Perform expiation! | Shanti-Parva-Section-32 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 32)
பதிவின் சுருக்கம் : கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்...
வைசம்பாயனர் சொன்னார், "தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)
[1] "ஒரு க்ஷத்திரியன், பிராமணனை அவனது தவங்களிலும், ஒரு வைசியனை அவனது வகைக்கான கடமைகளை நோற்கும்போதும் பாதுகாக்க வேண்டும். ஒரு பிராமணனோ, வைசியனோ தன் கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் தடைகள், ஒரு க்ஷத்திரியனால் அகற்றப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதத்தால் நிச்சயிக்கப்பட்டுப் பிராம்மணர்களிடம் நிலைபெற்றிருக்கும் தர்மம் யாவும் பிரமாணங்களுள் சாஸ்வதமான பிரமாணமாகும். அந்தத் தர்மத்தையெலாம் ரக்ஷிக்கக் கடமைப்பட்டவன் க்ஷத்திரியனே" என்றிருக்கிறது.
அதிகாரத்தை மீறும் உணர்வற்ற மனிதன், தன் பணியாளாகவோ, மகனாகவோ, தவசியாகவோ இருந்தாலும் கூட, பாவம் நிறைந்த அத்தகு இயல்புடைய மனிதர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் தண்டிக்கப்படவோ, கொல்லப்படவோ வேண்டும். வேறுவகையில் நடந்து கொள்ளும் மன்னன் பாவமிழைத்தவனாவான்.(6,7) அறநெறி அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பாதுகாக்காதவனும் அறநெறியை மீறியவனே ஆவான். கௌரவர்கள் அறநெறியை மீறியவர்களாவர். அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் உன்னால் கொல்லப்பட்டனர்.(8) நீ உன் வகைக்கான கடமையை நோற்றிருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே, பிறகு ஏன் நீ இத்தகு துயரத்தில் ஈடுபடுகிறாய்? ஒரு மன்னன், சாகத் தகுந்தவர்களைக் கொல்லவும், ஈகைக்குத் தகுந்தோருக்குக் கொடைகள் அளிக்கவும்ம், தன் குடிமக்களை விதிப்படி பாதுகாக்கவும் வேண்டும்" என்றார் {வியாசர்}.(9)
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பெரும் தவத்தகுதி கொண்டவரே, உமது உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் நான் ஐயங்கொள்ளமாட்டேன். ஓ! அறநெறி மற்றும் கடமை குறித்து அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, அறநெறி மற்றும் கடமை தொடர்பான அனைத்தும் உம்மால் அறியப்பட்டிருக்கிறது.(10) எனினும், நாட்டின் நிமித்தமாக நான் பல மனிதர்களைக் கொல்லச் செய்துவிட்டேன். ஓ! பிராமணரே {வியாசரே}, அந்தச் செயல்களே என்னை எரித்து உட்கொள்கின்றன" என்றான்.(11)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, செயல்படுவது பரம்பொருளா? {பரமாத்மாவா?} மனிதனா? இவ்வுலகில் அனைத்தும் வாய்ப்பின் விளைவுகளா? அல்லது (முந்தைய) செயல்பாடுகளின் விளைவுகளால் உண்டான இன்ப துன்பங்களின் கனிகளா?(12) ஓ! பாரதா, ஒரு மனிதன், பரம்பொருளால் உந்தப்பட்டு நன்மையோ, தீமையோவான அனைத்து செயல்களையும் செய்தால், அந்தச் செயல்களின் கனிகள் அந்தப் பரம்பொருளையே பற்ற வேண்டும்.(13) ஒரு மனிதன் காட்டில் உள்ள ஒரு மரத்தைக் கோடரியால் வெட்டினால், அந்த மனிதன் பாவமிழைக்கிறானேயன்றி, எவ்வழியிலும் அந்தக் கோடரி பாவமிழைக்கவில்லை.(14) அல்லது அந்தக் கோடரி பொருட்காரணமாக மட்டுமே இருக்கிறது, (வெட்டிய) அந்தச் செயலின் விளைவு, (அசையாத {தானாகச் செயல்படாத} கருவியை அல்லாமல்) அசையும் {தானாகச் செயல்படும்} செயலியையே பற்ற வேண்டும் என்று சொன்னால், அந்தப் பாவம் அந்தக் கோடரியைச் செய்த மனிதனையே சாரும். எனினும் இஃது ஒருக்காலும் உண்மையாக முடியாது.(15) மற்றவனால் செய்யப்பட்ட செயலின் விளைவு வேறொரு மனிதனைப் பற்றுவது அறிவார்ந்ததாக இல்லையெனில், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதனால் வழிகாட்டப்படும் நீ பொறுப்புகள் அனைத்தையும் பரம்பொருளிடமே விட்டுவிட வேண்டும்[2].(16) மேலும், நல்ல மற்றும் பாவச் செயல்கள் அனைத்தையும் செய்பவன் மனிதனேயென்றால் பரம்பொருளேதும் இல்லை என்றாகிறது, எனவே, நீ செய்த அனைத்தும், உனக்குத் தீய விளைவுகளை உண்டாக்க முடியாது.(17)
[2] "அதாவது, பரமாத்மாவே நம் அனைவரையும் தூண்டுவதலால், அனைத்துச் செயல்களின் விளைவுகளும் பரமாத்மாவையே பற்ற வேண்டும் என்று நீ நினைக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, விதிக்கப்பட்டதில் இருந்து எவனாலும் ஒருபோதும் விலக முடியாது. மேலும், முந்தைய வாழ்வு {முற்பிறவிச்} செயல்களின் விளைவுகளே விதி என்றால், மரத்தை வெட்டுவதால் உண்டாகும் பாவம், கோடரியைச் செய்தவனைத் தீண்டாததைப் போலவே, இவ்வாழ்வில் ஒருவனை எந்தப் பாவமும் பற்றாது.(18) வாய்ப்பு மட்டுமே உலகில் செயல்படுகிறது என்று நீ நினைத்தால், அப்போது அத்தகு அழிவுச் செயல் ஒரு போதும் நடைபெற முடியாது, அல்லது ஒரு போதும் நடக்காது.(19) உலகில் எது நன்மை, எது தீமை என்று உறுதி செய்யும் அவசியம் இருந்தால், சாத்திரங்களைக் கவனிப்பாயாக. அந்தச் சாத்திரங்களில், மன்னர்கள், தங்கள் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் நிற்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(20)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்ல மற்றும் தீய செயல்கள் சக்கரம் போல் தொடர்ந்து சுழல்கின்றன என்றும், தாங்கள் செய்யும் அந்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனிகளையே மனிதர்கள் அடைகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.(21) பாவம் நிறைந்த ஒரு செயல் மற்றொன்றில் {மற்றொரு பாவத்தில்} இருந்தே விளைகிறது. எனவே, ஓ! மன்னர்களில் புலியே, தீச்செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பாயாக. மேலும் உன் இதயத்தை இவ்வாறான துயரில் நிலைக்கச் செய்யாதே.(22) ஓ! பாரதா, உன் வகைக்குரிய கடமைகள் நிந்திக்கத்தக்கவையே ஆனாலும் அவற்றைப் பின்பற்றுவாயாக. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தத் தன்னழிவு {உடலைத் துறக்கும் தற்கொலை} உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை.(23) ஓ! மன்னா, (தீய) செயல்களுக்கான பாவக்கழிவுகளும் {பிராயச்சித்தங்களும்} விதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடிருப்பவனால் அவற்றைச் செய்ய முடியும், இறந்தவன் அதைச் செய்யத் தவறுகிறான்.(24) எனவே, ஓ! மன்னா, உன் உயிரை விடாமல், அந்தப் பாவம் கழிக்கும் செயல்களை {பிராயச்சித்தங்களைச்} செய்வாயாக. நீ அவற்றைச் செய்யவில்லையெனில், அடுத்த உலகில் {மறுமையில்} நீ வருந்த வேண்டியிருக்கும்" என்றார் {வியாசர்}".(25)
சாந்திபர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |