The discourse of Narada with Srinjaya! | Shanti-Parva-Section-29 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அமைதியடையாததைக் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவனைத் தேற்றச் சொன்னது; சிருஞ்சயனிடம் நாரதர் உரைத்ததை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; மருத்தன், சஹோத்ரன், அங்க மன்னன் பிருஹத்ரதன், சிபி, துஷ்யந்தன், தசரதராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அம்பரீஷன், சசபிந்து, கயன், ரந்திதேவன், சகரன், பிருது ஆகிய பதினாறு மன்னர்களின் கதைகளைச் சுருக்கமாகச் சொன்ன நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், பேச்சற்றவனாக அமைதியாக இருந்த போது, பாண்டுவின் மகனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(1)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "எதிரிகளை எரிப்பவரான இந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}, உறவினர்களின் (அவர்கள் கொல்லப்பட்டதன்) நிமித்தமாகத் துயரில் எரிகிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவரது துயரை அகற்றுவதே உனக்குத் தகும்" என்றான்".(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தாமரைக் கண்ணையும், மங்கா மகிமை கொண்டவனுமான கோவிந்தன் அம்மன்னனை நோக்கி தன் முகத்தைத் திருப்பினான்.(4) கேசவன் எவ்வழியிலும் யுதிஷ்டிரனால் அலட்சியம் செய்யத்தக்கவனல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே அர்ஜுனனை விடக் கோவிந்தனே யுதிஷ்டிரனுக்கு அன்புக்குரியவனாக இருந்தான்.(5) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சௌரி {கிருஷ்ணன்}, சந்தனக்குழம்பால் அலங்கரிக்கப்பட்டவையும், சலவைக்கல்லாலான தூணைப் போலத் தெரிந்தவையுமான மன்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு (கேட்பவர் அனைவரின் இதயங்களையும்) மகிழ்விக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.(6) அழகான பற்களாலும், கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது முகமானது, சூரிய உதயத்தின் போது முற்றாக மலர்ந்த தாமரையைப் போல மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது.(7)
வாசுதேவன், "ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உமது உடலை மெலியச் செய்யும் இத்தகு துயரில் ஈடுபடாதீர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களை எக்காரியத்தாலும் திரும்ப அடைய முடியாது.(8) ஓ! மன்னா, இந்தப் பெரும்போரில் வீழ்ந்த க்ஷத்திரியர்கள், ஒருவன் விழித்தெழும்போது மறைந்து போகும் கனவில் அடையப்படும் பொருட்களைப் போன்றவர்களாவர்[1].(9) அவர்கள் அனைவரும், வீரர்களும், போர்க்கள ரத்தினங்களுமாவர். அவர்கள் தங்கள் எதிரிகளை முகமுகமாக நோக்கி விரைந்த போதே வீழ்த்தப்பட்டார்கள். அவர்களில் எவரும், முதுகில் காயங்களுடனோ, தப்பி ஓடும்போதோ கொல்லப்படவில்லை.(10) அவர்கள் அனைவரும் இந்தப் போரில் வீரர்களுடன் மோதி, ஆயுதங்களால் புனிதமடைந்து தங்கள் உயிர்மூச்சுகளை விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(11) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடனும், துணிவுடனும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் சரியாக அறிந்தும் அவர்கள் அனைவரும் வீரர்களால் அடையப்படும் அருள்நிலையை அடைந்துவிட்டனர். உயர் ஆன்மா கொண்டவர்களும், இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டவர்களுமான பழங்காலத்தின் பூமியின் தலைவர்களைக் குறித்துக் கேட்ட பிறகு அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(12) சிருஞ்சயன் தன் மகனின் {சுவர்ணஷ்டீவினின்} மரணத்தின் நிமித்தமாக ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனுக்கு முன்னிலையில் நடந்த நாரதரின் பழைய உரையாடல் இது தொடர்பானதே.(13)
[1] கும்பகோணம் பதிப்பில், "கனவில் அடையப்பட்ட வஸ்துக்கள் விழித்துக் கொண்டவனுக்கு எங்ஙனம் பொய்யோ, அப்பெரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களும் அங்ஙனமேதான்" என்றிருக்கிறது.
(நாரதர் சொன்னார்), "ஓ! சிருஞ்சயா, இன்பத்திற்கும் துன்பத்திற்கு ஆட்படுபவர்களான, நானும், நீயும், அனைத்து உயிரினங்களும் இறக்கவே போகிறோம். பிறகு கவலைக்கான காரணம் என்ன?(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ!, அவர்களின் கதையை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பழங்காலத்தைச் சேர்ந்த அந்த மன்னர்களின் இனிமைநிறைந்த அழகிய வரலாற்றைக் கேட்பதால், தீய நட்சத்திரங்கள் {தீக்கோள்களின் வினைகள்} தணிவடையச் செய்து அமைதிப்படுத்தப்பட்டு, ஒருவனின் வாழ்நாள் {ஆயுள்} அதிகரிக்கப்படும்.(17)
ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகனான மருத்தன்[2] என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனும் மரணத்திற்கு இரையாக வேண்டியிருந்தது. இந்திரன், வருணன், பிருஹஸ்பதி ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியால் செய்யப்பட்ட விஸ்வஸ்ரீஜ்[3] என்றழைக்கப்படும் வேள்விக்கு வந்தனர். அம்மன்னன் {மருத்தன்}, தேவர்களின் தலைவனான சக்ரனை {இந்திரனை} போருக்கு அறைகூவியழைத்து அவனை வென்றான்.(18,19) கல்விமானான பிருஹஸ்பதி, இந்திரனுக்கு நன்மை செய்ய விரும்பி, மருத்தனின் வேள்வியை நடத்திக் கொடுக்க மறுத்தார். அதன் பேரில், பிருஹஸ்பதியின் தம்பியான சம்வர்த்தர் மன்னனின் வேண்டுகோளை ஏற்றார்[4].(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்டதைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ! சிருஞ்சயா, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகியவற்றால் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {மருத்தனே} மரணத்துக்கு இரையானான்; எனவே, உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} வருந்தாதே.(24)
[2] இம்மன்னனைக் குறித்து ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 55ல் சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-053-054-055.html[3] "இந்த வேள்வியைச் செய்பவன் தன் செல்வங்கள் அனைத்தையும் இந்த வேள்வியிலேயே பிரிவான் {இழப்பான்}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "இந்திரனுடைய பிரியத்திற்காக வித்வானான பிருஹஸ்பதியானவர் அவனிஞ்சென்று (இனி யாகஞ்செய்யாதிருக்க வேண்டுமெனத்) தடுத்தார். அப்படியிருந்தும், அவர் தம்பியான ஸம்வர்த்தரென்னும் ரிஷி தேவ குருவின் இஷ்டம் நிறைவேறா வண்ணம் அவனுக்கு யாகஞ்செய்வித்தனர்" என்றிருக்கிறது.
அதிதியின் மகனாகச் சுஹோத்ரன்[5] என்ற பெயரில் மற்றுமொரு மன்னன் இருந்தான். ஓ! சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்த அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ! சிருஞ்சய, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகிய நான்கு பண்புகளிலும் உன்னை விட விஞ்சியிருந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {சுஹோத்ரனே} மரணத்திற்கு இரையானான்; (எனவே இறந்து போன) உன் மகனுக்காக வருந்தாதே.(30) உன் மகன், வேள்வி எதையும் செய்யவில்லை, ஒருபோதும் கொடையளித்ததில்லை. இதை அறிந்து கொண்டு, துயரத்தில் வீழாமல் உன் மனத்தை அமைதியடையச் செய்வாயாக.
[5] இம்மன்னனைக் குறித்து ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 56ல் சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-056.html[6] "வசுமதி என்றால் செல்வமுடையவள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சிருஞ்சயா, அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதனும்[7] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம்.(31) அவன் நூறாயிரம் குதிரைகளைக் கொடையாக அளித்தான். அவன் செய்த வேள்வியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறாயிரம் கன்னிகையரையும் கொடையாக அளித்தான்.(32) அவனால் செய்யப்பட்ட மற்றொரு வேள்வியில், நற்குலத்தில் பிறந்த நூறாயிரம் யானைகளையும் கொடையாகக் கொடுத்தான்.(33) தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் லட்சம் காளைகளுடன் அவற்றுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பசுக்களையும் அவன் வேள்விக் கொடைகளாகக் கொடுத்தான்.(34) அந்த அங்க மன்னன் {பிருஹத்ரதன்}, விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் மலையில் வைத்து தன் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது,(35) இந்திரன் தான் குடித்த சோமத்தாலும், பிராமணர்கள் தாங்கள் பெற்ற கொடைகளாலும் போதையுண்டார்கள். ஓ! ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளினும் உன்னிலும் உயர்ந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தப் பிருஹத்ரதனே மரணத்திற்கு இரையானான்; {எனவே} இறந்து போன உன் மகனுக்காக வருத்தமடையாதே.(38)
[7] பிருஹத்ரதன் என்ற இம்மன்னன் பௌரவன் என்ற பெயரில் ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 57ல் குறிப்பிடப்படுகிறான். http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-057.html[8] "{ஸோமஸம்ஸ்தை என்றழைக்கப்படும்} இந்த ஏழு வேள்விகள், அக்நிஷ்டிமம், அத்யக்நிஷ்டோமம், உத்தியம், ஷோடசி, அதிராத்ரம், வாஜபேயம், அப்தோர்யாமம் ஆகியனவாகும். இந்த வேள்விகள் ஒவ்வொன்றிற்கும் சோமச்சாறு அவசியமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும்[8] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். தன் கையிலுள்ள தோல் கவசத்தை ஆள்வதைப் போல அந்த மன்னன் மொத்த பூமியையும் ஆண்டான்.(39) அந்த மன்னன் சிபி, ஒவ்வொரு போரிலும் வெற்றியையளித்த ஒரே தேரைச் செலுத்திக் கொண்டு, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்து, ஏகாதிபதிகள் அனைவரையும் அடக்கினான்.(40) உசீநரனின் மகனான அந்தச் சிபி, ஒரு வேள்வியில் தன்னிடம் இருந்த காட்டு மற்றும் வீட்டுப் பசுக்கள் மற்றும் குதிரைகள் அனைத்தையும் கொடையாக அளித்தான்(41) ஓ! சிருஞ்சயா, இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட வீரனும், மன்னர்களில் முதன்மையானவனும், உசீநரனின் மகனுமான அந்தச் சிபி சுமந்ததைப் போல, கடந்த கால, எதிர்கால மன்னர்கள் எவராலும் சுமையைச் சுமக்க முடியாது என்று படைப்பாளனே அவனை {சிபியைக்} குறித்து நினைத்தான். எனவே, எந்த வேள்வியும் செய்யாதவனும், எந்தக் கொடையையும் அளிக்காதவனுமான உன் மகனுக்காக வருந்தாதே.(42,43) உண்மையில், நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேன்மையானவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தச் சிபியே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(44)
[8] இந்தச் சிபியின் கதை ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 58ல் சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-058.html
ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மகனும், நன்கு நிரப்பப்பட்ட பரந்த கருவூலத்தையும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான பரதனும்[9] மரணத்திற்கு இரையானான் என்று நான் கேள்விப்படுகிறோம்.(45) யமுனையின் கரையில் தேவர்களுக்காக முன்னூறு குதிரைகளையும், சரஸ்வதியின் கரைகளில் இருபதையும், கங்கையின் கரைகளில் பதினான்கையும் அர்ப்பணித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அம்மன்னன் {பரதன்},(46) பழங்காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவனாவான்.(47) எந்த மனிதனாலும் தனது கரங்களின் வலிமையைப் பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க முடியாததைப் போலவே, பூமியின் எந்த மன்னனாலும் பரதனின் பெருஞ்செயல்களைப் போலச் செய்யவே முடியாது.(48) எண்ணற்ற வேள்விப்பீடங்களை நிறுவிய அவன், முனிவர் கண்வருக்கு எண்ணற்ற குதிரைகளையும், விவரிக்க முடியாத அளவுக்குச் செல்வத்தையும் கொடையாக அளித்தான்.(49) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேம்பட்டவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(50)
[9] இந்தப் பரதனின் கதை ஏற்கனவே ஆதிபர்வம் பகுதி 74லிலும் http://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section74c.html துரோண பர்வம் பகுதி 68லும் சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-068.html
ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும்[10] கூட மரணத்திற்கு இரையானதாவே நாம் கேள்விப்படுகிறோம். அவன், தனது குடிமக்களைத் தன் மடியில் பிறந்த மகன்களைப் போலவே எப்போதும் பேணிப் பாதுகாத்தான்.(51) அவனது ஆட்சிப் பகுதிகளில் விதவைகளோ, ஆதரவற்றவர்களோ எவரும் இல்லை. உண்மையில், அந்த ராமன், தன் நாட்டை ஆள்வதில், தன் தந்தையான தசரதனைப் போலவே எப்போதும் செயல்பட்டான்.(52) பருவகாலந்தவறாமல் பொழிந்த மேகங்கள், பயிர்களை அபரிமிதமாக வளரச் செய்தன. அவனது ஆட்சி காலத்தில், அவனது நாட்டில் உணவு எப்போதும் அபரிமிதமாகவே இருந்தது.(53) நீரில் மூழ்கியோ, நெருப்பில் வெந்தோ மரணமேதும் நேரவில்லை. ராமன் ஆண்டவரை, அவனது நாட்டில் எந்த நோயைக் குறித்தும் அச்சமேதும் இருக்கவில்லை.(54) ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டவனாக இருந்தான். ராமனின் ஆட்சி காலத்தில், மனிதர்கள் அனைவரும் கூட்டமாக இருந்தனர், மனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களின் கனியை அடைந்தனர்.(55) பெண்கள் ஒருவரோடொருவர் சச்சரவு கொள்ள மாட்டார்கள் எனும்போது ஆண்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது? அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {ராமனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(62)
[10] இந்தப் ராமனின் கதை ஏற்கனவே வனபர்வம் பகுதி 272லிருந்து 289 வரை சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section272.html மேலும் துரோண பர்வம் பகுதி 59லும் சொல்லப்பட்டுள்ளது. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-059.html
ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும்[11] இறந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அம்மன்னனின் வேள்விகளில் ஒன்றில், தான் குடித்த சோமத்தால் போதையுண்டவனும்,(63) தேவர்களின் தலைவனும், பகனைத் தண்டித்த புகழத்தக்கவனுமான இந்திரன், தன் கரங்களின் வலிமையை வெளிப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான அசுரர்களை வென்றான்.(64) மன்னன் பகீரதன், தான் செய்த வேள்விகளில் ஒன்றில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து லட்சம் கன்னிகையரைக் கொடையளித்தான்.(65) அந்தக் கன்னியர் ஒவ்வொருவரும் ஒரு தேரில் அமர்ந்திருந்தனர், அந்த ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருடனும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தனவும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு யானைகளும் இருந்தன.(66) ஒவ்வொரு யானையின் பின்பும் ஆயிரம் குதிரைகளும், ஒவ்வொரு குதிரைகளுக்குப் பின்னும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவின் பின்னும் ஆயிரம் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.(67) (முன்பிருந்தே) பாகீரதி என்று பெயரிடப்பட்ட (நதிதேவியான) கங்கை, (தன் ஓடையின்) அருகே வசித்து வந்த இந்த மன்னனின் மடியில் அமர்ந்ததன் விளைவால் ஊர்வசி என்றும் அழைக்கப்பட்டாள்[12].(68) மூவழிப்பாதை கொண்ட கங்கை[13], இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் ஏகாதிபதியுமான பகீரதனுக்கு மகளாவதை ஏற்றுக் கொண்டாள்.(69) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளைப் பொறுத்தவரை உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, உன் மகனுக்காக நீ வருந்தாதே.(70)
[11] மன்னன் பகீரதனின் கதை ஏற்கனவே வனபர்வம் பகுதி 107 - 109லும் http://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section108.html பிறகு துரோண பர்வம் பகுதி 60லும் http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-060.html சொல்லப்படுகிறது.[12] "கங்கையை உலகிற்குக் கொண்டு வரப்பட்டது குறித்த புராணக்கதை மிக அழகானதாகும். கங்கையானவள், விஷ்ணுவின் உருகிய வடிவேயன்றி வேறில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவள் பிரம்மனின் கமண்டலத்திற்கு வசித்து வந்தாள். பகீரதனின் மூதாதையர்கள் கபிலரின் சாபத்தால் அழிந்து போனதை அடுத்து, அவர்களை மீட்க விரும்பிய பகீரதன், அவர்களின் சாம்பல் கிடந்த இடத்தில் கங்கையின் புனித நீரைப் பாயச் செய்யத் தீர்மானித்து அவளை {கங்கையை} பூமிக்கு அழைத்து வந்தான். பல கடினமான நிலைகளைக் கடந்து அவன் தனது தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தான். ஊர்வசி என்பதற்குத் தொடையில் அமர்பவள் என்பது பொருள்.[13] "மூவழி பாதைகள் என்பது ஆகாயம், பூமி மற்றும் பாதாளமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம திலீபனும்[14] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவனது எண்ணற்ற செயல்களை உரைப்பதற்குப் பிராமணர்கள் விரும்புவார்கள்.(71) அந்த மன்னன் {திலீனன்} தன்னுடைய பெரும் வேள்விகள் ஒன்றில், செல்வம் நிறைந்த மொத்த உலகத்தையும் முழு இதயத்துடன் பிராமணர்களுக்குக் கொடையாள அளித்தான்.(72) அவன் செய்த ஒவ்வொரு வேள்வியிலும், தலைமைப் புரோகிதர் தன் வேள்விக்கூலியாகத் தங்கத்தாலான ஆயிரம் யானைகளைப் பெற்றார்.(73) அவனுடைய வேள்விகளில் ஒன்றில், (பலிகளுக்காக நிறுவப்பட்ட) கம்பம் தங்கத்தால் செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியவர்களும், சக்ரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டவர்களுமான தேவர்கள், அந்த மன்னனின் {திலீபனின்} பாதுகாப்பையே எப்போதும் நாடினார்கள்.(74) பெரும் பிரகாசம் கொண்டதும், வளையத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தங்கக் கம்பத்தில், ஆறாயிரம் தேவர்களும் கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் ஆடினர், அவர்களுக்கு மத்தியில் விஸ்வாவசு ஏழு சுவரங்களின் விதிகளின் படி வீணையை இசைத்துக் கொண்டிருந்தான். விஸ்வாசுவுடைய இசையின் தன்மையானது, ஒவ்வொரு உயிரினமும் (அஃது எங்கிருந்தாலும்) அந்தப் பெரும் கந்தர்வன் {விஸ்வாவசு} தனக்காக மட்டுமே இசைக்கிறான் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.(75,76) மன்னன் திலீபனின் சாதனையே வேறு எந்த ஏகாதிபதியாலும் செய்ய முடியாது. தங்க அம்பாரிகளால் ஆலங்கரிக்கப்பட்டு மதங்கொண்டிருந்த அந்த மன்னனின் யானைகள், சாலையில் படுத்துக் கிடந்தன[15].(77) பேச்சில் எப்போதும் உண்மை நிறைந்தவனும், நூறு அனந்தங்களின் சக்திக்கு இணையான நூறு பகைவர்களைத் தாங்கக் கூடிய வில்லைக் கொண்டனும், உயர் ஆன்மாவுமான மன்னன் திலீபனைக் கண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர்.(78) வேதமோதும் குரல், விற்களின் நாணொலி, கொடுக்கப்படட்டும் என்ற ஆணை ஆகிய மூன்று ஒலிகளும் திலீபனின் வசிப்பிடத்தில் எப்போதும் ஓய்ந்ததில்லை.(79) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {திலீபனே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(80)
[14] மன்னன் திலீபனின் கதை ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 61ல் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-061.html சொல்லப்படுகிறது.[15] "தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளைக் கூடப் பாதுகாக்காமல் அலட்சியமாக இருக்கும் அளவுக்குத் திலீபனின் செல்வம் அபரிமிதமாக இருந்தது என்ற பொருளை இவ்வரி தருகிறது என நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தங்கக் கவசம் பூண்ட அவனுடைய யானைகள் மதம்பிடித்து வழியில் படுத்திருந்தன" என்றிருக்கிறது.
ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவும்[16] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். மருத்தர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்கள், அந்தப் பிள்ளையை அவனது தந்தையின் விலாவில் இருந்து பிரித்தெடுத்தனர்.(81) மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தெளிந்த நெய்யில் (தாயார் குடிக்கவேண்டியதைத் தவறுதலாகத் தந்தை குடித்ததால்) உதித்த மாந்தாதா, உயர் ஆன்மா யுவனாஸ்வனின் வயிற்றில் பிறந்தான். பெரும் செழிப்பைக் கொண்டவனான மன்னன் மாந்தாதா மூவுலகங்களையும் கைப்பற்றினான்.(82) தந்தையின் மடியில் கிடக்கும் தெய்வீக அழகுடைய பிள்ளையைக் கண்ட தேவர்கள், ஒருவருக்கொருவர், "இந்தப் பிள்ளை யாரிடம் பால் குடிக்கும்?" என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், "என்னிடமே குடிப்பான்" என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்ட போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {மாந்தாதாவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(93)
[16] மன்னன் மாந்தாதாவின் கதை துரோண பர்வம் பகுதி 62ல் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-062.html ஏற்கனவே சொல்லப்பட்டுளது.[17] "மாந்தாதா {மாம் தாதா} என்றால், "என்னைக் குடிப்பான்" என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[18] "பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் அசிதனையும், கயனையும் ஒரே மனிதனாக அசிதாங்கயன் என்று சொல்கிறார்கள். கே.பி.சிங்கா அவர்கள் அங்கனையும், பிருஹத்ரதனையும் வெவ்வேறு மனிதர்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் இரண்டுமே தவறுதான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அங்காரன், மருத்தன், அஸிதன், கயன், அங்கன், பிருஹத்ரதனென்னும் அரசர்களை ஜெயித்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[19] "92ம் சுலோகத்தின் முதல் வரி, 91ம் சுலோகத்துடன் இணைந்ததாகவே இருக்கிறது. நீலகண்டரும் அதைக் குறிப்பிடுகிறார். இருப்பினும், பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வரியில் குளறுபடி செய்தவிட்டனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மாந்தாதா நூற்றுக்கணக்கான அசுவமேதங்களையும், ராஜஸூயங்களையுஞ்செய்து அவைகளில் பிராம்மணர்களுக்கு ஒரு யோஜனை பருமனும், பத்து யோஜனை நீளமுமுள்ள பொன்னாற்செய்த மத்ஸ்யங்களைத் தானஞ்செய்தான். அந்த யாகத்தில் அதிகமாயிருந்த பொருள்களை மற்ற ஜனங்கள் தாங்கள் பிராம்மணர்களுக்குத் தானஞ்செய்தார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும்[20] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடல்களுடன் கூடிய மொத்த உலகையும் அடக்கிய அவன்,(94) உலகம் முழுவதும் பயணித்து, மரத்துண்டை வீசியெறிந்தால் செல்லுத் தூரத்தை இடைவெளியாகக் கொண்டு, அடுத்தடுத்த வேள்விப்பீடங்களால் அதை {பூமியை} அலங்கரித்தான். உண்மையில், அவன் இப்படி (தன் வழியில் பீடங்களை நிறுவி) பெரும் வேள்விகளைச் செய்தே கடலின் கரையை அடைந்துவிட்டான்[21].(95) ஆயிரம் வேள்விகளையும், நூறு வாஜபேயங்களையும் செய்த அவன் {யயாதி}, முதன்மையான பிராமணர்களை மூன்று தங்க மலைகளால் நிறைவு செய்தான்.(96) நகுஷனின் மகனான யயாதி, போரில் முறையாக அணிவகுத்து வந்த பல தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்று, மொத்த பூமியையும் (தன் பிள்ளைகளுக்குப்) பிரித்துக் கொடுத்தான்.(97) இறுதியாக யது மற்றும் திரஹ்யு ஆகியோரின் தலைமையிலான தன் மற்ற மகன்களை அலட்சியம் செய்து, (தன் இளைய மகனான) பூருவைத் தன் அரியணையில் அமர்த்திவிட்டு, தன் மனைவியின் துணையுடன் கானகம் புகுந்தான்.(98) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {யயாதியே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(99)
[20] யயாதியின் கதை ஆதிபர்வம் பகுதி 75 முதல் 93 வரையிலும் http://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section75.html , பிறகு, உத்யோக பர்வம் பகுதி 114 முதல் 123 வரையும், http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section114.html துரோண பர்வம் பகுதி 63லும் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-063.html இன்னும் மஹாபாரதத்தில் ஆங்காங்கே பல இடங்களிலேயும் சொல்லப்படுகிறது.[21] சம்யாபாத் Camyaapaat என்பது ஒரு கனத்த மரத்துண்டை வீசி எரியும் தொலைவு என விளக்கப்படுகிறது. யயாதி ஒரு வேள்விப்பீடத்தை நிறுவியதும், கனத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து வீசி எறிந்து, அந்தத் துண்டு விழுந்த இடத்தில் மற்றொரு வேள்விப்பீடத்தை நிறுவினான் என்ற பொருளில் இங்கு இவ்வாறு சொல்லப்படுகிறது. இப்படியே வேள்விப்பீடங்களை நிறுவி அவன் கடற்கரையையே அடைந்துவிட்டான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும்[22] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். மன்னர்களில் முதன்மையான அந்த (பூமியின்) பாதுகாவலனை {அம்பரீஷனை}, அவனது குடிமக்கள் அறத்தின் வடிவமாகக் கருதினர்.(100) அந்த ஏகாதிபதி, தனது வேள்விகளில் ஒன்றில், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தவர்களான பத்து லட்சம் மன்னர்களைப் பிராமணர்களுக்காகக் காத்திருக்கச் செய்தான் {அம்மன்னர்களைப் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வைத்தான்}.(101) பக்திமான்கள், "அத்தகு சாதனைகள் கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது" என்று சொல்லி நாபாகனின் மகனான அம்பரீஷனைப் புகழ்ந்தார்கள்.(102) (அம்பரீஷனின் ஆணைக்கிணங்க அவனது வேள்விகளில் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்த) நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்திற்கும் ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரை வேள்வியின் கனிகளை (அந்த அம்பரீஷனின் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம்) அடைந்து, தென்பாதையில் (ஒளியும் அருளும் நிறைந்த உலகங்களுக்கு) தங்கள் தலைவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) ஓ! சிருஞ்சயா, நான் முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {அம்பரீஷனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(104)
[22] மன்னன் அம்பரீஷனின் கதை துரோண பர்வம் பகுதி 64ல் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-064.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
ஓ! சிருஞ்சயா, சித்திரரதனின் மகனான சசபிந்துவும்[23] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு {சசபிந்துவுக்கு}, நூறாயிரம் {ஒரு லட்சம்} மனைவியரும்,(105) பத்து லட்சம் மகன்களும் இருந்தனர். தங்கக் கவசம் பூண்டவர்களான அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாக இருந்தனர்.(106) அந்த இளவரசர்களில் ஒவ்வொருவரும் நூறு இளவரசிகளை மணந்தனர், அவர்களில் ஒவ்வொரு இளவரசியும், நூறு யானைகளைக் கொண்டு வந்தனர். அந்த யானைகள் ஒவ்வொன்றுடனும் நூறு தேர்கள் இருந்தன.(107) தேர்கள் ஒவ்வொன்றுடனும் நல்ல இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகள் இருந்தன. குதிரைகள் ஒவ்வொன்றுடனும் நூறு பசுக்கள் இருந்தன, பசுக்கள் ஒவ்வொன்றுடனும் நூறு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருந்தன.(108) ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {சசபிந்துவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(110)
[23] மன்னன் சசபிந்துவின் கதை துரோண பர்வம் பகுதி 65ல் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-065.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
ஓ! சிருஞ்சயா, அமூர்த்தரயசின் {அமார்த்தரயஸ், அதூர்த்தரஜஸின்} மகனான கயனும்[24] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். வேள்வியில் எஞ்சியவற்றை உண்டே அம்மன்னன் நூறு வருடங்கள் வாழ்ந்தான்.(111) (அத்தகு அர்ப்பணிப்பில் நிறைவு கொண்ட) அக்னி, அவனுக்கு வரங்களை அளிக்க விரும்பினான். கயன், "தடையில்லாமல் நான் கொடுத்து வந்தாலும் என் செல்வம் வற்றாததாக இருக்கட்டும். அறத்தின் மீது நான் கொண்ட மதிப்பு எப்போதும் நீடித்திருக்கட்டும்[24].(112) ஓ! வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்" என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலும்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {கயனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன்மகனைக் குறித்து நீ வருந்துவது தகாது.(119)
[23] மன்னன் கயனின் கதை வன பர்வம் பகுதி 95 http://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section95.html மற்றும்121லும் http://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section121.html துரோண பர்வம் பகுதி 66லும் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-066.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.[24] இந்தச் சுலோகத்தின் இரண்டாவது வரியில் உள்ள முதல் பாதியைப் படிப்பதில் சிறு வேறுபாடுகள் இருக்கின்றன. நீலகண்டர் தனது வழக்கமான புத்திக்கூர்மையுடன் இதை விளக்குகிறார். நான் வைத்துள்ள வங்க உரையை அவர் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் நான் பின்பற்றியிருக்கும் வங்க உரையே தேர்வுசெய்யக்கூடியதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நான் எவ்வளவு தானஞ்செய்தாலும் எனது பொருள் அழிவற்றதாயிருக்க வேண்டும். எனக்குத் தர்மத்தில் ஸ்ரத்தை விருத்தியடைய வேண்டும். ஓ அக்னி பகவானே, உனது அனுக்ரஹத்தால் என் மனம் ஸந்தோஷமாக ஸத்தியத்திலேயே செல்ல வேண்டும்" என இவ்வரங்களைக் கேட்டுக் கொண்டான்" என்று இருக்கிறது.
ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் மகனான ரந்திதேவனும்[25] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடந்தவத்தில் ஈடுபட்டு, சக்ரனைப் பெருமதிப்புடன் வழிபட்ட அவன், அவனிடம் இருந்து வரங்களைப் பெற வேண்டி,(120) "நாங்கள் அபரிமிதமான உணவையும், அபரிமிதமான விருந்தினர்களையம் பெற வேண்டும். என் நம்பிக்கை சிதைவடையாமல் இருக்க வேண்டும். எந்த மனிதனிடம் இருந்தும் நாங்கள் எந்தப் பொருளையும் கேட்காமல் இருக்க வேண்டும்" என்று சொன்னான்.(121) உயர் ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான ரந்திதேவனின் வேள்வியில் கொல்லப்படும் நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் தாமாகவே அவனிடம் வந்தன.(122) (அவனது வேள்விகளில் கொல்லப்படும்) வலிங்குகளின் தோல்களில் இருந்து பாயும் சுரப்பி நீரில் உண்டானதே சர்மண்வதி என்ற பெயரில் அறியப்பட்டு இந்த நாள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஆறாகும்.(123) மன்னன் ரந்திதேவன் தனிப்பட்ட அறைகளில் வைத்து பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மன்னன், "நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன். நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன்" என்று சொன்ன போது, (கொடுக்கப்பட்டதை ஏற்காமல் மறுக்கும் வகையில்) ஒலியெழுப்பினர்.(124) எனினும், மன்னன், "நான் உமக்கு ஆயிரம் நிஷ்கங்கள்" கொடுக்கிறேன் என்று சொன்ன போது அந்தக் கொடைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன[26]. ரந்திதேவனின் அரண்மனையில் உணவையும், பிற பொருட்களையும் கொள்ள இருந்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் அனைத்தும்,(125) நீர்க்கலன்கள், குடங்கள், சட்டிகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியன அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன.(126) ரந்திதேவனின் வசிப்பிடத்தில் ஓரிரவில் தங்கும் விருந்தினர்களுக்காக இருபதாயிரத்து நூறு பசுக்கள் கொல்லப்பட்டன[27].(127) இருப்பினும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சமையற்கலைஞர்கள், சில சமயங்களில், "குழம்பு நிறைய இருக்கிறது. விரும்பிய அளவு உண்ணுங்கள். ஆனால் முன்பு போல் இன்று அதிக இறைச்சி இல்லை" என்று (இரவு உணவு உண்பதற்காக அமர்பவர்களிடம்) அறிவிப்பார்கள்[28].(128) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {ரந்திதேவனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(129)
[25] மன்னன் ரந்திதேவனின் கதை வனபர்வம் பகுதி 207லும், http://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section207.html துரோண பர்வம் பகுதி 67லும் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-067.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.[26] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் காலத்தில் பிராம்மணர்கள், "உமக்கு நூறு ஸுவர்ணங்கொடுக்கப் போகிறார்; உமக்கு நூறு கொடுக்கப்போகிறார்" என்று சொல்லும்பொழுதே, "உமக்கு ஆயிரம் ஸுவர்ணம்" என்று சொல்லிக் கொடுத்துப் பிராம்மணர்களை அவன் சந்தோஷமாக அடைந்தான்" என்றிருக்கிறது. பிறகு அவ்வரியின் அடிக்குறிப்பில், "அவன் ஸதஸில் நூறு ஸுவர்ணம் கொடுக்கத் தொடங்கும்பொழுது பிராம்மணர்கள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் நாங்கள் உமக்கு நூறு ஸுவர்ணங்கள் கொடுக்கிறோமென்று சொல்லவும், பிறகு ஆயிரக்கணக்கான ஸுவர்ணத்தைக் கொடுத்து அன் பிராம்மணர்களை அடைந்தான்" என்பது பழைய உரை என்றும் சொல்லப்பட்டுள்ளது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாணயம் கொடுக்க முற்பட்ட போது அவர்கள் கண்டித்தனர். எனவே அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் நாணயங்களைக் கொடுத்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.[27] கும்பகோணம் பதிப்பில், "ஸங்க்ருதியின் புத்திரனான ரந்திதேவன் வீட்டில் ஓர் இராத்திரிக்கு ஆயிரத்து நூற்றிருபது பசுக்கள் உபயோகிக்கப்பட்டன" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே உள்ளன.[28] கும்பகோணம் பதிப்பில், "அங்கு மெருகிட்ட ரத்தனகுண்டலம் பூண்ட பரிசாரகர்கள் போஜனஞ்செய்பவர்களை, இப்போது முன்போல் மாம்ஸமில்லை. வேண்டியபடி பருப்பு முதலியவைகளைச் சாப்பிடுங்கள் என்று கூவினார்கள்" என்று இருக்கிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம சகரனும்[29] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனான அவன் மனிதர்களில் புலியாகவும், மனித சக்திக்கு மீறிய ஆற்றலைக் கொண்டவனாகவும் இருந்தான்.(130) கூதிர்கால மேகமற்ற வானில் சந்திரனுக்காகக் காத்திருக்கும் கூட்டங்கூட்டமான நட்சத்திரங்களைப் போல அவனுக்குப் பின்னால் அறுபதாயிரம் {60000} மகன்கள் நடப்பார்கள்.(131) அவனது ஆட்சி பூமி முழுவதிலும் பரந்திருந்தது. ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்து அவனும் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(132) தங்கத்தாலான தூண்களைக் கொண்டவையும், (பிற பகுதிகள் அனைத்தும்) முழுக்க முழுக்க மதிப்புமிக்க உலோகங்களால் ஆனவையும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்ட அழகிய மங்கையரின் பெருங்கூட்டம் மற்றும் இன்னும் பிற வகை விலைமதிப்புமிக்கப் பல்வேறு பொருட்கள் ஆகியவை நிறைந்தவையும், அரண்மனை போன்றவையுமான மாளிகைகளைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான். அவனது ஆணையின் பேரில் அந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அந்தக் கொடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.(133,134) கோபத்தால் அந்த மன்னன் பூமியைத் தோண்டிய போது, அவள் தன் மார்பில் பெருங்கடலை அடைந்தாள். அதன் காரணமாகவே பெருங்கடலானது சாகரம் என்று அவனது பெயரில் அழைக்கப்படுகிறது.(135) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {சகரனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(136)
[29] மன்னன் சகரனின் கதை வன பர்வம் பகுதி 106 மற்றும் 107ல் http://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section106.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.
ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான பிருதுவும்[30] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பெருங்காட்டில் ஒன்றாகக் கூடிய பெரும் முனிவர்கள், அவனைப் பூமியின் அரசுரிமையில் நிறுவினார்கள்.(137) மனித குலம் அனைத்தையும் முன்னேறச் செய்வான் என்ற எண்ணத்தினாலாயே (முன்னேறுபவன் என்ற பொருளில்) பிருது என்று அவன் அழைக்கப்பட்டான். மேலும் காயங்களில் (க்ஷதத்தில் {ஆபத்துகளில்}) இருந்து மக்களை அவன் பாதுகாத்த காரணத்தால் (காயங்களில் இருந்து பாதுகாப்பவன் என்ற பொருளில்) க்ஷத்திரியன் என்றும் அழைக்கப்பட்டான்.(138) வேனனின் மகனான பிருதுவைக் கண்டு, பூமியின் உயிரினங்கள் அனைத்தும், "நாங்கள் அன்பால் இவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம்" என்றன. (உயிரினங்கள் அனைத்திடமும்) பாசப் பிணைப்புக் கொண்ட இந்தச் சூழ்நிலையிலிருந்து, அவன் "ராஜா" என்று அழைக்கபட்டான்[31].(139) அவன் ஆண்ட போது, பூமியானது உழப்படாமலேயே பயிர்களை விளைவித்தது, மரங்கள் கொண்ட இலைகள் அனைத்தும் தேனைச் சுமந்திருந்தன; ஒவ்வொரு பசுவும் கலன் நிறைந்த பாலைக் கொடுத்தன.(140) மனிதர்கள் அனைவரும் குறையற்ற நலம் கொண்டவர்களாகவும், விருப்பங்கள் அனைத்தம் நிறைவேறியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதனிடமிருந்தும் எந்த அச்சமும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் வெளிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்தனர்.(141) பிருது கடலில் செல்ல விரும்பிய போது, அதன் நீர் திடமான நிலையை அடைந்தது. அவன் ஆறுகளைக் கடக்கும்போது, அவை ஒருபோதும் பெருகாமல் அமைதியாக இருந்தன. அவனுடைய தேரின் கொடிக்கம்பம் (எந்தத் தடையாலும் தடுக்கப்படாமல்) எங்கும் சுதந்திரமாக நகர்ந்தது.(142) மன்னன் பிருது, தனது மகத்தான குதிரை வேள்விகள் ஒன்றில், மூன்று நல்வங்கள்[32] அளவுள்ள இருபத்தோரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(143) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்துபோன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது[33].(144)
[30] மன்னன் பிருதுவின் கதை துரோண பர்வம் பகுதி 69ல் http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-069.html ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.[31] கும்பகோணம் பதிப்பில், "அவன் உலகத்தை க்ஷதத்திலிருந்து காப்பதால் க்ஷத்திரியனென்றும், அவனைக் கண்ட பிராணிகள் யாவும் அவனிடம் ராகம் {விருப்பம்} கொண்ட காரணத்தால் ராஜாவென்றும் பெயருள்ளவனானான்" என்றிருக்கிறது.[32] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை நலம் nala ஆகும். நீலகண்டர் இஃது ஒரு தாளச்சீருக்காக இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அதன் உண்மை வடிவம் நல்வம் ஆகும் எனக் கருதுகிறார். அஃதாவது ஒரு நல்வம் என்பது நானூறு முழம் தொலைவை அளவாகக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவன் தான் செய்த அஸ்வமேதமென்னும் பெரிய யாகத்தில் மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குத் தானஞ்செய்தான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பொன்றில், நலம் என்பது ஆறு அடி தொலைவைக் கொண்ட ஓர் அளவாகும்" என்றிருக்கிறது.[33] மேற்சொன்ன கதைகள் அனைத்தும், துரோணபர்வம் பகுதி 54 முதல் 69 வரை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கதைகளை நாரதர் சிருஞ்சயனுக்குச் சொன்னதாக வியாசர் யுதிஷ்டிரனுக்கு விவரிக்கிறார். இப்போது யுதிஷ்டிரன் கிருஷ்ணனின் மூலமாக அதே கதைகளைச் சுருக்கமாகக் கேட்டிருக்கிறான்.
ஓ! சிருஞ்சயா, நீ எதைக் குறித்து அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? ஓ! மன்னா, என் வார்த்தைகளை நீ கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை நீ கேட்கவில்லையென்றால், இந்த எனது உரையானது, மரணத்தருவாயில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அல்லது உணவைப் போன்று கனியற்ற வீரகாவியமாகவே ஆகும்" {என்றார் நாரதர்}.(145)
சிருஞ்சயன் {நாரதரிடம்}, "ஓ! நாரதரே, சிறந்த செய்திகளைக் கொண்டதும், மலர்களின் மாலையைப் போன்று நறுமணமிக்கதும், தகுதி வாய்ந்த செயல்களைச் செய்தவர்களும், பெரும்புகழையுடையவர்களுமான உயர் ஆன்ம அரச முனிகளின் நடத்தை சம்பந்தமானதும், நிச்சயம் துயரை அகற்றவல்லதுமான இந்த உமது உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.(146) ஓ! பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ! மெய்ப்பார்வை கொண்டவரே, ஓ! தலைவா, மகனின் மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருக்கும் என்னிடம் நீர் கருணை காட்ட விரும்பினால், உமது அருளின் மூலம் அந்த மகன் நிச்சயம் மீண்டு, மீண்டும் என்னுடன் (என் வாழ்வில்) கலப்பான்" என்றான்.(148)
நாரதர் {சிருஞ்சயனிடம்}, "பர்வதரால் உனக்கு அளிக்கப்பட்டவனும், உயிரை இழந்தவனும், சுவர்ணஷ்டீவின் என்ற பெயரைக் கொண்டவனுமான உன் மகனை நான் உனக்குக் கொடுப்பேன். தங்கத்தின் காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை ஆயிரம் வருடங்கள் வாழ்வான்" என்றார்".(149)
சாந்திபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 149
ஆங்கிலத்தில் | In English |