோ {வளர்பிறையாகவோ} ஆகின்றன. காலத்தாலேயே நிலவும் முழுமையடைகிறது. அதற்கான காலம் வரவில்லையெனில், மரங்கள் மலர்களையோ, கனிகளையோ தாங்குவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில், ஆற்றின் ஓடைகள் கடுமையடைவதில்லை.(9) பறவைகள், பாம்புகள், மான்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும் அவற்றுக்கான காலம் வரவில்லையெனில் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில் பெண்கள் கருத்தரிப்பதில்லை. காலத்தாலேயே குளிர், கோடை மற்றும் மழைக்காலங்கள் நேர்கின்றன.(10) அதற்கான காலம் வரவில்லையெனில் ஒருவரும் பிறப்பதுமில்லை, எவரும் இறப்பதுமில்லை. காலம் வரவில்லையெனில், குழந்தை, பேசும் சக்தியை அடைவதில்லை. காலம் வரவில்லையெனில் எவனும் இளமையடைவதில்லை. காலத்தாலேயே, தூவப்படும் விதைகள் முளைக்கின்றன.(11) காலம் வரவில்லையெனில், அடிவானுக்கு மேலே சூரியன் தோன்றாது, அல்லது அதற்கான காலம் வரவில்லையெனில், அஸ்த மலைகளையும் அவன் அடையமாட்டான். அதற்கான காலம் வரவில்லையெனில், நிலவானது தேயவோ வளரவோ செய்யாது, பெருங்கடலிலும் உயரமான அலைகள் உயர்ந்த அடங்காது.(12)
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில், மன்னன் சேனஜித்தனின் துயரம் சொல்லப்படுகிறது.(13) காலத்தில் தடுக்கப்பட முடியாத போக்கு, இறந்து பிறக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களும் காலத்தாலேயே கனிகின்றன, அல்லது அழிகின்றன.(14) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிலர், சில மனிதர்களைக் கொல்கிறார்கள், மேலும் அந்தக் கொலையாளிகளும், பிறரால் கொல்லப்படுகிறார்கள். இதுவே உலகின் மொழியாகும். எனினும், உண்மையில், எவரும் எவரையும் கொல்வதில்லை.(15) சிலர், மனிதர்கள் (தங்கள் சக மனிதர்களைக்) கொல்வதாக நினைக்கின்றனர். உண்மையோ, அனைத்து உயிரினங்களின் பிறப்பும், அழிவும், விதிக்கப்பட்ட படியே அவற்றின் இயல்பின் விளைவாலேயே ஏற்படுகின்றன.(16) ஒருவனுடைய செல்வம் இழக்கப்படும்போதோ, ஒருவனுடைய மனைவி, அல்லது மகன், அல்லது தந்தை இறக்கும்போதோ, "ஐயோ, இஃது என்ன துயரம்" என்று சொல்லி, ஒருவன் அழுது கொண்டே இருந்தால், அந்தத் துயரம் அதிகரிக்கவே செய்யும்.(17)
மூடனைப் போல நீ ஏன் துயரில் ஈடுபடுகிறாய்? துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1]? அச்சமானது அச்சத்தையே கொடுப்பதைப் போல, துயரத்தில் ஈடுபடுவதால் அஃது அதிகரிப்பதைப் பார்.(18) இந்த உடலானது எனதில்லை. இவ்வுலகில் உள்ள எதுவும் எனதில்லை. அல்லது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் எந்த அளவுக்குப் பிறருக்குச் சொந்தமோ அதே அளவுக்கே எனக்கும் சொந்தமாகும். இதைக் காணும் ஞானியர், இதில் மயக்கமடைவதில்லை.(19) கவலை அடைவதற்கு ஆயிரங்காரணங்களும், மகிழ்ச்சி அடைவத்றகு நூறு காரணங்களும் உண்டு. அறியாமை கொண்டோரையே இவை தினமும் பாதிக்கச் செய்கின்றனவேயொழிய ஞானியரையல்ல.(20) இவையே, காலத்தின் ஓட்டத்தில், பற்று, அல்லது வெறுப்பின் பொருட்களாகி, (சக்கரத்தைப் போலச்) சுழலும் அருளாகவோ, துயரமாகவோ பாதிக்கப்படும் உயிரினங்களுக்குத் தோன்றுகின்றன.(21)
[1] "அவர்களின் மரணத்தின் மூலம், அவர்கள் துயரம் அனைத்தில் இருந்தும் தப்பிவிட்டார்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வுலகில் கவலை மட்டுமே உண்டு, மகிழ்ச்சியில்லை. இதன்காரணமாகவே கவலை மட்டுமே உணரப்படுகிறது. உண்மையில், ஆசை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே இந்தக் கவலை உதிக்கிறது, கவலை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே மகிழ்ச்சி உதிக்கிறது.(22) இன்பத்திற்குப் பிறகு கவலையும், அதன் பிறகு இன்பமும் நேர்கின்றன. ஒருவன் எப்போதுமே கவலையையோ, எப்போதுமே மகிழ்ச்சியையோ அடைவதில்லை.(23) மகிழ்ச்சி எப்போதுமே கவலையிலேயே முடிவடைகிறது, சில வேளைகளில் அது கவலையில் இருந்தும் உண்டாகிறது. எனவே, அழிவில்லா {நிலையான} மகிழ்ச்சியை விரும்புபவன், {மகிழ்ச்சி, கவலை ஆகிய} அந்த இரண்டையுமே கைவிட வேண்டும்.(24) இன்பம் தீர்ந்ததும் கவலை எழுகிறது, கவலை தீர்ந்ததும் மகிழ்ச்சி எழுகிறது எனும்போது ஒருவன், (பாம்பால் கடிபட்ட) ஒருவனுடைய உடலின் அங்கத்தைக் கைவிடுவதைப் போல, அவன் எதனில் இருந்து கவலையையோ, கவலையால் வளர்க்கப்படும் இதய எரிச்சலையோ, தன் கவலையின் வேரையோ அடைகிறானோ அதைக் கைவிட வேண்டும்.(25)
இன்பமோ, துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ எது வந்தாலும், அது பாதிக்கப்படாத இதயத்துடன் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும்.(26) ஓ! இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர்? ஏன் அப்படி? எதற்காக? என்பதை நீ அப்போது அறிந்து கொள்வாய்.(27) பெரும் மூடர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும் இங்கேயே மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனினும், இடைப்பட்ட நிலையை அடைபவர்களே இங்கே துன்பத்தை அடைகிறார்கள்.(28) ஓ! யுதிஷ்டிரா, பெரும் ஞானியும், இவ்வுலகில் எது நல்லது, அல்லது தீயது என்பதையும், கடமைகளையும், இன்பதுன்பங்களையும் அறிந்தவனுமான சேனஜித் இதையே சொன்னான்.(29) அடுத்தவரின் துயருக்காக வருந்துபவன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. துயருக்கு ஓர் எல்லையே கிடையாது, துயரம் மகிழ்ச்சியிலிருந்தே எழுகிறது.(30) இன்பம், துன்பம், செழிப்பு, ஆபத்து, ஈட்டல், இழப்பு, மரணம், வாழ்வு ஆகியன அதற்குரிய காலங்களில் உயிரினங்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றன. அமைதியான ஆன்மா கொண்ட ஞானியர் இதன் காரணமாகவே மகிழ்ச்சியில் திளைக்கவோ, கவலையில் தளரவோ மாட்டார்கள்.(31)
போரில் ஈடுபடுவதே வேள்வி என ஒரு மன்னனுக்குச் சொல்லப்படுகிறது; தண்ட அறிவியலை {தண்டநீதியை} உரிய முறையில் நோற்பதே அவனது யோகமாகும்; தக்ஷிணையின் வடிவில் வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வக் கொடையே அவனது துறைவாகும். இவை அனைத்தும் ஒருவனைப் புனிதப்படுத்தும் செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும்.(32) நுண்ணறிவுடனும், கொள்கையுடனும் நாட்டை ஆட்சி செய்து, செருக்கைக் கைவிட்டு, வேள்விகளைச் செய்து, அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பாரபட்சமின்றியும் காணும் ஓர் உயர் ஆன்ம மன்னன், தன் இறப்புக்குப் பிறகு, தேவர்களின் உலகில் விளையாடுவான்.(33) போர்களை வென்று, தன் நாட்டைக் காத்து, சோமச்சாற்றைப் பருகி, தன் குடிமக்களை முன்னேறச் செய்து, தண்டக்கோலை நீதியுடன் தரித்து, இறுதியாகப் போரில் தன்னுடலைக் கைவிடும் ஒரு மன்னன் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கிறான்.(334) வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் அனைத்தையும் முறையாககப் பயின்று, முறையாக நாட்டைக் காத்து, நான்வகை மனிதர்களையும் தங்கள் வகைக்குரிய கடமைகளைச் செய்யச் செய்யும் ஒரு மன்னன், புனிதமடைந்தவனாக இறுதியில் சொர்க்கத்தில் விளையாடுகிறான்.(35) எவனுடைய நடத்தையானது, அவனது இறப்பிற்குப் பிறகு, நகர மற்றும் நாட்டுவாசிகளாலும், அவனது அமைச்சர்கள் மற்றும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறதோ அவனே மன்னர்களில் சிறந்தவனாவான்" என்றார் {வியாசர்}".(36)
சாந்திபர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |