Suvarnashthivin! | Shanti-Parva-Section-31 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 31)
பதிவின் சுருக்கம் : சிருஞ்சயனுக்கு வரமளித்த பர்வதர்; அவனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற புலி; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன்: சுவர்ணஷ்டீவினை உயிர்மீட்டளித்த நாரதர்; யுதிஷ்டிரனை அரசகனம் ஏற்கும்படி வற்புறுத்தியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "ஓ! புனிதமானவரே, உடற்கழிவுகளைப் பொன்னாகக் கொண்ட அந்தப் பிள்ளையின் {சுவர்ணஷ்டீவின்} பிறப்பைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கேட்கப்பட்ட தவசி நாரதர், உடற்கழிவைத் தங்கமாகக் கொண்ட அந்தப் பிள்ளை தொடர்பாக நடந்தவை அனைத்தையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(2)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கேசவன் {கிருஷ்ணன்} சொன்னது போலவேதான் நடந்தது. இந்தக் கதையில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கேட்கின்ற உனக்கு இப்போது நான் சொல்லப் போகிறேன்.(3) நானும், என் சகோதரியின் மகனான பெருந்தவசி பர்வதனும், வெற்றியடைந்த மன்னர்கள் அனைவரிலும் முதன்மையான சிருஞ்சயனுடன் வசிப்பதற்காக (ஒரு சந்தர்ப்பத்தில்) அவனிடம் வந்தோம்.(4) முறையான சடங்குகளுடன் அவனால் கௌரவிக்கப்பட்டும், எங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியும் இருந்த நாங்கள், அவனது வசிப்பிடத்தில் தங்கினோம்.(5) மழைக்காலம் சென்ற பிறகு, நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தபோது, அந்த நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லும் வகையில் பர்வதன் என்னிடம்,(6) "ஓ! பிராமணரே, மன்னனால் உயர்வாகக் கௌரவிக்கப்பட்ட நிலையில் நாம் சிறுது காலம் அவனது வசிப்பிடத்தில் தங்கினோம். நாம் அதற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறோம் என்பதை நினைப்பீராக" என்றான்.(7)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போது நான் அருள் தன்மை கொண்ட பர்வதனிடம், "ஓ! மருமகனே, அதற்குத் தகுந்தவன் நீயே, ஓ! பெருஞ்சக்திகொண்டவரே, இவை அனைத்தும் உன்னை நம்பியே இருக்கின்றன.(8) உன் வரங்களின் மூலம் மன்னன் மகிழ்ச்சி அடையட்டும், அவன் தன் விருப்பங்களை அடையட்டும். அல்லது, நீ விரும்பினால் நம் இருவரின் தவத் தகுதிகளின் மூலம் அவன் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்" என்று சொன்னேன்.(9)
அதன் பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, வெற்றியாளர்களில் முதன்மையானவனான மன்னன் சிருஞ்சயனை அழைத்த பர்வதன், அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, உண்மையுடனும், விருந்தோம்பலுடனும் கூடிய உனது கவனிப்புகளில் நாங்கள் பெரும் நிறைவடைந்திருக்கிறோம். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, என்ன வரம் வேண்டுவது என எங்கள் அனுமதியுடன் சிந்திப்பாயாக.(11) எனினும், அந்த வரமானது தேவர்களுடன் பகையையோ, மனிதர்களுக்கு அழிவையோ ஏற்படுத்தாதவாறு இருக்கட்டும். ஓ! மன்னா, வரம்பெறத் தகுந்தவன் என உன்னை நாங்கள் கருதுவதால் அஃதை ஏற்பாயாக" என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன்,(12) "நீங்கள் என்னிடம் மனநிறைவு கொண்டால், அதுவே என் நோக்கம் நிறைவேறிய நிலையாகும். அதுவே எனக்குப் பெரிய பேறாகும். என் விருப்பங்கள் அனைத்தின் கனியாக அதையே நான் கருதுகிறேன்" என்றான்.(13)
இவ்வாறு சொன்ன சிருஞ்சயனிடம் மீண்டும் பர்வதன், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, நீண்ட காலமாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாக்கும் விருப்பத்தின் கனியை வேண்டுவாயாக" என்றான்.(14)
சிருஞ்சயன் {பர்வதரிடம்}, "வீரனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தன் நோன்புகளில் உறுதி மிக்கவனாகவும், நீண்ட வாழ்வு கொண்டவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும், தேவர்களின் தலைவனுக்கு நிகரான காந்தியைக் கொண்டவனாகவும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்" என்றான்.(15)
அதற்குப் பர்வதன் {சிருஞ்சயனிடம்}, "உனது இவ்விருப்பம் நிறைவேறும். எனினும், உன் மகன் தேவர்களின் தலைவனை விஞ்சும் அளவில் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதால் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்க மாட்டான்.(16) உன் மகன் சுவர்ணஷ்டீவின் என்ற பெயரால் அறியப்படுவான். தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்ற காந்தி கொண்டவனாக அவன் இருந்தாலும், நீ அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இருந்து அவனை எப்போதும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்" என்றான்.(17)
உயர் ஆன்ம பர்வதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன், வேறு வகையில் விதிக்குமாறு அந்தத் தவசியை வேண்டத் தொடங்கினான், {அவன்}, "ஓ! முனிவரே, உமது தவத் தகுதியின் மூலம் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்கட்டும்" என்று கேட்டான். எனினும், பர்வதன், இந்திரனிடம் தான் கொண்ட சார்பு நிலையினால் ஏதும் பேசாதிருந்தான்.(18)
மன்னன் {சிருஞ்சயன்} மிகவும் உற்சாகமற்றிருப்பதைக் கண்ட {நாரதனாகிய} நான், அவனிடம், "ஓ! மன்னா {சிருஞ்சயா}, (உனது துயர் காலத்தில்) நீ என்னை நினைப்பாயாக. உன்னால் அழைக்கப்படும்போது நான் உன்னிடம் வருவேன் என உறுதியளிக்கிறேன். உன் அன்புக்குரிய மகன் {சுவர்ணஷ்டீவின்} இறந்தாலும் கூட, நான் அவனை உயிருடன் கூடியவனாக உனக்குத் தருவேன்" என்றேன். அந்த ஏகாதிபதியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்காக அவனது முன்னிலையில் இருந்து அகன்றோம், சிருஞ்சயனும் அவன் விரும்பியவாறு அவனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(22)
சில காலம் கழிந்ததும், பேராற்றல் கொண்டவனும், சக்தியால் சுடர்விடுபவனுமான ஒரு மகன் அரச முனியான சிருஞ்சயனுக்குப் பிறந்தான்.(23) அந்தப் பிள்ளை தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்ந்து, தன் பெயரைப் போலவே உண்மையிலேயே சுவர்ணஷ்டீவின் ஆனான்.(24) ஓ! குருக்களில் சிறந்தவனே, இயல்புக்கு மிக்க இந்தச் செய்தி வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, இது பர்வதனுடைய வரத்தின் விளைவு என்பதை அறிய வந்தான்.(25) (அந்தப் பிள்ளை வளர்ந்ததும், அவனால் ஏற்படப்போகும்) அவமதிப்புக்கு அஞ்சியவனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனுமான இந்திரன், அந்த இளவரசனின் சிறு குறைகளையும் கவனமாகக் காணத் தொடங்கினான்.(26) அவன் {இந்திரன்}, தன் முன்னே உடல் கொண்டு வந்து நின்ற தன் தெய்வீக ஆயுதமான வஜ்ரத்திடம், "ஓ! பலமிக்கவனே {வஜ்ரனே}, புலியின் வடிவை ஏற்றுச் சென்று இந்த இளவரசனைக் {சுவர்ணஷ்டீவினை} கொல்வாயாக.(27) ஓ! வஜ்ரனே, பர்வதர் சொன்னதைப் போல இந்தப் பிள்ளை வளர்ந்ததும், தனது சாதனைகளால் என்னை அவமதிக்கக்கூடும்" என்றான்.(28) தெய்வீக ஆயுதமும், பகை நகரங்களை அடக்குவதுமான வஜ்ரம், சக்ரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாளிலிருந்து அந்த இளவரசனின் குறைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தது.(29)
அதேவேளையில், சிருஞ்சயன், இந்திரனின் காந்திக்கு ஒப்பான பிள்ளையைப் பெற்றதால் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தான். தன் மனைவியரின் துணையோடும், தன் இல்லத்தைச் சேர்ந்த வேறு பெண்களின் துணையோடும், காட்டுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(30)
ஒருநாள் செவிலியின் துணையுடன் கூடிய அந்தப் பிள்ளை, பாகீரதியின் கரைகளில் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.(31) ஐந்து வயதே ஆனவனாக இருப்பினும் அவனது ஆற்றல் ஒரு வலிமைமிக்க யானைக்கு ஒப்பானதாக இருந்தது. அவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பிள்ளை ஒரு பலமிக்கப் புலியைச் சந்தித்தான்.(32) அந்தப் புலியால் சிதைக்கப்பட்டபோது, குழந்தையாக இருந்த அந்த இளவரசன் {சுவர்ணஷ்டீவின்} பயங்கரமாக நடுங்கி, விரைவில் உயிரை இழந்து பூமியில் விழுந்தான். இந்தக் காட்சியைக் கண்ட செவிலி, உரத்த குரலில் துன்பத்துடன் அழுதாள்.(33) புலியானது, அந்த இளவரசனைக் கொன்றபிறகு, இந்திரனின் மாயையின் மூலம் அங்கேயே அப்போதே மறைந்து போனது.(34)
அழுது கொண்டிரக்கும் செலவிலியின் குரலைக் கேட்ட மன்னன் {சிருஞ்சயன்} பெருஞ்சோகத்தோடு அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றான்.(35) அங்கே இரத்தம் குடிக்கப்பட்டு, ஒளியிழந்தவனாக ஆகாயத்திலிருந்து விழுந்த நிலவைப் போலத் தன் மகன் கிடப்பதைக் கண்டான்.(36) குருதியில் மறைந்த சிறுவனைத் தன் மடியில் ஏந்திய மன்னன், துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் பரிதாபகரமாகப் புலம்பத் தொடங்கினான்.(37) அரச மகளிர் துயரால் பீடிக்கப்பட்டு அழுதுகொண்டே மன்னன் சிருஞ்சயன் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றனர்.(38) அந்தச் சூழ்நிலையில் மன்னன் {சிருஞ்சயன்} குவிந்த கவனத்துடன் {நாரதனாகிய} என்னைச் சிந்தித்தான். மன்னன் என்னைக் குறித்துச் சிந்திப்பதை அறிந்து நான் அங்கே சென்றேன்.(39) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, துயரால் பீடிக்கப்பட்டிருந்த அந்த மன்னன்னுக்கு {சிருஞ்சயனுக்கு}, இந்த யதுகுல வீரன் {கிருஷ்ணன்} இப்போது சொன்ன கதைகள் அனைத்தையும் நான் சொன்னேன்.(40) பிறகு இந்திரனின் அனுமதியுடன் நான் சிருஞ்சயனின் பிள்ளையை உயிரோடு மீட்டெடுத்தேன். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேறு வகையில் நடக்க இயலாது.(41)
இதன்பிறகு பெரும் புகழும் சக்தியும் கொண்ட அந்த இளவரசன் சுவர்ணஷ்டீவின் தன் பெற்றோரின் இதயங்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தான்.(42) பேராற்றலைக் கொண்ட அவன், தன் தந்தை சொர்க்கத்திற்குச் சென்றதும் அரியணை ஏறி, ஆயிரத்து நூறு {1,100} வருடங்கள் ஆட்சி செய்தான்.(43) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகள் பலவற்றில் அவன் தேவர்களை வழிபட்டான். பெருங்காந்தி கொண்ட அவன், தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவுகொள்ளச் செய்தான்.(44) பல மகன்களைப் பெற்று, அவர்கள் மூலம் குலத்தைப் பெருக்கிய அவன் {சுவர்ணஷ்டீவின்} பல வருடங்களுக்குப் பிறகு இயற்கையின் வழியில் சென்றான்[1].(45)
[1] இந்தச் சுவர்ணஷ்டீவின் சிருஞ்சயன் கதை ஏற்கனவே துரோண பர்வம் பகுதி 53ல் சொலப்படுகிறது. இங்கே புலியால் அடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுவர்ணஷ்டீவின் அங்கே கள்வர்களால் கொல்லப்படுகிறான். எனினும், கதையின் சாரம் ஒன்றே. http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-053-054-055.html
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கேசவனும் {கிருஷ்ணனும்}, கடுந்தவங்களைச் செய்த வியாசரும் ஆலோசனை கூறியதைப் போல உன் இதயத்தில் இருக்கும் இந்தத் துயரை அகற்றுவாயாக.(46) ஓ! மன்னா, எழுவாயாக. உன் மூதாதையருடைய நாட்டின் சுமையை ஏற்று, (மறுமையில்) உன்னால் விரும்பப்படும் எந்த உலகத்தையும் அடைய உயர்ந்த பெரும் வேள்விகளைச் செய்வாயாக" என்றார் {நாரதர்}".(47)
சாந்திபர்வம் பகுதி – 31ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |