The wedding of Narada and the curses! | Shanti-Parva-Section-30 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : சுவர்ணஷ்டீவினின் கதையைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; சிருஞ்சயனை அடைந்த நாரதரும், பர்வதரும்; தன் மகள் சுகுமாரியை அவர்களின் பணிவிடைக்கு நியமித்த சிருஞ்சயன்; சுகுமாரியிடம் மையல் கொண்ட நாரதர்; உடன்படிக்கையை மீறியதாக நாரதரைச் சபித்த பர்வதர்; பதிலுக்குச் சபித்த நாரதர்; இருவரும் சாபங்களை விலக்கிக் கொண்டது...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "சிருஞ்சயனின் மகன் எவ்வாறு சுவர்ணஷ்டீவின் ஆனான்? பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார்? அவன் ஏன் இறந்தான்?(1) அந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் {1,000} வருடங்கள் என நீண்டிருந்த போது, சிருஞ்சயனின் மகன் ஏன் குழந்தை பருவத்திலேயே இறந்தான்?(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா? அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான்? இவை யாவையும் அறிய நான் விரும்புகிறேன்" என்று கேட்டான்.(3)
கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, "நடந்தவற்றை நடந்தவாறே நான் உமக்குச் சொல்கிறேன். நாரதர் மற்றும் பர்வதர் என்று உலகில் முதன்மையான இரு முனிவர்கள் இருந்தனர்.(4) நாரதர் தாய்மாமனாவார், பர்வதர் அவரது சகோதரியின் மகனாவார். ஓ! மன்னா, பழங்காலத்தில் மாமன் நாரதரும், மருமகன் பர்வதரும் தெளிந்த நெய்யையும், அரிசியையும் உண்பதற்காகவும், உலகில் இன்பச் சுற்றுலா செல்லவும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தில் இருந்து புறப்பட்டனர்.(5,6) தவத்தகுதி கொண்ட அவர்கள் இருவரும் மனிதர்களின் உணவை உண்டு பூமியில் திரிந்து வந்தனர்.(7) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும் இருந்த அவர்கள், நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்றும், அவர்களில் யாராவது ஒருவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால், அவர் மற்றவரின் சாபத்திற்கு ஆளாவார் என்றும் அவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.(8)
உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவர்களும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் இருவரும், சுவித்யன் மகனான மன்னன் சிருஞ்சயனிடம் சென்று, அவனிடம்,(9) "உன் நன்மைக்காக நாங்கள் இருவரும் உன்னுடன் சில நாட்கள் வசிக்கப் போகிறோம். ஓ! பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக" என்றனர். "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, "என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்" என்றான். அம்முனிவர்கள் "மிக்க நன்று" என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, "ஓ! குழந்தாய், நீ தேவர்களையோ, உனது தந்தையையோ எவ்வாறு கவனிப்பாயோ அவ்வாறே இந்தப் பிராமணர்கள் இருவரையும் கவனிப்பாயாக" என்றான்.(12,13)
அறம்சார்ந்த அந்த இளவரசி {சுகுமாரி}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கவனித்துவரத் தொடங்கினாள்.(14) கடமையுணர்வு நிறைந்த அவளது தொண்டுகளும், அவளது {சுகுமாரியின்} ஒப்பற்ற அழகும், {காமமெனும்} இளம் நெருப்பால், நாரதரை வெகு விரைவில் அவளிடம் ஈர்த்தன.(15) அந்தச் சிறப்புமிக்கத் தவசியின் இதயத்தில் அந்த இளம் உணர்ச்சி {காமம்}, வளர்பிறை நிலவைப் போல வளரத் தொடங்கியது.(16) எனினும், அறம்சார்ந்த நாரதர், அந்த எரியும் பற்றைத் தன் சகோதரியின் மகனான உயர் ஆன்ம பர்வதரிடம் வெட்கத்தால் சொல்லவில்லை.(17) பர்வதரும் தன் தவச் சக்தியாலும், சில அறிகுறிகளாலும் அனைத்தையும் அறிந்தார். சினத்தால் தூண்டப்பட்ட அவர் {பர்வதர்}, காதலால் பீடிக்கப்பட்டிருக்கும் நாரதரைச் சபிக்கத் தீர்மானித்தார்.(18)
அவர் {பர்வதர், நாரதரிடம்}, "நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்ற உமது உடன்படிக்கையே நீர் மீறியிருக்கிறீர். ஓ! பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ! பலமிக்கவரே {நாரதரே}, உமது திருமணத்திற்குப் பிறகு உம்மை ஒரு குரங்காக மக்கள் அனைவரும் காண்பார்கள். உமது உண்மை பண்புகள் மறைந்ததால் அனைவருக்கும் குரங்கே தெரியும்" என்றார் {பர்வதர்}.(24)
அவரது {பர்வதரது} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது மாமன் நாரதர், கோபத்தால் நிறைந்து, தமது மருமகனான பர்வதரைப் பதிலுக்குச் சபித்தார். {நாரதர்}, "தவத்தகுதி, பிரம்மச்சரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, ஆகியவற்றைக் கொண்டவனாக இருந்தும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருந்தும், உன்னால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது" என்றார்.(26)
மதங்கொண்ட இரு யானைகளைப் போலச் சினத்தால் நிறைந்தும், பழிதீர்க்க விரும்பியும் அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர்.(27). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில் இருந்து உயர் ஆன்ம பர்வதர், தமது சக்திக்குத் தகுந்த மதிப்புடன் பூமியில் திரியத் தொடங்கினார்.(28) பிராமணர்களில் முதன்மையான நாரதர், சிருஞ்சயனின் மகளான களங்கமற்ற சுகுமாரியின் கரங்களை முறையான சடங்குகளின்படி அடைந்தார்.(29) எனினும், அந்த இளவரசி {சுகுமாரி}, நாரதர் அடைந்த சாபத்தின்படியே அவரைக் {குரங்காகக்} கண்டாள். உண்மையில் திருமணத்தின் இறுதி மந்திரத்தைச் சொன்னதற்குச் சற்று பிறகு, சுகுமாரி, அந்தத் தெய்வீக முனிவரை {நாரதரைக்} குரங்கின் முகத்தைக் கொண்டவராகக் கண்டாள். எனினும், இதன் காரணமாக அவள் தன் தலைவனை அலட்சியம் செய்யவில்லை. மறுபுறம், அவள் தன் அன்பையே அவருக்கு அர்ப்பணித்தாள்.(30,31) உண்மையில் அந்த இளவரசி, தன் இதயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் ஆகியோரில் எவரையும் கணவனாக அடையவிரும்பாமல் மொத்தமாகத் தன்னைத் தன் தலைவனுக்கே {நாரதருக்கே} அர்ப்பணித்தாள்.(32)
சிறப்புமிக்கவரான பர்வதர் தமது பயணத்தின்போது ஒரு நாள் ஒரு தனிமையான காட்டில் நுழைந்து அங்கே நாரதரைக் கண்டார்.(33) அவரை வணங்கிய பர்வதர், "ஓ! பலமிக்கவரே, சொர்க்கத்திற்குச் செல்வதற்கு என்னை அனுமதித்து என்னிடம் உமது கருணையைக் காட்டுவீராக" என்றார்.(34)
பர்வதர் உற்சாகமற்றவராகத் தம் முன் கூப்பிய கரங்களுடன் மண்டியிடுவதைக் கண்ட நாரதர், தாமும் உற்சாகமிழந்தவராக, "நீயே முதலில் என்னை "குரங்காவீராக" என்று சபித்தாய். நீ அவ்வாறு என்னிடம் சொன்ன பிறகே நான் கோபத்தில், "இந்நாளில் இருந்து நீ சொர்க்கத்தில் வசிக்கமாட்டாய்" என்று உன்னைச் சபித்தேன். நீ என் மகனைப் போன்றவனாதலால் அஃது உனக்குத் தகாது" என்றார். பிறகு அந்தத் தவசிகள் இருவரும் தங்களைத் தங்களின் சாபங்களில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.(37)
தெய்வீக வடிவையும், சுடர்மிக்க அழகையும் கொண்டவராகத் தன் கணவரைக் {நாரதரைக்} கண்ட சுகுமாரி, அவர் தன் தலைவரில்லை வேறு எவரோ என்று நினைத்து அவரிடம் இருந்து விலகி ஓடினாள்.(38) அந்த அழகான இளவரசி தன் தலைவனிடம் இருந்து விலகுவதைக் கண்ட பர்வதர், அவளிடம் {சுகுமாரியிடம்}, "இவர் உன் கணவரே. உனக்கு எந்த ஐயுணர்வும் வேண்டாம். அறவோரில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவரும், பலமிக்க முனிவருமான நாரதர் இவரே. உன் ஆன்மாவில் ஒன்றாகக் கலந்த உன் தலைவர் இவரே. இதில் நீ எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்" என்றார்.(40)
உயர் ஆன்ம பர்வதரால் பல்வேறு வழிகளில் உறுதி சொல்லப்பட்டு, அவளது தலைவரின் சாபத்தைக் குறித்தும் சொல்லப்பட்ட பிறகே அந்த இளவரசி தன் மனத்தில் அமைதியை அடைந்தாள். பிறகு பர்வதர் சொர்க்கத்திற்கும், நாரதர் தமது இல்லத்திற்கும் சென்றனர்" {என்றான் கிருஷ்ணன்}".(41)
வாசுதேவன் தொடர்ந்தான், "இக்காரியத்தில் பங்குபெற்றவரும், சிறப்புமிக்க முனிவருமான நாரதரும் இங்கே இருக்கிறார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கேட்கப்பட்டால், நடந்தது அனைத்தையும் அவரே உமக்குச் சொல்வார்" {என்றான் கிருஷ்ணன்}(42).
சாந்திபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |